Search This Blog

21.12.11

பெரியார் அறிவுரை

விடுதலைக் குடும்பத்துக்கு பெரியார் அறிவுரை


நிருவாகத்திலிருக்கும்போது, பணியிலிருக்கும்போது சில குறைகள் ஏற்படலாம். துணைவர்களிடமே உயிருக்குயிரானவர்களிடமே குறை ஏற்படுகிறது.

அண்ணன் தம்பிகளிடம், தந்தை மகனிடம்கூட சில குறைகள் ஏற்படத்தான் செய்கின்றன. இது இயற்கை. இதைப் பெரிதுபடுத்தக் கூடாது. சிலரது சுபாவம் ஒரு மாதிரியாக இருக்கலாம். பொதுவாகவே ஒவ்வொருவருக்கொரு சுபாவம் இருக்கும். அதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அவர் கோபக்காரர்; அந்தக் கோபம் போனால் நன்றாக நடப்பார் என்கிற தன்மையை உணர்ந்து கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

சிலருக்குத் தேவை இல்லாமலே பொய் சொல்கிற வழக்கம். சிலர் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு முகம் கடுகடு என்று எப்போதும் கோபக்காரராகத் தோன்றும்படி இருக்கும். அது அவரவர்கள் சுபாவம். இந்த மனிதச் சுபாவங்களை உணர்ந்து நமது அலுவலகத்தில் உள்ளவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அரசு ஊழியர்கட்கும் ஒற்றுமையைத் தான் வலியுறுத்தினேன்

திருச்சியில் அரசாங்கத்தில் பணியாற்றும் நிருவாகஸ்தர்கள், குமாஸ்தாக்கள், சிப்பந்திகள் எல்லோரும் சேர்ந்து எனக்கு ஒரு வரவேற்பு கொடுத்தார்கள். அதிலேயும் இதைத்தான் சொன்னேன். நீங்கள் எல்லாம் அன்போடு ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவரையும் காட்டிக்கொடுக்கக் கூடாது. உங்களின் ஒற்றுமையை முக்கியமாகக் கருத வேண்டும். மேலே இருப்பவர்களுக்கு அடங்கி நன்றியோடு நடந்துகொள்ள வேண்டும். இதையெல்லாம்விட, நாமெல்லாம் ஓர் இனத்தவர்களாக இருக்கிறோம். அதுவும் மானம் ஈனமற்ற இழிவான சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் சொன்னேன். அதைத்தான் உங்களுக்கும் நான் சொல்கிறேன்.

நீங்களெல்லாம் ஒற்றுமையாக இருந்து காரியம் செய்ய வேண்டும்

இந்த நிறுவனம் லாபகரமான தொழிலல்ல. பொதுத் தொண்டில் இது ஒரு பகுதி என்பதைத்தவிர இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000த்துக்குக் குறையாமல் நஷ்டமாகிறது என்பது உங்களுக்கும் தெரியும். தாயை ஒளித்த சூல் இல்லை என்பதுபோல் உங்களிடம் நான் மறைக்க வேண்டியதில்லை.

------------------------ பெரியார் -விடுதலை - 25.2.1968

1 comments:

பழையகருப்பன் பக்கங்கள் said...

வணக்கம்,தோழர் ஒவியா அவர்களே, பெரியார் அவர்களின் நல்லதொரு செய்தியினை தேடி எடுத்து வெளியிட்டுள்ளீர்கள். ஆனால் இதை இப்போது வெளியிட்டதன் கரணமென்ன... ஒருவேளை குமுதம் ரிப்போர்ட்டரின் தாக்கமோ?