Search This Blog

1.6.09

பெரியாரும், பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகளும் செய்த செயல்பாடுகள் பாரீர்





பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகள்..........

பெரியாரை கடவுளாக வழிபடுகிறார்களா? -1

பெரியார் நாடகம் யாருக்காக? என்று ஏப்ரல் 2004 புதிய கோடாங்கி மற்றும் களத்துமேடு இதழ்களில் நாம் எழுதிய விமர்சனத்திற்கு மே2004 புதிய கோடாங்கி இதழில் திரு மா.வேலுசாமி அவர்கள் ஈ.வெ.ராமசாமி துணை கடவுளாகும் பெரியார்………. என்று இரண்டு தலைப்பிட்டு எதிர்வினையாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் பெரியாரைப் பற்றி கீழ்வருமாறு எழுதியுள்ளார்.

"தமிழகத்தின் திராவிட மறுமலர்ச்சி அரசியலுக்கும், அதன் வளர்ச்சிக்கும் மதம் மற்றும் தமிழக மக்ககளின் மூடநம்பிக்கைகளைக் களைந்தெறிவதற்கு தன்னுடைய அயராத உழைப்பினை அர்ப்பனித்தவர் திரு ஈ.வெ.ராமசாமி என்பது நாமறிந்ததே. தமிழக அரசியலின் எழுச்சி முன்னோடியாகவும், திராவிட வரலாற்றை உருவாக்கியவராகவும் திகழ்ந்து-தமிழகத்தின் அரசியலை 50 ஆண்டுகாலமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரான தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர். மாபெரும் அரசியல் தலைவர் என்பதில் எந்தவொரு சந்தேகமில்லை".

ஜாதி ஒழிய தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட பெரியாரை நாயக்கராகச் சித்தரித்தும், அரசியல் தலைவர் என்பதையும் விட்டு விட்டுப் பார்த்தால், பெரியாரை ஓரளவு சரியாக மதிப்பிட்டுள்ள திரு.மா.வேலுச்சாமி அவர்களுக்கு நமது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். பெரியாரை ஓரளவு சரியாக மதிப்பீடு செய்த திரு மா.வேலுச்சாமி அடுத்த வரியை இப்படி எழுதியுள்ளார்.

“ஏனெனில். ஜனநாயக நாட்டில் அரசியலையும், அதிகாரத்தையும் தூக்கி நிறுத்துகின்ற ஜனங்களான இன உடைமையாளர்கள். சமூகத்திற்கு உயர்ந்த வகுப்பார் ஆகியோர்களின் ஆதரவு பெற்றவர் என்ற வகையில் அவர் இன்றும் ஒரு மிரட்டலான தலைவராகவே இருந்து வருகின்றார். அதோடு அந்த ஆண்டை (உயர்சாதியினர்) வகுப்பார் இன்றளவும் பெரியாரைக் கடவுளாகவே போற்றி வருகின்றனர். பெரியாரை, ஆண்டைகள் கடவுளாகவே வழிபடுவதில் தலித்துகளுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஆனால் கடவுள் என்பவர் அனைவருக்கும் சமமானவராக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையாவது இருக்க வேண்டுமே”

நிலவுடமையாளர்கள், சமூகத்தில் உயர்ந்த வகுப்பார் ஆகியோர்களின் ஆதரவு பெரியாருக்கு இருந்ததாம், இருக்கிறதாம், சொல்கிறார் திரு.மா.வேலுச்சாமி.

பெரியார் இன்னார்- இனியார் என்று வேறுபாடின்றி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்தவர். நிலவுடைமையாளர், உயர்ந்த வகுப்பார் ஆதரவு பெற்றவர் என்று கூசாமல் புளுகியிருக்கும் இவரின் கூற்று உண்மையா பெரியார் எந்தக் காலத்திலும், நிலவுடைமையாளர்களுக்கோ, உயர்ந்த வகுப்பாருக்கோ, ஆதரவாகச் செயல்பட்டதில்லை என்பதற்கு மிகச் சிறந்த ஆய்வாளரான திரு.எஸ்.வி.ராஜதுரை அவர்கள் தரும் சான்று இதோ,

“பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தனது அடிப்படை இலட்சியமான சாதியொழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்பதற்கு ஆதரவாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையான சக்திகளைத் திரட்டியது. ஆத்திகர். நாத்திகர், காங்கிரஸ்காரர், நீதிக்கட்சியினர், பொதுவுடைமை ஆதரவாளர்கள், முதலாளிகள், தொழிலாளிகள் நிலப்பிரபுக்கள், நிலமற்ற விவசாயிகள் எனப் பலதரப்பட்டேர் அதில் இருந்தனர், எந்தவொரு காலகட்டத்திலும் அவ்வியக்கம் முதலாளிகளின் நலன்களுக்கான கோரிக்கை விடுத்ததில்லை"

----------------நூல்: "ஆகஸ்ட் 15" பக்கம்:-410

ஆண்டைகள் பெரியாரை கடவுளாக வழிபடுகிறார்களாம் குறைந்தபட்சம் பெரியாரை இந்த ஆண்டைகள் எதிர்காமலாவது இருந்தார்களா? இது குறித்து பெரியார் தரும் விளக்கம் இதோ

“ஒரு சார்பும் இல்லாதவனாகத் தனித்து எந்த ஒரு ஆதரவும் அற்றவனாகி என்னையே எண்ணி நின்று, பாமர மக்களுடையவும், படித்தவர்களுடையவும், பிறவி ஆதிக்ககார்களாகிய பார்பனர்களுடையவும், சர்வ சக்தியுள்ள பத்திரிக்கைகாரர்களுடையவும், போதாக்குறைக்கு அரசாங்கத்தாருடையவும் வெறுப்புக்கும், அதிருப்திக்கும், எதிர்ப்புக்கும், விசமப் பிரச்காரத்திற்கும், தண்டனை, கண்டனைகளுக்கும் ஆளாக இருந்து எதிர்ப்பையும் போராடங்களையும் சூழ்ச்சிகளையும் சமாளித்து, பொது மக்களால் கனவு என்று கருதப்பட்ட எனது இலட்சியங்களை, இவை கனவு அல்ல, உண்மை நினைவே, காரிய சாத்தியமே என்று கூறி வந்து அவை- (எனது இலட்சியங்)களின் நடப்புகளையும் நடப்புக்கு ஏற்ற முயற்சிகளையும் கண்டுகளிக்கிறேன்.

------பெரியார் பிறந்தநாள் மலர் 88 -17.9.66

இவ்வாறு நேர்மையாக, நாணயமாக, ஒளிவு மறைவின்றி உழைத்த பெரியாரை மா.வேலுசாமி, முனிமா குழுவினர் திட்டமிட்டே திரித்து எழுதி வருகின்றனர். கடவுள் மறுப்பை ஏற்றுக்கொள்ளாத பகுத்தறிவுச் சிந்தனை இல்லாத சாதி, மத சிந்தனையை ஏற்றுக் கொண்டிருக்கினற ஆண்டைகள்தான் அதிகம் அவர்கள் எப்படி பெரியாரை ஆதரிப்பார்கள் வழிபடுவார்கள் சிந்தியுங்கள் முனிமா குழுவினரே.

-------------------தொடரும்..........நன்றி:-"களத்துமேடு" ஜூன் 15 - 2004 பக்கம்:- 8-9

***************************************


பெரியாரின் சுயமரியாதை இயக்கம் காட்டுமிராண்டிகளை உருவாக்கியிருக்கிறதா? -2




அடுத்ததாக திரு மா.வேலுச்சாமி வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு.

"ஈ.வெ.ரா அவர்களின் அரசியல் வியூகத்தில் விட்டில் பூச்சிகளாய் மாறி மறைந்துபோன தலித்துகளின் பார்வையில் ஆராய்ச்சி செய்யும்போது சுயமரியதை இயக்கமும் திராவிட அரசியலும் தமிழகத்தில் அரசியல் சமூகத்தளங்களில் சாதி வெறி காட்டுமிராண்டிகளையே உருவாக்கியிருக்கிறது”

முதலில் தந்தைபெரியார் பொதுவாழக்கைக்கு வருவதற்கு முன்னால் இந்தச் சமுதாயம் எப்படி இருந்தது என்பதையும் தாழ்த்தப்பட்டோர் அனுபவித்த கொடுமைகளையும் பார்ப்போம். அப்போதுதான் தந்தைபெரியாரை ஆண்டைகள் ஏற்பார்களா அரவது இயக்கம் உருவாக்கியிருப்பது காட்டுமிராண்டிகளையா என்பவற்றிற்கு பதில் கிடைக்கும்.

• தாழ்ததப்பட்டவர்கள், பார்பனர்கள் வசிக்கும் தெரு மற்றும் மேல்சாதி மக்கள் வசிக்கும் தெருக்களில் நடந்து செல்ல முடியாத நிலை

• தாழ்தப்பட்டவாகள், செருப்பு அணிந்து நடந்து செல்ல முடியாத நிலை குடைபிடித்துக் கொண்டும் போக முடியாது.

• தாழ்தப்பட்டவாகள் முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்ட முடியாத நிலை

• தங்க நகைகள் அணியக்கூடாது

• சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது

• திருமணத்தின் போது மேளம் வாசிக்கக் கூடாது

• ஒற்றையடிப்பபாதைகள், வண்டிப்பாதைகளில் பார்பனர் எதிர்பட்டால் பறையர், முதலானோர் ஓடி மறைந்து கொள்ள வேண்டும்

• தோளில் துண்டு போடக் கூடாது

• பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது

• பஞ்சமர்களும், நாய்களும், பெருநோய்காரர்களும் உள்ளே வரக்கூடாது என்று உணவு விடுதிகளில் எழுதி வைத்திருந்தனர்.

• நாடக சபாக்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை அறிவித்திருந்தனர்.

• அதே போல பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்ய முடியாது.

இப்படி எத்தனையோ கொடுமைகள் நிறைந்து காணப்பட்ட சூழலில், பெரியார் பொதுவாழ்க்கைக்கு வந்தவுடன் தனது 'குடிஅரசு' இதழ் மூலமும், தன் செய்கையாலும் இக்கொடுமைகளைக் களைந்த எறிய ஆவண நடவடிக்கைகளை எடுத்தார். இக்கொடுமைகளை எதிர்த்து ஒரு சிலர் போராடியிருந்தாலும், மக்களிடம் ஒரு எழுச்சியை மனமாற்றத்தை, மறுமலர்ச்சியை உண்டாக்கி இக்கொடுமைகள் ஓழியக் காரணமாயிருந்தவர் பெரியார் - இது தான் உண்மை வரலாறு.

1929-ல் செங்கல்பட்டில் நடந்த சுயமாpயாதை மாகாண மாநாட்டில் பெரியார் நிறைவேற்றிய தீர்மானங்களைத் தான் இன்று ஆட்சியாளர்கள் அமுல்படுத்தி வருகிறார்கள். இதோ

7-வது தீர்மானம்:

மனித நாகரிகத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து எல்லாப் பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர் பந்தல்கள், முதலிய பொது ஸ்தாபனங்களைத் தட்டுத் தடங்கலின்றி அனுபவிக்கச் சகல ஜனங்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறது.

15வது தீர்மானம்:

மற்ற வகுப்புப் பிள்ளைகள் சமமாக் கல்வி அடைகிற வரையிலும், தீண்டாவர்கள் என்று சொல்லப்படுகிற வகுப்பினரின் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடங்களில் புத்தகம், உண்டி, உடை முதலியனவற்றை இலவசமாக அளிக்க வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

20வது தீர்மானம்:

இனிமேல் சர்க்கர் தர்க்காஸ்து நிலம் கொடுப்பதெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பவாகளுக்கும் மற்றும் நிலமில்லாதவர்களுக்கம் கொடுக்க வேண்டுமென்றும் அதிலும் இப்போது தீண்டாதார் எனப்படுவோருக்கு விசேச சலுகை காட்டி நிலங்களை பண்படுத்தி பயிர் செய்ய பணஉதவி செய்ய வேண்டும்

21வது தீர்மானம்

தீண்டாதார் எனப்படுவோருக்கு சர்க்காரில் காலியாகும் உத்தியோகங்களில் முதல் உரிமை கொடுக்க வேண்டும்.

என்றும் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி போராடி அரசு ஆணைகளாக பெற்றுத்தந்தவர் பெரியார். இது போன்று பல ஆதாரங்களை நம்மால் காட்ட முடியும். தன்னுடைய "குடிஅரசு", "புரட்சி", "விடுதலை" இதழ்கள் மூலம் எடுத்துச் சொன்னதோடு மக்கள் மன்றத்திலும் எடுத்துக் கூறி, நியாயங்களை எடுத்துச் சொன்ன பெரியாரின் சுயமரியாதை இயக்கம் காட்டுமிராண்டிகளை உருவாக்கியிருக்கிறது என்று நா கூசாமல் முனிமா குழுவினர் கூறிவருவன கண்டு ஆராய்ச்சியாளரும், ஆய்வாளர்களும், மக்களும் எண்ணி நகையாடியே வருகின்றனர், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்பதை அறிய கீழ்க்கண்ட நூல்களை படிக்க பரிந்துரைக்கிறோம்.

1. தஞ்சை ஆடலரசன் எழுதிய தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்

2. எஸ்.வி.ராசதுரை – வ.கீதா எழுதிய பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம் செயல்பாடுகளும்

3. வ.மா.ஒ.- புனிதபாண்டியன் எழுதிய பெரியாரைத் திரிக்கும் புரட்டுகளுக்கு மறுப்பு


------------------ தொடரும் ..........-நன்றி:-"களத்துமேடு" ஜூன் 15 - 2004 பக்கம்: 9-10


**********************************

பெரியாரும், பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகளும் செய்த செயல்பாடுகள் பாரீர்-3

1. தமிழ்நாட்டிற்கு அம்பேத்கரை அறிமுகப்படுத்தி, அவரின் ‘ஜாதி ஒழிய வழி என்னும் நூலை பட்டி தொட்டியெல்லாம் பரப்பியவர்கள் பெரியாரும், பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகளும்.

2. மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டுவதற்கு மராட்டிய அரசு முன்வந்தபோது அதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் தமிழகத்தில் அம்பேத்கர் பல்கலைக்கழகம், அம்பேத்கர் மாவட்டம், அம்பேத்கர் போக்குவரத்துக்கழகம், இன்னும் பலவற்றுக்கு அம்பேத்கர் பெயர் வைப்பதற்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் அந்த மண்ணை பக்குவப் படுத்தியது பெரியாரும், பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகளே.

3. உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்ட்டவர் ஒருவர் நீதிபதியாக வரக் காரணமாயிருந்தவர்கள் பெரியாரும், பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகளுமே.

4. அப்பன் தொழிலையே மகன் செய்ய வேண்டும் என்ற குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து அதை வரவிடாமல் தடுத்தவர்கள் பெரியாரும், பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகளுமே.

5. மத்தியஅரசில் வேலைவாய்ப்பில் மட்டுமே தாழ்த்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு இருந்தது. 1951 முதல் வேலைவாய்ப்பில் மட்டுமல்லாது கல்வியிலும் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தவர்கள் பெரியாரும், பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகளுமே

6. சாதிக்குப் பாதுகாப்பளிக்கும் இந்திய அரசியல் சட்டத்தை 1957ல் முதன் முதலில் எரித்தவர்கள் பெரியாரும், பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகளுமே

7. ‘பிராமணாள் சாப்பிடும்’ இடம் ‘இதராள்’ சாப்பிடும் இடம் என்று இரயில் நிலையங்களில் இருந்த நிலையை மாற்றிப் பொதுவானதாக அறிவிக்கும் நிலையை ஏற்படுத்தியவர்கள் பெரியாரும், பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகளுமே


இதுபோல் இன்னும் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ஏடு கொள்ளாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேhம்.

தன் வாழ்நாளெல்லாம் ஜாதி ஒழிப்புக்காகவே வாழ்ந்த பெரியாரை, ஜாதி ஒழிப்புக்காக பலகுடும்பங்களை இழந்து நிற்கும் பெரியாரின் இயக்கத்தை ஜாதி வெறிக் காட்டுமிராண்டிகளாகவே உருவாக்கியிருக்கிறது என்று தலித் பார்வையில் வியாக்யானம் செய்யும் இவர்கள் ஜாதி ஒழிப்புகாகச் செய்த செயல்களை பட்டியலிடுவார்களா?

---------------------தொடரும் ..."களத்துமேடு" ஜூன் 15 2004 பக்கம் 10

3 comments:

Unknown said...

குற்றச் சாட்டுக்களுக்கு தெளிவான பதில்கள். தலைப்பு எதிர்மறையாக இருந்தாலும் பெரியாரின் செயல்பாடுகளை சிறப்பாக எடுத்து இயம்புகிறது இந்தக் கட்டுரை.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Unknown said...

இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மதங்கள் பற்றிய பெரியார் அவர்களின் கருத்துக்கள் எங்கே கிடைக்கும்?