Search This Blog

31.1.10

கடவுள் - மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்! -3


மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!


மனிதன் ஒழுக்கமான வாழ்வு வாழவேண்டும், குற்றங்கள் புரியாமல் வாழவேண்டும் என அனைவருமே ஆசைப்படுகிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் ஏராளமான குற்றங்கள் நடைபெறுகின்றன. மனிதன் உருவான காலம் முதற்கொண்டே இத்தகைய குற்றங்கள் நடைபெறுகின்றன. காரணம் என்ன?

கடவுள் படைத்தார் மனிதனை என்கிறார்கள். யூத, கிறித்துவ, இசுலாமிய மதங்கள் கால வரிசைப்படி உண்டாக்கப்பட்டு மனிதனைக் கடவுள் படைத்தது என்கிற கட்டுக் கதையை அவிழ்த்து விட்டன ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே! அந்தக் கதைகளைக் கடவுளே சொல்லிற்று என்றும் கதை விட்டனர். கடவுள் சொன்ன கதைகள் அடங்கிய நூல்தான் இந்த மதங்களின் அடிப்படை; வேத நூல்கள் எல்லாமே!

ஆதாம் என்னும் ஆணை முதலில் படைத்ததாகவும், பின்னர் ஏவாள் எனும் பெண்ணைப் படைத்ததாகவும் மூன்று மதங்களின் கதைகளும் ஒரே மாதிரியாகக் கூறுகின்றன. அந்த ஆதாம், ஏவாள் இணையருக்குப் பிறந்த பிள்ளைகள் காயீன், ஆபேல். இவர்கள் இருவருமே ஒற்றுமையாக இல்லாமல் ஆபேலைக் காயீன் கொலை செய்து விட்டான் என்றும் கதை போகிறது. கொலைவெறி முதல் முறை மனிதரிடையே தோன்றியதற்கு எது காரணம்? யார் காரணம்? கடவுளா? கடவுளின் படைப்பில் ஏற்பட்ட கோளாறா? முன்-ஜென்மக் கர்ம வினையா? தலைவிதியா? கடவுளின் கட்டளையா? கடவுளின் சித்தமா? கடவுளின்(திரு)விளையாடலா? எது?

இத்தகைய குற்றங்களுக்குக் கொடுமையான தண்டனைகள் கொடுப்பதன் மூலம் குறைத்து விடலாம்; மனிதர்களைத் திருத்திவிடலாம் என்று நினைத்துத்தானே மதங்களின் இ.பி.கோ. எழுதப்பட்டுள்ளன. ஹலாச்சா, பைபிள், ஷரியா என்ற பெயர்களில்!

பார்த்தால் கண்ணைத் தோண்டு, கேட்டால் காதை அறு, தொட்டால் காலை வெட்டு, எடுத்தால் கையை வெட்டு, உட்கார்ந்தால் பின்பக்கத்தை அறுத்துவிடு என்றெல்லாம் காட்டு விலங்காண்டித்தனமான தண்டனை முறைகளை விதித்திருக்கிறார்களே! இவற்றால், குற்றங்கள் குறைந்து விட்டனவா? மதம் தலைவிரித்தாடும் நாடுகளில் குற்றங்களே இல்லையா?

மாறாக, மதம் தோற்றுப் போன நாடுகளில் - மனித நேயம் மலர்ந்து உள்ள நாடுகளில் குற்றங்கள் குறைந்து காணப்படுகின்றன. மதச்சார்பற்ற, கடவுள் நம்பிக்கையற்ற வாழ்க்கையை வாழ்பவர்கள் குற்றங்களைக் குறைவாகப் புரிகிறார்கள் என்றே கூறலாம். அப்படிப்பட்ட வாழ்க்கை நிலவும் ஸ்கான்டினேவிய நாடுகளில் (நார்வே, சுவீடன், டென்மார்க் முதலியவை) குற்றங்கள் மிகமிகக் குறைந்த அளவிலேயே உள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். (நியூயார்க் பல்கலைக் கழகம் 2008 இல் வெளியிட்ட கடவுள் இல்லாத சமூகம்- (Society without God) எனும் நூல் ஆசிரியர் ஃபில் ஜூகர்மேன்), கடவுள், மத நம்பிக்கையாளர்களின் பதில் என்ன?

கடவுளை மற; மனிதனை நினை என்றார் தந்தை பெரியார்! மனிதனைப் பற்றி நினைத்துச் செயல்படும் மனித நேய வாழ்வு (Humanism) என்பதே - நல்ல வாழ்வு, நல்ல சமூகம் - கடவுள் தேவையில்லாமல் - என்பதுதான்.

கடவுளை நம்பி, கும்பிட்டு, வாழ்வில் வழிகாட்ட வேண்டிக் கொண்டு வாழ்ந்த சர்வாதிகாரி இட்லர் என்ன சொன்னான்? யூதர்களை இலட்சக் கணக்கில் கொன்று குவித்தபோது என்ன சொன்னான்? இந்த உலகத்தைப் படைத்த, சர்வ சக்தியுள்ள கடவுளின் எண்ணப்படியே நான் செயல்படுகிறேன். யூதர்களைக் கொல்வதன் மூலம் கடவுளின் வேலையை நான் செய்கிறேன் என்று சொன்னான். தன் படை வீரர்களின் இடுப்பு பெல்டில் (Belt) பொறித்து வைத்த வாசகங்கள் - கடவுள் நம்முடன் இருக்கிறார் (ஜெர்மன் பழமொழி) என்பதே! இனப்படுகொலைக்குப் பாதுகாப்பாகக் கடவுள் இருந்துள்ளார்.

அண்மையில் ஓர் ஆளை அமெரிக்கக் குடியரசுத் தலைவராக உலகம் பார்த்தது. ஜார்ஜ் புஷ் எனும் அவர், கடவுளிடம் பேசி, அதனுடைய சம்மதத்தைப் பெற்றுத்தான் ஈராக் நாட்டின் மீது போர் தொடுத்து ஆயிரக்கணக்கான முசுலிம்களைக் கொன்று குவித்தார் என்று அவரே தெரிவித்தார். இந்த மடத்தனமான பேச்சைக் கேட்டு உலகமே கைகொட்டிச் சிரித்தது. என்றாலும் நாங்கள் கடவுளை நம்புகிறோம் (In God we Trust) என்கிற வாசகங்களை டாலர் நோட்டில் அடித்து வைத்திருக்கும் அமெரிக்காவின் அதிபர் அது பற்றிக் கவலைப்படவில்லை.

இந்த அமெரிக்க நாட்டின் புகழ் பெற்ற இரட்டைக் கோபுரக் கட்டடங்களை விமானத்தால் மோதி, இடித்துத் தகர்த்து தரை மட்டமாக்கிய அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் என்பாரும் அந்தக் கொடுமையைச் செய்ததற்கான காரணம் என்று அல்லாவைக் கைகாட்டி விட்டார். இசுலாத்தின் பெருமையைக் கட்டிக் காப்பாற்றும் புனிதப் போரில் தாம் ஈடுபட்டு இருப்பதாகக் கூறி வருகிறார். உலகின் பல நாடுகளிலும் இந்தப் பகையாளிகள் பரவி, படு பாதகங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இட்லர் எனும் கிறித்துவர், யூதர்களைக் கொன்றார். புஷ் எனும் கிறித்துவர் இசுலாமியரைக் கொன்றார். ஒசாமா எனும் இசுலாமியர் கிறித்துவர்களைக் கொன்றார்.

மதம் எங்கே நல்வழிப்படுத்துகிறது? கடவுள் இல்லாமல் ஒருவரும் நல்லவராக இருக்க முடியாது என்கிறார்களே, அது சரியான கருத்தா? தவறு என்றுதானே வரலாறு நிரூபிக்கிறது?

ஆபிரகாமின் கொடி வழியில் வந்த யூத, கிறித்துவ, இசுலாமிய மதங்களுக்குள் ஏன் இவ்வளவு கொலைவெறி? வணிகப்போட்டி என்பதைத் தவிர வேறு என்ன?

யூதர்கள் பழமொழி ஒன்று முன்பெல்லாம் தேவதைகள் மண்ணில் நடமானடினார்கள் இப்போது அவர்கள் வானுலகத்தில் இருந்தும் காணாமல் போய்விட்டார்கள் என்கிறது. அந்த நிலை வந்ததற்குக் காரணம் யார்? எது?

யேசு, தான் தேவகுமாரன் என்று கூறிக் கொண்டார். ஆனால் (யூதமத) மோசே கடவுளுக்குக் குமாரர்களே இல்லை எனக் கூறிவிட்டார். மற்றவர்களைப் போல யேசுவும் ஒரு மனிதனாகப் படைக்கப்பட்டவர்தான் என்று முகம்மது நபி கூறிவிட்டார் என்கிற கருத்தை இசுலாமிய மனிதநேயர் அபுபக்கர் அல்ரஜி என்பவர் கூறி இருக்கிறார். ஆனால், இன்று நாம் காண்பது என்ன? தேவகுமாரனாக இருந்த யேசு, தேவனாகவே மாறிவிட்ட, மாற்றப்பட்ட அற்புதம் பைபிள் பிரசங்கிகளால் ஏற்பட்டுவிட்டது.

பைபிள் ஒருவரால் எழுதப்பட்டது அல்ல; பலரால் பல காலங்களில் எழுதப்பட்டது. கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் (Chosen People) என யாரும் கிடையாது. இந்தப் பிரபஞ்சம்தான் கடவுள், நம்பிக்கை கொள்வதைவிட ஏன், எப்படி என்று காரணம் கேட்பது முக்கியம் என்று பேசினார் பருஷ் பெனடிக்ட் ஸ்பினோஸா எனும் ஆலந்து நாட்டு யூதர். பொது ஆண்டு 1632 இல் பிறந்த இவர் யூத மதத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்; ஆயுளுக்கும் திரும்பி வரக்கூடாது என்று ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இயற்கைதான் கடவுள் என்று கூறியதற்காக ஸ்பினோஸாவுக்குத் தண்டனை தந்தை யூத இனம், கடவுள் தங்களைக் காப்பாற்றுவதற்காகக் கடலைப் பிளந்து வழி அமைத்தார் - பின் தொடர்ந்த ஃபாரோ மன்னரின் படைகளைக் கூண்டோடு அழிக்கக் கடல் நீரைப் பயன்படுத்தினார் என்று கதை கட்டி வைத்துள்ளனர். இத்தனையையும் இவர்களுக்காகக் கடவுள் செய்ததற்குக் காரணம், இவர்கள் கடவுளால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் என்பதுதானாம். அதனால்தான், இவர்களைத் தேர்ந்து எடுத்து, இட்லர் கொன்று குவித்தான். ஃபாரோ மன்னனைக் கொன்ற கடவுள் இட்லரைக் கொல்ல வரவில்லையே!

ஆஸ்திரியா நாட்டில் பிறந்த இட்லர் ஜெர்மனியில் கட்சி தொடங்கி, ஆட்சியைப் பிடித்து, ஆஸ்திரியாவின் மீது படையெடுத்து வெற்றி கொண்டு, ஜெர்மனியுடன் சேர்த்துக் கொண்டான். இதற்கான விழாவில் உரையாற்றும்போது இட்லர், ஆஸ்திரிய நாட்டுச் சிறுவன் ஜெர்மனியின் அதிபராக ஆகித் தன் நாட்டை ஜெர்-மனியுடன் இணைப்பது என்பது கடவுளின் விருப்பம்; அதனை என் மூலம் நிறைவேற்றிக் கொண்டது கடவுள் எனக் கூறினான் என்றால் கடவுளின் விருப்பம் போர் நடத்துவதா? லட்சக் கணக்கில் மக்களைப் போரில் கொல்வதா? கிறித்துவக் கடவுளின் ஆசை, யூதர்களைக் கொல்வதா? அப்படியானால், கடவுள் எப்படி கருணை மயமானது?


-----------------------சு. அறிவுக்கரசு அவர்கள் 31-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

அதிமேதாவியா சோ ராமசாமி?


எது கலாச்சாரம்?

தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழ்நாடு அரசு அறிவித்து விட்டதாம்; அதனை ஏற்றுக் கொள்ள முடியாதாம். நாளைக்குத் தீபாவளியை பிப்ரவரி மாதத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு உத்தரவு வந்தால் ஏற்க முடியுமா என்று (துக்ளக் 27.01.2010) அதிமேதாவியாகத் தம்மை நினைத்துக் கொண்டு திருவாளர் சோ ராமசாமி சென்னையில் பேசியிருக்கிறார். கலாச்சாரத்திற்கு விரோதமானதை, நம்பிக்கைக்கு விரோதமானதை ஏற்க முடியுமா என்று வினாவும் தொடுத்துள்ளார்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றால் அதே குறிப்பிட்ட தேதியில் கொண்டாடலாம். தீபாவளி என்பது அதுபோல ஒரு குறிப்பிட்ட அதே தேதியில்தான் வருகிறது. அந்தக் குறிப்பிட்ட அதே தேதியில் தான் கொண்டாட வேண்டும் என்று சோவால் உறுதிப்படுத்த முடியுமா?

புரட்டாசி மாதத்தில்கூட தீபாவளி கொண்டாடப்படுவதுண்டு அய்ப்பசியிலும் வருகிறது. இந்த நிலையில் இரண்டையும் ஒப்பிடுவது மொட்டைத் தலைக்கும் (அவரே மொட்டை தானே!) முழங்காலுக்கும் விளக்கெண்ணெய் குழைத்து முடிச்சுப் போடப் பார்க்கிறார்.

தீபாவளியை நமது கலாச்சாரத்தோடு சம்பந்தப்படுத்துகிறாரே அதாவது உண்மையா? இந்தத் தீபாவளி தொன்று தொட்டு கலாச்சார அடிப்-படையில் வரக்கூடியதுதானா? எப்பொழுது முதல் இது கொண்டாடப்படுகிறது?

தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென்தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாப்பட்டு வரும் பெரு நாள். இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவில்லை. சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக்காலம் வரையில் இருந்ததில்லை.

இப்படி சொல்லியிருப்பவர் திராவிடர் கழகத்துக்காரர் அல்லர். கடவுள் மறுப்பாளரும் அல்லர். அ.கி, பரந்தாமனார் (மதுரை நாயக்கர் வரலாறு பக்கம் 433 - 434) எழுதியிருக்கிறாரே அதற்குப் பதில் என்ன? வழக்கமானது என்று சொல்வதில் பசையிருக்கிறதா?

பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் விழுந்தான் ராட்சசன் என்றும், பன்றி அவதாரம் எடுத்து பூமியை மகாவிஷ்ணு மீட்டார் என்றும், அந்தப் பூமியும் மகாவிஷ்ணுவும் புணர்ந்து நரகாசுரனைப் பெற்றனர் என்றும், அவன் பூதேவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) தொல்லை கொடுத்தான் என்றும் கிருஷ்ணபரமாத்மாவும், அவனது மனைவியும் கொன்றனர் என்றும், அப்படிக் கொல்லப்பட்ட நாள் தான் தீபாவளி என்றும் சாராயம் குடித்த பைத்தியக்காரன் உளறுவதுபோல சொல்லப்படுவதை ஏற்க முன்வராவிட்டால், அது நமது கலாச்சாரத்துக்கு விரோதம் என்று கூறும் பார்ப்பனர்களின் தில்லுமுல்லுகளை தமிழர்கள் உணர வேண்டாமா?

------------------------- மயிலாடன் அவர்கள் 31-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

ஆர்.எஸ்.எஸ்.சின் புது அவதார்




ஆர்.எஸ்.எஸ். எனும் ஆக்டோபஸ், அதைப் போன்று சுமார் 4 மடங்கு தன் கொடிய கரங்களை நீட்டி இந்திய மக்கள் சமூகத்தைச் சீரழிக்க முயல்கிறது என்பதை அறிவோம். அண்மையில், ஓர் ஆய்வாளர் அதன் புதிய அவதாரத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

கணினித் துறையிலும் மென்பொருள் துறையிலும் இந்தியர்கள் பெரும் அளவில் பங்கேற்று உலக அளவில் உயர்ந்து நிற்கிறார்கள் என்பது பெருமைப்படத் தக்க விசயம். அந்த பெருமைக்குச் சிறுமை தேடும் முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டு உள்ளது என்பதை ஆய்வாளர் மீரா நந்தா அம்பலப் படுத்தியிருக்கிறார். கடவுள் சந்தை (The God Market) என்ற நூலில் இத் தகவலைத் தந்துள்ளார்.

மென்பொருள் பணியாளர்களின் மத்தியிலும், மனதிலும், இந்துமத வெறியை விதைத்துப் பரப்புவதற்காகப் புதிய கிளை ஒன்றினை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியுள்ளது. இக்கிளையின் பொறுப்பாளர்கள் இத்துறையில் இருக்கும் பணியாளர்களுடன் அடிக்கடிச் சந்தித்துப் பேசும் நிகழ்ச்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள். கீ போர்டையே நாள் முழுவதும் கட்டி அழுது கொண்டிருக்காமல் வேறொன்றைக் கட்டி அழலாம் வாருங்கள் என்று பணியாளர்களைப் பக்தியின் பக்கம் இழுக்கிறார்கள். இதற்கு கர்மா முதலாளித்துவம் (Karma Capitalism) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இதன் முக்கிய சூத்திரதாரி, நம் பாபநாசம் பார்ப்பனர் ரவிசங்கரன். ஆம், சிறீ சிறீ ரவிசங்கர்தான். திருடிவிட்டு, உதை வாங்கி, வீட்டை விட்டு ஓடிப் போனஅதே பார்ப்பனர்தான். தொலைக்காட்சி கடவுள் மனிதன் என அவதாரம் எடுத்து வாழும் கலையைக் கற்றுக் கொடுக்கும் ஆளேதான். நாராயணமூர்த்திப் பார்ப்பனர் முதல் எல்லா முதலாளிகளும் 3 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டி வாழும் கலையைக் கற்று வருமாறு தன் அலுவலர்களை இவரிடம்தான் அனுப்புகிறார்கள். ரவிசங்கர் செய்யும் பணி ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஆள் பிடிக்கும் பணிதான்.

இந்த வகையில் ரவிசங்கரின் சீடர்கள் எண்ணிக்கை 20 மில்லிய-னாம். அதாவது 2 கோடியாம்! விஷம் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது, பார்த்தீர்களா! இந்த ரவிசங்கருக்கு 200 கோடி ரூபாய்க்கான சொத்து. இவருடைய ஆசிரமம் நூற்றுக்கணக்கான ஏக்கரில்! நிலம் உபயதாரர், பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலம்!

கடவுள் வியாபாரம்

19 ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின் விளைவாக விவசாயத்தையும் கிராமங்களையும் விட்டுவிட்டுத் தொழிலாளர்களாக நகரங்களை நாடி வந்தவர்கள் கடவுளைச் சாகடித்துவிட்டார்கள். ஆம், மதம் தன் பிடிப்பை நழுவவிட்டு, கடவுளின் கோயிலுக்குச் செல்வோரின் தொகை படிப்படியாகக் குறைந்து, அற்றே போய்விட்டது. ஆனால், தெற்கு ஆசியாவின் நிலைமை நேர் மாறானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதிலும் இந்தியாவின் நிலைமை மிகவும் மோசம். இந்தியாவில் தற்போது 15 லட்சம் பள்ளிக் கூடங்கள் உள்ளன. 75 ஆயிரம் மருத்துவ மனைகள் உள்ளன. ஆனால் 25 லட்சம் கோயில்கள் உள்ளன.

மக்கள் நிறையப் பேர் சென்று பார்க்கும் இடமாக தாஜ்மகால் இருந்து வந்தது. இப்போது, திருப்பதி கோயிலுக்குப் போகும் மக்களின் எண்ணிக்கை 230 லட்சம். மலையில் இருக்கும் மற்றொரு கோயிலான வைஷ்ணவிதேவி கோயிலுக்குப் போகும் ஆள்களின் எண்ணிக்கை 172 லட்சம். கடந்த 5 ஆண்டுகளில் 30 விழுக்காடு மத நம்பிக்கை கூடி விட்டதாக ஓர் ஆய்வு 2007 இல் தெரிவித்தது. இந்துஸ்தான் டைம்ஸ் ஏடு நடத்திய ஆய்வு என்கிற காரணத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலாது என்றாலும் ஓரளவு உண்மை இருக்கத்தானே, செய்யும்!

இதற்கு என்ன காரணம்? அரசுகளின் மதப் பிரச்சாரம், மத நடவடிக்கைகள், மதச் சடங்குகள் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிகளின் மத ஆதரவு, அரசியலில் மதத்தைக் கலப்பது, மத அடிப்படையில் அரசியலை நடத்துவது போன்ற பல காரணங்கள். மதவெறிக் கட்சியான பா.ஜ.க. மட்டுமா இதற்குக் காரணம்? அல்ல, காங்கிரசுக் கட்சியும்தான் காரணம்.

அணைக்கட்டுகளும், தொழிற்சாலைகளும் தான் மக்களுக்கான கோயில்கள் என்றார் நேரு. அவரது கொள்கைகளைத் தூக்கி எறிந்தது போலவே, இதனையும் தூரத் தூக்கிப் போட்டுவிட்டனர் அவரது கட்சியினரும் அவரது குடும்பத்தினரும்!

ராஜஸ்தான் மாநிலத்தில், இந்து மதக் கோயில் பூசாரிகளுக்குப் பயிற்சி தரவும், கோயில்களைப் புதுப்பிக்கவும் ஆண்டுதோறும் 26 கோடி செலவிடப்படுகிறது. அரசு - கோயில் கூட்டுத் தொழில் இந்த மாநிலத்தில் கனஜோராக நடைபெற்று வருகிறது. யாகங்கள், ஜபதபங்கள் ஏராளம் நடத்தப்படுகின்றன. அரசுகளும் அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு நடத்துகின்றன. இவர்களின் கட்சி வளர வேண்டும். மக்கள் பாழாய்ப் போவதைப் பற்றி இவர்களுக்குக்கவலை இல்லை.

சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் போன்ற பெரும் கடவுள்களை வணங்கும் பழக்கம் குறைகிறதாம். சிறுசிறு தெய்வங்களையும், பெண் கடவுளச்சிகளையும் வணங்கும் பழக்கம் பெருகி வருகிறதாம். நாட்டார் வழிபாடு என்று சிலர் இங்கே கூறுவார்கள். சாலை ஓர சிறு தெய்வங்களைக் கண்டு நடுங்கி ஓடினேன் என்பார் வடலூர் ராமலிங்கர். இப்படிப்பட்ட பெண் கடவுளச்சிகளைத் தேடித் தேடிக் காட்டுவதற்கு ஒருவர், கும்பிட்டு வருவதற்கு ஒருவர் என இருவர் உண்டு, அண்ணா பெயரில் நடத்தப்படும் கட்சியில்!

பிறகு ஏன், தெற்கு ஆசியா பின்நோக்கிப் போகாது?

மீண்டும் பேஷ்வா ராஜ்யமா?

பாரதீய ஜனதா கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்து எடுத்துள்ளார்-கள். எப்பொழுது தேர்தல் நடந்தது என்றெல்லாம் கேட்காதீர்கள். இது என்ன தி.மு.கழகமா தேர்தல் நடத்துவதற்கு? எல்லாம் நியமனம்தான். நியமித்தது ஆர்.எஸ்.எஸ். அல்ல, என்கிறார் கட்காரி. நம்புங்கள்.

இவரைப் பரிந்துரைத்தது அத்வானியாம். சரி. நியமித்தது யார் என்பதுதானே, இங்கே உள்ள கேள்வியே! பரிந்துரைத்தவர் பெயரைச் சொல்லி விட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். நெருப்புக் கோழிபோல தலையை மறைத்துக் கொண்டு முழுவதையும் மறைத்துக் கொண்டது போல் பேசுகிறார். இவரின் உடம்பு என்ன சிறியதா, நம் பார்வையில் படாமல் தப்பித்துக் கொள்ள?

சிபாரிசு செய்தவரைப் போலவே இவரும் பான்ட், சட்டை போடுபவராம். பழைய தலைவர் களைப் போல பைஜாமா குர்தா போட மாட்டாராம். இதுவெல்லாமா செய்தி?

பழைய தலைவர் ராஜ்நாத் சிங் உதவியாளர் ஒருவரைப் பக்கத்தி-லேயே வைத்திருப்பாராம். மிகமிக முக்கிய உதவியாளராம். இவர் பார்த்த மிகமிக முக்கிய வேலை என்ன தெரியுமா? ஜோசியம் பார்த்துச் சொல்லு வதுதான். சிறுநீர் கழிக்கக் கூட சிதான்சு திரிவேதிதான் நேரம் பார்த்துக் கூறவேண்டுமா? ஆம், சிதான்சு திரிவேதிதான் அந்த ஜோசியரின் பெயர். மூன்று வேதம் படித்தவர். நான்காம் வேதம் அதர்வண வேதத்தையும் ஏன் படிக்கவில்லை? படித்திருந்தால், மந்திர, தந்திரங்களும் அத்துபடியாயிருக்குமே!

மீண்டும் மராத்திப் பார்ப்பனர் தலைமைப் பொறுப்பில் வந்துள்ளார். பேஷ்வா ராஜ்யம் அமைக்கும் முயற்சியா?

இடஒதுக்கீடு இல்லையாம்!

புதுடில்லியில் இருக்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 149 பேராசிரியர் பணியிடங்க ளுக்கான தெரிவு நடைபெறவேண்டும். இட ஒதுக்கீடு தராமல் இந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்று 30 பேர் மனு கொடுத்துள்ளார்கள். இவர்கள் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். பல்கலைக் கழக விளம்பரத்தில் இட ஒதுக்கீடு விகிதப்படி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டப்படி தந்து தீர வேண்டிய இட ஒதுக்கீட்டைத் தரலாம் என்று பல்கலைக் கழகச் செயற்குழு (Executive Council) 2007 ஆம் ஆண்டிலேயே தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. ஆனாலும் சிலர் எதிர்க்கிறார்கள். யார் இந்தச் சிலர்? அந்தச் சிலர்தான்.

தரம் போய்விடுமாம். போய்விட்டால் பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள்இங்கு படிக்க வரமாட்டார்களாம். மற்றைய பிள்ளைகள் படிக்க இடம் இல்லாது போய்விடுமாம். என்னென்னவோ காக்கா- நரி கதை விட்டிருக்கிறார்கள். செயற்குழு உறுப்பினரும் நேரு பல்கலைக் கழக முன்னாள் மாணவருமான பி.சாய்நாத் 30 பேர் முயற்சியை எதிர்க்-கிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பாக எதையும் முடிவு செய்யமுடியாது என்று சுட்டிக் காட்டியுள்ளார். 11.1.2010 இல் நடந்த செயற் குழுக் கூட்டத்தில்!

கல்வியாளர் குழு (Academic
Council) என்ற பெயரில் 3 விழுக்காடு இனத்தைச் சேர்ந்த 30 பேர் எதிர்க்க முடியாது என்று பல பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

நேரு பல்கலைக் கழகம் முன்பு உலகின் சிறந்த 100 பல்கலைக் கழகங்களில் ஒன்றாக இருந்தது. இப்போது அந்த இடம் பறிகொடுத்தாகிவிட்டது. இட ஒதுக்கீடு இல்லாத நிலையில் நியமிக்கப்பட்ட கல்வியாளர்கள்தான் இருந்தனர்! இருக்கின்றனர்! தரம்தான் காணோம்! இதற்கு யார் காரணம்?

3 விழுக்காடைப் பிரதிபலிக்கும் 30 பேர் கூறுவார்களா?


------------------ சு. அறிவுக்கரசு அவர்கள் 30-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

பார்ப்பனரைத் தாங்கிப்பிடிக்கும் பார்ப்பனர்கள்!



காஞ்சிபுரத்திலே வரதராஜ பெருமாள் கோயில் அதன் மேலாளர் ஆனந்தசர்மா மகன் சங்கர்ராமன்.

இரவில் அல்ல, பட்டப் பகலிலேயே கொலை செய்யப்படுகிறார். ஊரே நடுங்குகிறது.

வரதராஜப் பெருமாள் கோயிலிலேயே இப்படி ஓர் அபவாதமா? என்று பக்தர்கள் குமைந்தனர். ஊர் மக்கள் பொரிந்து தள்ளினர். ஏடுகள் எல்லாம் பக்கம் பக்கமாக எழுதின.

யார் இதைச் செய்திருப்பார்? ஆசாமி சாதுவாயிற்றே அவருக்குக் கூட எதிரிகள் உண்டா என்று கூடிக் கூடிப் பேசினார்கள்.

கடைசியில் பார்த்தால்... அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியாக சங்கர மடத்துக்கு மோப்ப நாய் வரவில்லை-தான் என்றாலும் கொலையாளி அந்த மடத்துக்குள் தான் இருக்கிறார் என்ற தகவல்கள் கசிந்தன.

ஜெகத் குருவாம் சங்கராச்சாரியாராம் நானே கடவுள் என்று கூறிக் கொள்பவர்களாம். கொலையின் பீடம் அதுதான் என்று கண்டுபிடித்து ஒரு தீபாவளி நாளில் (11.11.2004) ஜெயந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டார்.

ஆந்திரா சென்று அங்கிருந்து கம்பியை நீட்டி விடலாம் என்று திட்டம் போட்டிருந்தார் போலும்! காஞ்சிபுரம் கொண்டு வந்து, நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டு 15 நாள் வேலூர் மத்திய சிறையில் தள்ளப்பட்டார்.

அவர் மீதுள்ள உள்ள குற்றச்சாற்றுகளோ சாதாரணமானவை அல்ல. இ.பி.கோ. 302, 120 பி, 34,201 கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுசதி, பொய்யான சாட்சியங்கள் சமர்ப்பித்தல் கொலை வழக்குகளில் ஆசாமி சிக்கிக்கொண்டார், 61 நாள்கள் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார் ஜெகத் குரு. எங்கு சென்றாலும் ஜாமீன் கிடைக்காது என்று உச்ச நீதி மன்றம் சென்று பெற்றுக் கொண்டு வந்தார்.

சின்ன பெரியவாள் விஜயேந்திர சரஸ்வதியும் கைது செய்யப்பட்டு (10.01.2005) 31 நாள் கம்பி எண்ணினார்.

நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மூன்று வாரம் நாள்தோறும் கையொப்பம் சாற்ற வேண்டும். கேடி லிஸ்டில் ஜூனியர் சங்கராச்சாரியார் இடம் பெற்றார்.

ஆடிட்டர் ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திர சரஸ்வதி கைது (23.11.2004). அக்கிரகாரத்தில் இடிவிழுந்தது மாதிரி ஆகிவிட்டது, வெளியில் தலைகாட்ட முடியாத பரிதாபம்!.

இந்த யோக்கியதை உள்ள ஆசாமி, கொஞ்சம் காலம் ஓடிவிட்டது என்கிற தைரியத்தில் துள்ளித் திரிகிறார்.

ஆங்காங்கே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பு வரவேற்பு வைபவங்கள்! நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் அவரை வரவழைத்து அவரை பெரிய மனிதராக ஆக்கிக் காட்டுகிறார்கள்.

அவர்மீது படிந்துள்ள அசிங்கங்களை மறைக்க புதிய ஜோடனைகளை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்பது தனியாரின் வங்கி அல்ல நாட்டுடைமையாக்கப்பட்ட ஒன்று. சென்னை காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனைக்கு கருவிகள் வாங்க ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள பொருள்களை இலவசமாக வழங்குகிறார்களாம்.

அந்த மருத்துவமனைக்கான சோதனை மய்யத்தை கொலை குற்றவாளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஜெயந்திர சரஸ்வதி திறந்து வைக்கிறாராம். யார் வீட்டுப் பணத்தை யாருக்குக் தூக்கிக் கொடுப்பது? நாட்டில் காஞ்சி மடம் நடத்தும் ஒரே ஒரு மருத்துவமனைதான் இருக்கிறதா?

மற்ற மற்ற மருத்துவமனைகளெல்லாம் கண்களுக்கே தெரியாதா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேல்மட்டமெல்லாம் ஒரே அக்கிரகார மயம். அவர்கள் நினைத்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற தோரணையில் கொலை மடம் என்று பெயர் பெற்றுவிட்ட சங்கர மடத்தின் அதிபதியை அழைத்து வாரி வழங்குகின்றனர் என்றால், இதன் பொருள் என்ன?

இந்த இடத்தைத்தான் சூத்திரத் தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கொலைக் குற்றவாளியாக இருந்தாலும் தங்களவாள் என்றதும் கோபுரத்திற்கு உயர்த்தும் அந்தக் குணப்போக்கைக் கவனிக்க வேண்டாமா?

ஒரு நண்டு இன்னொரு நண்டின் காலை கவ்விப் பிடித்து இழுப்பது போல, ஒரு தமிழன் இன்னொரு தமிழன் காலை வாரிவிடுவதில்தானே கண்ணும் கருத்துமாக இருக்கிறான்?

அவர்களின் பீடத்திற்கு ஹானி ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலே எத்துணை உணர்வுகள் அக்கிரகாரத்திடம் ?

கொலைக் குற்றம் மட்டுமா?

பெண்கள் விஷயத்தில் இந்தக் காமகோடி ஆடிய ஆட்டங்கள் சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா?

அனுராதா ரமணன் என்ற அம்மையார் அக்கிரகாரப் பெண்மணிதானே!

கண்ணீரும் கம்பலையுமாக பேட்டி கொடுத்தாரே- தொலைக்காட்சி ஒளிபரப்பியதே, -தன் கையைப் பிடித்து இழுத்தான் அந்தப் பெரிய மனுஷன் என்று குமுறினாரே!

நிர்வாணமாக நின்று என்னை பலவந்தப்படுத்தினார் என்று அந்தப் பார்ப்பனப் பெண் கதறினாரே- தொலைக்காட்சிகள் அதனை ஒளிபரப்பினவே.

இப்படி ஒரு கழிசடை பேர்வழியைத்தான் அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கி பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்பு கொடுக்கிறது.

தன் எதிரிலேயே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார் ஜெயேந்திரர் என்று வெட்கத்தை விட்டு அந்த எழுத்தாளர் குமுறினாரே!

வாரத்துக்கு அய்ந்து நாள்கள் சிறீரங்கத்தில் உள்ள உஷா என்ற பெண்ணுடன், சங்கராச்சாரி ஜெயேந்திரரும் காலை நேரத்தில் சரசலீலைகள் பேசியதை அந்தக் கைபேசிகள் மூலம் காவல்துறை உறுதிப்படுத்தியதே!

ஜெயேந்திரருக்கு பெண்களை சப்ளை செய்தேன் என்று ரவி சுப்பிரமணியம் ஒப்புக்கொண்டிருக்கிறாரே!

இப்படிப்பட்ட ஓர் அசிங்கமான மனிதருக்குத்தான் இந்தியன் வங்கியிலுள்ள தலைமைப்பீ(ன)ட அக்கிரகாரத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அம்பாரி வைத்துப் பூஜை செய்கிறார்கள்.

ஜெயேந்திரரை விட பிரேமானந்தா எங்கே கெட்டுப் போய்விட்டார்? பிரேமானந்தாவை அழைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மரியாதை செய்வார்களா?

காஞ்சிபுரத்தில் ரயில்வேதுறை சம்பந்தப்பட்ட அரசு விழாவில் (25.11.1998) சங்கராச்சாரியார் கலந்துகொண்டதைக் கண்டித்து திராவிடர் கழகம் மறியலில் ஈடுபட்டதே அதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார்கள் அவ்விழாவில் பங்கேற்கவில்லை. அப்போது அவர்மீது கொலை வழக்குக் கூட இல்லை.

ஓர் அரசு விழாவில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படி பங்கேற்கலாம் என்று போர்க் கொடி உயர்த்தியதே திராவிடர் கழகம்.

அப்படி இருக்கும்பொழுது அரசுக்குச் சொந்தமான வங்கி இந்து மத மடத் தலைவரை அழைத்து எப்படி சிறப்பு செய்யலாம்? அதுவும் ஒரு கொலைக் குற்றத்தில் ஜாமீனில் வெளிவந்த நிலையில் எப்படி அழைக்கலாம்?

இதைப் பற்றி எந்த ஏடுகள் எழுதுகின்றன? எந்தத் தொலைக்காட்சி விமர்சனம் செய்கிறது? எந்தத் தலைவர்கள் பிரச்சினை செய்கிறார்கள்?

பஞ்சமா பாதகம் செய்தாலும் தங்கள் இனத்தவரை பார்ப்பனர் எப்படியெல்லாம் கட்டிக் காக்கும் வேலையைச் செய்கிறார்கள்?

தமிழர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும் இனஉணர்வை வளர்த்துக் கொள்ளட்டும்!


-------------------மின்சாரம் அவர்கள் 30-1-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்ட்டுரை

காந்தியார் படுகொலை செய்யப்பட்டது ஏன்?



இன்று காந்தியார் நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். இந்து மதப் பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்ட நாள்.

காந்தியார் அவர்களைக் கொன்ற இந்து மத வாதம் இன்னும் உயிர்த் துடிப்போடு இருந்துகொண்டுதான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அந்த வாதம் கலாச்சாரம் என்ற பெயராலும், இந்துத்துவா என்னும் பெயராலும் மூர்க்கத்தனமான வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

தந்தை பெரியார் இதுபற்றிக் கூறும் கருத்து மிகவும் கருதத்தக்கதாகும்.

புத்த தர்மம் கெட்டது யாரால்? சமண தர்மம் கெடுக்கப்பட்டு சமணர்கள் கழுவேற்றப்பட்டது யாரால்? மற்றும் பாதகமானதும், வஞ்சனையானதுமாகிய பல கொடுஞ்செயல்கள் புராண காலத்திலும், சரித்திர காலத்திலும் நடந்ததாகக் காணப்படுபவை யாரால் நடந்தவைகள்?

இவை போன்றவைகளைக் கூர்ந்து கவனிப்போமேயானால், காந்தியார் போன்ற பெரியார்கள் பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்டது என்பது அதிசயமோ சிறிதும் ஆச்சரியமோ அல்ல என்பதை உணருவோம். இதற்காகப் பார்ப்பனச் ஜாதியைக் குறை கூறுவது முற்றும் சரியானதாகிவிடாது. அவர்கள் தங்கள் சுயநல வாழ்வுக்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மதக் கற்பனைகளே இப்படிப்பட்ட பார்ப்பனர்களை உற்பத்தி செய்யும் விளை நிலமாக இருந்து வருகிறது.

உண்மையிலேயே மத மாச்சரியம், வகுப்பு மாச்சரியம், இன மாச்சரியம் முதலிய துவேஷங்களுக்குப் பார்ப்பன மதம் தவிர மற்றபடி, இந்த நாட்டில் வேறு காரணம் யாராவது சொல்ல முடியுமா? தனிப்பட்ட எந்தப் பார்ப்பனரை நாம் குற்றம் கூறக்கூடும் என்று கேட்கிறோம்.

நன்றாக ஆழ்ந்து நிதான புத்தியுடன் கூர்ந்து சிந்திப்போமேயானால், வெள்ளையன் ஆட்சி கூடாது, முஸ்லிம் ஆட்சி கூடாது என்ற உணர்ச்சியை இந்திய மக்களுக்கு ஊட்டவும், அதனால் குரோதம், துவேஷம் ஏற்படவும், அதனால் வெட்டு, குத்து, கொலை, கொள்ளை, நாசம் ஏற்படவும் பார்ப்பன மதம் காரணமல்லாமல் வேறு ஏதாவது கொள்கைகள், திட்டங்கள், ஆட்சி தர்மங்கள் காரணம் என்று யாராலாவது சொல்ல முடியுமா? சொல்லக் கூடுமானால், வெள்ளையன் ஆட்சியும், முஸ்லிம் ஆட்சியும் ஒழிந்தன; இந்துஸ்தான் சுய ஆட்சி பெற்றது என்று சொல்லப்பட்ட பின்பும் இந்து _ முஸ்லிம் போராட்டம் என்னும் பேரால் இந்த ஒரு ஆண்டு காலமாக நடந்துவரும் அட்டூழியமான நடத்தைகள் நடப்பதற்குப் பார்ப்பன மதம் காரணமல்லாமல் வேறு காரணம் என்று யாராவது, எதையாவது சொல்ல முடியுமா?

திராவிட நாட்டில் இதுபோது நடந்துவரும் திராவிட _ ஆரியர் நாடு பிரிவினைப் போராட்டங்களுக்கும், பார்ப்பன மதம் காரணம் என்பதல்லாமல் வேறு காரணம் ஏதாவது சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட ஒரு மத தர்மம் காந்தியாரைக் கொன்றதில் அதிசயமென்ன என்று திரும்பவும் கேட்கிறோம்.

----------------------------- “குடிஅரசு”, 7.2.1948

காந்தியார் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இந்த நாளில் தந்தை பெரியார் அவர்கள் கூறியுள்ள மேற்கண்ட தகவல்களும், கருத்துகளும் மிகக் கவலையோடு சிந்திக்கப்படவேண்டியவையல்லவா?

நாட்டில் விரும்பப்படும் சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி இவையொட்டிய அனைத்து முன்னேற்றமான வளர்ச்சிப் பணிகளுக்கும் படுகேவலமான முறையில் தடையாயிருப்பது காந்தியாரைக் கொன்ற அந்த பார்ப்பனிய மதவாத சக்திகள் _ உணர்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதுதானே?

20 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் 1992 டிசம்பர் 6 இல் இந்தியாவில் என்ன நடந்தது? 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம்வரை மக்கள் கூடி இன்னொரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தைப் பட்டப் பகலில் பெரிய தலைவர்களின் தூண்டுதலால் நேரிடையான பார்வையில் அடித்து உடைத்து நொறுக்கப்பட்டனவே இதன் தன்மை என்ன?

2002 இல் குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி, நரேந்திர மோடி என்பவரின் தலைமையில் சிறுபான்மை மக்களான முஸ்லிம் மக்களைக் குறி வைத்துத் தாக்கி வேட்டையாடி பல்லாயிரக்கணக்கான மக்கள் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனரே அவர்களின் வீடுகளும் தொழில் நிறுவனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு சாம்பலாக்கப்பட்டனவே!

தொழு நோயால் துன்புறும் மக்களுக்குத் தொண்டூழியம் செய்ய வந்த கிறிஸ்துவ பாதிரியாரையும், அவரின் இரண்டு மகன்களையும் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது தீ வைத்துக் கொளுத்தித் திமிர் முறித்தார்களே!

மருத்துவமனையில் புகுந்து மருத்துவப் பணிகளைச் செய்துகொண்டிருந்த நர்சுகள் கிறித்துவர்கள் என்ற காரணத்தால் அவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கித் தூக்கி எறிந்தார்களே!

செத்துப்போன பசுமாட்டின் தோலை உரித்தார்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக அவர்களைப் படுகொலை செய்தார்களே!

இந்தக் கொடுமைகள் எல்லாம் தந்தை பெரியார் அவர்கள் கணித்துச் சொன்னபடி 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்கூட கூச்சம் இல்லாமல் நடந்துகொண்டிருக்கின்றனவே!

நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் முஸ்லிம்களின் கைகளை வெட்டுவேன், தலையை துண்டிப்பேன்; நாக்கை அறுப்பேன் என்று பொதுக்கூட்ட மேடையில் நாசகாரத் தன்மையில் எப்படி பேச முடிகின்றது?

நான்தான் நாதுராம் கோட்சே பேசுகிறேன் (மை நாதுராம் கோட்சே போல்தா) என்று இந்தியாவின் தலைநகரத்திலேயே நாடகம் போட்டு காந்தியார் என்ற அரக்கனைக் கொன்றோம்! என்று மார்தட்டினார்களே!

உலக உத்தமர் என்றும், தேசப்பிதா என்றும் பெரும்பான்மையான மக்களால் மதிக்கப்பட்ட ஒரு தலைவரை எந்த ஒரு கூட்டம் பச்சைப் படுகொலை செய்ததோ, அதே கூட்டம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தலைகொழுத்துத் துள்ளித் திரிகிறதே!

மீண்டும் தந்தை பெரியார் அவர்களின் கருத்துரையை உள்வாங்கிக் கொண்டால் என்ன செய்யப்படவேண்டும் என்பது விளங்காமல் போகாது!

-------------------- “விடுதலை” தலையங்கம் 30-1-2010

30.1.10

வடலூர் இராமலிங்க அடிகளாரின் நினைவு நாள் சிந்தனை

வடலூரார்

காந்தியார் மதவெறி ஆரியக் கூட்டத்தால் படுகொலை செய்யப்பட்ட அதே தேதியில் (ஜனவரி 30) அதே ஆரியத்தின் சூழ்ச்சியால் மர்மமான முறையில் மரணத்தின் பிடியில் தள்ளப்பட்ட வடலூர் இராமலிங்க அடிகளாரின் நினைவு நாளும் வருவது ஒரு வகையில் பொருத்தம்தான் (1874).

தொடக்கத்தில்ஆரிய இந்து மதச் சுழற்சிக் கூண்டுக்குள் சிக்கி அவர் தவித்திருந்தாலும், பிற்காலத்தில் ஆறாம் திருமுறையில் கடவுள் உருவ வழிப்பாட்டையும் மூடநம்பிக்கையையும் சக்கை சக்கையாகக் கிழித்து கவிதையால் சூடுபோட்டார்.

வேதாகமங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர் வேதாகமத்தின் விளைவறியீர் சூதாகச் சொன்னதலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவில்லை. என்ன பயனோ இவை

என்று வேதாகமங்களைத் துவட்டி எடுத்தார்.

பெரியபுராணத்தில் வரும் 63 நாயன்மார் கதைகளும் தத்துவங்களே தவிர, மனிதர்கள் அல்ல என்று மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்தார்.

வேதநாயகம் பிள்ளை எழுதிய நீதி நூலுக்கு சாற்றுக்கவி தந்தார் இராமலிங்கனார். வேதநாயகம் நீதி நூலுக்கு முன் மனுநீதி நூல் வெறும் கயிற்று நூலே என்று எள்ளி நகையாடினார்.

இப்படிப் பாடிய பெரியவரைப் பார்ப்பனர்கள் விட்டு வைப்பார்களா?

காஞ்சி சங்கராச்சாரியாரும், இராமலிங்கனாரும் வாதிட்ட ஒரு நிகழ்வு மிக முக்கியமானது. சமஸ்கிருதத்தை பித்ரு பாஷை என்றார் சங்கராச்சாரியார். அப்படியானால் தமிழ் மாத்ரு பாஷை என்று நயமாகப் பதிலடி கொடுத்தார். சமஸ்கிருதம் தந்தை மொழி என்றால், தமிழ்தாய்மொழி என்று சங்கராச்சாரியாருக்குச் சூடு கொடுத்தார்.

பல வகைகளில் தந்தை பெரியார் கருத்துகளை ஒத்திருந்தன அவரது பாடல்கள். வடலூரில் அவர் தோற்றுவித்த சத்திய ஞான சபையில் உருவ வழிபாடு கிடையாது. பின்னர் அந்த இடத்தை ஆக்கிரமித்த ஒரு பார்ப்பனர் லிங்கம் உள்ளிட்ட ஆரிய வழிபாட்டைத் திணித்தார். கலைஞர் ஆட்சியில் அவர் வெளியேற்றப்பட்டார்.

பன்னூறு உருவங்களை வழிபட்டுக் கிடந்த மூட மக்களிடையே அவற்றைத் துறந்து, புரோகிதப் பிடுங்கல்களுக்கு இடமில்லாமல், ஜோதியை வணங்கு என்று சொன்னது கூட அந்தக் கால கட்டத்தில் ஒரு மகத்தான சீர்திருத்தம்தானே!

-------------------- மயிலாடன் அவர்கள் 30-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் மக்கள் பல்கலைக் கழகம் - கி.வீரமணி விளக்கம்

தமிழர் தலைவரின் கனிவான அறிவிப்பும் - வேண்டுகோளும்!

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் என்னும் மக்கள் பல்கலைக் கழகத்தின்நிகர்நிலைப் பல்கலைக் கழக தகுதியை எந்தவித விளக்கமும் கேட்கப் படாமல் ரத்து செய்து உச்சநீதிமன் றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்டியலைத் தொடர்ந்து, பெற்றோர்கள், நலம் விரும்பிகளின் கருத்தினை ஏற்று, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக சட்டப் பாதுகாப்புக் கான நிதி ஒன்றினை பெரியார் மணியம்மை இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் தலைவர் கி. வீரமணி அவர் கள் அறிவித்து விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாட்டின் 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக நடத்திடத் தகுதியற்றவை என்ற ஒரு பட்டியலை நான்கு பேர் கொண்ட ஒரு குழு தெரிவித்தது. பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பில் 4, 5 அகில இந்தியக் கல்வியாளர்கள் நான்கு, அய்ந்து நாள்கள் நேரிடையாக ஒவ்வொரு நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திற்கும் சென்று பார்வையிட்டு, அலசி ஆய்வு செய்து அளித்த அறிக்கையைப்பற்றிக் கவலைப்படாமல் சம்பந்தப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிடம் விளக்கம்கூடக் கேட்காமல், தன்னிச்சையாக எப்-பொழுதோ யாரோ ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கினைக் காரணம் காட்டி ரத்து செய்துள்ளது.

அதிர்ச்சியும், வேதனையும்

அந்தப் பட்டியலில் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகமும் இடம்பெற்றிருந்ததைக் கண்டு மிகுந்த அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் ஆளானோம்; நம்மைப் போலவே பல பெரிய அறிஞர்கள், கல்வியாளர்கள், பொறுப்பான பதவி வகிப்பவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்பட பல பொதுதரப்பட்டவர்களும்கூட அதிர்ச்சி அடைந்து நம்மிடம் அதனைத் தெரிவித்து, நமக்கு ஆறுதல் கூறி, ஊக்கப்படுத்துவதில் போட்டி போட்டுக்கொண்டு முன்வந்தனர். இதைவிட எங்களுக்குப் பெரும் நிம்மதியும், மன வேதனை போக்கும் மாமருந்தும் வேறு ஏது?

எந்த முகாந்திரத்தின் அடிப்படையில்?

எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் தகுதியற்றது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பது எங்களுக்கே தெரியாத ஒரு நிலை; பழைய கால மிசா கைதிபோல, என்ன குற்றத்திற்காக மிசா கைதியாக்கி சிறைக்கு அழைத்து வந்தனர் என்பது விடுதலை ஆன பின்னரும் ஏன், இதுவரையிலும்-கூடத் தெரிந்து-கொள்ள வாய்ப்பில்லாத கொடுமை அது!

அதுபோன்ற ஒரு விசித்திர நிலைதான் இப்போதும்! நீதிமன்றம்தான் ஜனநாயகத்தில் மக்களின் கடைசி நம்பிக்கை என்று கூறப்படுகிறது.

வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதன் முக்கிய அம்சங்கள்பற்றி நாம் எந்த விரிவான விளக்கத்தையும் தருவது சட்டப்படி சரியானதல்ல என்பதால், பல விவரங்கள் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்படும் வாய்ப்பு உண்டு.

இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி நியாயத்தைப் பெறவேண்டிய நிலையில், பல பெற்றோர்களும், நல்லெண்ணங் கொண்டவர்களும், நலம் விரும்பிகளும் நம்மிடம் கடந்த ஒரு வாரமாக தொலைப்பேசியிலும், நேரிலும் (உலகத்தின் பல நாடுகளிலிருந்தும்கூட) நாங்கள் எப்படி இதில் உதவிட முடியும்; எங்கள் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

இது ஒரு மக்கள் பல்கலைக்கழகம்

நம்முடைய பல்கலைக்கழகம், மற்றவர்களைப்போல தனியார் உரிமையுள்ள பல்கலைக் கழகம் அல்ல; மாறாக, மக்களுக்கே சொந்தமான மக்கள் பல்கலைக் கழகம் (People's University) என்பதால், மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் வேண்டும் என்று வற்புறுத்தியதோடு, வழக்கு நடத்த உதவிடும் வகையில் நாங்களே நிதி உதவியும், எங்களால் முடிந்த அளவுக்கு செய்யக் காத்திருக்கிறோம்; உடனே அறிவியுங்கள் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

கடந்த இரண்டு, மூன்று நாள்களாக மிகவும் சிந்தித்து, அவர்களது அறவழிப்பட்ட ஆதரவு பேராதரவினைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இப்பல்கலைக்கழகம் தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் உருவாக்கிய அறக்கட்டளையால், பல்துறை அறிஞர்களின் வழிகாட்டுதலோடு நடத்தப்படுவதாகும் என்பதாலும், இது கல்லூரியாகத் தொடங்கப்பட்டதுமுதல் மக்களின் சிறுதுளி பெருவெள்ளம் என்ற நிதி உதவி அடிப்படையில் வளர்ந்துவரும் ஒரு மக்கள் பல்கலைக் கழகம் என்பதால், நமது நல விரும்பிகளான பெற்றோர்களின் விருப்பத்திற்குப் பணியவேண்டியது நமது முக்கிய கடமையல்லவா!

பெரியார் - மணியம்மை பல்கலைக் கழக
சட்டப் பாதுகாப்புக்கான
வழக்கு நிதி

எனவே, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக சட்டப் பாதுகாப்புக் கான வழக்கு நிதி என்ற ஒரு நிதிக் குழு அமைக்கப்படுவதோடு, அதன் பொருளாளராகப் பொறுப்பேற்க தஞ்சை பெருமகனார் திரு.கே.ஆர். பன்னீர் செல்வம் அவர்கள் முன்வந்துள்ளமைக்கு மிக்க நன்றி!

ஆலோசனைக் குழு பிறகு அறிவிக்கப்படும். நிதித்துறை நிபுணர்கள் திருவாளர்கள் எஸ். இராச ரத்தினம், தணிக்கையாளர் டி.என். மனோகரன் போன்ற பெருமக்கள் வழிகாட்டுதலின் மேற்பார்வையோடு, இது இயங்கும் என்பதையும் மிகுந்த கனிவுடன் மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர்,

பெரியார் மணியம்மை இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி

-----------------------”விடுதலை” 30-1-2009


நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தொடர்பான அரசு நடவடிக்கைகள் சரியா?

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தொடர்பான அரசு நடவடிக்கைகள் குறைபாடுள்ளவை மக்களாட்சியில் தனியார் நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும் இணைந்தே செயல்படவேண்டும் பிரிட்டன் கல்வி நிபுணர்கள் கருத்து

(இடமிருந்து வலம்) பிரிட்டன் கல்வியாளர்கள் பவுலர், டாக்டர் முகமது பார்மர் மற்றும் பேராசிரியர் லெஸ்லி ஹாப்சன்.


44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது என்று அவசர கோலத்தில் இந்திய அரசு எடுத்த முடிவு பற்றி இங்கிலாந்து நாட்டிலிருந்து வருகை தந்துள்ள கல்வித்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கும்போது, எதைச் செய்தாலும் சிறப்பான தரம் அமைந்திருக்கும் வகையில் அந்தத் திட்டத்தின் அடிப்படையான நோக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

செவ்வாய்க் கிழமையன்று (26.01.2010) தி இந்து ஏட்டுக்குப் பேட்டியளித்தபோது கிளாமார்கன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் உதவித் துணை வேந்தரும், தற்போது பிரிட்டிஷ் தொழில்நுட்ப, மின்னணுவியல் வணிக நிறுவனத்தின் இயக்குநரும் ஆன பேராசிரியர் லெஸ்லி ஹாப்சன், ஜனநாயகத்தில் தனியார் துறை மற்றும் அரசுத் துறை நிறு-வனங்கள் இணைந்தே இயங்க வேண்டும் எனக் கூறினார். ஆனால், கல்வி நிறுவனங்களின் தரம் சிறப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பாகும் என்றார்.

அண்மைக்காலமாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைப் பார்க்கும்போது, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் செயல்பாட்டுக் குறைவு காணப்படுவதாக அறியமுடிகிறது என்றார் அவர். ஆனால், சட்டப்படி அமைக்கப் பட்டுள்ள பல்கலைக் கழக மான்யக் குழுவினால் அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மீது ஒரு நான்கு உறுப்பினர் குழு கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறைபாடுள்ளதாகவும், பிளவு உண்டாக்குவதாகவும் அமைந் துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது அந்நிறுவனங்களின் நம்பகத்தன்மையைப் பறிக்கும். அரசின் திடீர் முடிவு 2 லட்சம் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், மற்றும் நிறுவனங்களின் பணியாளர்கள், ஆசிரியர்கள் முதலியோரின் நலனைப் பாதிப்பதாகவும் ஏராளமான துன்பங்களை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

பைட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரிட்டன் தொழில் நுட்ப இ-வணிக நிறுவனத்தின் தற்போதைய இயக்குநராக இருக்கும் பேராசிரியர் லெஸ்லி ஹாப்சன், இங்கிலாந்தில் நிலவும் நிலை பற்றிக் கூறும்போது, அங்கே விதிமுறைகள் மிகவும் இறுக்கமாக இருப்பதால், சில நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்டார். அடிப்படை வலுவுள்ளதாக இருக்குமேயானால், மேல் கட்டுமானம் இலகுவாக அமைக்கப்பட முடியும் என்றார்.

சிறந்த பல்கலைக் கழகங்கள் அவை அமைந்துள்ள பகுதியில் உள்ள நிறுவனங்களின் தரத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்கலாம். அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் உலகத் தரமான பயிற்சியும் பங்கேற்பும் நிறுவனங்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

கல்வி நிறுவனங்கள் நல்ல நிலையை எட்டுவதற்கு, வெகுகாலம் பிடிக்கும் என்று பைட் நிறுவனத்தின் இயக்குநர் முகம்மது பார்மர் கூறினார். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமேயானால் அவற்றைச் சுட்டிக் காட்டுவதும் அவற்றை நிவர்த்தி செய் வதற்கான உதவிகளை அளிப்பதும் தான் அரசு செய்யவேண்டிய நட வடிக்கையாக இருக்க வேண்டும்.

எல்லாப் பல்கலைக் கழகங்களும் உயர்ந்த நிலையில் செயல்படவேண்டும் என நினைப்பதற்குப் பதில், பல்கலைக் கழகப் படிப்பின் தரம் பல்வேறு நிலைகளிலும் சிறப்பாக அமைந்திட அரசு பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அல்லது, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின்-அளவுக்குக் கிழக்கு லண்டன் பல்கலைக் கழகம் இல்லை என்றாலும்,அனைத்துப் பல்கலைக் கழகங்களின் பட்டமும் சமமாகவே உள்ளன. அத்தகைய சிறப்பான செயல்பாடு நிலவிட நாம் பணி ஆற்ற வேண்டும்.

(இந்திய)அரசு, அயல் நாட்டுப் பல்கலைக் கழகங்களை (இந்தியாவில்) செயல்பட அழைக்க இருப்பதாகத் தெரிகிறது என்று கூறிய அவர், அதற்காகத்தான் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மீது நடவடிக்கை எடுத்துள்ளதோ எனும் சந்தேகத்தை தனியார் நிறுவனதாரர்களின் மனதில் ஏற்படுத்தி உள்ளது என்றும் குறிப் பிட்டார்.

எல்லா நிகர்நிலைப் பல்கலைக் கழங்களையும் ஒழித்துவிடுவது என்கிற அரசின் உத்தேச நடவடிக்கையானது தெளிவாகத் தெரிவிக்கப்படாத நிலையில், தற்போதுள்ள நிறுவனங்களின் மனதில் மேலும் சந்தேகங்களை அது அதிகப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகள் எல்லாம் பல்கலைக் கழகங்களாக 1992 இல் உயர்த்தப்பட்ட போது அதன் கல்விக் குழுவினரும் ஆசிரியர் மற்றும் பணியார்களும் அது பற்றிக் கருத்து தெரிவிக்குமாறு கோரப்பட்டனர் என்று பைட் நிறுவனத்தின் திட்ட இயக்குநரான ஆலன் பவ்லர் கூறினார்.மேலும் இதுபற்றி தனியார் கல்வி நிறுவனங்களும் கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

(நன்றி: தி இந்து, நாள் 28-.01-.2010)

வெளிநாட்டு கல்வியாளர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் எடுத்தேன், கவிழ்த்தேன் பாணியில் முடிவு எடுக்கும் இந்திய ஆட்சியாளர்களின் கருத்துக் கண்களைத் திறக்குமா?

------------------------" விடுதலை” 29-1-2010

29.1.10

இலங்கைத் தீவு அடுத்து என்ன?



ராஜபக்சே இலங்கைத் தீவில் 2017 வரை அதிபராக இருப்பது உறுதியாகிவிட்டது.

அவர் வெற்றி பெற்றாலும் அவருக்கு எதிராக 42 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது,

தமிழர்கள் ராஜபக்சேவுக்கு எதிராகத்தான் வாக்களித்துள்ளனர் என்பதும் தெரிந்துவிட்டது. இந்த வெளிச்சத்தில் ஒரு ஆட்சி என்ற முறையில் ராஜபக்சே தனது நிலையில் மாற்றத்துடன் செயல்படத் தவறினால் சர்வதேச அரங்கில் பலத்த அடி வாங்க வேண்டியிருக்கும்.

தமிழர்களுக்கு எந்த உதவி செய்வதாக இருந்தாலும், அதனைப் பெரும்பான்மை மக்களான சிங்களர்கள் ஏற்றுக் கொண்டால்தான் முடியும் என்று ராஜபக்சே சொல்லுவது எந்த வகையில் நியாயமானது? ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே!

உலக நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முயற்சி ராஜபக்சேயின் வெற்றியால் தடைபட்டுவிடும் என்று நினைக்க முடியாது.

சிங்கள இனம், தமிழர் இனம் என்ற பகை ஊட்டப்பட்ட ஒரு தீவில், பெரும்பான்மை யாக இருக்கக்கூடிய சிங்களர்கள் இன வெறியோடு, ஓர் இனவெறியனைத் தேர்வு செய்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

இலங்கைத் தீவில் போர் முடிவுற்ற நிலையில் அங்கு நடைபெற்ற உரிமை மீறல்கள் ஒவ்வொன்றாக மேலும் மேலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

போரில் உயிரிழந்த பெண் விடுதலைப்-புலிகளை நிர்வாணப்படுத்தி குதூகலித்தனர் என்றால் இந்தக் காட்டுவிலங்காண்டி மக்களை சர்வதேச மக்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள்?

ராஜபக்சேயின் தேர்தல் வெற்றி மூலம் இவற்றையெல்லாம் மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனர் என்று வக்காலத்து வாங்க மனிதனாக உள்ள எவரும் முன்வரமாட்டார்கள். சோ போன்ற வக்கிரப்புத்தி கொண்ட பார்ப்பனர்கள் வேண்டுமானால் அதற்கு ஒரு வெண்டைக்காய், விளக்கெண்ணெய் விளக்கம் கூறக்கூடும். அந்த நிலையில் தமிழர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

ஈழத் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டதற்கும், அழிக்கப்பட்டதற்கும் தங்களால் முடிந்த உதவிகளையெல்லாம் தாராளமாகச் செய்திட்ட இந்திய அரசு, இப்பொழுது என்ன செய்யப் போகிறது என்கின்ற கேள்விக்குறி உலகத் தமிழர்கள் மத்தியிலும், மனித உரிமையாளர்கள் மத்தியிலும் செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

முள்வேலி முகாமுக்குள் இன்னும் முடங்கிக் கிடக்கும் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கும், சொந்த வீடுகளுக்கும் திரும்பிடச் செய்யவும், தமிழர்களின் பூர்வீக நிலமான வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பிற்கும், நிரந்தரமான அரசியல் தீர்வுக்கும் வழி காண இந்தியா தீவிரமாக முயலவேண்டிய தருணம் இது.

இன்னும் பழைய பாணி சிந்தனைகளும், செயல் முறைகளும் இந்தியாவில் இருக்கக்கூடாது. வாங்கிக் கட்டிக் கொண்ட கெட்ட பெயர்களும், அவதூறுகளும் போதும், போதும்.

தொடக்க நிலையிலேயே அதில் தெளிவாக இந்திய அரசு செயல்பட்டால்தான் ராஜபக்சே போன்ற வெறியர்களைக் கட்டுப்படுத்த முடியும்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ் நாட்டில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அகில இந்திய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும் சற்றுக் கூர்மையாக ஆய்ந்து சிந்திப்பார்களாக!

--------------------- "விடுதலை” தலையங்கம் 29-1-2010

சோ - கூட்டத்தில் கைதட்டிய விபீஷணத் தமிழர்கள் சிந்திப்பார்களாக!


எந்தக் கலாச்சாரம்?

துக்ளக் ஆண்டு விழாவில் திருவாளர் சோ ராமசாமி மீண்டும் தனது அழுத்தமான பார்ப்பனர் அடையாளத்தை சாங்கோபாங்கோமாகக் காட்டிக் கொண்டுவிட்டார்.

சோ: அனைவருக்கும் வணக்கம். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

(ஒரு வாசகர்: புத்தாண்டு வாழ்த்து இல்லையா? என்று கேட்டார்).

அதை மூன்று மாதம் கழித்துச் சொல்கிறேன் (கைதட்டல்) நாளைக்குத் திடீரென தீபாவளியை பிப்ரவரி மாதத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவு வந்தது என்றால், அதற்காக எங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று நீங்கள் கூறினால், அதைச் சொல்வதற்கு நான் தயாராக இல்லை (கைதட்டல்). எந்தப் பண்டிகை வழக்கமாக, நம்பிக்கையின்படி கொண்டாடப்பட்டு வருகிறதோ அந்தப் பண்டிகையைத்தான் நான் ஏற்றுக்கொள்கிறேனேயொழிய (கைதட்டல்) இந்த மாதிரி விஷயங்களில் ஒரு முதல்வரோ, ஒரு அரசோ உத்தரவிட்டு எதையும் சொல்வதை நான் ஏற்கத் தயாராக இல்லை. இதெல்லாம் வழக்கத்திற்கு விரோதமானது, நம்பிக்கைக்கு விரோதமானது, கலாச்சாரத்துக்கு விரோதமானது (பலத்த கைதட்டல்). நான் இதை ஏற்கவில்லை.

---------------------------------(துக்ளக், 27.1.2010)

தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு இல்லை. சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு நம்பிக்கைக்கு விரோதமாக நான் ஏற்கவில்லை என்கிறார் திருவாளர் சோ.

பிரபவ, விபவ என்று 60 வருடங்களில் ஒரு ஆண்டின் பெயர்கூட தமிழில் இல்லையே! இது எப்படி வழக்கமாக தொடங்கும் தமிழ் ஆண்டுகளாக வந்திருக்க முடியும்? தமிழர்களின் வழக்கத்துக்கு மாறாகத்தானே பார்ப்பன சமஸ்கிருத மயமாக ஆக்கப்பட்டிருக்கவேண்டும்? அவர் கூறும் வழக்கமாக, நம்பிக்கையின் அடிப்படையில் என்பதெல்லாம் பார்ப்பனர்கள் சார்பாகக் கூறப்படுவதுதானே! இதனைக்கூடப் புரிந்துகொள்ளாமல் தமிழர்களும் சேர்ந்து பலத்த கைத்தட்டல் தட்டுகிறார்கள் என்றால், பார்ப்பனர்கள் கூறும் அந்த வழமைப்படி, பழக்கப்படி சூத்திரர்கள் பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்று ஏற்றுக்கொள்வதாகத்தானே பொருள்?

நாரதன் என்கிற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகள்தான் 60 தமிழ் வருடங்கள் என்பதை ஏற்றுக்கொண்டால்தான், வழமைக்கு மரியாதை செய்வது, நம்பிக்கைக்கு உகந்தது என்று ஒரு பார்ப்பான் கூறுவதும், அதனைத் தமிழர்கள் சிலர் ஏற்று கைதட்டுவதும் வெட்கப்படத்தக்கதே!

நமது கலாச்சாரத்துக்கு விரோதமானது என்கிறாரே சோ, அவர் சொல்லும் நமது என்பது பார்ப்பனர்களா? தமிழர்களா? இந்தக் கேள்வியையும் கேட்டிருக்க வேண்டுமே!

தமிழ் செம்மொழி என்பதால் வீட்டுக்கு வீடு பிரியாணி தட்டு வரவா போகிறது என்று எகத்தாளம் செய்தது பார்ப்பனத் தினமலர் என்பதையும் மறந்துவிட முடியுமா?

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தபோதும், தொடக்கத்தில் பிடிவாதமாக அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்தான் இந்த சோ. அதே, சோ, இப்பொழுது துக்ளக்கில் தந்தை பெரியார் அவர்களின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுத் தீரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாரே சோ; கூட்டத்தில் கைதட்டிய விபீஷணத் தமிழர்கள் சிந்திப்பார்களாக!

-------------------- மயிலாடன் அவர்கள் 29-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28.1.10

50 விழுக்காடு இட ஒதுக்கீடு - எம்.ஜி.ஆர் vs கி.வீரமணி


50% ஒதுக்கீடு

சமூகநீதி வரலாற்றில் இந்நாள் (1980) அடிக்கோடிட்டுப் போற்றப்பட வேண்டிய பொன்னாள்.

ஆம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் தமிழ் நாட்டில் மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது இந்நாளில்தான்.

எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்நாடு முதல் அமைச்சராகயிருந்த காலகட்டத்தில் ஓர் அரசாணையைப் பிறப்பித்தார். பிற்படுத்தப்பட்டவர்களில் ஆண்டு வருமானம் ரூபாய் 9000 இருந்தால் இனிமேல் அவர்களுக்கு எந்தவித இட ஒதுக்கீடும் கிடையாது என்பதே அவர் பிறப்பித்த அரசாணை (1156 சமூகநலத் துறை நாள் 2.7.1979).

ஆரியம் அகமகிழ்ந்தது! இந்து ஏடோ “Progressive and Meaningful” அறிவிப்பு என்று தலையங்கம் தீட்டியது. பொங்கி எழுந்தது திராவிடர் கழகம். போர் முரசு கொட்டினார் தமிழர் தலைவர் கி.வீரமணி. சமூக நீதியாளர்களையெல்லாம் பெரியார் திடலில் ஒருங்கிணைத்தார். நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள்.

தி.மு.க., காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம். அல்ல), முஸ்லிம் லீக், ஜனதா கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டனர். தமிழர் தலைவர் தலைமையில் வருமான வரம்பு அரசு ஆணையின் நகலைக் கொளுத்தி அந்தச் சாம்பலை கோட்டைக்கு அனுப்பினர் திராவிடர் கழகத் தொண்டர்கள் (26.11.1979),

அனல் பறந்தது நாட்டில். இந்தக் காலகட்டத்தில் மக்களவைத் தேர்தல் வந்தது. இந்தப் பிரச்சினையை முன் வைத்து திராவிடர் கழகம் பெரும் புயலைக் கிளப்பியது.

அதுவரை தேர்தலில் தோல்விகளையே கண்டறியாத எம்.ஜி.ஆர். முதன் முதலாக மிகப் பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. புதுவை உள்ளிட்ட 40 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களில் தோல்வியைத் தழுவினார், திகைத்தார். ஏன் இந்தத் தோல்வி?

ஆம் புரிந்துகொண்டார். தமிழ்நாட்டின் வகுப்புரிமை என்னும் புலிவாலைத் தவறாக மிதித்து விட்டோம். பெரியார் மண் என்பதையே மறந்தோம். அதனால் வட்டியும் முதலுமாக அனுபவிக்க நேர்ந்தது என்று உணர்ந்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அவசர அவசரமாகக் கூட்டினார் (21.1.1980). திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்களின் கருத்தையே மிக முக்கியமாகக் கேட்டார் முதலமைச்சர்.

இது தொடர்பான பிரச்சினைகளைக் கேள்விகளாக்கி அதற்கான பதில்களை அச்சிட்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் அளித்து, தக்க விளக்கமும் கொடுத்தார் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் புரியும்படி.

கூட்டம் முடிந்து நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகமும், அதன் பொதுச்செயலாளர் வீரமணியும் வருமான வரம்பு ஆணை பற்றி செய்த பிரச்சாரத்தினை மக்கள் நம்பினார்கள் என்று ஒப்புக்கொண்டார்.

தான் பிறப்பித்த வருமான வரம்பு ஆணையை விலக்கிக் காண்டதோடு, அதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருந்து வந்த 31 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அளவை 50 விழுக்காடாக உயர்த்தி அறிவித்தார். அது இந்நாளில்தான் (1980)

வரலாறைத் தெரிந்து கொள்ளாத இனம் வறுமையில் மூழ்கிவிடும். வாழ்வையும் இழந்துவிடுமே!

---------------------- மயிலாடன் அவர்கள் 28-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உணர்ச்சிக் கனல் மழை பொழிந்தார்!

கனல் தெறிக்கிறார் காசி ஆனந்தன்

திருமணத்தை நடத்தி வைக்க இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை என்றென்றும் எங்களால் மறக்கமுடியாது.

1983 இல் நாங்கள் எல்லாம் ஈழத்தில் தேடப்பட்ட போது, தமிழ் மண்ணை மிதித்த நேரத்தில் எங்களைத் தாங்கிப் பிடித்தவர் தமிழர் தலைவர் ஆவார்கள். அதனை என்றைக்கும் மறக்க மாட்டோம்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் மூன்று தவறுகளைச் செய்யக்கூடாது. முட்டாள்தனத்தின் காரணமாக தமிழன் அயலானை ஏற்கக்கூடாது-அயலானைப் போற்றக்கூடாது - அயலானை நம்பக் கூடாது.

கடைசி நேரத்தில் தமிழர்கள் 30 ஆயிரம் பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் அதன் பொருள் என்ன? ஒரு குடும்பத்துக்கு மூன்று பேர்கள் என்று வைத்துக் கொண்டால்கூட 10ஆயிரம் குடும்பங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

இந்தப் பத்தாயிரம் குடும்பங்கள் அய்யரை அழைத்து, அருந்ததி பார்த்து, சடங்குகளைச் செய்து திருமணங்களைச் செய்து கொண்டவர்கள்தானே! எந்த சாஸ்திர சம்பிரதாயங்கள் மந்திரங்கள், சடங்குகள் தமிழர்களைக் காப்பாற்றின? இதற்கு மேலும் நாங்கள் இதை ஏற்க வேண்டுமா?

கடவுளை நம்பினோம் கந்தா, கடம்பா, மகேசா எங்களைக் காப்பாற்று! காப்பாற்று! என்று கத்தினோம், கதறினோம். எந்தக் கடவுளும் எங்களைக் காப்பாற்றவில்லையே. இதற்கு மேலும் கடவுளை நாங்கள் நம்ப வேண்டுமா?

இரண்டரை லட்சம் தமிழர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அத்தனையும் வாஸ்து பார்த்துக் கட்டப்பட்டவைதான். எந்த வாஸ்து சாஸ்திரம் எங்கள் தமிழர்களின் வீடுகளை இடிக்காமல் காப்பாற்றியது? இதற்கு மேலும் நாங்கள் வாஸ்துவை ஏற்கவேண்டுமா?

2076 சைவக் கோயில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. அந்தக் கடவுள்களால் தங்கள் கோயில்களையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே! கோயில்களுக்குச் சென்று வந்த எம் மக்களையும் காப்பாற்றவில்லை. இதற்கு மேலும் கோயில்களுக்கு நாங்கள் செல்லவேண்டுமா?

ஆரியர்களின் மூடநம்பிக்கைகளை ஏற்று நாங்கள் அழிந்ததுதான் மிச்சம். இதற்கு மேலும் ஆரியத்திற்கு நாம் அடிபணிய வேண்டுமா? மூடச் சடங்குகளைப் பின்பற்றி, வாஸ்துவை நம்பி இவற்றையெல்லாம் நம்பி நம்பி ஏற்று ஏற்று வீணாகிப் போனோமே! வீணாகிப் போனோமே!!

நமது இளைஞர்கள் இவற்றையெல்லாம் உணர வேண்டும். நமது மாணவர்கள் கைகளில் ராக்கிக் கயிறுகளைக் கட்டிக் கொண்டு அலைகிறார்களே! ராக்கிக்கும், தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இந்த ஆரிய அடிமைத்தனம்?

நாம் தமிழர்களாகவே வாழ்வோம் - அது போதும் - பரந்த மனப்பான்மை எல்லாம் வேண்டவே வேண்டாம். அதனால் நாம் இழந்தது போதும், அழிந்தது போதும் போதும்; தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உணர்ச்சிக் கனல் மழை பொழிந்தார்!


---------------------------- “விடுதலை” 28-1-2010

இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும் - இயக்குநர் பாலா

தேசியவிருது பெற்றதற்காக
இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்

-இயக்குநர் பாலா

நான் கடவுள் படத்தை இயக்கியதற்காக தேசிய விருது பெற்றுள்ள இயக்குநர் பாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேள்வி: தேசிய விருதுபெற்றதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்தீர்களா?

பதில்: நான் கடவுள் படத்தில் கடவுளா வந்து நடித்தார்? கடவுளா வந்து மேக்கப் போட்டார்? கடவுளா வந்து உடையலங்காரம் செய்தார்? கடவுளா வந்து காமிராவை ஆபரேட் பண்ணினார்? கஷ்டப்பட்டு நடித்தவர்கள் நடிகர், நடிகைகள். கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் தொழிலாளர்கள். இல்லாத ஒருவருக்கு நான் ஏன் நன்றி சொல்லவேண்டும்?


---------------------”விடுதலை” 27-1-2010

27.1.10

பார்ப்பனர்களின் பகல் கொள்ளையிலிருந்து கோயில்களை மீட்ட வரலாறு


இந்து அறநிலையம்

1925 ஜனவரி 27 பார்ப்பனர்களின் கால் மிதிபடும் சகதியாக இருந்த இந்துக் கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்கு சட்ட ரீதியாகக் கொண்டு வரப்பட்ட நாள்தான் இந்நாள் (1925).

பார்ப்பனர்களின் கடும் சீற்றத்துக்கும், எதிர்ப்புக்கும் இடையேஇது நடைமுறைக்கு வந்தது. சட்டமன்றத்தில் வாயாடி சத்தியமூர்த்தி அய்யர் என்ன பேசினார் தெரியுமா?

நீதிக்கட்சியினர் பிராமணர்களை மட்டும் எதிர்க்கவில்லை, கடவுளையும் அழிக்கக் கிளம்பி விட்டார்கள். மதத்தை அழிக்க முனைந்துவிட் டார்கள். ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட்டுப் படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்கமாட் டார்கள். மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இந்த மசோதாவை ஜாதி வித்தியாசமின்றி கட்சிப் பாகுபாடின்றி ஒருமன தாக எதிர்க்கவேண்டும் என்று கூச்சல் போட்டார்.

மகாமகா ராஜதந்திரி என்று பார்ப்பனர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட பிரதமர் பனகல் அரசரோ அந்தக் கூச்சல்களையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், காரியத்தில் கண்ணாகயிருந்து சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள். காங்கிரசும் கடுமையாக எதிர்த்தது.

அந்த நேரத்தில் காங்கிரசில் எழுச்சிமிக்க தலைவராக விளங்கிய தந்தை பெரியார் அவர்களோ, காங்கிரசில் இருந்து கொண்டே நீதிக்கட்சி ஆட்சி கொண்டு வந்த இந்தச் சட்டத்தை ஆதரித்தார். இந்தச் சட்டத்தால் கோயில்களுக்கு ஆபத்தல்ல கோயிலை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிற பார்ப்பனர்களுக்குத்தான் ஆபத்து என்றார்.

அன்று நீதிக்கட்சி இயற்றிய இந்தச் சட்டம் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. இன்றுவரையிலும்கூட பார்ப்பனர்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்தே வந்து கொண்டு இருக்கின்றனர்.

அண்மையில் சிதம்பரம் நடராசன் கோயில் தீட்சிதப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில்தான் இருந்து வந்தது. தி.மு.க. ஆட்சியில்தான் இந்து அறநிலையத் துறையின்கீழ் சட்ட ரீதியாக வந்திருக்கிறது (2.2.2009).

எடுத்துக்காட்டாக இதே தீட்சிதப் பார்ப்பனர்கள் ஆண்டு ஒன்றுக்குக் கோயில் உண்டியல் வருமானம் ரூ.37,199 என்று நீதிமன்றத்தில் கணக்குக் கொடுத்தனர்.

ஆனால், இந்து அறநிலையத் துறையின்கீழ் வந்த பின் 11 மாதங்களில் உண்டியல் வசூல் என்ன தெரியுமா?

12 லட்சத்து 87 ஆயிரத்து 281 ஆகும்.

இதிலிருந்தே பார்ப்பனர்களின் பகல் கொள்ளையிலிருந்து கோயில்களை மீட்பதுதான் இந்து அறநிலையத் துறை என்பது தெரிகிறதா, இல்லையா?

------------------- மயிலாடன் அவர்கள் 27-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

பாம்பு - சாபம் - விமோசனம் -அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது?


பாம்பு - சாபம் - விமோசனம்

வைரமோதிரச் சூரிய கிரகணம் முன்பு வந்தது 15 ஆண்டுகளுக்கு முன். இப்போது கங்கணச் சூரிய கிரகணமாம்! நிலவால் மறைக்கப்படும் சூரியன் நம் கண்களுக்குத் தோன்றும் தோற்றத்தை அழகுணர்ச்சியோடு உருவகப்படுத்திப் பெயர் வைத்து விட்டனர்.

இதேபோன்ற மறைப்பு 108 ஆண்டுகளுக்கு முன்புதான் ஏற்பட்டது என்றாலும், அது இயற்கையின் நிகழ்வுதானே! அறிவற்றவர்கள் இதனைப் பயன்படுத்தி என்னென்ன செய்து விட்டார்கள்! தாலி கழுத்தில் தங்காது, எனவே மஞ்சள் கயிறைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தாலிக் கயிறு வணிகர்கள் கிளப்பிவிட்ட புரளியில் எவ்வளவு பேர்கள் அதைச் செய்தனர்! சில பெண்கள் ஒருபடி மேலே போய், அரச மரத்திற்கே தாலி கட்டிவிட்டனர். அரச மரம், தாலி கட்டிய புருஷன் ஆகிவிட்ட நிலையில் மற்ற சடங்குகள் எல்லாம் நடக்குமா, மரத்திடம்?

நேற்று, திருவண்ணாமலையில் ஆண் கடவுளுக்கும் பெண் கடவுளுக்கும் ஊடல் திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள். பக்த கே(டி)கள்! ஊடல் முடிந்ததும் கூடல் நடந்தால்தான் இன்பம் அதிகம் என்கிறார் வள்ளுவர். தெய்வீகத் தம்பதியரான இவர்களும் கூடி முயங்கினார்களா என்பதை ஏடுகள் எழுதவில்லை. இருட்டடிப்புச் செய்து விட்டன- இருட்டில் நடந்ததனாலோ?

சூரிய மறைப்பினால் ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்ள நல்ல பாம்பு ஒன்று , வில்வ இலையைத் தன் வாயால் கவ்விக் கொண்டு லிங்கத்தின் மீது போட்டு பூஜித்தது என்று புருடாவை ஓர் ஏடு வெளியிட்டுள்ளது. இதுதான் சாக்கு எனக் கருதி அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஒவ்வொரு கிரகணத்தின் போதும் பாம்பு சாபத்தைப் போக்கிக் கொள்ள இம்மாதிரிச் செய்கிறது என்று கதை அளந்திருக்கிறார்கள். பாம்பு லிங்கத்தைக் கும்பிடுவதை இப்போதுதான் பார்த்தார்களாம். சினிமா படப்பிடிப்பு போல, காமராமேன் சகிதமாகத்தான் பாம்பு சாமி கும்பிட்டுச் சாபத்தைப் போக்கிக் கொள்கிறது. எல்லாம் சரி, பாம்புக்கு சாபம் என்றும் கிரகணம் தோறும் வருகிறது என்றும் அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது?

இதையெல்லாம்., காவல்துறை விசாரித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல், ஏமாற்றிப் பிழைப்பவர்கள் ஏராளம் பெருகிவிடுவர்.

பாம்பு கருவறைக்குள் போகிறது என்ற தலைப்பில் ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறது நாளேடு! ஏற்கெனவே காஞ்சிபுரத்தில், மச்சேஸ்வரன் கோயில் கருவறையில் ஒரு பாம்பு நுழைந்தது. அப்பாம்பின் பெயர் தேவநாதகுருக்கள். இப்போது தேப்பெருமாநல்லூர் சிவன் கோயிலில் பாம்பு நுழைகிறது. விஷயம் முத்திப்போகும் முன்பு விசாரிப்பது நல்லது.!!!


----------------------------------தி.க. பொதுச் செயலாளர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் 23-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

மனிதநேயத்திற்காக பாடுபட்டவர் பெரியார்

கடவுள், மதம், ஜாதி இல்லை என்ற பெரியார் மனிதநேயத்திற்காக பாடுபட்டார்
பகவான் ரமண ரிஷியோ தன் குடும்பத்திற்காக பாடுபட்டார்
சிவகாசி பொதுக்கூட்டத்தில் தமிழர்தலைவர் விளக்கம்


கடவுள், மதம், ஜாதி இல்லை என்று சொன்ன பெரியார் மனிதநேயத்திற்காக பாடுபட்டார். மக்களை ஒன்றுபடுத்தினார். கடவுள் ரமணரிஷி மக்களுக்கு எந்த பயனும் செய்யவில்லை. குடும்பத்திற்கே பயன்பட்டார் என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


தவறு செய்தால் தண்டனை உண்டு

தவறு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும். இதுதான் வள்ளுவருடைய வாழ்க்கை முறை. இதுதான் தமிழனுடைய வாழ்க்கை முறை தவறு செய்யாமல் வாழுங்கள் என்று திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது.

மீறி தவறு செய்துவிட்டால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கத் தயாராகுங்கள். இதுதான் தமிழர்களுடைய வாழ்க்கை முறை. தவறு செய்யக்கூடாது என்பது தமிழர்களுடைய பண்பாட்டு முறை. தவறு செய்வது என்பது ஆரிய பண்பாட்டு படை யெடுப்பினாலே வந்த ஒன்று. இவற்றை எல்லாம் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரியக்கம் வெறுக்க வேண்டியது அல்ல. மாறாக ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய இயக்கம்.

பெரியார்-காமராஜர்

தமிழ்நாட்டிலே இந்த அளவுக்கு கல்வி வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் காமராஜர் அல்லவா? தந்தை பெரியார் இல்லாவிட்டால் காமராஜர் ஆட்சிக்கு அவ்வளவு பெரிய பலம் வந்திருக்குமா? எனவே எல்லா துறைகளிலும் அறிவியல் வாழ்வியல் இப்படி எல்லாவற்றையும் சொல்லிக்கொடுக்கின்ற இயக்கம் இந்த இயக்கம்.

பெரியாருடைய இயக்கத்தில் உள்ளவர்கள், பெரியாருடைய தொண்டர்கள் அனாவசிய செலவு செய்ய மாட்டார்களே.

இங்கே கூட அய்யா அவர்கள் ரூ.50 ஆயிரத்தை தாராளமாக நன்கொடை கொடுத்தார். ஏன் கொடுத்தார்? அனாவசிய செலவு என்பது கருப்பு சட்டைக்கார-னுக்கு கிடையவே கிடையாது.

பெரியார் இயக்கத்தில் இல்லாமல் இருந்திருந்தால் கோவிலுக்கு செலவு செய்ய வேண்டும். திருவிழாவுக்கு செலவு செய்ய வேண்டும். அதைவிட அறிவு ரொம்ப குறைவாக ஆகியிருக்கும் சிந்திக்கின்ற மனப்பான்மையே வந்திருக்காது.

இங்கு நல்ல அறிவியல் மய்யம் வர வேண்டும். பொது நலத் தொண்டு அளவுக்குப் பரவ வேண்டும். தந்தை பெரியார் சொன்னார். ஒரு ரூபாய் சம்பாதித்தால் பத்து காசாவது மிச்சப்படுத்து. எனவே எங்களுடைய தோழர்கள் பெரியாருடைய கொள்கையை வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொண்டிருக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிக்கனக்காரர்கள். பெரியார் சிக்கனக்காரர். சில பேர் பெரியாரை கஞ்சன் என்று நாக்கில் நரம்பில்லாமல் சொல்லு வார்கள். இதைவிட தவ றான புரிதல் வேறொன்றும் கிடையாது.

பணத்தை விரும்பியதுண்டு

அய்யா அவர்கள் பணத்தை விரும்பினார். அதை அவரே சொன்னதுண்டு. எனக்கு பணத்தாசை ரொம்ப அதிகம் என்று ஆனால் அந்தப் பணம் எதற்காக என்பதுதான் முக்கியம். ஒரு காலணா கொடுத்தாலும் அய்யா வாங்கிக்கொள்வார்.

கையெழுத்துப் போட வேண்டும் என்று அய்யா அவர்களிடம் கேட்டால் நான்கணா தர வேண்டும். பெரியார் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். பெயர் வைக்க வேண்டும் என்று யாராவது கேட்டால் நல்ல பெயர் வைக்க வேண்டுமா? சாதாரண பெயர் வைக்க வேண்-டுமா? என்று கேட்பார்.

சாதாரண பெயர் வைப்பதற்கு ஒரு ரூபாய். நல்ல பெயர் வைப்பதற்கு இரண்டு ரூபாய். நல்ல பெயர் காமராஜ் என்று பெயர் சூட்டுவார்.

எல்லா சொத்துக்களும் மக்களுக்கே

எனவே அய்யா அவர்கள் சேர்த்து வைத்த சொத்துகள் எல்லாம் அறக்கட்டளையாக்கப்பட்டு மீண்டும்பொது மக்களுக்கே பயன்படும்படி ஆக்கப்பட்டிருக்கிறது.

அவரென்ன சொந்த பந்தங்களுக்கு கொடுத்தாரா? அல்லது ஜாதிக்காரர்களுக்கு ஏதாவது அமைப்பை உருவாக்கிக்கொள்ள கொடுத்தாரா?

எல்லா சொத்துகளையும் மக்களுக்கே திருப்பிக்கொடுத்த ஒரு மாபெரும் தலைவர் உலக வரலாற்றிலேயே வேறு எங்கும் காண முடியாது. (கைதட்டல்). அவருடைய அறக்கட்டளையில் அவருடைய ஜாதிக்காரர்கள் கிடையாது. அவருடைய சொந்தக்காரர்கள் கிடையாது.. பெரியாருடைய சொந்தம் என்பதிருக்கிறதே, அது இரத்த பாசத்தைப் பொறுத்ததல்ல; கொள்கைப் பாசத்தைப் பொறுத்தது.

கருப்புச்சட்டைக்காரர்களாகிய நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம். அய்யா போஸ் அவர்கள் இருக்கிறார்கள், காஞ்சனா அம்மாள் அவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம்தான் நம் உறவுக்காரர்கள்.

சாராய, கஞ்சா சாமியார்

மதுரை மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ஓடிப் போனவர் ஒருவர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பார்த்தால் அவனவன் சாமியார், சாமியார் என்று சொல்லுகின்றான்.

நமது மாவட்ட தலைவர் மணிக்கு வேண்டிய மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். அங்கு யார் சாமியாராக இப்பொழுது இருக்கிறார்கள் என்றால் சாராயம் குடிக்கிறவர்கள் இருக்கின்றார்கள். சாராயம் கஞ்சா உள்ளே போனால்தான் சாமியே குறி சொல்கிறது. இதற்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அளவு கடந்த கூட்டம். கொழுத்த வருமானம். தொலைக்காட்சியில் இதைக்காட்டினார்கள். ஆயிரக்கணக்கான பேர் வருகிறார்கள். இதைப் பார்த்து என்ன இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என்று கருதினோம். ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நேரடிப் போராட்டம் நடத்துவோம். இதை அரசுக்குத் தெரியப்படுத்துகிறோம் என்று பத்திரிகையில் எழுதினோம். பொதுக்கூட்டத்தில் பேசினோம். திருவண்ணாமலையில் நடத்திய கூட்டத்திற்கு எல்லா கட்சிக்காரர்களும் வந்தார்கள்.

உடனே கலைஞர் நடவடிக்கை எடுத்தார்

அடுத்த நாள் காலையிலேயே முதலமைச்சர் கலைஞர் உத்தரவு போட்டார். யார் அந்தச் சாமியார்? நேரே பிடித்து எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்தார் (கைதட்டல்)

அதன்பிறகு பார்த்தீர்களேயானால் அருள் வாக்கெல்லாம் வரவில்லை. அந்த திருவண்ணாமலையில் ஒரு ரமண ரிஷி எதற்கெடுத்தாலும் மகரிஷி, மகரிஷி, என்று சொல்லுவார்கள். படித்தவன் மாதிரி ஒரு போலியை உலகத்தில் வேறு எங்குமே காண-முடியாது. இந்த வெறும் படிப்பு கோழையாக்குவது மட்டுமல்ல ஒருவரை துணிச்சலாக சிந்திக்க வைப்பதில்லை.

மதுரை மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர். சுழி எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். அருப்புக்கோட்டைக்கு பக்கத்திலே இருக்கின்ற ஊர். திருச்சுழியிலிருந்து அரைக்கால் டிரவுசருடன் 50 வருடத்திற்கு முன்னால் திருட்டு ரயில் ஏறி திருவண்ணாமலைக்கு வந்தவர் தான் இந்த ரமணரிஷி.

இவர் கண்ட இடத்தில் சுற்றித் திரிகின்றார். பசி வரும்பொழுது மயக்கம் வருகின்றது. கீழே விழுந்துவிடுகிறார். யாரோ பையன் கீழே விழுந்து விட்டானே என்று தூக்கி உட்கார வைத்தார்கள்.

கொஞ்சநேரம் ஆனது. மரத்தில் சாய்ந்து உட்கார்ந்து பசியால் கண்ணை மூடிக்கொண்டிருந்தார். அடுத்து துணியில்லை. கோவணம் கட்ட ஆரம்பித்தார். சாதாரண வெங்கட்ட ரமணன், வெங்கட் என்பது போய் ரமணர் ஆனார். ரமணர் பிறகு ரிஷி ஆனார். ரமண ரிஷி ஆனபிறகு ஆசிரமம் ஏராளமான சொத்துகள் எக்கச்சக்கமாக சேர்ந்து விட்டது.

நம்ம ஊரிலே மட்டும் முட்டாள் இருப்பான் என்பதல்ல. வெளிநாட்டிலும் இருப்பான். ரமணரிஷிக்கு முதல் சீடர் பெருமாள்சாமி என்பவர். இவர் பாப்பனர் அல்லாத ஒருவர். ரமண ரிஷியை பெரிய ஆளாக ஆக்குவதற்கு உதவிகரமாக இருந்தவர் இவர்.

நான் சொல்வது ஆதார பூர்வமான செய்தி. இது கற்பனை அல்ல. ரமணரிஷி-யினுடைய சீடர் ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார்.

ரமண ரிஷி சொத்து உறவினருக்கு

ரமண ரிஷி செல்வாக்கு வந்தவுடனே, பணம் வந்தவுடனே தன்னுடைய தாயாரை வரவழைத்தார். அடுத்தது தனது தம்பியை வரவழைத்தார். சொத்துகளை தனது சகோதரர் மீது எழுதி வைத்தார், ரமண ரிஷி. உடனே பெருமாள் சாமியும், மற்ற சீடர்களும் சென்று சொத்துகளை உங்கள் உறவினருக்கு எழுதி வைக்கலாமா? நீங்களோ சந்நியாசி ஆயிற்றே என்று கேட்டார்கள்.

நீங்கள் பகவான் ரமணரிஷி. நீங்களே பகவான் ஆயிட்டீங்களே சொத்துகளை எப்படி உங்களுடைய குடும்பத்திடம் கொடுக்க முடியும் என்று கேட்டார்கள். யாரிடம்? ரமணரிஷியிடம்.

ஆனால் ரமண ரிஷியோ அதைப் பற்றி கவலைப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ரமணரிஷியை நீதிமன்றத்திற்கு அழைத்தார்கள். அவர் வர மறுத்து விட்டார்.

ரமண ரிஷியின் மர்மங்கள் என்ற தலைப்பில் பெருமாள்சாமி என்ற சீடர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 1934, 1935ஆம் ஆண்டுகளில் இந்த வழக்கு வந்தது.

இந்த செய்திகள் ஆங்கிலத்திலும், தமிழி-லும் நூலாகவே வந்திருக்கிறது. ஆதார பூர்வமாக சொல்லுவது தான் எங்களுக்கு வழக்கமே தவிர வேறு அல்ல. ரமணரிஷியின் வழக்கு இன்னமும் முடியவில்லை.

நம்முடைய நாட்டில் எந்தவொரு வழக்கும் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. வெள்ளி விழா, பொன்விழாவைத் தாண்டித்தான் ஒவ்வொரு வழக்கும் நடைபெற்று வருகிறது.

வழக்கு போட்ட ஆளும் செத்துப் போனார். வக்கீலும் செத்துப்போனார். நீதிபதியும் செத்துப்போனார். வழக்கு மட்டும் உயிரோடு இருக்கிறது. வழக்கு பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும். ஒன்றுமில்லை.

காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? அல்லது தென்கலை நாமம் போடுவதா? என்று பிரச்சினை. யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதில் தகராறு. வெள்ளைக்காரர்கள் காலத்தில் லண்டன் பிரிவி கவுன்சில் வரை இந்த வழக்கு வந்தது.

வெள்ளைக்கார நீதிபதிகளிடம் வழக்கு வந்த பொழுது வடகலை என்றால் என்ன? தென்கலை என்றால் என்ன? என்று கேட்டனர். இவர்களுக்கு வாதாடியவனும் வெள்ளைக்காரன். வெள்ளைக்கார- வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கஷ்டப்பட்டு விளக்கினார். மைலார்டு அவர்களே! இது ஒன்றுமில்லை; ஒய்(Y)-யுக்கும், யு (U)வுக்கும் இருக்கின்ற சண்டை என்று சொன்னார்.

ஒய் (Y) என்றால் பாதம் வைத்திருக்கும் யு (U) என்றால் பாதமில்லாத நாமம். எனவே இந்த இரண்டு நாமத்தில் எந்த நாமத்தை யானைக்கு வைப்பதில் என்பது பிரச்சினை என்று சொன்னார். காஞ்சிபுரம் கோவில் யானைக்கு ஒரு வாரம் இந்த நாமம் போடு; இன்னொரு வாரத்திற்கு இன்னொரு நாமம் போடு என்று சொன்னார். யானையும் செத்து போய் விட்டது-. இன்னமும் அந்த வழக்கு முடியவில்லை. அது போல ரமண ரிஷி வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

ரமணரிஷி தன்னுடைய தம்பிக்கு எல்லா சொத்தையும் எழுதி விட்டார். ரமண ரிஷியின் குடும்பம் ஆசிரமத்தில் வந்து அமர்ந்து விட்டது.

இப்பொழுது நினைத்துப் பாருங்கள் கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் நீங்கள் கொடுத்த நான்கணாவைக்கூட பத்திரமாக வைத்துமுடிச்சு போட்டு வைத்து அதை மீண்டும் பொது மக்களுக்கு பயன்படும்படி அறக்கட்டளையாக்கி பல்கலைக் கழகமாக, கல்லூரிகளாக மருத்துவமனைகளாக, பிரச்சார கேந்திரங்களாக ஆக்கியிருக்கின்றார்.

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் மனிதநேயப் பணிகளை செய்தார். அதே நேரத்திலே கடவுள் அவதாரம் என்று சொன்ன ரமண ரிஷி, மக்கள் கொடுத்த அவ்வளவு தொகையையும் தனதாக்கிக்கொண்டார்.

இதில் யார் உயர்ந்தவர்கள்? இன்றைக்கும் கடவுள் பெயரால் தானே மக்களிடையே சண்டை; இன்றைக்கும் மதத்தின் பெயரால் தானே மக்களிடையே சண்டை.. எனவே கடவுள் மனிதர்களைப் பிரித்திருக்கிறது. மதம் மனிதர்களைப் பிரித்திருக்கிறது. ஜாதி மனிதர்களைப் பிரித்திருகிறது.

இவைகளை எல்லாம் எதிர்த்த பெரியார் மனிதர்களை நேசித்தார். மனிதர்களை ஒற்றுமைப்படுத்தினார். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று தந்திருக்கின்றார். அப்படிப்பட்ட தந்தை பெரியாரின் பிள்ளைகள் ஆயிரம் காலத்துப் பயிர்கள்.

அந்தப் பணிகள் சிறப்பாக நடைபெற அய்யா போஸ் அவர்கள் வழங்கிய நிலமிருக்கிறதே அது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து சிவகாசியிலே ஒரு புதிய அத்தியாயம், திராவிடர் இயக்க வரலாற்றிலே மட்டுமல்ல; மனிதநேய வரலாற்றில் பொறிக்கப்படும் என்று சொல்லி, வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

பெரிதா, சிறிதா என்பது முக்கியமல்ல. ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும். பெரியார் எப்படி எல்லோருக்கும் சொந்தமோ அது போல பெரியார் மய்யமும் மக்களுக்குச் சொந்தம் என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

------------------ “விடுதலை” 26-1-2010

26.1.10

கடவுள், மதம், பக்தி விடயங்களில் கதையளப்பு


அளப்பு

கதையளப்பு என்ற ஒரு சொற்றொடர் உண்டு. அது மற்றவற்றில் உள்ளதை விட கடவுள், மதம், பக்தி விடயங்களில் மிக அதிகமாகவே உண்டு.

கேக்கிறவன் கேணப்பயலா இருந்தா எருமைமாடுகூட ஏரோப்பிளான் ஓட்டுவேன் என்று சொல்லுமாம்.

சேலம் ஏற்காடு முக்கிய சாலையில், கலைக்கல்லூரியருகே அடர்ந்த மரங்கள் உள்ள பகுதியில் முனியப்பன் என்ற கோயில் ஒன்று இருக்கிறதாம். 16 வயதுள்ள ஒரு சிறுவன் சாமி கும்பிடச் சென்றானாம். அப்பொழுது அவன் முதுகில் ஏதோ ஒன்று விழுந்ததாம் அதனைத் தட்டி விட்டானாம். அது பாம்பு போன்ற உருவத்தில் மரக்கட்டையாம்.

அவ்வளவுதான் சேதி நாலாத் திசைகளிலும் பரவியது. நம் பெண்களைக் கேட்கவேண்டுமா? சாமி ஆட ஆரம்பித்துவிட்டனராம். கிடாவெட்டிப் பூஜையாம். மரக்கட்டைக்கு மஞ்சள் தடவி, குங்குமப் பொட்டு வைத்து, பூஜைகள் நடக்க ஆரம்பமாகி விட்டனவாம்.

நம் பத்திரிகையாளர்களுக்கு ஒரு தீனி கிடைத்துவிட்டதே சும்மா விடுவார்களா? அந்தச் செய்திக்கு கை வைத்து, கால் வைத்து, மூக்கு வைத்து இறக்கைகளையும் கட்டிவிட்டனர்.

ஒரு பக்தர் சொல்லுகிறார், நம்பவும் முடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை; என்றாலும் கும்பிட்டு வைப்போமே என்று ஒரு கும்பிடு போட்டு வந்தாராம்.

அடேயப்பா, கடவுளைப்பற்றி ஆன்மிகவாதிகள் எப்படியெல்லாம் உருகுவார்கள் தெரியுமா? அவர் அரூபி கண்ணுக்குத் தெரியாதவர்; வேண்டுதல் வேண்டாமை என்பதெல்லாம் கிடையவே கிடையாது என்று அப்படியே எண்சாண் உடம்பை ஒரு சாணாகச் சுருக்கி நெக்குருக மெல்லிய சன்னமான குரலில் உபந்நியாசம் செய்வார்கள். அதற்கு முரணாக இது போன்ற சேதிகள் வரும்போதோ கப்சிப்பென்று அய்ம்பொறிகளையும் மூடிக்கொள்வார்கள்.

திருப்பதி கோயில் கர்ப்பக் கிரகத்திலே ஒரு பாம்பு நுழைந்தது உடனே அது பிராமணன் வடிவில் தோன்றியது (பாம்புக்கும், பிராமண விஷத்துக்கும் உள்ள ஒற்றுமையை இந்த இடத்தில் கவனித்துக் கொள்ளவும்).

நான் கலியுகத்தில் அவதாரம் எடுத்து அதர்மத்தை அழிப்பேன் என்று சொல்லி மறைந்ததாம். இதனைத் துண்டு அறிக்கையாகத் தயாரித்து நூறு பேருக்குக் கொடுத்தால் அய்ஸ்வர்யம் பொங்கி வழியுமாம். திருப்பதி தேவஸ்தானத்துக்கே எழுதிக் கேட்டபோது, அதெல்லாம் வெறும்புரளி என்று அதிகாரப்பூர்வமாக சொல்லிவிட்டார்கள். இதே கதையை மேல்மருவத்தூர் கோயிலிலும் நடந்ததாக அடுத்து அவிழ்த்துவிட்டார்கள். அவர்களும் பிறகு மறுத்துவிட்டனர். அதன்பின் மேல்மலையனூர் கோயிலிலும் இதே வேலையைச் செய்தனர்.

ஒரு கூட்டத்துக்கு இதே வேலைதான்.

இந்த புரூடாக்கள் எல்லாம் இரண்டொரு நாள்களில் தடபுடலாக விளம்பரத்திற்கு வந்து, அதன்பின் சத்தம் போடாமல் அமுங்கிப்போகிறதே ஏன்? சிந்திக்கக் கூடாதா?

------------------- மயிலாடன் அவர்கள் 26-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

அம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா



மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மதத்தவரின் குளியல் திருவிழா. எதற்காகவாம் இந்தக் குளியல்? மோட்சம் போகலாமாம். அப்படியானால் தவளை, மீன், நண்டு, இரால் எல்லாமே மோட்சம் போகுமே! அருமையான கடல் உணவு மோட்சத்தில் கிடைக்குமே! நீர் வாழ் உயிரினங்கள் மோட்சம் போகும் என்பதற்கான உத்தரவாதமும் இல்லை; போனதாக ஆதாரமும் இல்லை. பின், மனிதர்கள் மட்டும் போவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? போனார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? போனவன் எவன் திரும்பி வந்து கூறினான்? அது கிடக்க

12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதானே- கும்பமேளா என்கிறார்கள். 3 ஆண்டுகளுக்குப் பிறகு என்கிறீர்களே, என்ற அய்யம் சிலருக்கு ஏற்படலாம். 12 ஆண்டுகள் என்பதும் சரி. 3 ஆண்டுகள் என்பதும் சரியே. குழம்புகிறதா?

கும்பமேளா நான்கு ஊர்களில் நடக்கிறது. அலகாபாத் (கங்கை-யமுனை சேரும் இடம்) அரித்வார் (கங்கைக் கரை) நாசிக் (கோதாவரி நதிக் கரை) உஜ்ஜயினி (ஷீப்ரா நதிக்கரை) என நான்கு ஊர்கள். இந்த ஊர்களில் ஒவ்வொன்றிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை. அலகாபாதில் நடந்த மூன்றாம் ஆண்டு அரித்வாரில், அடுத்த மூன்றாம் ஆண்டில் உஜ்ஜயினியில், அடுத்த மூன்றாம் ஆண்டில் நாசிக்கில் என்று நடப்பதால்... அந்தந்த ஊரைப் பொறுத்த மட்டில் 12 ஆண்டு ... அகில இந்தியாவைப் பொறுத்து 3 ஆண்டு... காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதம் ஒரு நாடு... நீர் அதன் புதல்வர்...

தமிழ்நாடு மட்டும் எதிலுமே வேறுபட்டு நிற்கும். இங்கு மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் லோகல் கும்பமேளா போட்டிக்கு வேறு ஊர் கிடையாது.

வடக்கே மட்டும் ஏன் நான்கு ஊர்? பாற்கடலைக் கடைவதில் பாதி உழைப்பை நல்கியஅசுரர்களை ஏமாற்றி, தேவர்கள் கடத்திக் கொண்டு போன அமிர்தம் (சாகா நிலை தரும் மருந்து அடங்கிய பானகம்) கலசத்திலிருந்து சிந்திய துளிகள் விழுந்தன மேற்கண்டநான்கு இடங்களில்! பார்ப்பனர் அல்லாதாரை(அசுரர்கள்)ப் பார்ப்பனர் தொடர்ந்து ஏமாற்றி வருவதை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சி கும்பமேளா! வெட்டப்பட்டுக் கட்டப்பட்டிருக்கும் வாழை மரம் விழாவுக்கு வருவோரை வரவேற்பது போல சூத்திரர்களும் கும்பமேளாவில் கூடிக் குளித்து, குனிந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி அல்லாமல், வேறு எப்படிச் சொல்ல?


----------------------- தி.க. பொதுச் செயலாளர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் 23-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

சங்கரநாராயணர் கோவிலுக்குள் கக்கூசும் மிதியடியும்



திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சங்கரன்கோவிலென்னும் சங்கரநாராயணன் கோவிலானது அச்சில்லாவில் உள்ள முக்கிய கோவில்களுள் ஒன்று. அக்கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள் வரும்படி உண்டு.
லோககுரு என்றும் சங்கராச்சாரியார் சுவாமிகள் என்றும் சொல்லப்பட்ட ஸ்மார்த்தர்களின் குருவானவர் இம்மாதம் அவ்வூருக்கு வந்து அக்கோவிலை தனக்கும் தனது பரிவாரத்திற்கும் ஜாகையாக வைத்துக் கொண்டார். அதோடல்லாமல் சுவாமிகளின் திருக் கக்கூசும் அக்கோவிலுக்குள்ளாகவே கட்டப்பட்டு சுவாமிகளின் திருமலமும் கோவிலிலேயே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.


அக்கோவில் டிரஸ்டி கனவான்களில் பார்ப் பனரல்லாதார் அதிகமாய் (மெஜாரிட்டியாய்) இருந்தும் இதை ஆட்சேபிக்கத் தைரியமில்லை. ஏனென்றால் அவ்வூர் அதிகாரிகள் எல்லாம் குட்டி சுவாமிகள் குழாங்களாகவே இருக்கின்றன. அதோடு மாத்திரமில்லாமல் ‘‘சுவாமிகள்’’ சங்கரநாராயண சுவாமியை திருக்கண் பார்ப்பதாயிருந்தாலும், திரு மிதியடியை தாங்கிய திருப்பாதத்துடனேதான் மூலஸ்தானத்திற்குப் போய் திருக்கண் பார்த்தருளினாராம்.


அதோடு மாத்திரமல்லாமல் ‘‘சுவாமிகள்’’ கோவிலுக்குள் நுழையும் போது திருமேனாவில் திருப்பள்ளி கொண்ட கோலத்துடனேயே சென்றாராம். ‘மாமிக்கோர் மாமியுண்டானால் சுவாமிக்கோர் சுவாமி வேண்டாமா?’ அதுதான் நமது ‘‘லோக குரு சங்கராச்சாரியார், சுவாமிகள் போலும்!’’ சுவாமிகளின் இந்த வைபவங்களையும், தெய்வத் தன்மையையும் கண்ட திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி கோவில் பக்தர்களும், தர்மகர்த்தாக்களும் குறைந்தபட்சம் நெல்லையப்பர் கோவிலுக்குள் சுவாமிகளின் திருக் கக்கூசாவது கட்டப்படாமல் இருக்கவேண்டுமென்று கருதி லட்சக்கணக்கான துண்டு விளம்பரங்கள் போட்டும் தர்மகர்த்தாக்களுக்கு நோட்டீசு விட்டும் சத்தியாக்கிரகம் செய்வதாய் பயமுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்து சுவாமிகளின் திருக் கக்கூசை திருக் கோவிலுக்குள் கட்டாமலிருக்க தக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.


இது தவிர, நெல்லையப்பர் சுவாமி கோவிலுக்கு முன்னால் சங்கராச்சாரிய சுவாமிகள் வருகையை முன்னிட்டு போடப்பட்ட அலங்காரப் பந்தல்கள் போட அனுமதித்ததின் பலனாய் அஷ்டமி உற்சவத்தின்போது நெல்லையப்பர் சுவாமி எழுந்தருளுகையில் பந்தல் சமீபம் வந்தவுடன் தாழ்ந்தும் குனிந்தும் வெளியே வரவும் உள்ளே போகவும் ஏற்பட்டது. இதைப் பற்றி பல பக்தர்களுக்கு மனவருத்தமிருந்தாலும் சங்கராச்சாரிய சுவாமிகளும் அவரது திருக் கூட்டத்தாரும் இல்லாவிட்டால் நெல்லையப்பருக்கு இவ்வளவு மகத்துவமும், இவ்வளவு வேலி நிலமும், இவ்வளவு சொத்துக்களும் சுகங்களும் ஏது? ஆதலால் ‘‘சங்கராச்சாரிய சுவாமிகளின்’’ பந்தலுக்கு நெல்லையப்பர் தாழ்ந்து குனிந்து வணங்க வேண்டியதுதான்.

---------------தந்தைபெரியார் - "குடிஅரசு", கட்டுரை, 05.12.1926

25.1.10

2010-லும் குழந்தைத் திருமணங்களா?



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை மட்டுமல்ல; குழந்தைத் திருமணமும் அதிக அளவில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.

இதுகுறித்து ஒரு விழிப்புணர்வுக் கருத்துப் பட்டறை ஜனவரி 23 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. சமூகநல வாரியத்தின் ஆணையர் எம்.பி. நிர்மல், மாவட்ட ஆட்சியர் வே. சண்முகம், வாரியத் தலைவர் கவிஞர் சல்மா, மக்களவை உறுப்பினர் ஜி. சுகவனம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இத்தகைய குழந்தைத் திருமணங்களைத் தடுத்திட ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் இருப்பதுபற்றி சமூக நலத்துறை ஆணையர் கருத்துப் பட்டறையில் விளக்கிக் கூறியுள்ளார்.

ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமூகநல விரிவாக்க அலுவலர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றுகின்றார். அவர்தான் இக்குழுவின் அமைப்பாளரும்கூட. கிராம நிருவாக அலுவலர், மகளிர் சுய உதவிக் குழு செயலாளர், பள்ளித் தலைமை ஆசிரியர், பெண் வார்டு உறுப்பினர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

விழிப்புணர்வுடனும், இலட்சிய உணர்வுடனும், எந்த நிலையிலும் குழந்தைத் திருமணம் நடைபெறாமல் தடுக்கப்படவேண்டும் என்ற ஆர்வமும், கடமை உணர்வும் இந்தக் குழுவில் உள்ள ஒருவருக்கு இருந்தால்கூடப் போதுமானதே!

குழந்தைத் திருமணங்கள் குறிப்பிட்ட மாவட்டத்தில், அதிலும் குறிப்பிட்ட வட்டாரத்தில் நடைபெறுகிறது என்றால், இந்தக் குழுவின் உறுப்பினர்கள் இதில் தேவையான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அல்லது அத்தகு திருமணங்கள் நடைபெறுவதற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று பொருளாகும்.

மனித உரிமைகளும், பெண்ணுரிமைகளும் கொடி கட்டிப் பறக்கும் இந்தக் காலகட்டத்தில் இது மாதிரி திருமணங்கள் நடைபெறுவது பெரிதும் வருந்தத்தக்கதாகும்.

இந்து மதத்தின் பார்ப்பனிய மிச்ச சொச்சங்கள் இன்னும் துடித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு இது ஒரு முக்கிய அடையாளமாகும்.

திருமண வயது வரம்பை உயர்த்தவேண்டும் என்று சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட நேரத்தில் பார்ப்பன தேசியத் திலகங்கள் அடேயப்பா, சிண்டை அவிழ்த்துவிட்டு எதிர்க்கூத்தாடின.

பெண் பூப்படைவதற்குமுன் கல்யாணம் செய்விக்கப்படவேண்டும் என்று யாக்ஞவல்கியர் கூறியிருக்கிறார். அப்படி செய்யாவிட்டால், ரவுரவாதி நரகத்திற்கு நாங்கள் போகும்படி நேரும்.

நாங்கள் சட்டத்தை மீறி சிறைக்குச் சென்றாலும் செல்வோமே தவிர, சாஸ்திரத்தை மீறி ஒருக்காலும் நரகத்திற்குப் போகமாட்டோம் என்று வெறிக் கூச்சல் போட்டனர்.

அவற்றையெல்லாம் மீறி பார்ப்பனர்களால் மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்ட வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டு, குழந்தைத் திருமணம் என்ற கொடுமை சட்டப்படி நிறுத்தப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் அதன் எச்சங்கள் இருப்பதைக் கண்டிப்பாக தடுத்தே ஆகவேண்டும்.

குழந்தைகள், திருமணச் சந்தையில் பலிகடா ஆக்கப்படுவது மிகவும் மோசமான மனித உரிமை மீறலாகும்.

ஒரு பக்கம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடக்கட்டும்; அது அவசியமே! அதே நேரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்தாகவேண்டும்.

மாவட்ட ஆட்சியர் இதில் கடுமையாக இருந்தால், கண்டிப்பாகத் தடுத்து நிறுத்திவிட முடியும்.

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும் இதில் கவனம் செலுத்தி தலைமைக்குத் தெரிவித்தால், அதன்கீழ் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமே!

--------------------- “விடுதலை” தலையங்கம் 25-1-2010

மதங்களால் பிரிந்த மக்களை மனங்களால் ஒன்றுபடுத்துகிறது பெரியார் இயக்கம்

ஒரு மனிதனுடைய சொத்து பொதுவுக்கு என்று வரும்பொழுது
நூறு ஆண்டுகள் ஆனாலும் அவருடைய பெயரே நிலைத்துநிற்கும்
சிவகாசி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்

ஒரு மனிதனுடைய சொத்து பொதுச் சொத்தாக ஆகும்பொழுது அது நூறு ஆண்டுகள் ஆனாலும், அது அவருடைய பெயர் கொண்ட சொத்தாகவே நிற்கும் இருக்கும் என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள்கூறி விளக்கவுரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் நேற்றைய முன்தின தொடர்ச்சி வருமாறு:

கோவிலுக்குள் விடவில்லை

நகை திருட்டை கண்டுபிடிக்கச் சென்ற மதுரை எஸ்.அய் அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று அந்த கோவிலின் அர்ச்சகர்கள் தடுத்தார்கள்.

நீங்கள் உள்ளே வந்தால் மீனாட்சி அம்மன் கோவில் தீட்டாகிவிடும் என்று சொல்லி அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று தடுத்து விட்டனர்.

அந்தக் காவல்துறை அதிகாரி எப்படி வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முடியும்? இந்த அதிகாரி மேலதிகாரிகளிடம் முறையீடு செய்தார். நான் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. என்னை உள்ளே விட மறுக்கிறார்கள் என்று சொன்னார்.

ஏன் என்று வெள்ளைக்கார அதிகாரி கேட்டார்

ஏன் உள்ளே விட மறுக்கிறார்கள்? என்று வெள்ளைக்கார அதிகாரிகள் கேட்டார்கள். ஜாதியின் காரணமாக என்னை உள்ளே விட மறுக்கிறார்கள் என்று சொன்னார்.

வெள்ளைக்காரர்களுக்கு அப்பொழுது தான் ஜாதி என்றால் என்ன? அதன் ஆதிக்கம் என்ன என்பது தெரிய வந்தது.

அதன்பிறகுதான் வெள்ளைக்கார அதிகாரிகள் சொன்னார்கள். நான் இதற்காகவே ஸ்பெஷல் உத்தரவு போடுகிறேன். எங்கே வேண்டுமானாலும் நீங்கள் உள்ளே நுழையலாம் என்று உத்தரவு போட்டு அந்த மதுரை எஸ்.அய் அவர்களிடம் கொடுத்தார்கள்.

நமது பயிற்சி முகாமிலேயே சொன்னார்

அந்த அதிகாரி தேனியில் இருந்தார். அண்மையில்தான் அவர் மரணமடைந்தார். ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னாலே நடைபெற்ற சம்பவத்தை நமது பயிற்சி முகாமில் அங்கே சொன்னார். அவர் நடந்த சம்பவத்தை தெளிவாகச் சொன்னார். நான் முதலில் அர்ச்சகரைத் தான் அழைத்து முதலில் இரண்டு அடிகொடுத்து விசயத்தைக் கேட்டேன் என்று சொன்னார்.

நகை திருடியதை அர்ச்சகர் ஒப்புக்கொண்டார்

அர்ச்சகரை அடித்தவுடன் அந்த அர்ச்சகர் அடிதாங்க முடியாமல் உண்மையைச் சொல்லிவிட்டான். நான் தான் நகையை எடுத்தேன். பின்னால் ஒளித்து வைத்திருக்கின்றேன் என்று சொன்னான்.

நகை இருக்கிற இடத்திற்கு அர்ச்சகரைத் தவிர வேறு யாரும் உள்ளே போக முடியாது. கர்ப்ப கிரகத்தில்தான் நகை இருந்தது. அந்த நகையை திருடியவன் பார்ப்பன அர்ச்சகன்தான் என்பதை அந்த அதிகாரி கண்டுபிடித்தார்.

புனிதமான இடத்தில்

கோவில் கருவறை என்பது புனிதமான இடம் என்று சொல்லுகிறார்கள். அந்த புனிதமான இடத்தைத்தான் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேர்ந்தெடுத்திருக்கின்றான். அந்த புனிதம் எப்படிகாப்பாற்றப்பட்டிருக்கிறது? உங்களுக்குத் தெரியும். இங்கு பெண்கள் எல்லாம் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த சங்கதிகளைப் பற்றி விளக்கி நான் சொல்ல விரும்பவில்லை.

இந்த அசிங்க சங்கதிகளை செல்ஃபோன் மூலம் போட்டோ எடுத்திருக்கின்றான். இதை சி.டியாக ஆக்கியிருக்கின்றான். அறிவியல் கருவிகளைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கின்றான்.

துபாய், வளைகுடாநாடு வரை இந்த ஆபாச படங்கள் பல கோடி ரூபாய் வரை சென்றிருக்கிறது. தர்மகர்த்தா ஒருவர் வந்து என்னை சந்தித்தார். கோயிலை இந்த மாதிரி அந்த அர்ச்சகன் பண்ணியிருக்கிறானே என்று வரிசையாகச் சொன்னார்.

காஞ்சிபுரம் அர்ச்சகர் சங்கதி முடிவதற்குள் சென்னை சாமியார் ஒருவர் வந்து அடுத்து நிற்கின்றார். ஒரு பெண்ணை பாலியல் புகாருக்கு உள்ளாக்கிய அந்த சாமியாரை காவல் துறை வந்து தேடுகிறது.

நல்ல வாய்ப்பாக இப்பொழுது கலைஞர் ஆட்சி இருக்கிறது.

பெண்கள் வாக்கு மூலம் கொடுத்தார்கள்

உடனே நமது காவல்துறை அந்த சாமியாரை கைது செய்து அழைத்து வந்தார்கள். இப்பொழுதுதான் பெண்களுக்கு தைரியம் வந்து என்னை அந்த அர்ச்சகர் கெடுத்தார், என்னையும் அந்த அர்ச்சகர் கெடுத்தார் என்று இப்பொழுதுதான் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

எதற்காக? கடவுளை மற! மனிதனை நினை! என்று தந்தை பெரியார் சொன்னாரே அது எவ்வளவு சரியான விஷயம் என்று பாருங்கள்.

நாம் யாரையும் புண்படுத்துவதற்காக சொல்லவில்லை. இதில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் எங்களுடைய சகோதரிகள் தான். அவர்களுக்கெல்லாம் தெளிவு பிறக்கும் பொழுது தானாகத் தெரியும். இங்கே கூட ஒருவர் சொன்னார்_அய்யா தந்தை பெரியார் அவர்களிடத்திலே ஒருவர் கேட்டார், அய்யா, நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்லுகின்றீர்களே, ஒரு வேளை திடீர் என்று வந்துவிட்டால் என்ன செய்வது? என்று கேட்டாராம்.

பெரியாரிடம் ஒருத்தர் கேட்டார்

ரொம்ப நாளைக்கு முன்னாலே குடிஅரசு அலுவலகத்தில் வேலை பார்த்தவர் இப்படி கேட்டார். நீங்களோ, நானோ இருந்தால் கோபப்பட்டிருப்போம். எப்படிய்யா வருவாரு? இல்லாதவர் எப்படி வருவார்? என்னய்யா முட்டாள் தனமாக கேள்வி கேட்கிறாய் என்றெல்லாம் பதில் சொல்லியிருப்போம்.

தந்தை பெரியார் ஓர் எதார்த்தவாதி; நடைமுறைக்கு உகந்தவர்; மனிதநேயர். கோபப்படாமல் பதில் சொன்னார். கடவுள் வந்து விட்டார் என்றால் இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போவோம். அவர் வந்துவிட்டால் நமக்கென்ன நட்டம்? (கைதட்டல்) நமக்கு ஒன்றும் அவர் மீது சங்கடம் இல்லையே! இவ்வளவு நடந்தும் வரவில்லையே!

நாட்டில் இவ்வளவு கொடுமைகள் நடக்கின்றன. நாட்டில் இவ்வளவு புயலும் பூகம்பமும் நடக்கின்றன. இவ்வளவு ஆபாசங்கள் நடக்கின்றன. இதுவரை கடவுள் வரவில்லையே! இருந்திருந்தால் அல்லவா வருவதற்கு? கடவுளைக்காட்டி மக்களை ஜாதி வாரியாகப் பிரித்தார்கள். கடவுளைக் காட்டி மதங்களைப் பிரித்தார்கள். அந்த மதங்களைக் காட்டி மனிதர்களிடையே பெரிய பிளவை ஏற்படுத்தினார்கள். நாட்டில் இரத்த ஆறு ஓடும்படிசெய்து விட்டார்கள்.

எனவே மனிதநேயம் இருக்க வேண்டும் என்று சொன்னால் அவர்கள் மதங்களால் பிரிந்திருக்கலாம். மனங்களால் பிரிந்திருக்கலாமா? மதங்களால் பிரிந்த மக்களை மனங்களால் ஒன்றுபடுத்துகின்ற இயக்கம்தான் தந்தைபெரியார் அவர்களுடைய இயக்கம் (பலத்த கைதட்டல்).

பெரியார் இயக்கம் ஒரு ஊரில் தோன்றினால்

ஆகவே பெரியாருடைய இயக்கம் என்பது ஒரு அறிவியல் இயக்கம். உங்களுக்கு நடைமுறை உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். இந்த ஊருக்கே ஒரு பெரிய சுகாதார மய்யம் இருந்தால் எந்தவித நோயும் இங்கு வராது.

இந்த ஊரில் ஒரு காவல்துறை நிலையம் இருந்தால் அது ஊருக்கு, சமுதாயத்திற்குப் பாதுகாப்பு. எங்கே கொலை, கொள்ளை நடந்தாலும் அதை கண்டுபிடித்து மக்களிடையே அமைதியை உருவாக்குவதுதான் காவல்துறையின், வேலை. திராவிடர் கழகத்தின் கருப்புச்சட்டைக்காரனுடைய வேலை என்ன என்று சொன்னால், இந்த சமுதாயத்தைக் காப்பாற்றுகிற வேலை.காவல்காரனுடைய வேலையைத் தான் இந்த இயக்கம் செய்து கொண்டிருக்கிறது. பெரியார் மய்யம் உருவாக வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. அய்யா போஸ் அவர்களுடைய கொடை உள்ளம் ரொம்ப பாராட்டுக்குரியது. பெரியார் மய்யத்திற்கு கொடுக்கப்பட்ட இடத்திற்கு மதிப்பே கிடையாது.

இல்லை என்று சொன்னதில்லை

அய்யா போஸ் அவர்களைப் பற்றி அமுதன் சொன்னார். எதையும் இல்லை என்று சொல்லுகின்ற பழக்கம் அவருக்கு இல்லை என்று சொன்னார். அவர் சரியாக தெளிவாக நினைத்திருக்கிறார். அவர் மனதில் நினைப்பதை வெளிப்படையாகப் பேசக்கூடிய அந்த சிந்தனையிலே இருப்பதாலே இவ்வளவு பெரிய காரியங்களை செய்திருக்கிறார். நான் வெளியூர்க்காரன். உங்களுக்கெல்லாம் அவரைப் பற்றித் தெரிந்திருக்கலாம்.

பெரியார் சொன்ன ஒரு தத்துவம்

தந்தை பெரியாருடைய பொது வாழ்க்கையின் தத்துவத்தை சொல்லுகின்றேன். தந்தை பெரியார் அறிவார்ந்த ஒரு கருத்தைச் சொன்னார். அரண்மனை மாதிரி வீடு இருக்கும். அந்த வீடு அவருக்குப் பிறகு அவருடைய மகனுக்கு சேரும். அதற்குப் பிறகு அவருடைய பேரப்பிள்ளை அல்லது அடுத்த தலைமுறையைச் சேரும். ஆனால் யார் பொதுவுக்காக இடத்தை கொடுக்கிறார்களோ அது அவர்களுடைய பெயரைத் தாங்கி நிற்கும்.

இங்கே உதாரணத்திற்கு 5 சென்ட் நிலத்தை கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது நூறாண்டுகள் ஆனாலும் போஸ் அவர்களுடைய, காஞ்சனா அவர்களுடைய இல்லமாகத்தான் இருக்கும்.

கொடுக்கவில்லை சம்பாதித்திருக்கிறார்கள்

இந்த சொத்தை அவர்கள் கொடுக்கவில்லை. அவர்கள் சம்பாதித்திருக்கிறார்கள். நாம் எல்லோரும் என்ன தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அய்யா அவர்கள் ஒழுக்கமாக இருக்கின்றார். நாணயமாக இருக்கின்றார். நாத்திகன் என்றால் தவறு செய்யக்கூடாது. தவறு செய்தால் தண்டனையிலிருந்து தப்பக் கூடாது. பிராயச்சித்தம், பாவ மன்னிப்பு என்பதெல்லாம் இங்கு கிடையவே கிடையாது.

பாதிரியார் கதை

ஒரு பாதிரியார் பற்றி கதை உண்டு. இந்த பாவம் செய்தால் 5 ரூபாய் தண்டனை. இந்த பாவம் செய்தால் 50 ரூபாய் தண்டனை. இப்படி அந்த நாள்களில் நடந்தது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. அப்பொ ழுது ஒரு நிகழ்வு நடந்த தாக சொல்வார்கள். இப்படி பாவம் செய்த வர்களுடைய பணத்தை எல்லாம் திரட்டி பாதிரி யார் எடுத்துக்கொண்டு போகின்றார்.

இப்படிப்பட்ட நிலையிலே வழியிலே வந்த ஒருவன் எல்லா பணத்தையும் என்னிடம் கொடுக்கிறாயா? அல்லது சுடட்டுமா? என்று கேட்டான். இல்லை இல்லை என் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது முக்கியம். நீ இந்த பணத்தை எடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டு, அதற்கு முன்னாலே ஒன்றே ஒன்று_ நீ செய்கிற பாவ காரியம் எவ்வளவு மோசமானது என்று யோசித்துப் பார்த்தாயா? ரொம்ப பெரியது, நீ நரகத்தில் கூட தூங்க முடியாது. அவ்வளவு பெரிய பாவ மாயிற்றே!

தவறு செய்தால் தண்டனை ஏற்க வேண்டும்

இது ஆண்டவன் பணமாயிற்றே. இதைத் தொட்டால் உனக்கு பாவ மன்னிப்பே கிடையாது என்று சொன்னார். உடனே அந்த திருடன் சொன்னானாம், இதற்கும் சேர்த்து பணத்தைக் கொடுத்து உன்னிடமிருந்து ரசீதை வாங்கிக்கொள்வேன், அவ்வளவுதான்.

ஆகவே பாவத்தை கழுவுவது என்பது குற்றத்தை மறைப்பதாகும்.

பகுத்தறிவுவாதிகள், நாத்தி-கர்கள், பெரியார் தொண்டர்கள், தவறு செய்யக்கூடாது.

தவறு செய்தால் தண்டனையை ஏற்க வேண்டும். அதுதான் வள்ளுவருடைய வாழ்க்கை முறை.

---------------(தொடரும்)--------------- “விடுதலை” 24-1-2010