Search This Blog

10.3.10

மதுரை மீனாட்சி கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைய காரணமாக இருந்தது யார்? சான்றுகளுடன் ஒர் அலசல்

மதுரை மீனாட்சி கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவும்- வைத்தியநாதய்யரும்!


25.02.2010 நாளிட்ட சென்னை "தினமணி" ஏட்டில் முதல் பக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட மதுரை வைத்தியநாதய்யர் சிலை பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது. அக்கட்டுரையில் "அரிசன மக்களின் மேம்பாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்தவரும் சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவருமான வைத்தியநாதய்யர்" என்றும் "அரிசன மக்களின் முன்னேற்றத்துக்கும் அவர்கள் ஆலயத்துக்குள் சென்று வழிபடவும் அயராது போராடியவர் தியாகி வைத்தியநாதய்யர்"என்றும்.

மதுரை மீனாட்சி யம்மன் கோவிலுக்குள் அரிசன மக்களை அழைத்துச் சென்று ஆலயப்பிரவேசம் செய்த அவரது சிலைக்கு யாரும் மரியாதை செய்யவில்லை" என்றும் குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்த ஆய்வு.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டோர். நுழைந்தமை பற்றிய ஓர் அறிக்கை 13.07.39 நாளிட்ட "விடுதலை" பக்கம் மூன்றில் இடம் பெற்றுள்ளது.

8.7.1939 காலையில் 5 பஞ்சமர்களும் 1 நாடார் மட்டும் கோவிலுக்குள் பிரவேசித்தார்கள் தேவஸ்தான எக்சிகியூட்டிவ் ஆபீசர் ஒக்குமத்தின் பேரில் பட்டர்களும் ஸ்தானிகர்களும், மஹாஜனங்களும் இல்லாத காலமான சுமார் 8 மணிக்கு ஓர் ஆட்சேபணையும் எதிர்ப்பும் இல்லை என்று காண்பிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வெகு தந்திரமாகவும் திருட்டுத்தனமாகவும் பிரவேசம் செய்யப்பட்டது......-.மந்திரிக்கூட்டம் தரிசனத்துக்கு வருவதாகப் பொன்னுசாமி பட்டரிடம் சொல்லி அவரை ஏமாற்றித் தரிசனம் செய்விக்கும்படி எக்சிகியூட்டிவ் ஆபீசர் செய்த உத்தரவை அனுசரித்து அவர் ஸ்ரீ ஏ. வைத்தியநாதய்யரிடம் 1ரூ தக்ஷிணை பெற்றுக் கொண்டு தீபாராதனை செய்து அவர்களால் கொடுக்கப்பட்ட மாலைகளைப் போட்டு விபூதிப் பிரசாதம் கொடுத்தார். வந்தவர்கள் பஞ்சமர்களும் நாடாரும் என்பது அவருக்குப் பிந்திதான் தெரியும் முறைகாரப் பட்டரும் ஸ்தானீகர்களும் அந்த சமயம் அங்கில்லை ......................" என்று அப்போது வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தார் மிக நீண்ட அறிக்கை வெளியிட்டார்கள். இவ்வறிக்கையை 13.07.39 நாளிட்ட "விடுதலை" பக்கம் மூன்றில் காண்கிறோம். மதுரைக் கோவில் நுழைவைச் சிறுமைப்படுத்துவதற்காக வந்தேறி ஆரியப் பார்ப்பன விஷமிகள் வெளியிட்ட அறிக்கை இது.

காந்தியாரின் திட்டம் பற்றிப் பெரியாரின் கருத்துகள்

குளத்திலேயும் கிணற்றிலேயும் பார்ப்பானும் பறையனும் சூத்திரனும் ஒன்றாகத் தண்ணீர் எடுக்கக்கூடாது. கோயிலுக்குள் போகக்கூடாது. மேல்ஜாதிக் காரனுக்குத் தனிக்குளம், கிணறு, கோயில்கள் கட்டித்தரவேண்டும் என்பது தான் காந்தியின் திட்டம் என்று எனக்குத் தெரியும். யாராவது இல்லை என்று சொல்லட்டுமே பார்ப்போம். சும்மா இன்றைக்குச் சொல்வார்கள் காந்தி மகான் காட்டிய வழி மகாத்மாவின் சேவை என்றெல்லாம். அது வெறும் புரட்டு. நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குக் காரியதரிசியாக, தலைவராக இருந்தபோதுதான் ரூ. 48,000 (நாற்பத்தெட்டாயிரம் ரூபாய்) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குக் கிரான்ட் அனுப்பினார்கள். எதற்கு? பறையன், சக்கிலி, பள்ளனுக்கு வேறு பள்ளிக்கூடம்; பறையனுக்கு வேறு கோயில் கட்டிக் கொடு; மற்ற ஜாதியானுக்கு மேல் சாதிக்காரனுக்கு என்று இருப்பதில் போய் ரகளை செய்யக்கூடாது என்று சமத்துவம் அளித்தவர் ஜஸ்டிஸ் கட்சியினரே

ஆனால் அந்தக்காலத்திலேயே ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சட்டம் செய்துவிட்டார்கள் ஒன்றாகப் படிக்கணும் படிக்குமிடத்திலே ஜாதி வித்தியாசம் காட்டக் கூடாது என்று........

நமது சீர்திருத்தத் திட்டங்கள்

அந்த நேரம் (வைக்கம் போராட்ட காலம்) நான் தமிழ்நாட்டிலே தீண்டாமை விலக்கு என்பதில் தீவிரமாக இருந்து பிரசாரம் செய்து கொண்டிருந்த நேரம். கலப்புமணம், சமபந்தி போஜனம், எல்லோரும் பள்ளிக் கூடத்தில் படிக்க வேண்டும் என்பன போன்ற கருத்துக் களில் தீவிர நம்பிக்கை கொண்ட ஜஸ்டிஸ்கட்சிக்காரர்களும் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்துத்தான் காந்தியும் அதை நிர்மாணத்திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்". ("விடுதலை" 16.6.1963 ப.1)

காந்தியாரின் ஹரிஜன இயக்கம் தோன்றிய வரலாறு இதுதான். இதற்கு இன்னொரு காரணம் ஹரிஜனங்கள் என அவரால் அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறி விடாமல் தடுக்கவே என்றும் கூறப்படுகிறது.

வைத்தியநாத அய்யர் அன்றும் பின்பும்

மதுரை வைத்தியநாதஅய்யர் நூற்றுக்கு நூறு சநாதனி. ஆரிய நச்சுப் பாம்பு. இப்பாம்பு சூத்திரர்கட்கு எதிராகச் செயல்பட்டது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. 1922இல் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டு நிகழ்ச்சி. 1922 ஆம் ஆண்டில் திருப்பூரில் கூடிய 28ஆம் மாகாண மாநாட்டில் நாடார் முதலியவர்களுக்கு ஆலய நுழைவு உரிமை வேண்டும் எனப் பெரியார் போர் முரசொலித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுவதாவது. 1922 ஆம் வருஷம் திருப்பூரில் கூடிய 28வது மாகாண மாநாட்டிலும் நாடார்கள் முதலியோர்க்கு ஆலயப் பிரவேசம் கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு விரோதமான சாஸ்திரங்களையும் பழைய ஆசார வழக்கங்களையும் மாற்றவேண்டும் என்றும் ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கரால் பிரேரேபிக்கப்பட்டு விஷயாலோசனைக் கூட்டத்தில் தீர்மானமானதை வெளிமாநாட்டில் பிரேரேபிக்க முடியாதபடி பல பிராமணர்கள் செய்தும் கடைசியாகப் பெரிய தகராறின் பேரில் ஸ்ரீமான்கள் கலியாணசுந்தர முதலியார் பிரேரேபிக்க, ஈ.வெ.இராமசாமி நாயக்கர் ஆமோதிக்க அதன்பேரில் ஸ்ரீமான்கள் எஸ்.சத்தியமூர்த்தி, மதுரை ஏ. வைத்தியநாதய்யர், கும்பகோணம் பந்துலுவய்யர் முதலியோர் ஆட்சேபித்து கூச்சல்களையும் கலகத்தையும் உண்டாக்கி எப்படியோ அத்தீர்மானத்தை அப்படியே ஓட்டுக்கு விடாமல், அதன் ஜீவநாடியை எடுத்துவிட்டு ஒரு சொத்தைத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதுசமயம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவுக்கு 'மதில்மேல் பூனைபோலவே நடந்து கொண்டார்' என்ற பழியும் வந்தது" என்று எழுதுகிறார். ஏன் அவர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று பெரியார் வினவியமைக்கு அம்மூவரும் சாஸ்திரம் ஒப்புக் கொள்ளாது என்றார்கள். எந்த சாஸ்திரம் எனப் பெரியார் வினவினார். அதற்கு அவர்கள் மநுதர்ம சாஸ்திரம் என்றார்கள். அப்படியானால் மக்களைக் கோவிலுக்குள் போக அனுமதிக்காத அந்த மநுதர்ம சாஸ்திரத்தைத் தீயிட்டுக் கொளுத்துவேன் என அதே மேடையில் பெரியார் உரைத்தார்.

இப்படிப்பட்ட வைத்தியநாதய்யர் தான் காந்தியாரின் சாமர்த்தியத் திட்டமாகிய ஹரிஜன இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர். இவர் 8.7.1939 அன்று 5 ஆதிதிராவிடர்களையும் ஒரு நாடாரையும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். நல்ல நாடகம்.

தீயர்கள் தீ வைத்த மதுரை

1946ஆம் ஆண்டு மே 11ஆம் நாள் ரவுடிகள் மதுரை வைகையாற்றில் ஓபுளா கோபுளா படித்துறையின் அருகே நடந்த பெரியாரின் கருஞ்சட்டைப்படை மாநாட்டைத் தீ வைத்துக் கொளுத்தினர். மாநாட்டிற்கு வந்திருந்த ஆண் பெண்கள் அலறி அடித்துக்கொண்டு ஆற்றின் கரையேறி மதுரைக்குள் உயிர் பிழைக்க ஓடினர். என் 14ஆம் வயதில் நடந்த இம்மாநாட்டில் கலந்து கொண்ட நான் பந்தல் எரிவதைக் கண்ணால் கண்டேன். இடது முழங்கையில் கல்லெறியும் வாங்கினேன். அச்சம் தரும் சூழ்நிலையில் கரையோரமாக நடந்து கலெக்டர் அலுவலகம் அருகே வந்தடைந்து அம்மன் சன்னதி தவமணி விலாஸ் ஹோட்டலைப் பிற்பகல் 3 மணிக்குப் பசியுடன் அடைந்தேன். கடைகளெல்லாம் அடைபட்டுக் கிடந்தன. பெரும்பாடுபட்டுக் கனமான அந்த ஹோட்டல் கதவைத் தட்டித்தட்டி நின்றேன் கதவு திறந்ததும் நிம்மதியாகக் ஹோட்டலுள் நுழைந்து உணவு உண்டேன் நான். மாநாட்டுப்பந்தல் எரிந்து முடிகின்ற நேரம் வரை கரையில் நின்ற போது மக்களுக்குக் கரையிலிருந்து ஆறுதல் சொல்லி அனைவரையும் அனுப்பி வைத்துக் கொண்டிருந்த பெரியாரிடம் ஒரு பார்ப்பன உருவம் வந்தது. "நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமா? என அது பெரியாரைப் பார்த்துக் கேட்டது. கொதிப்படைந்து போய் நின்று கொண்டிருந்த பெரியார் உங்கள் உதவி எதுவும் எனக்குத் தேவையில்லை என முகத்தில் அறைந்தது போல் சொன்னார். அந்த உருவம் நகர்ந்து சென்றது. அந்த உருவம் யாருடையது? வைத்தியநாதய்யருடையது.

பெரியார் அறிக்கை

"மதுரைக் கலவரம்" என்ற தலைப்பில் 18.5.1946 "குடிஅரசு" இதழில் பெரியார் தம் அறிக்கையை வெளியிட்டார்.

பெரியார் தம் அறிக்கையில் தோழர் வைத்தியநாத அய்யர் அவர்கள் கலவரத்தின் போது வந்தார் என்பது, அவர் பணம் கொடுத்து ஏவிவிட்ட காலித்தனம் கிரமமாய், வெற்றியாய் நடந்ததா என்பதைப் பார்க்கவே வந்தார் என்றே நம் கூட்டத்தினர் கருதி, அவரைக் கோபித்து இருக்கிறார்கள். அதற்கு ஏற்றாற் போல அவர் வந்தவுடன் காலிகள் அவரை மரியாதை செய்து வழி அனுப்பியிருக்கிறார்கள். போலீஸ் சூப்பரின்டென்டெண்டைக் கல்லால் அடித்த அக்காலிகள் தோழர் வைத்தியநாதய்யருக்கு அடிபணிந்து வாழ்த்துக் கூறினார்கள் என்றால் அதில் நம்மவர் கொண்ட கருத்துக்கு ஆதரவு இல்லாமல் இருக்க முடியாது என்று குறிப்பிடுகிறார். இதன் மூலம் மாபெரும் லட்சியத்தை நோக்கிச் செல்லும் ஒரு பேரியக்கத்தின் மாநாட்டுப்பந்தலைத் தீக்கிரையாக்கித் தம்மீது தாமே காலித்தனத்தின் முத்திரையைக் குத்திக் கொண்டார் வைத்தியநாதய்யர் என்பதைக் காண்கிறோம்.

இந்த வைத்தியநாதய்யர்தான் பெரியாரைக் காப்பாற்றினாராம்

உண்மைகள் இவ்வாறிருக்க 4.3.2010இல் தினமணியில் மேலூர் சு. முத்தப்பசாமி என்பவர் வழியாக இராசபாளையம் ராஜுக்கள் கல்லூரி விரிவுரையாளர் பி.எஸ். சந்திரபிரபு என்பார் எழுதிய வைத்தியநாதய்யரின் "ஆலயப்பிரவேசம்" என்னும் நூலின் 42,43 ஆம் பக்கங்களில் குறிப்பிட்டுள்ள ஒரு செய்தியைக் கண்ணுறுகிறோம். மதுரையில் ஆலயப்பிரவேசம்பற்றி பெரியார் பேசினாராம். மக்கள் ஆத்திரமடைந்து மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டு தீ வைக்க முயன்றனராம். இதனைக் கேள்விப்பட்ட வைத்தியநாதய்யர் அங்கு வந்து பெரியாரைக் காப்பாற்றித் தம் காரில் ஏற்றிக் கொண்டு கொடைக்கானல் கொண்டு சேர்த்தாராம். என்ன அற்புதமான கண்டுபிடிப்பு! எத்தனை ஆண்டுகட்குப்பின் இப்படிப்பட்ட புளுகுப்புராணம் ஒன்றை எழுதுகிறார் ஒருவர்! 2010ஆம் ஆண்டே பார்ப்பனரும் அவர் நெறி நிற்கும் சூத்திரர்களும் இப்படிக் கருத்து உரைப்பார்களானால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் புளுகுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த வந்தேறி ஆரியப் பார்ப்பனர் என்ன புளுகுகளை-யெல்லாம் அவிழ்த்துவிட்டிருக்க மாட்டார்கள் இந்த நாட்டில்?

"புளுகும் கலை" என்பது வந்தேறி ஆரியப்பார்ப்பனர் திராவிடத்திற்கு அளித்த "அருட்கொடை" அன்றோ! இதற்கு ஆதாரமாக இருப்பவை இன்றும் வாழும் அவர்தம் புராணங்களன்றோ!

இன்னும் கொஞ்ச நாள் போனால் வைத்தியநாதரின் புகழ் பரப்புபவர்கள் வைத்தியநாதய்யர் ஹெலிகாப்டரில் வந்து பெரியாரைப் பாதுகாப்பான இடத்திற்கு அன்று இட்டுச் சென்றார் எனப் புளுகினாலும் ஆச்சரியப்படுவ-தற்கில்லை. இவைகள் கிடக்கட்டும் மதுரைக் கோவிலில் தாழ்த்தப்பட்டவர் நுழைந்த நிகழ்ச்சி பற்றி அன்றைய முதலமைச்சர் இராசகோபால ஆச்சாரியார் அன்றே என்ன சொன்னார்?

இராசகோபால ஆச்சாரியாரின் பாராட்டு

மதுரை மீனாட்சி கோவிலில் 8.7.1939 சனிக்கிழமை தாழ்த்தப்பட்டவர்கட்குத் திறந்துவிடப்பட்டமையையும் அன்று காலை ஆதிதிராவிடர்கள் அக்கோவிலுள் நுழைந்தமையையும் பற்றி அதற்கு 22 நாள் கழித்து 30.7.1939 அன்று மதுரையில் பேசிய மாண்புமிகு (கனம்) இராசகோபால ஆச்சாரியார் "இந்த வெற்றி (மதுரை மீனாட்சி கோவிலில் ஆதிதிராவிடர்கள் நுழைந்தமை) காங்கிரசுடையது அல்ல, அல்லது ஒரு கட்சிக்குக் கிடைத்த வெற்றியுமல்ல, இது எல்லோருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏனெனில் இவ்விஷயத்தில் ஜஸ்டிஸ்காரர்களும் சுயமரியாதைக் காரர்களும் இன்னும் இதரர்களும் சேவை செய்திருக்கின்றனர்" என்று குறிப்பிட்டார் இச் செய்தி 31.7.39 நாளிட்ட "சுதேச மித்திரன்" ஏட்டில் வெளியாகி இருந்தது ("விடுதலை" 1.8.39).

எனவே கோவில் நுழைவு வெற்றி காங்கிரசுக்காரரான வைத்தியநாதருடையதன்று. இராசகோபால ஆச்சாரியார் கருத்துவழி ஆய்ந்தால் இவ்வெற்றி ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களான சி. நடேசமுதலியார், பிட்டி தியாகராயர், டி.எம். நாயர், பனகால் அரசர் போன்றோர் பெற்ற வெற்றியாகும்.

இவ்வெற்றி "வைக்கம் வீரர்" சுயமரியாதை இயக்க நிறுவனர் பெரியார் ஈ.வெ.ரா பெற்ற வெற்றியாகும். தலைச்சேரி தீயர், நாடார், பில்லவர் மாநாடு 16.3.1930 அன்று கேரளத்திலுள்ள தலைச்சேரியில் நடைபெற்றது. சவுந்தரபாண்டியன் மாநாட்டுக்குத்தலைமை தாங்கித் தீண்டாதாரை அங்குள்ள கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். மாநாட்டிற்கு ஈ.வெ. இராமசாமி, விருதுநகர் எம்.எஸ். பெரியசாமி நாடார் ஆகியோரும் வந்திருந்தனர்.

சவுந்தரபாண்டியன் இம்மாநாட்டில் ஆற்றிய தலைமை உரையைப் பாராட்டி நீதிக்கட்சியின் "திராவிடன்" இதழ் "திரு. சவுந்தர பாண்டியன் பேருரை" என்று ஒரு தலையங்கம் எழுதியது. இச்செய்திகளைத் "திராவிடன்" 17.3.30 பக்கம் 3,4, இல் காண்கிறோம்.

மதுரைக் கோவில் நுழைவு வெற்றி இவர்கட்கும் உரியதாகும்.


--------------------பேராசிரியர் டாக்டர் பு. இராசதுரை அவர்கள் 10-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

Unknown said...

hello sir,pasumpon devar entha help um pannalaya.dinamani eluthiyatha thappu sonnankiya.anal athe thappa than pannirukinga.tamil la etha eluthathuku sorry