Search This Blog

4.3.09

பெரியார் ஆரியத்திடம் ஆலோசனை கேட்டு நடந்தாரா?




காஞ்சிபுரத்திற்கு அண்ணா அழைத்தும்
கி.வீரமணி வர மறுத்துவிட்டார் - ஏன்?

கல்லூரிப் பேராசிரியர் நம். சீனிவாசன் விளக்கம்


காஞ்சிபுரத்திற்கு கி.வீரமணி அவர்களை அண்ணா அவர்கள் அழைத்த பொழுது அவர் வர மறுத்துவிட்டார் அதற்கு என்ன காரணம் என்பதை பேராசிரியர் நம்.சீனிவாசன் தமது உரையில் கூறி விளக்கவுரையாற்றினார்.

தஞ்சை (22.2.2009), மதுரை (23.2.2009) ஆகிய ஊர்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூலைப் பற்றி பேராசிரியர் நம்.சீனிவாசன் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பெரியார் மணியம்மை திருமணம்

பெரியார் - மணியம்மை திருமணம் தமிழக அரசியலில் ஒரு பெரிய புயலை உருவாக்கியது. அந்தத் திருமணத்தைப் பற்றி - பெரியாரின் நியாயத்தைப் பற்றி இந்நூல் தெளிவுபட உரைக் கிறது. பெரியாரின் திருமணம் குறித்து, தலைவர் வீரமணியிடம் பயிற்சி முகாம்களில் இளைஞர்கள் கேள்வி கேட்பார்கள். வரலாற்றில் நாம் வாசிக்கின்ற காரண காரியங்கள் 1949-லே வீரமணிக்கு மனப் பாடமாக மனதிலே பதிந்திருக்கிறது. 1949 ஜூன் 1, 19, 25 அய்யாவின் அறிக்கைகள், சாமி கைவல்யத்தின் ரத்தினச் சுருக்க விளக்கங்கள், மேட்டூர் தோழர் டி.கே.இராமச்சந்திரன் அவர்களின் அதியற்புதமான வாதங்கள் அடங்கிய கட்டுரைகள், திருச்சி ஆளவந்தார் எழுதிய கட்டுரை, நகரதூதன் என்ற தமிழ் வார ஏட்டின் பேனா நர்த்தனம் தலைப்பில் கேசரி என்ற பெயரில் மணவை ரெ.திருமலைசாமி எழுதிய ஆணித்தரமான எழுத்துக்கள் அடங்கிய பெரியார் மீது துவேஷப் புயல் என்னும் நூல் அனைத்தையும் இந்நூலில் சாறாகப் பிழிந்து தந்திருக்கிறார்.

ராஜாஜி தனி ரயிலில் வந்தபொழுது

கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரியர் திருவண்ணாமலைக்கு லிங்கேஸ்வரர் கோயிலைத் திறக்க தனி ரயிலில் வந்தபோது தந்தை பெரியார் சந்தித்துப் பேசினார். ராஜாஜி - பெரியார் என்ன பேசினார்கள் என்பது பற்றிய பெரிய சர்ச்சை கிளப்பப்பட்டது. மணியம்மையாரைத் திருமணம் செய்து கொள்ளும்படி ஆச்சாரியார்தான் இப்படி ஒரு யோசனையைச் சொன்னார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. திருமணம் செய்ய வேண்டாம் என்று தான் ராஜாஜி கூறினார். திருமணப் பதிவுக்கு அவரை சாட்சியாகக் கையொப்பம் போட வர இயலுமா என்றும் அய்யா கேட்டுள்ளார். தான் வகிக்கும் கவர்னர் ஜெனரல் பதவியில் அப்படிச் செய்வது மரபு அல்ல என்பதை எழுத்துமூலமாக அந்தரங்கம் என்று தலைப்பிட்டு கடிதம் எழுதினார் ராஜாஜி.

அந்தரங்கமாகவே வைத்திருந்தார்

இயக்கத்தை உடைப்பதற்கு ஆச்சாரியார் திட்டமிட்டு, பெரியாருக்குத் தவறான யோசனை கூறிவிட்டார் என்றும், ஆரியத்திடம் ஆலோசனை கேட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார் என்றும், அய்யா சரணாகதி அடைந்து விட்டார் என்றும் அவதூறுச் சேறு வீசப்பட்டது. ராஜாஜி திருமணத்திற்கு எதிராக யோசனை கூறினார் என்பதை அவர் எழுதிய கடிதம் மூலம் பெரியார் நிரூபித்திருக்க முடியும். ஆனால் எதை ராஜாஜி அந்தரங்கம் என்ற கருத்தில் கூறினார்களோ அதை பெரியார் தமது மூச்சு அடங்கும் வரை அந்தரங்கமாகவே வைத்திருந்தார். வரலாற்றுப் பெருமை வாய்ந்த அந்தக் கடிதத்தை 47 ஆண்டு களுக்குப் பின் முதன்முதலாக இந்த நூல் மூலம் தலைவர் வீரமணி அவர்கள் வெளி உலகிற்கு தெரியப்படுத்தினார்கள். ஸ்கேன் இந்த நூலின் விலை ரூ.125 போல் என்று போட்டிருக்கிறார்களே தவிர, இந்த நூலுக்கு விலை இல்லை.

உலகம் கண்கூடாகக் கண்டு வருகிறது

ஆச்சாரியார் போட்ட கணக்கை விட பெரியார் கணித்த கணிப்பு எவ்வளவு துல்லியமானது என்பதை வீரமணி இந்நூலில் தெளிவுபடுத்தி இருக்கிறார். பல அறக்கட்டளைகள் சிதைந்து சின்னா பின்னமாகிப் போன வரலாறு நமக்குத் தெரியும். ஆனால் பெரியார் அறக்கட்டளை, மணியம்மையார் அறக்கட்டளை நேர்த்தியாக - நியாயமாக - அற்புதமாக நடைபெற்று வருவதை உலகம் கண்கூடாகக் கண்டு வருகிறது. மணியம்மையார் உயில் எழுதிய சூழல், பதிவு செய்த விதம், சாட்சி கையொப்பமிட்டவர்கள், வீரமணியின் மனநிலை அனைத்தும் இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. இது நூல் அல்ல; ஆவணமாகப் போற்றப்படவேண்டிய பெட்டகம்.

வீரமணி என்றால் சமூக நீதி

வீரமணி என்றால் சமூக நீதி நினைவுக்கு வரும். முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சொன்னார் வீரமணியைப் பார்க்கின்றபோதெல்லாம் சமூக நீதி உணர்ச்சி யைப் பெறுகிறேன் என்றார். மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வீரமணி நடத்திய போராட்டங்கள் 16. வீரமணி நடத்திய மாநாடுகள் 42. திராவிடர் கழகத் தலைமைப் பொறுப்புக்கு வந்த பிறகு நடத்தினார் என்பது அல்ல. 17 வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தபோதே கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புரிமைக்கு ஆபத்து என்றவுடன் போர்க்களத்தில் குதித்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தவர் வீரமணி.

அண்ணாவுடன் காரில் வீரமணி பயணம்

குறிஞ்சிப்பாடியில் ஒரு திருமணம் கடலூரில் இருந்து அண்ணாவுடன் காரில் பயணம் செய்கிறார் வீரமணி. அண்ணா அவர்கள், காஞ்சிபுரத்தில் படிக்க தலைவர் வீரமணியை அழைக்கிறார். மென்மையாக மறுத்து விடுகிறார் வீரமணி. இந்த நிகழ்வு வீரமணி வீட்டில் விவாதப் பொருளாகிறது.

இவன் பெரியார் கட்சி அல்லவா? இவனுக்கு அண்ணா அழைப்பை ஏற்க மனம் இடம் கொடுக்க வில்லை என்று வீட்டில் உள்ளோர் கூறுகிறார்கள். நண்பர்களே! தலைவர் வீரமணி கூறிய பதில் இந்த நூலிலே இடம் பெறுகிறது. கவனியுங்கள்.

ஆசிரியரிடம் உதவி பெற்று துரோகம் இழைத்தவர்கள்

ஆமாம்! அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்கள் அதில் என்ன தவறு? அண்ணாவின் உதவி பெற்றுவிட்டு, பிறகு அவருக்கு எதிராக நான் கட்சியில் பேசுவதற்கு எனது மனச்சாட்சி குறுக்கே நிற்காதா? நான் பெரியார் கட்சிக்காரன்தான். கடைசிவரை நான் இதில் பிடிவாதத்துடன் இருப்பேன் என்கிறார். வீரமணியின் உள்ளத்தை - குணத்தை - பண்பை உணர்த்தும் பகுதியாகும். ஆசிரியரிடம் உதவி பெற்று துரோகம் இழைத்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

படிக்கும்போது ஏற்பட்ட நிதி நெருக்கடி

பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஏற்பட்ட நிதி நெருக்கடியையும் வீரமணி அவர்கள் இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள். மிகுந்த தயக்கத்துடன் கடன் கேட்டு தலைவர் பெரியாருக்கு எழுதிய கடிதம், கடனாக அல்லாமல் நன்கொடையாக - தந்தி மணியார்டர் மூலம் தொகை அனுப்பிய பெரியாரின் பெருந்தன்மை யாவும் இந்நூலில் வெளிப்படையாக எழுதப்பட்டிருக்கின்றன.

நான் மன்னர் திருமலை கல்லூரியில் பேராசிரியர். மதிப்பிற்குரிய சபாபதிமோகன், இராசேந்திரன் அவர்கள் முறையே மனோன்மணியம் சுந்தரனார், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள். நம்முடைய தலைவர் வீரமணி அவர்கள் பெரியார் மணியம்மை கல்கலைக்கழகத்தின் வேந்தர். இந்த நூலில் இந்த நூலாசிரியர் இத்தனை ஆண்டு களுக்குப் பிறகும் எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பது மாணவர்கள் உலகத்திற்கு சொல்லப்பட வேண்டிய செய்தி.

கல்விக்கண்ணைத் திறந்தது ஈரோட்டுப் பல்கலைக்கழகம்

வீரமணி எழுதுகிறார். ஈரோட்டுப் பல்கலைக் கழகம்தான் எனக்கு அறிவுக்கண் திறந்த பல்கலைக் கழகம். அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தான் எனக்குக் கல்விக் கண் திறந்த பல்கலைக்கழகம். எனக்கு மட்டுமா? பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, பெண்கள் மற்றும் கிராமங்களிலிருந்து படிக்க வாய்ப்பற்ற மக்களுக் கெல்லாம் அண்ணாமலை அரசரின் கல்வி அருட் கொடை நாடெல்லாம் பாய்ந்தது. அந்தப்படி பாய்ந்து பயன் பெற்றவர்களில் நானும் ஒருவன் என்று நெகிழ்ந்து எழுதுகின்ற நன்றி உணர்வு மாணவர் களுக்கு ஏற்படவேண்டும்.

மணியம்மையாரின் வீரம்

இந்த நூலிலே அன்னை மணியம்மையார் அவர்களது வீரத்தை - துணிச்சலை உணர்ச்சித் ததும்ப எழுத்திலே வடித்திருக்கிறார் வீரமணி. சாதி ஒழிப்புப் போராட்டம். சாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைத் தனியே எடுத்து அச்சிட்டு அதனைக் கொளுத்தி சிறைப்பட்ட பட்டுக் கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி சிறையிலே மாண்டனர். காவல்துறை - சிறைக்குள்ளே புதைத்துவிட்ட கொடுமை நடந்தது. மணியம்மை யாரின் செயல் திறத்தை இந்நூலிலே குறிப்பிடுகிறார் வீரமணி. முதல்வர் காமராசரை சந்தித்து கொதித்துக் கேட்டது, புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுத்து திரும்பப் பெற்றது, ஊர்வலத்திற்குக் காவல் துறை விதித்த தடை, சாலையில் அமர்ந்து அம்மா நடத் திய போராட்டம், மகத்தான ஊர்வலம் என்று இயக்க வரலாற்றை எழுச்சி ததும்ப எழுதியிருக்கிறார்.

நூலில் கொட்டிக் கிடக்கின்ற தகவல்கள்


காமராசர் ஆட்சியின் சாதனைகள், நீதி கெட்டது யாரால்? ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் என்னும் மூன்று நூல்களின் பின்னணி, விடுதலை ஆசிரியர் பொறுப்பு, இயக்க வரலாறுடன் பிணந்த வீரமணியின் திருமணம், அய்யாவுடன் சிறையிலிருந்த அனுபவம், 1963லிருந்து விடுதலை பெரியார் பிறந்த நாள் மலர் தயாரிப்பு என்று இந்நூலில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன

அந்த வசந்தம் அற்புதமான கட்டுரை

ஒரு கவிதை அல்லது புதினம் எவ்வளவு முக்கிய மானதோ - எத்துணை சுவையானதோ அந்த அள விற்குப் படைப்புக்கான சூழல் - பின்னணி குறிப்பிடப் படுவது அவசியமானது. தந்தை பெரியார் பற்றி அண்ணா எவ்வளவோ பேசி இருக்கிறார். எழுதி இருக்கிறார். அதிலே அந்த வசந்தம் என்னும் கட்டுரை அற்புதமானது. உச்சத்தில் நிற்பது. அக் கட்டுரையினை அண்ணாவிடம் வீரமணி பெற்ற வரலாறு சுவை ததும்ப விளக்கப்பட்டிருக்கிறது. அண்ணாவின் எழுத்தோவியம் புத்தகத்தில் கையெழுத்துப் பிரதியுடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த நூல் ஒரு வரலாற்றுப் பெட்டகம் - கருத்துக் களஞ்சியம், வழிகாட்டும் கலங்கரை விளக்கு - பொது வாழ்வில் நுழைபவர்கள் கற்க வேண்டிய பாடம். உண்மைகளை உலகிற்குணர்த்தும் ஆவணம். கழகத் தோழர்கள் அறிய வேண்டிய வரலாறு ஆளுமைத் திறன் வளர்க்கும் படைப்பு சாமானியனின் சாதனைத் தத்துவ விளக்கம். தொண்டன் தலைவனாக வளர்ந்த வரலாறு. இவைகளை எல்லாம் இந்நூலில் விளக்கி இருக்கின்றார்.

இவ்வாறு பேராசிரியர் நம்.சீனிவாசன் உரை ஆற்றினார்.

----------------"விடுதலை" 4-3-2009

1 comments:

Unknown said...

அய்யாவின் அடிச்சுட்டில் நூலை உடன் வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.