Search This Blog

9.12.11

பார்ப்பனரைத் தெரிந்து கொள்க!


அரசியல் விடுதலை கிடைத்தது ஒரு புறம் இருக்கட்டும்; சமுதாய விடுதலை கிடைத்துவிட்டதா? சமுதாய விடுதலை கிடைக்காத சுயராஜ்யம் என்ன வெங்காய சுயராஜ்யம்? சுயமரியாதைக்கு இடம் இல்லாத நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக் குமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்க வாய்ப்பு உண்டா? என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாக்களுக்கு இன்று வரை விடை இல்லை.
ஜாதி - மதங்களுக்கு நல்ல அளவுக்குக் கடைக் கால் போட்டு சமுதாயத்தைக் கட்டி வைத்திருந்தால், இவற்றின் காரணமாக நாளும் கலவரங்களும், சண்டை சச்சரவுகளும், அமைதியின்மையும் அரங்கேறிக் கொண்டுதானே இருக்கிறது? அதுதானே இப் பொழுது நடந்து கொண்டுமிருக்கிறது?

அதிக தூரம் போகவேண்டாம்; கடவுள்தான் எல்லோரையும் படைத்தார் என்று புளுகிக் கொண்டு, அந்தக் கடவுளுக்குப் பக்கத்தில் காலை நீட்டிக் கொண்டு ஜம்பமாக உட்கார எங்களுக்கு மட்டும்தான் பிரத்தியேக உரிமை உண்டு என்பது இன்றுவரை நிலைநாட்டப்பட்டு விட்டதே!

சிறீரங்கத்தில் குறிப்பிட்ட இந்த மாதத்தில் கோவில் புரோகிதப் பார்ப்பனர்களைத் தூக்கிச் செல்வது என்ன நியாயம்? இந்த அர்ச்சகப் பார்ப்பனர்களைத் தூக்கிச் சுமப்பதற்கென்றே ஒரு குறிப்பிட்ட சிலர் இருக்கின்றனராம். அவர்களுக்கு ஸ்ரீபாதம் தாங்குவோர் என்று பெயராம். பாதங்களிலேயே ஸ்ரீபாதம் - அது பார்ப்பனர்களுடையதாம். இதனை எதிர்த்து கடந்த ஆண்டே வலுவான குரல் கொடுத்து எச்சரித்த நிலையில் கடந்த ஆண்டு கை விடப்பட்டது. இந்து அறநிலையத் துறை அதிகாரியே தடை செய்துவிட்டார். அதோடு அந்தக் கதை முடிந்திருக்க வேண்டாமா? இவ்வாண்டு மறுபடியும் பழைய கதை தலை எடுக்கிறதே - இது எப்படி? பார்ப்பனர்களின் தன்மானப் பிரச்சினையாம் - கவுரவப் பிரச்சினையாம்; இராமானுஜர் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சம்பிரதாயமாம் - இந்து முன்னணி வகையறாக்கள் சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள். பல்லக்கில் ஏறிச் செல்லுவது மானப் பிரச்சினை, கவுரவப் பிரச்சினை என்றால், அதனைச் சிலர் தூக்கிச் சுமக்க வேண்டும் என்பது என்ன பிரச்சினையாம்? அவர்களும் மனிதர்கள்தானே? அவர்களுக்கு தன்மானம், சுயகவுரவம் கிடையாதா? இதனை திராவிடர் கழகம் இப்பொழுதுதான் எதிர்க்கிறது என்று சொல்லமுடியாது. கும்பகோணம் கோவில்களில் விஜயதசமி நாளில் பல கோவில்களிலிருந்தும் உற்சவ மூர்த்திகள் பல்லக்குகளில் பவனி வருவார்கள். அதில அர்ச்சகப் பார்ப்பனர்களும் அமர்ந்து வருவது வாடிக்கை. கும்பகோணம் திராவிடர் கழகம் அதனை எதிர்த்து இரண்டு துண்டு அறிக்கைகளை வெளியிட்டது. கோவில் நிருவாகிகளுக்கு இரு கடிதங்களையும் கொடுத்தது (11.10.1950 மற்றும் 18.10.1950). பொது மக்கள் மத்தியிலும் பேராதரவு கிட்டியது. அதன் விளைவு பார்ப்பனர்கள் பல்லக்கில் அமராமலேயே சாமி ஊர்வலங்கள் சென்றன. திருவாரூர் மாவட்டம் தப்ளாம்புலியூரிலும் அவ்வாறே தடுத்து நிறுத்தப்பட்டது. என்றாலும் இன்னும் பார்ப்பனர்கள் பல்லக்கில் பவனி வர வேண்டும் என்று நினைப்பதை உரிமையாகக் கருதுகிறார்கள் என்றால் - இந்த நிலையை எண்ணிப் பார்க்க வேண்டாமா? பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்கள், மனிதர்களாகி விட்டார்கள் என்று நினைப்பதற்கு இடம் இல்லையே!

இன்னும் தமிழ்நாட்டில் தமிழ் மன்னர்களால் கட்டப் பட்ட கோவில்களில், பெரும்பாலும் பக்தர்களாக தமிழர்கள் இருக்கும் நிலையிலும் இன்று வரையிலும், கோவில்களின் கருவறைக்குள் பார்ப்பனர்களைத் தவிர தமிழர்கள் செல்லமுடியவில்லையே! தமிழர்களின் தாய் மொழிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லையே! மண்விடுதலை கிடைத்தாலும், மனித விடுதலை கிடைக்கவில்லை. ஒரு மனிதனுக்குரிய உரிமை மற்ற மனிதனுக்கும் உண்டு என்பது நிலை நாட்டப்பட வில்லை. இதைப்பற்றி யார் சிந்திக்கிறார்கள்? செயல்படுகிறார்கள்? திராவிடர் கழகத்தைத் தவிர. தமிழ்த் தேசியம் பேசக் கிளம்பி இருக்கிறார்களே - அவர்களுக்கெல்லாம் ஏன் இந்தத் தன்மானச் சிந்தனை பிறக்கவில்லை?
தமிழர்கள் திராவிடர்களாக இருந்து சிந்திப் பார்களாக!

------------------"விடுதலை”தலையங்கம் 9-12-2011

0 comments: