Search This Blog

31.8.11

வல்லபைக் கணபதி சிலை வழிபாடு-அரசு சிந்திக்குமா?


கோவில்களில் ரெக்கார்டு டான்ஸ், சினிமாவுக்காக எடுக்கப்படும் குரூப் டான்ஸ் போன்றவைகளுக்கு அனுமதி மறுப்பதுபற்றி பரிசீலிக்கப்படும் என்று அற நிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் அவர்கள் நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

வரவேற்கத்தகுந்த முடிவு தான். அதோடு தொடர்புடைய வேறு சில தகவல்களும் இருக்கின்றன.

கோயில்களில், கோபுரங்களில், தேர்களில் ஆபாசம் நிரம்பி வழியும் சிற்பங்களும், சுதைகளும் இடம் பெற்றுள்ளனவே!

ஆண் - பெண் உறவு - அதிலே பல வகையான கொக்கோகங்களே வெட் கப்படும்படிக்கு கண்ணராவிக் காட்சிகள் பக்தர்களை நிலைகுலையச் செய்கின்ற னவே - இருபால் இளைஞர்களையும் சுண்டி சுண்டி இழுக்கின்றனவே - அவற் றின்மீது கை வைத்தால் மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்ததாகுமே! ஒழுக்கத்தை வளர்ப்பது ஆகுமே!

இதைப்பற்றியும் அரசு சிந்திக்கக் கூடாதா? கோயில் என்றால் - வழிபாடு என்றால் மன அமைதிக்குத்தான்; மனதை ஒருமுகப் படுத்துவதற்குத்தான் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கத்தில் மன அமைதியைச் சாகடித்து ஒழுக்கத்தை ஓட விரட்டி, பேரின்பத்தை மறந்து, சிற்றின்பப் பக்கம் மனதை அலைக்கழிக்க வைக்கும் ஏற்பாடுகள் அல்லவா இவை!

இந்து மதக் கோயில்களைத் தவிர்த்து மற்ற மற்ற மத வழிபாட்டு நிறுவனங்கள் இப்படியா இருக்கின்றன?

சிவலிங்கம் என்ற ஒரு குழவிக் கல்லை கர்ப்பக்கிரகத்தில் கடவுளாக நட்டு வைத்துள்ளார்கள். ஓம் என்ற பிரணவ மந்திரம் அதற்குள் புதைந்து கிடப்பதாகக் கதை விடுகிறார்கள்.

லிங்கமும் (ஆண் குறி) யோனியும் (பெண் குறி) இவற்றின் இணைப்பு அடை யாளங்கள்தான் சிவசக்தி என்று கூறப்படும் சிவலிங்க பூஜையாகும்.

ஆண் - பெண் பாலியல் சேர்க்கையே தலைமையான படைப்பாற்றலின் வாழ்க் கையின் விருப்பாற்றலின் அடிப்படை என்று வெண் டைக்காய் விளக்கெண் ணெய் விளக்கங்களைக் கூறித் திரிகிறார்கள்.

--------------ஆதாரம்: கோல்டன் எஃப்டி கொலாபவாலா எழுதிய தந்திரமா - காமம் சார்ந்த வழிபாடு (Tantar The Erotic cult vD« Orient Paper Backs)

அந்தரங்கங்களை அம்பலத்துக்குக் கொண்டு வந்து தத்துவ முலாம் பூசும் ஏற் பாடுதான் இது. காட்டு விலங்காண்டிக்கால நாகரிகத்தின் அடையாளமும்கூட!

சிவன்கூட புலித்தோல், கபால ஓடு, பாம்பு இவற் றைத்தானே கையாளுகிறான் - இதிலிருந்தே தெரியவில்லையா - காட்டுமிராண் டிக்கால கண்டுபிடிப்பு என்று.

இன்னொன்று - வல்லபைக் கணபதி. விநாயகன் தனது தும்பிக்கையை ஒரு பெண்ணின் குறியில் (வல்லபையின்) வைப்பது போன்ற சிலையை வைத்து வழிபாடு நடத்துகிறார்களே - இவற்றில் எல்லாம் கைவைக்குமா அரசு - ரெக்கார்டுடான்சை விட இவை ஆபாசமாயிற்றே!

-------------- மயிலாடன் அவர்கள் 31-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

இஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா?


முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம்

சகோதரர்களே!

இன்று இங்கு கூட்டப்பட்டிருக்கும் ஒரு மதசம்பந்தமான இந்த முக்கியக் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததை உண்மையிலேயே நான் ஒரு பெருமையாய்க் கருதுகின்றேன்.

ஏனெனில், என்னைப்பற்றி எல்லா மத பக்தர்களும் சொல்லும் குறைகள் உலகம் அறிந்ததேயாகும். அதாவது நான் மதங்களைக் குற்றம் சொல்லுகின்றவன் என்றும், மதமே கூடாதென்று சொல்லுகின்றவன் என்பதோடு மாத்திரமல்லாமல் கடவுளைப் பற்றியே கூடத் தகறாரு சொல்லுகின்றவன் என்றும் சொல்லப்படுகின்றவனாவேன். அப்படிப்பட்ட என்னை, உலகத்திலுள்ள மற்ற மதக்காரர்களை எல்லாம் விட அதிகமான மதபக்தி கொண்டவர்கள் என்று சொல்லப்படு கின்ற இஸ்லாம் மார்க்கத்தை அனுசரிக்கின்றவர்கள் என்பவர்களாகிய நீங்கள் கூப்பிட்டிருப்பது மிகவும் அதிசயமென்று சொல்லப்பட வேண்டும் அல்லவா? நீங்கள் என்னைக் கூப்பிட்டது போல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் அவர்கள் மதசம்பந்தமான ஒரு நாயன்மாரோ, ஆழ்வாரோ பிறந்த நாள், செத்த நாள் “திருநக்ஷத்திரம்” என்று சொல்லப் படும் “விஷேச நாள்” கொண்டாட்டத்திற்கு ஒரு முஸ்லீமையோ, ஒரு கிறிஸ்துவனையோ சுலபத்தில் கூப்பிட்டு விடமாட்டார்கள். அது மாத்திர மல்லாமல் அவர்கள் பக்கத்தில் நீங்கள் இருக்கவும் சம்மதிக்க மாட்டார்கள். உங்களைத் தொட்டுவிட்டால் மறுபடியும் குளிக்காமல் அங்கு போக மாட்டார்கள். அவ்வளவு தூரம் போவானேன்; என்னையே கூப்பிட மாட் டார்கள். மற்றும் எந்த நாயன்மாருக்கும், எந்த ஆழ்வாருக்கும் குரு பூசை யும், திருநக்ஷத்திரமும் நடத்துகின்றார்களோ அவர்கள் ஜாதியாரையே கூப்பிடவோ, பக்கத்தில் வைத்து சாப்பிடவோ, தொடவோ சம்மதிக்க மாட்டார்கள். ஏனெனில், அந்தப்படி தொடாமலும், பக்கத்தில் வைத்துச் சாப்பிடாமலும் இருந்து கொண்டு, மற்றவர்களை வெறுப்பாகவும், இழிவாகவும் கருதுவதுமேதான் அவர்களது மதம் (இந்துமதம்) என்று கருதிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் தான் அநேகமாய் என்னை மதத் துரோகி என்று அழைப்பதாக நான் அறிந்து வருகின்றேன்.

பொதுவாகவே உலகத்தில் அநேகமான மக்களுக்கு “மதம்” பிரதானமென்று கற்பிக்கப்பட்டிருக்கின்றதே தவிர மதம் என்றால் என்ன? அது எதற்கு? என்கின்ற அறிவே மதபக்தர்கள்-மதத்திற்காக பிராணனைக் கொடுக்க இருக்கின்றவர்கள் என்பவர்களிலுங்கூட ஆயிரத்தில் ஒருவருக்கும் தெரியாதென்றே நான் தைரியமாய்ச் சொல்லுவேன். என்னைப் பற்றியே மதஞானமில்லாத மக்கள் பலவிதமாகப் பேசுவதையும், எழுது வதையும் நான் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும்தான் வரு கின்றேன்.

அதாவது பௌத்த மதத்தைப் பற்றியும், இஸ்லாம் மதத்தைப் பற்றியும் அவற்றில் காணப்படும் ஏதாவது விஷயங்களைப்பற்றியும் பேசும்போது “மதமே தப்பானது, மதமே கூடாது என்று சொல்லுகின்ற சுயமரியாதைக்காரன் எப்படி இந்த மதங்களைப் பற்றி மாத்திரம் பேசலாம்?” என்பதாகச் சொல்லுகின்றார்கள். இப்படிப்பட்ட இவர்களை ஒருவித தெளிவற்றவர்களும், ஆத்திரத்தால் அறிவிழந்தவர்களும் என்று சொல்லு வதைவிட வேறு ஒன்றும் சொல்ல முடிவதில்லை. மதத்தைப் பற்றி நான் பேச ஆரம்பித்த காலத்திலேயே நான் நன்றாய் விளக்கிவிட்டே பேசுகின்றேனேயொழிய பேசிவிட்ட பிறகு தத்துவார்த்தம் சொல்ல வருவதில்லை.

அதாவது ‘மதம் என்பது மனிதனின் உலக வாழ்க்கையின் நடப் பிற்கு ஒரு வழிகாட்டியானக் கொள்கைகளைக் கொண்டது. அது நம்மைப் போன்ற ஒரு மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. அது கால தேசவர்த்தமானப் படி மக்கள் சௌகரியத்திற்காக திருத்தியமைக்கக்கூடிய உரிமையுள்ளது. மனிதனுடைய அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் இடம் தரக்கூடியது’ என்று சொல்லுகின்ற மதத்தைப் பற்றி நான் எப்போதும் அது கூடவே கூடாது என்று சொன்னதே கிடையாது. அந்தப் பொருளின்மீது இருப்பதாக ஒப்புக் கொள்ளுகின்ற மதங்களிடம் எனக்கு அதிகத் தகாறாரே கிடையாது.

அப்படிப்பட்ட மதம் என்பது வேண்டியதேதான். அதாவது ஒரு பொதுசங்கமோ, ஒரு வாசகசாலையோ, ஒரு வியாபாரச் சங்கமோ, ஒரு வக்கீல் சங்கமோ, ஒரு விளையாட்டுச் சங்கமோ, ஒரு சீட்டாட்ட சபையோ என்பதாக ஒரு ஸ்தாபனமிருந்தால் அந்த ஸ்தாபனத்திற்குச் சில விதிகள் இருக்க வேண்டியது அவசியமேயாகும். அந்த விதி அந்த ஸ்தாபன மக்கள் நன்மைக்கும், ஸ்தாபனம் சரிவர நடந்தேறுவதற்கும் அனுகூலமானதாகவும், அந்த ஸ்தாபனக்காரர்களால் ஏற்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பது போலவே கூடி வாழ நினைக்கும் மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்கும் ஏதாவது விதிகள் வேண்டும் என்பதில் குற்றமில்லை. அவ்விதிகளுக்குப் பெயர், கொள்கை என்றாலும், திட்டம் என்றாலும், மதமென்றாலும் மார்க்கமென்றாலும் ஒன்றேதான்.

நமது நாட்டில் பல பாஷைகள் வந்து கலந்து விட்டதால் கொள்கைகளுக்கு மதமென்றும், சமயமென்றும், மார்க்கம் என்றும் சொல்லப்படு கின்றது என்பதாகப் பண்டிதர்கள் சொல்லுகின்றார்கள். ஆதலால் அந்த அளவில் நான் எந்த மதத்துடனும் தகறாருக்கு வரக்கூடியவனல்ல. இதில் ஒன்றும் ஒளிமறைவோ, தத்துவார்த்தமோ இல்லை. வெளிப்படையாகவே சொல்லுகின்றேன்.

ஆனால் ‘மதம் மனிதனுடைய ஆத்மார்த்தத்திற்கு ஏற்பட்டது. அது கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது - கடவுளைக் காண்பதற்கும் அடைவதற்கும் ஒரு சாதனமாயிருப்பது-அதை உண்டாக் கினது கடவுள், அல்லது கடவுள் அவதாரம், அல்லது கடவுள் தன்மை, அல்லது கடவுள் மகன் அல்லது மனிதத் தன்மைக்குமேற்பட்ட ஒரு தெய்வீகத்தன்மை -அதில் என்ன சொல்லியிருந்தாலும் அது மனிதனுக்குப் புரியாவிட்டாலும் அது பயன்படாவிட்டாலும் மனிதனால் பின்பற்ற முடியாவிட்டாலும் அதை மனிதன் ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும். அதன் பேரால் ஏற்பட்ட நூல்கள் சாஸ்திரங்கள் என்பவைகளை எல்லாம் நம்பித்தானாக வேண்டும்- தனக்கு விளங்காததை யெல்லாம் நம்பித்தானாக வேண்டும்-அதில் ஒரு விஷயத்தைக் கூட நழுவவிடக்கூடாது-மாற்றவும் கூடாது-புதிய மாதிரி சௌகரியத்திற்குத் தகுந்தபடி எதையும் சேர்த்துக் கொள்ளவும் கூடாது’ என்பது போன்ற ‘நீதியையும், நிபந்தனைகளையும் கட்டளைகளையும் கொண்டதுதான் மதம்’ என்று சொல்லப்படுமெதையும் நான் என்னைப் பொறுத்தவரை சிறிதும் ஒப்புக்கொள்ளாதவன் என்பதோடு அப்படிப்பட்ட மதம் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும், சுதந்திரத்திற்கும், முற்போக்கிற்கும், சுயமரியாதைக்கும் விரோதமானது என்று சொல்லுவ தோடு கூட மனித சமூக நன்மையை உத்தேசித்து அவை அழிக்கப்பட வேண்டியது அவசியமென்றும் கருதுகின்றேன். அன்றியும் நான் எந்த மதம் என்பதைப் பற்றிப் பேசும் போதும் இந்த விஷயங்களுக்கு மாறாக நான் எப்போதும் பேசினதே கிடையாது. நான் பௌத்த மதத்தைப் பற்றியும், இஸ்லாம் மதத்தைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் பேசும் போதெல்லாம் இந்த முடிவின் பேரிலேயே பேசுகின்றேன். இந்த உண்மைப் படியுள்ள தாரதம்மியங்களைப் பற்றிதான் ஒரு மதத்திற்கும் மற்ற மதத்திற்கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றியும் பேசுகின்றேன். இந்த உண்மையின் பேரில்தான் எந்தமதத் தலைவர்களைப் பற்றியும் நான் பேசுகின்றேன்.

திரு.முகமது நபியவர்களையும் மற்றபடி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் நான் அவரை ஒரு மனிதர் என்றும் மனிதரைப் போலவே தாயும் தகப்பனும் (ஆணும் பெண்ணும்) கூடிக் கருத்தரித்து பிறந்த பிள்ளையென்றும் கருதிதான் அவரால் செய்யப்பட்டதாகச் சொல்லும் விஷயங்களில் அநேகத்தை நான் புகழ்கின்றேன். அதற்காகவே அவரையும் பாராட்டுகிறேன். அப்படிச் சொல்லப்படுபவைகளே அந்த மார்க்கத்திற்கு ஒரு பெருமை என்றும் நினைக்கின்றேன். பௌத்தரும் அப்படித்தான். ஆனால் மற்ற மதக்காரர்களோ தங்கள் மதத்தலைவரை ஒரு மனிதர் என்று சொன்னாலே கோபித்துக் கொள்ளுகின்றார்கள்.

கழுதையினுடையவோ, குதிரையினுடையவோ, நாயினுடையவோ வயிற்றிலிருந்து தோன்றினார் என்றாலும் ஒப்புக்கொள்வார்கள். மனிதனுக் கும் மனுஷிக்கும் (கலந்து) பிறந்தது என்றால் அதில் கௌரவமில்லை என்றே கருதுவார்கள். மனிதத்தன்மைக்கும் மனிதன் அறிவிற்கும் மேற் பட்டதாக மக்களுக்குப் புரியாத ஏதாவது ஒன்றைச் சொல்லாமல் ஒரு மதத்தை நிர்ணயிக்க அநேக மக்கள் சம்மதிப்பதேயில்லை.

இஸ்லாம் இந்து வித்தியாசம்

நிற்க, நான் இந்து மதத்தைப் பற்றியோ இஸ்லாம் மதத்தைப்பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீக்ஷை மாணவனுக்குக் கொடுத்துவிடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலையில்லை. ஆனால் நான் பேசுவது என்பது இரண்டு மதத்தைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை யான மக்களிடை இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமானக் காரியங்களையும் அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்து வரும் பலன்களையும் பற்றித் தான் பேசுகின்றேன்.

பொதுவாகவே மதத்தின் தன்மையை இதிலிருந்துதான் நிர்ணயிக்க வேண்டுமே யொழிய ஏட்டில் என்ன இருக்கின்றது என்று பார்ப்பதில் பயனில்லை. அது போலவே அந்தந்த மதக்காரர்கள் போட்டுக் கொள்ளும் வேஷமே தான் மதம் என்றாலும் அதிலும் பயனில்லை.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள்? மக்கள் எப்படி நடத்தப் படுகின்றார்கள்? அதனால் அந்த சமூகம் என்ன பலனடைந்திருக்கின்றது? என்பது போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமேயானால் அநேக விஷயங்களில் இந்து மதத்தைவிட (கொள்கைகளைவிட) இஸ்லாம் மதமே (கொள்கைகளே) மேன்மையான தென்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இஸ்லாமானவர்களிடத்தில் இந்துக்களிடம் இல்லாத பல நல்ல கொள்கைகள் இருக்கின்றன. அதனால் இந்து மதத்தில் இல்லாத மேன்மை இஸ்லாம் மதத்தில் இருப்பதாகத்தான் கருதவேண்டும். அதாவது இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம் ஒற்றுமை அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் இலக்ஷியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் ஜாதி உயர்வு - தாழ்வு இல்லை அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. கிட்ட இருந்து சாப்பிடக்கூடாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக் கூடாத மனிதன் குளத்தில் இறங்கக்கூடாத மனிதன் கோவிலுக்குள் புகக் கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும்.

இஸ்லாம் மார்க்கக் கடவுளுக்கு ரூபம் கற்பித்து வணங்குவதில்லை. அதற்குப் பெண்டு பிள்ளை வைப்பாட்டி கற்பிப்பதுமில்லை. அதற்குப் பூஜை நைவேத்தியம் உற்சவம் நகை துணிமணி முதலியவற்றிற்குக் கோடிக் கணக்கான பணங்களைச் செலவு செய்வதில்லை. மற்றும் அவர்களது பெண்களுக்கு சொத்துரிமை கல்யாண ரத்து விதவைமணம் ஆகியவை களும் உண்டு. அவர்களுக்குள் அன்பையும், வீரத்தையும் பார்த்து நாம் அவர்களை முறடர்கள் என்கின்றோம். அதுபோலவே இந்துக்களுக்குள் ஒருவருக்கொருவர் உள்ள துவேஷத்தையும் பயங்காளித்தனத்தையும் நாம் பார்த்து அவற்றை நாம் சாதுத்தன்மை என்று சொல்லிக்கொள்ளுகிறோம். ஒரு கிராமத்தில் ஒரு இஸ்லாமானவனை ஒரு இந்து அடித்தால் 100 இஸ்லா மானவர்கள் வந்து விழுந்து விடுகின்றார்கள். இதைத்தான் நாம் முறட்டுத் தனம் என்கின்றோம். ஒரு இந்துவை ஒரு இஸ்லாமானவன் அடித்தால் மற்ற இந்துக்கள் “அவன் யாரோ அடிபடுகிறான், நமக்கென்ன கவலை” யென்று சொல்லி சும்மா இருந்து விடுகிறார்கள். இல்லாவிட்டால் அடிக்குப் பயந்து கொள்ளுகிறார்கள். இதைத்தான் சாதுத்தனம் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறோம். அன்பும் சகோதரத்தன்மையும் இந்துவிடம் எங்கிருக் கின்றது? “ஆடு கோழி தின்னாதே” என்று சொல்லுவதில் மாத்திரம் இருக் கின்றது. மக்களை இழிவாய்க் கருதுவது பிறவியின் பேரால் தாழ்த்தி இம்சிப் பது கொடுமைப்படுத்துவது ஆகிய காரியங்களைச் செய்து கொண்டிருப்ப வன்தான் “அன்பு! அன்பு!! ஜீவகாருண்யம்!!!” என்று பேசுகிறான். அன்பின் உண்மையை அறியவே இல்லை. இஸ்லாம் கொள்கையில் வேறு எங்கு எப்படி இருந்தாலும் சமூக வாழ்விலும், ‘ஆண்டவன்’ முன்னிலை என்பதி லும் மனிதனை மனிதனாய்க் கருதப்படுகின்றது.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் ‘கடவுள்’ முன்னிலை என்பதிலும் மனிதனை மிருகத்தைவிட, மலத்தை வாயில் கௌவிக்கொண்டு சொல்லும் மிருகத்தை விடக் கேவல மாய் மதிக்கப்படுகின்றது. இதை நாம் பிரத்தியக்ஷத்தில் காண்கின்றோம். இதைத் தான் அன்புமதம் சமத்துவமதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை-வேதம் என்பதை இஸ்லாம் மார்க்கம் செருப்புத் தைக்கிற சக்கிலியும் மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும், பார்த்தாக வேண்டும், கேட்டாக வேண்டும் என்று சொல்லி கற்றுக் கொடுப் பதையும் பார்க்கின்றோம். இந்துமார்க்க வேதம் என்பதை ஒரே ஒரு சிறுகூட்டம் தவிர (பார்ப்பனன் தவிர) மற்றயாவரும் அவன் பிரபுவானாலும் சரி ஏழையானாலும் சரி யோக்கியனானாலும் சரிஅயோக்கியனானாலும் சரி ஒருவனுமே பார்க்கவும் கேட்கவும் படிக்கவும் கூடாது என்று இன்னும் நிர்பந்தப்படுத்தி அந்தப்படியே இன்றும் நடந்து வருகின்றது. இதைத்தான் சமத்துவ நோக்கம் கொண்ட மதம் என்று இந்துக்கள் இன்றும் இன்னமும் சொல்லுகின்றார்கள். ‘மொண்டி முடம், கூன் குருடு ஆகியவர்களுக்கே உதவி செய்’ என்று இஸ்லாம் மதம் பிரத்தியக்ஷத்தில் சொல்லுகின்றது. ‘சோம்பேரிகளுக்கே - ஊரார் உழைப்பில் உண்டு களிப்பவர்க்கே உதவி செய்’என்று இந்துக்களின் கொள்கை பிரத்தியக்ஷத்தில் சொல்லுகின்றது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கின்றது. இந்தியாவில் கொஞ்சகாலத்திற்கு முன் ஒரு கோடியை விட குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லீம்கள் இன்று 8 கோடி மக்களாய் சேர்ந்து இருக்கின்றார்கள். இன்றும் யாவரையும் எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ள கையைநீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கை எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்ட வனையும் உள்ளே விட மறுத்து வாசல்படியில் காவல்காக்கின்றது. தன்ன வனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

கள் குடியைப் பற்றி வாய்த் தப்பட்டை அடிக்காத இஸ்லாம் கொள்கை முஸ்லீம்களில் 100க்கு 99 பேர்களை குடியிலிருந்து விலக்கி யிருக்கின்றது. குடிக்கக் கூடாதென்று சதா வாயில் தப்பட்டை அடித்துக் கொண்டு ஓட்டு வேண்டியபோது கள்ளுக்கடையில் நின்று மறியல் செய்யும் இந்து கொள்கையானது இந்துக்களில் 100க்கு 51 பேர்களுக்கு மேல் குடிகாரர்களாகச் செய்திருப்பதோடு இந்து கடவுளுக்கும் குடி வகைகள் வைத்து கோயில்களில் பெரிய பெரிய ஜாதியார் என்பவர்களால் நைவேத்தியம் செய்து பிரசாதமாய் சாப்பிடப்படுகின்றது.

இஸ்லாம் கொள்கையை வலியுறுத்துகின்ற காரணத்தாலேயே இஸ்லாமியர்கள் அதிகமாயுள்ள நாடுகள் இஸ்லாம் அரசர்களால் ஆளப்படு கின்றன. இந்து கொள்கையை வலியுறுத்துகின்ற காரணத்தாலேயே இந்துக்கள் அதிகமாகியுள்ள நாட்டை ‘அன்னியர்கள்’ஆளுகின்றார்கள்.

இந்தப்படியாக வெளிப்படையாய்த் தெரியும் கொள்கைகளாலேயே இந்துக் கொள்கைகளை விட இஸ்லாம் கொள்கைகள் எவ்வளவோ மேன்மையான பலன் கொடுத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் படி நான் சொல்லுவதற்காக கோபிக்கும் சகோதரர்கள் முதலில் நான் சொல்லுவது உண்மையா? அல்லது அடியோடு பொய்யா? என்று பார்த்துப் பிறகு பேசுங்கள். பிறகு ‘கொள்கைக்காக உயிரை விடுங்கள்’.

ஏன் சொல்லுகிறேன்

ஆதிதிராவிடர்களை நான் ‘இஸ்லாம் கொள்கையைத் தழுவுங்கள்’ என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவுமில்லை, சொல்வதையும் கிரகிக்க சக்தியுமில்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே, தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம் என்றே நான் கருதிவிட்டேன். ஏனெனில் ‘மோட்சம் அடைவதற்காக’ வென்று நான் ஆதிதிராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை, அல்லது ‘ஆத்மார்த்தத்திற்கோ’ ‘கடவுளை அறிவதற்கோ’ நான் அப்படிச் சொல்ல வில்லை. ஆதி திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாக்கிரஹம் செய்வது முதலியவை போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்லுகின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம். செய்தாலும் அமுலில் வருவதும் கஷ்டம். சத்தியாக்கிரஹம் செய்வதும் கஷ்டம். செய்தாலும் வெற்றி பெறுவதும் சந்தே கம். இவற்றால் துன்பமும், தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம்கொள்கையை ஏற்றுக் கொண் டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆஸ்தீகனாய் இருந்தால் என்ன? நாஸ்தீகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனாலென்ன? யாருக்கும் எவ்வித கஷ்டமும் இல்லாமல், வேண்டுமானால் எந்தவித மன மாறுதல் கூட இல்லாமல் தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் கொள்ள ஆசையும் அவசரமும்பட்ட ஒரு மனிதன்தான் மாலை 5-00 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லி 5-30மணிக்கு ‘தீண்டாதவன்’ என்கின்ற இழிவிலிருந்து மீண்டு தெருவில் நடக்க உரிமை பெற்று மனிதனாவதில் ஏன் மற்றவர்கள் ஆnக்ஷபிக்க வேண்டும்? என்பது எனக்கு விளங்கவில்லை. கேவலம் வயிற்றுச் சோற்றுக் காக 100க்கு 90 மக்கள் என்னென்னமோ அவரவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது என்று கேட்கின்றேன். உலகில் மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும். அதுபோது இந்த ஆதிதிராவிடர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒழிந்துபோகுமே தவிர அது மாத்திரம் நிலைத்து விடாது. அதற்காக அதிகக் கஷ்டமும் இல்லை. ஆகையால் எது எப்படியானாலும் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் தீண்டாதார் எனப்படுபவர்கள் இஸ்லாம் கொள்கையைத் தழுவ வேண்டியது என்பது ஒரு வழியேயாகும்.

ஏன் கிறிஸ்து மதத்தைத் தழுவக்கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? என்று கேட்கலாம். கிறிஸ்துமதக் கொள்கைகள் புஸ்தகத் தில் எப்படியிருக்கின்றது என்பது பற்றி நான் சொல்லவரவில்லை. பிரத்தி யட்சத்தில் பறக்கிறிஸ்துவன், பார்ப்பாரக்கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்து வன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன். இஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா? என்று கேட்கிறேன்.

இங்குள்ள கிறிஸ்துவ சகோதாரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாக தெரிவித்துக் கொள் கிறேன். ஆரியசமாஜம் என்பதும் ஒரு வேஷமேதான். அதுவும் பயன் அளிக்கவில்லை.

உதாரணமாக வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஆரிய சமாஜத் தீயர் களையும், கிறிஸ்துவப் புலையர்களையும் தெருவில் நடக்கவிடவில்லை. இஸ்லாமானவன் தாராளமாய் விடப்பட்டான். பாலக்காட்டிலும் அப்படியே நடந்தது. ஒரு நாள் பாலக்காட்டில் ஒரு செர்மன் என்கிற இழிவுபடுத்தப்பட்ட ஜாதியிலிருந்த தீண்டாதவன் ஒருவன் இஸ்லாமாகி தடுக்கப்பட்டத் தெரு வழியாகப் போனான். அப்போது அவனை ஜவுளிக் கடைப் பார்ப்பனரும் வெற்றிலைக் கடை நாயரும் தெருவுக்கு வந்து நின்று பார்த்தார்கள். உடனே அங்கு இங்கிருந்த ஒரு மாப்பிள்ளை (இஸ்லாமானவன்) “எந்தடா? பன்னிக் கூத்தச்சி மகனே, அவனெ நோக்குன்னு” என்று கேட்டான். அதாவது “என் னடா? பன்றி தேவடியா மகனே! அவனைப் பார்க்கிறாய்” என்று கேட்டான். செர்மனாயிருந்த இஸ்லாம் சிரித்துக் கொண்டே போனான். பார்ப்பனனும் நாயரும் தலைகுனிந்து கொண்டார்கள். இது பிரத்தியட்சத்தில் நடந்த சம்பவம் - சந்தேகமில்லாமல் இனியும் நடக்கக் கூடிய சம்பவம்.

ஆகவே இஸ்லாம் மார்க்கம் செய்கின்ற நன்மை இந்து மார்க்கம் செய்வதைவிட அதிகமா? இல்லையா? என்று பாருங்கள்.

ஆனால் நான் இஸ்லாம் சமூகக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவதாகவோ யாருந் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மார்க்கத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை மூடப்பழக்கம் பாமரத்தன்மை என்கின்றோமோ அவைபோன்ற சில நடவடிக்கை இஸ்லாம் சமூகத்திலும் பலர் செய்து வருவதைப் பார்க்கின்றோம். சமாது வணக்கம் பூஜை நைவேத்தியம் முதலியவைகள் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல் இஸ்லாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது. மற்றும் நாகூர் முதலிய ‘ஸ்தல விசேஷங்களும்’ சந்தனக்கூடு தீமிதி முதலிய உற்சவங் களும் நடைபெறுகின்றன. இவைகள் குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பது கேள்வியல்ல. சமூகத்தில் பிரத்தியட் சத்தில் நடக்கின்றதா? இல்லையா? என்பது தான் கேள்வி. ஒரு சமயம் களை முளைத்தது போல் புதிதாக தோன்றினவையாகவுமிருக்கலாம். சாவகாச தோஷத்தால் ஏற்பட்ட வைகளாகவும் இருக்கலாம். ஆனால் இவை கள் ஒழிக்கப்பட்ட பின்பு தான் எந்த சமூகமும் தங்களிடம் மூடக் கொள்கை கள் இல்லை என்று பெருமை பேசிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு விசேஷம், சென்ற வருஷம் ஈரோடு அல்லாசாமி பண்டிகையைப் பற்றி ஈரோடு கூட்டத்தில் நான் கண்டித்துப் பேசினேன். எனது ஈரோடு முஸ்லீம் சகோதரர்கள் அதற்கு சிறிதும் கோபித்துக் கொள்ளாமல் வெட்கப் பட்டார்கள். அதன் பயன் இந்த வருஷம் அடியோடு அந்தப்பண்டிகை அங்கு நின்றுவிட்டது எனக்கு மிக சந்தோஷம். கோபித்துக் கொண்டி ருந்தால் இந்த வருடமும் நடத்தியிருப்பார்கள். ஆனால் இந்து மார்க்கத் திலோ என்னுடைய ஆதிக்கத்தில் இருப்பதுபோல பிரத்தி யாருக்கு காணப்பட்ட சில உற்சவங்களை நிறுத்த ஏற்பாடு செய்தேன். கடைசியாக அது இந்த இரண்டு வருடமாய் என்னால் நடத்தப்படுவதாகக் காணப் பட்டு வந்ததைவிட பலமடங்கு மேலாக நடத்தப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டத்தார் தான் தங்களை மேலான மதக்காரர் என்றும் தேசீயவாதிகள் என்றும் பகுத்தறிவுக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகின்றார்கள். அதோடு மாத்திரமல்லாமல் எம்மீது கோபித்துக் கொண்டு பாமர மக்களைத் தூண்டி விட்டு வையும்படியும் ‘சாபம்’ கொடுக்கும்படியும் செய்தார்கள். இதன் பயனாகவே இந்தத் தமிழ்நாட்டில் எனக்கு ஒரு பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பர் தேர்தலுக்குக்கூட ஓட்டு கிடைக்காது. அது எப்படியோ போகட்டும். உலகமெல்லாம் ஒரு கொள்கையின் கீழ்வர வேண்டுமானால் இஸ்லாம் கொள்கையும் இணங்கிவரத் தயாராயிருக்க வேண்டும். உலகம் சீர்திருத்தத்திற்கு அடிமைப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். மனித சமூகம் அடையவேண்டிய சீர்திருத்தம் இன்னமும் எவ்வளவோ இருக்கின்றது என்பது உறுதி.

மனிதன் காலதேசவர்த்தமானத்திற்கு கட்டுப்பட்டவனாவான். மனிதனது மார்க்கமோ கொள்கையோ கூட அதில் பட்டதேயாகும். ஏனென்றால் மார்க்கம் என்பது மனிதன் வாழ்க்கைக்கு வழிகாட்டி என்ப தைக் கொண்டு சொல்லுகின்றேன். வழி என்பது அடிக்கடி மாறக்கூடியதே யாகும். கால்நடை வழி, ஆடு, கழுதை, குதிரை மூலம் செல்லும் வழி, கட்டை வண்டி வழி, மோட்டார் வழி, ரயில் வழி, ஓடம் கப்பல் வழி, கடைசியாக ஆகாய விமானவழி ஆகிய ஒவ்வொரு காலத்திற்கு தகுந்ததுபோல் வழி திருத்தப் படவேண்டும். அதுபோலவே மனித வாழ்க்கை வழியும் காலத்தின் கோலமாய் தேசத்தின் தன்மையாய் சந்தர்ப்பத்தின் அவசியமாய் மாறியே ஆகவேண்டும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். மாறுதலுக்கு இடம்கொடுக்கும் என்கின்ற மார்க்கமே சரியான மார்க்கம்.

உதாரணமாக இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும், துருக்கி இஸ்லாம் சமூகத்தின் நடவடிக்கையும், ஆப்கானிஸ்தான் சமூக நடவடிக்கையும், இந்தியா இஸ்லாம் சமூக நடவடிக்கையும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவிலேயே ஈரோட்டுக்கும், தஞ்சைக்கும், சாத்தான் குளத்திற்குமே அனேக வித்தியாசம் காணப்படுகின்றது. இவைகள் மூன்றும் ஒன்றுபடும்போது யாராவது இருவரோ அல்லது மூன்றுபேரும் ஆளுக்குக் கொஞ்சமோ தங்கள் பழக்க வழக்கங்களை நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். நான் சொல்லும் மாற்றமெல்லாம் முக்கியமாய் நடை உடை பாவனையைப் பொருத்ததேயாகும். மனமாற்றத் தைப் பற்றி இப்போது சொல்ல வரவில்லை. அவை அவரவர்கள் சொந்த சொத்து. மற்றவர்களுக்குத் துன்பமோ தொல்லையோ இல்லாத வழியில் எவ்வித அபிப்பிராயத்தையும் கொள்ள யாருக்கும் உரிமையுண்டு. அறிவு பெருக்கமும் அதனால் மனமாறுதலும் சுபாவமேயாகும்.

ஆகவே சகோதரர்களே! நான் சொன்னவை எனது சொந்த அபிப்பிராயம். என் சொந்த அனுபவ வாயிலாகக் கண்டது என்பவைகள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆதலால் இதையே முழு உண்மையென்று கருதி விடாமல் உங்கள் அறிவு அநுபவம் ஆகியவைகளைக் கொண்டு முடிவுபெற்று உங்கள் இஷ்டப்படி நடக்க உரிமையுடையவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

--------------28.07.1931 ஆம் நாள் சாத்தான்குளத்தில் ( திருநெல்வேலி மாவட்டம் ) நடைபெற்ற முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றிய உரை. குடி அரசு - சொற்பொழிவு - 02.08.1931

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடக் கூடாது ஏன்? - பெரியார்


தீபாவளிப் பண்டிகை

இவ் வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப்போகின்றீர்கள்? "அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை" என்று சொல்லி விடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப்போகின்றீர்களா? என்பது தான் "நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்" என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி யோக்கியப் பொறுப்பின்றி உண்மைத் தத்துவமின்றி சுயமரியாதை உணர்ச்சி இன்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல் மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே யல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான "பழய வழக்கம்" "பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்" என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப்போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே யல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்தரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று மானமற்று கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

புராண கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச்சொன்னால் காதுகளைப் பொத்திக்கொள்ளுகின்றீர்கள். "எல்லாருக்கும் தெரிந்தது தானே; அதையேன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா?" என்று கேட்கின்றீர்கள். ஆனால் காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர் களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச்செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப்புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச்சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? "நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்" என்றால் அதற்கு "நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்" என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப்பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள். துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணிவாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்த மற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்மந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடு வீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம்வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது ஐந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச்செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும் வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருக்கின்றது என்பதும் பட்டாசு வெடி மருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில் அது எப்படிப்பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம் இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய் யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப்பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது அல்லது இவர்கள் சம்மந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்தமாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்களென்றும் கலைகளிலும் ஞானங்களிலும் நாகரீகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப் பேசி விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ "காளை மாடு கன்றுப் போட்டிருக்கின்றது" என்றால் உடனே "கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா" என்று பாத்திரம் எடுத்துக்கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய "காளைமாடு எப்படி கன்றுப் போடும்" என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களை விட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதை பார்க்கின்றோம். உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, கிர்த்திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களை விட நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவேயிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில் இன்றைய தினம் சென்னையில் எங்கு போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத்திண்ணையிலும் சரீரமில்லாத ஒருதலை உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயணக் காலக்ஷேபங்களும், பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலக்ஷேபங்களும் பொது ஸ்தாபனங்கள் தோறும் சதா காலக்ஷேபங்களும் நடை பெறுவதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கௌரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள் தான் "ஆரியர் வேறு தமிழர் வேறு" என்பாரும் "புராணங் களுக்கும் திராவிடர்களுக்கும் சம்மந்தமில்லை" என்பாரும் தீபாவளி வைணவப் பண்டிகை ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு "நாங்கள் தான் பிரதிநிதிகள்" என்பாரும் மற்றும் "திராவிடர்களின் பழைய நாகரீகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு" மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே இது போன்ற "படித்த" கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்மந்தமான காரியங்களை எதிர்பார்ப்பதைவிட, உலக அறிவுடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரசாரம் செய்வதும் பயன் தரத்தக்கதாகும்.

உதாரணமாக, ராமேஸ்வர தேவஸ்தானக் கமிட்டியாரின் ஒரு ரிபோர்ட் டில் மக்கள் ராமேஸ்வரத்திற்கு முந்திய வழக்கம் போல் இப்போது யாத்திரைக்கு வருவதில்லை என்றும் அதனால் வரும்படி குறைந்து விட்ட தென்றும், அதுபோலவே திருப்பதி மகந்து அவர்களின் ஒரு வருஷாந்திர ரிப்போர்ட்டில் அவ்வருஷம் திருப்பதிக்கு யாத்திரைக்காரர்கள் மிகக் குறைந்து போய் அதனால் கோவிலுக்கு முந்திய வருஷங்களைவிட பகுதி வரும்படிகூட எதிர்பார்க்க முடியாததாய் இருப்பதாகவும் குறிப்பிடப் பட்டிருப்பதனாலும், சங்கராச்சாரியார், ஜீயர் முதலிய மடாதிபதிகள் செல்லுகின்ற பக்கங்களில் எல்லாம் முன்போல் வரவேற்பு ஆடம்பரங்களும் வரும்படியும் இல்லாமல் சீக்கிரம் சீக்கிரமாக சஞ்சாரத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்புவதிலிருந்தும் பிராமண மகாநாடுகளும் சமயப் பத்திரிகைகளும் மூட்டை கட்டப்படுவதிலிருந்தும் ஒரு விதத்தில் பாமர மக்களிடை உண்மை உணர்ச்சி பரவி இருக்கின்றதென்பதை உணர முடிந்தாலும், வழிகாட்டிகளென்றும் தலைவர்களென்றும் பொது ஜனங்களின் தர்மகர்த்தாக்களென்றும் படிப்பாளிகள் என்றும் தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுள் அநேகமாக சிறிது உணர்ச்சிகூடக் காணாமலிருப்பதால் அவர்களைப்பற்றி நாம் வருந்தாமல் இருக்க முடியவில்லை.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன்.

அன்றியும் இத்தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமா யிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.

தீபாவளியின் கதைச் சுருக்கம்

ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். அவன் தேவர்களை யெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும் பூமி தேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட்டார்களாம். நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம். அதற்காகவேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம். ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம். முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்கமுடியுமா? "எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும், உலகங்களையெல்லாம் காத்து வருபவரும் தேவர்கள் தலைவருமாகிய திருமாலு"க்கும் பூமி "தேவி"க்கும் (எப்படி குழந்தை பிறக்கும்? பூமி "தேவி" என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்தவன்) அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்லவேண்டுமோ? மேற்படி நரகாசுரனைக் கொன்றபோது அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! "பொறுமையில் பூமிதேவிபோல்" என்று உதாரணத்திற்குக் கூட பண்டிதரும் பாமரரும் இந்த "அம்மையாரை" உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்கவேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!! தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவஅசுரப் போராட்டத்தோடு சம்மந்தப்பட்டிருக்கிற இந்தக்கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக்கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால் நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்னென்று சொல்லுவது? புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது? சென்றது போக, இனிமேல் கொண்டாவது தீபாவளியை அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்கொள்ளும் செயலைக்குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

---------------- ஈ.வெ.ரா. "குடி அரசு" கட்டுரை 01.11.1936

30.8.11

நான் வெறும் இராமசாமி - பகவான் இராமசாமி ஆகிவிடுவேனே! -பெரியார் விளக்கம்


கடவுள், மதம் முளைத்ததே பார்ப்பான் வந்த பிறகுதானே?


தேவர்கள் என்றால் பார்ப்பனர்கள்; அசுரர்கள் என்றால் நாம் - தமிழர்கள்! நமக்கும் அவர்களுக்கும் பெரிய போராட்டம் அந்தக் காலத்திலேயே நடந்திருக்கிறது! அப்படி நடைபெற்ற போராட்டத்தை எல்லாம் ஒரு கதையாக எழுதியிருக்கிறார்கள்.

பார்ப்பான் உயர்ந்தவன். அவன் கடவுளுக்குச் சமமானவன். பார்ப்பான் நம்மைத் தொடமாட்டான். நம் வீட்டில் சோறு திங்க மாட்டான். நம்மைக் கண்டால் ஒதுங்கியே போவான். அதுபோலவே கடவுள்களும். எந்தச் சாமியை எடுத்துக் கொண்டாலும் அந்தக் கல்லுக்குப் பூணூல் இருக்கும். அதை நாம் தொடக்கூடாது. அதன் அருகிலும் போகக் கூடாது. நம் வீட்டுச் சோற்றையும் அது தின்னாது. அவர்கள் எல்லாரும் உயர்ந்த ஜாதியாகக் கருதப்பட்டும், நாம் எல்லாரும் தாழ்ந்த ஜாதியாகக் கருதும்படி எழுதப்பட்ட ஆதாரங்கள் பல உண்டு. இதன் காரணத்தினாலேயே பார்ப்பான் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கவும், நாம் தாழ்ந்த வேலையில் இருக்கும்படியான ஓர் அமைப்பு ஏற்பட்டிருக்கிறது.

இன்று அரசியலில் இருக்கிற பெரிய உத்தியோகஸ்தர்கள் பார்ப்பான் இடத்தில் கைவைத்தால் எதிரியை ஒழித்துக்கட்டி விடுவார்கள். எங்கு வேலை போய்விடுமோ என்று பயந்து திராவிட அதிகாரிகள் அவன் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்கிறதை நாம் கண்ணாரக் காண்கிறபோது, அந்தக் காலத்தில் இந்தப் பார்ப்பனர்களுடைய ஆணவம் எவ்வளவு உயரத்தில் இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தால் புரியும். இவற்றையெல்லாம் எதிர்த்து நிற்பது நம்முடைய திராவிடர் கழகம் ஒன்றுதான்.

இந்நாட்டிலே இருக்கிற கழகம் - கட்சிகள் எல்லாம் பார்ப்பானுக்கு ஆதரவாக இருக்கிற சாதனங்கள். கம்யூனிஸ்டுகளைத்தான் எடுத்துக் கொண்டு பாருங்கள். சோஷியலிஸ்டு இந்தக் கண்ணீர்த்துளி (தி.மு.க.) சுதந்திரக்கட்சி எதை எடுத்துக் கொண்டாலும் எல்லாம் பார்ப்பானுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் கட்சிகள்தானே? காங்கிரஸ் கட்சி அப்போதும் சரி, இப்போதும் சரி, எப்போதும் பார்ப்பானுக்கு அடிமை. அதை நீக்கிப் பார்த்தால் பார்ப்பானை எதிர்க்கிற கட்சி எது? வீராதிவீரன், சூராதிசூரன்கள் எங்கே? நாங்கள்தான், "ஏன் பார்ப்பான் மணியடிக்க வேண்டும்? ஏன் அவன் மட்டும் கல்லைக் கழுவ வேண்டும்?" என்று கேட்கிறோம். எங்களைத் தவிர - கேட்பதற்கு மக்கள் இருந்தாலும் துணிந்து சொல்லுவதற்குக் கூட ஆள் இல்லையே!

நம்முடைய நோக்கமெல்லாம் (திராவிட) மக்களும் இருக்கிற இழிவை - கேடுகளை ஒழிப்பதற்காகவே இருக்கிறோம். நாங்கள் ஒழிந்தால் உங்களுக்கு நாதி இல்லை. எங்களுடைய கழகத்தில் இருப்பவர்களில் ஒருவர்கூட கழகத்தை நம்பி வாழ்பவர்கள் அல்ல. பதவிக்குப்போக வேண்டும் என்கின்ற ஆசை உடையவர்களும் அல்ல. யாரும் சர்க்கார் (அரசும்) பதவியைக்கூட எட்டிப் பார்க்காதவர்கள். அது மட்டுமல்ல. உடலிலே நாமம் - பட்டை எதுவும் போட்டுக் கொள்ளாதவர்கள்.

அரசமைப்புச் சட்டம், மனுதர்ம சாஸ்திரம், கீதை, இராமாயணம் போன்றவற்றை நாங்கள் தான் நடுத்தெவில் போட்டுக் கொளுத்தினோம், கொளுத்தப்பட்டவை மீது எங்களுக்கு ஆத்திரம் இல்லை. அவைகள் மூலம் நமக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கொடுமையான நிலையினால் மூலம் நமக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கொடுமையான நிலையினால் தான் அப்படிச் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

ஒருவனுக்கு நோய் இருக்கிறது, அது ஆப்பரேஷன் (அறுவை சிகிச்சை) செய்தால்தான் முடியும் என்று தெரிந்துபின் யோக்கியமான வைத்தியனாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? அறுத்துக் கட்டுப் போடுவான். அதை விட்டு விட்டுப் பற்றுப் போட்டால் குணமாகுமா?
தமிழனுடைய சமுதாயத்தில் ஜாதி, மதம் என்கிற சீழ் பல இடங்களில் புரை ஓடிக் கொண்டிருக்கிறது. இதைக் குணப்படுத்த வேண்டுமானால் ஒரே வழி மதம் ஒழியவேண்டும்! அதற்கு ஆதாரமான சாஸ்திர, புராணம் ஒழிய வேண்டும். இதற்கு எப்படிப் பரிகாரம் செய்ய வேண்டுமென்று கேட்டால், "எல்லாவற்றையும் சேர்த்து நெருப்பு வைத்துக் கொளுத்து" என்றுதானே நல்ல வைத்தியன் சொல்லுவான்? இல்லை; அவையெல்லாம் அப்படியே இருக்கட்டும், மேலே பற்றுப் போட்டுக் குணப்படுத்தி விடலாம் என்று கூறுவது சுத்தப்பொய். இதை ஒழிக்காமல் நாம் முன்னுக்கு வர முடியவே முடியாது.

நமக்குக் கடவுள் ஏற்பட்டதே சரித்திரப்படி மூவாயிரம் ஆண்டுகள்தான். பார்ப்பான் இங்கு வருவதற்கு முன்பு நம் நாட்டிலே கடவுள்கள் இல்லை. விஷ்ணு, பிரம்மா என்று ஒன்றும் இல்லை. இந்தப் பிள்ளையார் வந்ததும் 1200 ஆண்டுகளாகத்தான். மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு மனிதன் எப்படி இருந்தான் என்பது நமக்குத் தெரியாது. நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த நம்முடைய பெரியவர்கள் எப்படிக் காட்டுமிராண்டியாக வாழ்ந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். அந்த வாழ்வுக்கு எப்படி இருந்தார்கள்? நெருப்பு உண்டாகச் சக்கிமுக்கிக் கல் இருந்தது! இன்று நாம் ஒரு பொத்தானை அழுத்தி வெளிச்சம் பார்க்கிறோம். 100 ஆண்டு மாறுதல் இது என்றால், மூவர்யிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய நிலைமை எத்தகையதாய் இருந்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்?

ஓடியாடி வேலை செய்யும் நமக்கு இரண்டு கை, ஒரு தலை நம்முடைய கடவுளுக்கோ பத்துத் தலை! இருபது கை! அதற்குக் கல்யாணம் - கருமாதி என்றால் அந்தக் காலத்து காட்டுமிராண்டித்தனத்துக்கும் - இப்போது உள்ள நிலைக்கும் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? எல்லாச் சாதனங்களும் நம்மை அந்தக் காட்டுமிராண்டிக் காலநிலைக்கு அழைத்துச் செல்வதாகத்தானே இருக்கின்றன? இதை மாற்றியமைக்க வேண்டாமா?

கிறிஸ்து ஒரு கடவுளை உண்டாக்கினார். அது எப்படி இருக்கிறது? பார்ப்பானுக்குப் பிறகு ஏற்பட்டதுதானே அது? அதற்குப் பின்பு முகம்மது நபி ஒரு கடவுளை உண்டாக்கினார். அது எப்படி இருக்கிறது? மனிதத் தன்மைக்கேற்ப அந்தக் கடவுள்கள் இருக்கின்றன. உனக்கு (இந்துவுக்கு) அப்படி இல்லையே!

சிவன் - பார்வதி - பிள்ளையார் இவைகளுக்கு என்ன வாகனம்? மாடு - சிங்கம் - மூஞ்சுறு. இவை எல்லாம் வெள்ளைக்காரன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஈஜிப்ட் (எகிப்து) நாட்டின் கடவுள் கதைகளைப் படித்துப் பார்த்தால் அங்கு மாட்டுமேல், சிங்கத்துமேல், கழுகுமேல் இன்னும் நாய் முகம், கழுகு முகம் போன்ற கடவுள்கள் இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் காப்பியடித்து (நகல் எடுத்து) அங்கே இருந்த கடவுள்களை எல்லாம் இங்கே கொண்டுவந்து புகுத்தி மனிதனுடைய அறிவு வளர்ச்சியைக் கெடுத்து இருக்கிறார்கள்!

இவற்றை எல்லாம் நம்பவேண்டும். பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்தால் பாபம்! நம்பாவிட்டால் நடகத்துக்குப் போகவேண்டும். அங்கே இப்படிக் கொடுமைகள் இருக்கும் என்று கூறிப் பயப்படும்படியான நிலைமையை உண்டாக்கி விட்டார்கள் இந்தப் பார்ப்பனர்கள்.

மனிதனுடைய அறிவைக் கொண்டு சிந்தித்தால் எங்கு ஆபத்து வந்துவிடுமோ? அதனால் தன் சமுதாயமும் பிழைப்பும் போய் விடுமோ என்ற எண்ணத்தில் பார்ப்பனர்கள் பூசை நேரம், நிஷ்டை முதலியவைகளில் மனிதனுடைய கவனத்தை அதில் செலுத்தும்படிச் செய்து அடிமையாக ஆக்கிக் கொண்டார்கள். நாமும் (திராவிடரும்) அவன் சொன்னதையெல்லாம் தோள் மீது தாங்கிக் கொண்டு அவனுக்கு அடிமையாக ஆடிக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு இந்தக் கடவுள்களல் ஆகவேண்டிய காரியம ஒன்றுமில்லை. இவற்றை எல்லாம் சொல்கிற எனக்கும் இதனால் எவ்விதப் பயனும் இல்லை. நினைத்தால் நாளை நான் பகவான் ஆகிவிட முடியும்! "எனக்கு ஜாதியில் நம்பிக்கை உண்டு; நான் ”சூத்திரன்” என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்" என்று இதை மட்டும் சொன்னால் போதுமே! இவைகளை ஒத்துக் கொண்டதால் தானே காந்தி மகாத்மாவானார்? இன்று நான் வெறும் இராமசாமி - அதையே நானும் சொன்னால் பகவான் இராமசாமி ஆகிவிடுவேனே! - ஆகவே எனக்கு என் சொந்தத்திற்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லையே!

இந்த நாட்டு மக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகளாக இருப்பதைப் பார்த்துத்தான் - இவற்றைப் போக்குவதற்கு என்ன பரிகாரம் என்பதைத் தேடிப் பிடித்து அதற்காக நாங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்துக் கொண்டு இருக்கிறோம். இது சரியா? தப்பா? என்பதை நீங்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்த்து உங்களால் ஆன ஆதரவைக் கொடுங்கள்.


- ------------------- 25-09-1960 அன்று ஈரோட்டில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு ”விடுதலை” 29-09-1960



காஞ்சி சங்கராச்சாரிக்கு புத்தி புகட்டிய பெரியார்


பெரியாரும் பெரியவரும்

காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து, அவருக்கு 40 ஆண்டுக் காலம் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர் லக்ஷ்மிநாராயணன் என்னும் 76 வயதுப் பெரியவர். மாங்காட்டில் இருக்கிறார். சக்தி விகடனில் காஞ்சிப் பெரியவர் பற்றிய அனுபவங்களை எழுதச் சொல்லலாம் என்று, எழுத்தாளர் சாருகேசியுடன் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினேன். காஞ்சிப் பெரியவர் பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு புதுசாக இருந்தது.

காஞ்சிப் பெரியவர் தமது பரிவாரங்களுடன் நடந்து வருகிறார். லஸ் அருகில், அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள். காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே., சதாசிவம் போன்றோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள். பெரியவர் புன்னகைக்கிறார். “ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா!” என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே நடக்கத் தொடங்குகிறார். கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்… திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று படபடப்பு! அந்த நேரத்தில், ஈ.வே.ரா. (ஈ.வெ.ரா -என்று குறிப்பிடுவது தான் சரியானது__தமிழ் ஓவியா) பெரியார் அங்கே வருகிறார். திராவிடர் கழகத் தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், “எல்லாரும் கட்டைகளைக் கீழே போட்டுட்டு, ஒதுங்கி நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு!” என்று கட்டளை இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும் அவரைச் சுற்றி நிற்கும் அனைவருக்கும் கேட்கிறது. “நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா!” என்பதுபோல் பெரியவர் தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார். பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். இதை அவர் விவரித்தபோது, அன்றைக்கிருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது.

இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, காஞ்சிப் பெரியவர் ‘மேனா’ என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப் படங்களில் இளவரசியை ஒரு பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான் அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள். ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது. அவ்வளவுதான்… மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்!” என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள். “இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்” என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர். கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன.

----------------நன்றி:- ”சக்தி விகடன்” பொறுப்பாசிரியர் திரு ரவி பிரகாஷ் அவர்கள் எழுதிய கட்டுரை

பார்ப்பனர்களிடம் ஒழுக்கம், நேர்மை, நாணயம் காண முடியுமா?




சாதாரணமாகப் பெரும்பாலும் பார்ப்பனர்களிடம் ஒழுக்கமோ, நாணயமோ காணமுடிவதில்லை. எப்படிப்பட்ட உயர்தரப் பார்ப்பனர்களாக இருந்தாலும் நம் மக்களை ஏமாற்றி வஞ்சிப்பதில் கருத்துக் கொண்டவர்களாகவேதான் காணமுடிகிறதே தவிர, அவர்களது பொது நடத்தையில் உண்மையையும், நாணயத்தையும் காணமுடிவதில்லை.

இந்த மாதிரியான - அதாவது நம்மை ஏய்த்துத் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வதை அவர்கள் தங்களது மத, (இன) தர்மமாகவே கருதுகிறார்கள். இதற்குக் காரணம் அதாவது, பார்ப்பனர்களுக்கு இருந்துவரும் தந்திரம், சூழ்ச்சி, பித்தலாட்டம், மக்களை ஏய்த்து வஞ்சிப்பது இந்தமாதிரி காரியங்களாலேயே தங்கள் வாழ்க்கைத் திட்டங்களை ஏற்பாடு செய்து கொள்வது முதலாகிய காரியங்கள் அவர்களது ஜாதிப் புத்தி என்றே சொல்லலாம்.

எனக்கு ஜாதியில் நம்பிக்கையும் கிடையாது. ஆனால் ஏன் ஜாதிப்புத்தி என்கிறேன் என்றால், அது பரம்பரை தர்மம் என்பதால். பரம்பரை என்பது ஒரு சமுதாயத்திற்கு - பெரிதுமே ஓர் இனத்திற்கு அவரவர்கள் வாழ்க்கை தர்மத்தைப் பொறுத்ததே ஆகும். வாழ்க்கை தர்மமானது அவரவர்கள் தொழில் தர்மத்தைப் பொறுத்ததே ஆகும். இந்த மாதிரியான தர்மங்களுக்குத் தனியாக ஒரு ஜாதி, அதாவது மனித சமுதாயத்தில் தனிப்பட்ட ஒரு பிறப்பு என்பது கிடையாது. இவை எந்த மனிதனிடத்திலும் காணக்கூடியதே. ஆனாலும் அந்தத் தர்மங்களை ஏற்று அந்த தர்மங்களில் புகுந்து, அத்தர்மங்களை நடத்தி வருபவர்கள் கோஷ்டியாக ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள். ஆனால், அந்தக் கும்பல் அந்தத் தர்மங்களையே அதாவது தொழில் முறைகளையே வாழையடிவாழையாக தலைமுறை தலைமுறையாக அப்பன் தொழிலில் மகன் என்ற முறையில் நடத்தி வருவார்கள் என்று ஆகிவிடுகிறது. தொழில் - வாழ்க்கை முறைதான் ஜாதிகள், வகுப்புகள் இனங்கள் என்பவைகளாகப் பிரிக்கச் செய்கிறது.

உதாரணமாக நாம் ஒழுக்கம், நாணயம், நேர்மை, யோக்கியம், உண்மை என்பதற்கு மனிதச் சமுதாயத்திற்குக் கொண்டிருக்கிற தன்மையின்படி, இவற்றை ஒரு தாசித் தொழில்காரியிடம், ஒரு வக்கீல் தொழில்காரனிடம், எதிர்பார்க்க முடிகிறதோ? இத்தொழில்கரர்களுக்கு ஒரு பரம்பரைச் ஜாதி தேவையில்லை. இதில் பிரவேசித்து இத்தொழிலைக் கைக்கொண்டவர்கள் - கொள்பவர்கள் யாராய் இருந்தாலும் ஒரே அளவில் அவர்களது தொழில் தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

ஒரு பரம்பரைத் தாசி மகன், மற்றொரு பரம்பரைத் தாசி அல்லாத ஒரு தாசியால் வளர்க்கப்பட்ட மற்றொரு பரம்பரைத் தாசி அல்லாதவனாய் இருந்து, தாசித்தொழிலில் ஈடுபட்ட தாசியிடம் ஏமாந்து தன் சொத்துக்களை இழந்து கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளப்பட்டு ஓட்டாண்டி ஆகித் திரிய நேரிட்டுவிடுகிறது.

ஆகவே, இந்த மோசடி, துரோகம் முதலாகியவை தொழில் தர்மமே ஒழிய, பிறவிப் பரம்பரைத் தர்மம்கூட அல்ல.

மற்றும் கிராம விவசாயிகள், சாதாரணமாக நகர வியாபாரிகளிடம் இலேவாதேவிக்காரர்களிடம் ஏமாந்து பொருளிழந்து ஓட்டாண்டி ஆவது இயற்கை என்று சொல்லலாம். இந்தப்படிப் பணம் இழந்து, குடும்பமே அழிந்து ஓட்டாண்டியாகும் தறுவாயில் உள்ள ஒரு கிராமத்துப் பட்டிக்காட்டுக் குடியானவன், மிஞ்சிய சிறிய முதலோடு நகரத்துக்கு வந்து இப்படிக் கைவசத்தால் வியாபாரமும் இலேவாதேவியும் ஆரம்பித்து, வியாபார தர்மத்திலும் கெட்டிக்காரன் ஆகிய குடியானவன் வேறு அநேக குடியானவர்களை ஏமாற்றித் துரோகம் செய்தும், வேறு பல பரம்பரைக் குட்டி வியாபாரிகளை வஞ்சித்துப் பாப்பராக்கிப் (பரம ஏழையாக்கி) பணம் சம்பாதிக்கவும் தகுதி உடையவனாக ஆகிவிடுகிறான்.

இது போலவே வக்கீலால், வியாஜ்ஜியத்தால், நாசமான சில குடும்பங்கள். அதில் ஒருவன் தப்பித்தவறிப் படித்து வக்கீலாகி வக்கீல் தர்மத்தின் மேலோங்கிய பரம்பரை வக்கீல் அல்லாத ஒருவன் பிரபலமடைந்து செல்வவானாகவும் உயர் பதவியினன் ஆகவும் ஆகிவிடுகிறான். இப்படி எல்லாம் ஆவதற்குச் ஜாதி, பிறவி, பரம்பரை முக்கியமல்ல பின் எது முக்கியம் என்றால் தொழில் தர்மம்தான் என்பேன். அதுபோலவே தொழில் தர்மத்தில், போர்ட்டருக்கு ஒரு புத்தி; ஜட்கா வண்டி, ரிக்ஷா வண்டிக்காரர்களுக்கு ஒரு புத்தி; வாத்தியார்களுக்கு ஒரு புத்தி; பியூன்களுக்கு ஒரு புத்தி; போலீஸ்காரருக்கு ஒரு புத்தி; தொழிலாளிக்கு ஒரு புத்தி; முதலாளிக்கு ஒரு புத்தி என்பனபோல் தொழில் தர்மம் என்கின்ற தொழில் புத்தி ஏற்படுவது இயல்பாகும். இந்தத் தன்மை முற்றி இவை ஒரு கும்பலுக்கு, ஓர் இனத்திற்கு என்று பெரும்பான்மையாகப் போய் அடைகின்றபோது, இதற்குச் ஜாதிப் புத்தி என்று பெயர் ஆகிவிடுகிறது.

சாதாரணமாக நாம் மற்றவர்களைக் கண்டிக்க முற்படும் போது அவர்களை நாம் வசவு கூறப் பயன்படுத்தும் சொற்களில்,

"இந்தத் தேவடியாபுத்தியைக் காட்டாதே"

"இந்த வியாபாரப் புரட்டைக் காட்டாதே"

"இந்த வக்கீல் பித்தலாட்டத்தை என்னிடம் காட்டாதே" என்கிறோம்.

ஒரு புலவன் பாடி இருக்கிறான் "கம்மாளனுக்குப் பயந்தல்லோ பரமசிவன் பாம்மை ஆபரணமாய் அணிந்து கொண்டிருக்கிறான்" என்று.

இது தொழில் தர்மமே ஒழிய சமூக தர்மம் அல்ல. ஓர் ஆசாரி ஒரு பாங்கில் காஷியராய் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு பழைய சல்லிக் காசுகூட திருடமுடியுமா? அல்லது வெள்ளிப் பணத்தில் கொஞ்சம் உரைகல்லிலாவது உரைத்துக் கொள்ள முடியுமா? ஆனதால் ஜாதி தர்மம் என்பது பெரிதும் தொழில் தர்மமேயாகும்.

பார்ப்பனனின் ஜாதிப் புத்தி, ஜாதி தர்மம் என்பது அவர்களுடைய தொழில் தர்மம். தொழில் புத்தி என்றுதான் கொள்ளத்தக்கது ஆகும். தொழில் என்பது மனிதன் வாழ்க்கைக்கு வகுத்துக் கொள்ளப்பட்ட வகை.

இதன் தத்துவம்தான், ஜாதி தர்மத்துக்கு, "வர்ணாசிரம தர்மம்" என்பதற்கு, அடிப்படையாகத் தொழிலை முக்கியமாக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக நம்மில் மக்கள் "கடவுளால் - மதத்தால்" வேத சாத்திரங்களால் இரண்டு ஜாதியாகத்தான் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தச் ஜாதிக்கு அடிப்படை என்ன என்றால் ஒருவன் உழைக்காமல், சரீரத்தினால் பாடுபடாமல் வாழவேண்டிய ஜாதி என்பதும், ஒருவன் சரீரத்தால் உழைத்துக் கொண்டே வாழவேண்டும் என்பதான உழைப்பு தர்மம்தான் என்பதாகும். இதில் உழைக்கிற ஜாதியைச் சேர்ந்தவர்கள் தாம் நாம். உழைக்காத ஜாதியைச் சேர்ந்தவர்கள் தாம் பார்ப்பனர்கள் என்பது. ஆக ஜாதி தர்மம் இருந்து வருகிறது. ஆகவே உடலால் உழைக்காமல் ஒருவன் வாழ வேண்டும். ஆனால் உடலுழைப்பவனை ஏமாற்றாமல், மோசம் செய்யாமல், வஞ்சகம் துரோகம் செய்யாமல் ஒரு சக்தியுள்ள மனிதனால் வாழமுடியுமா?

உழைப்பவனை வஞ்சிப்பது - துரோகம் செய்வது என்றால், உழைப்பின் பயனை உழைப்பாளி சரிவர அடையாமல், மேலும் உழைக்க ஜீவன் (உயிர்) இருக்கும்படியான அளவுக்குக் கூலிதான் என்று வரையறுக்கப்பட்டிருப்பதே ஆகும். அதிலும் பார்ப்பன தருமம் என்பதில், உழைப்பாளி ஜாதிக்கு உயிர் வாழும் அளவுக்கு என்றுகூட இல்லாமல், உயிர் இருக்கும் வரை வேலை வாங்கவேண்டியது. கூலி கொடுப்பது பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை என்பதுதான் பார்ப்பன தருமம் என்பதாக (பார்ப்பானுக்குத் தர்மமாக) ஆக்கப்பட்டு இருக்கிறது. இது எந்த அடிப்படையைக் கொண்டு என்றால், மேலே சொல்லியபடி பார்ப்பான் தொழில் - தர்மம் அதாவது வாழ்க்கைத் தர்மம் பாடுபடாமல் வாழவேண்டியது என்ற அடிப்படையில்தான்.

ஆகவே பாடுபடாமல் பிறர் உழைப்பின் பயனை அனுபவித்துக கொண்டே வாழ்வது என்பதைத் தர்மமாகக் கொண்ட எவனிடம் நாம் ஒழுக்கம், நாணயம், நீதி, நேர்மை, வஞ்சகமற்ற தன்மை, துரோகம் - மோசடி அற்ற தன்மை, முதலியவைகளைக் காண முடியும்?

இப்படி இருக்கையில் உழைக்காமல் ஊரார் உழைப்பில் வாழ்வது என்பதைத் தர்மமாக - வாழ்க்கைத் தர்மமாக மாத்திரமல்லாமல் "இது கடவுள், மதம், சாஸ்திரங்கள் ஆகியவைகளின் கட்டளை" என்று சொல்லுகிற எவனிடம்தான் நாம் நாணயம், ஒழுக்கம், நேர்மை, வஞ்சகமற்ற - துரோகமற்ற - புரட்டு - பித்தலாட்டம் - பாதகம் அற்ற தன்மையைக் கிரமமாகக் காணமுடியும்? அதுவும் இந்தத் தன்மையைப் பரம்பரைப் பிறவித் தர்மமாகக் கொண்ட எந்தப் பிறவிச் ஜாதியிடம்தான் எதிர்பார்க்க முடியும்? எனவே பார்ப்பன சாதி என்ற கூட்டத்திற்கு - கோஷ்டிக்கு எந்தக் காரணம் கொண்டும் எந்த விதத்திலும் ஒழுக்கம் - நாணயம் - யோக்கியமான நடத்தை என்பவைகள் இருக்காது என்பதுடன், இருக்கவும் முடியாது. இந்தத் தன்மையைப் பார்ப்பனர்கள் தங்களுக்குப் பரம்பரை உரிமை, தர்மம் என்று சொல்லி, பாத்தியம் கொண்டாடுகிறார்கள். அதற்கு ஏற்பவே தங்கள் பரம்பரையைச் சிருஷ்டித்துக் கொண்டு இருக்கிறார்கள். பரம்பரை மாத்திரமல்லாமல் இந்த மாதிரியான பார்ப்பனத் தர்மத்தையே தாங்கள் கடவுள், மதம், சாஸ்திர - புராணம், அவதாரம் ஆகியவற்றிற்கும் பொருத்தி அவற்றை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே இனி அடுத்த கட்டுரையில் இன்று தங்களைப் பிராமணாள் உயர்ந்த பிறப்பாளர்கள், பாடுபடாமல் - உழைக்காமல் மற்ற மக்களிடம் வேலை வாங்கி அவர்கள் உழைப்பால் வாழ வேண்டிய உயர் குல தர்ம மக்கள் என்ற உரிமைக் கொண்டாடும் பார்ப்பன மாந்தர்களின் மூதாதையர் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்களான கடவுள்கள், அவர்கள் மனைவி மக்கள், அவதாரங்கள், அம்சங்கள் பற்றியும், பார்ப்பனர்களால் பதிவிரதைகள் - சக்தி அம்சங்கள் என்று பாராட்டப்படும் பெண்கள், பெண் தெய்வங்கள் முதலியவர்கள் பற்றியும், இவர்களால் செய்யப்பட்டதாக - அருளப்பட்டதாக - நடந்து காட்டப்பட்டதாகக் கூறப்படும் வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி - சுருதிகள், புராணங்கள் - இதிகாசங்கள் முதலியவைகளைப் பற்றியும் அவர்களின் - அவைகளின் ஒழுக்கம், நாணயம், நீதி, நேர்மை, சத்தியம், சாந்தம், அன்பு, கருணை ஆகியவை பற்றியும் பல நூல்களில் உள்ளபடி ஆதாரங்களோடு எடுத்துக்காட்டலாம் என்று இருக்கிறேன்.

எதற்காக என்றால், இப்படிப்பட்டவர்களிடம், இப்படிப்பட்ட கடவுளர்களை, மூதாதையர்களைக் கொண்டவர்களிடம், இப்படிப்பட்ட வேத, சாஸ்திர, புராண, இதிகாச, ஸ்மிருதி, சுருதிகளை வழிகாட்டியாய்க் கொண்டவர்களிடம் உண்மை, ஒழுக்கம், நன்றி அறிதல், நாணயம், நீதி, நேர்மை முதலிய நற்குணங்களும், வஞ்சகம், துரோகம், செய்ந்நன்றி மறுத்தல், குடிகெடுத்தல் முதலிய தீயகுணங்கள் அற்ற தன்மையையும் எதிர்பார்க்க முடியுமா என்பதை உணர்த்தி, மக்களை உஷார்படுத்தவேதான் எடுத்துக்காட்டலாம் என்று கருதுகிறேன். இவற்றைக் கண்மூடி நம்பாமல் நல்லவண்ணம் படித்து ஆராய்ந்து, தங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டு தள்ளுவதைத் தள்ள - ஏற்பனவற்றை ஏற்க வேண்டிக் கொள்கிறேன்.

ஏனெனில் இந்தப் பார்ப்பனர்களால் நாம் சித்திரவதை செய்யப்படுகிறோம்.

-------------- தந்தைபெரியார் -- ”விடுதலை” தலையங்கம் 27-10-1960

29.8.11

தூக்குத் தண்டனையை ரத்து செய்க! தி. க. மாநாட்டில் தீர்மானம்

Align Left

அகில இந்திய நுழைவுத் தேர்வு கூடவே கூடாது!
செப்டம்பர் 25இல் சென்னையில் கழகத்தின் சார்பில் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரக்கோரும் மாநாடு!
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை மாற்றி
சித்திரை முதல் நாளாக சட்டமியற்றியிருப்பதற்குக் கண்டனம்!
திருத்தணி மாநாட்டில் தீரமிக்க தீர்மானங்கள்

தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்; தை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல் நாளாக மாற்றிய தமிழக அரசுக்குக் கண்டனம் உள்பட பல முக்கிய தீர்மானங்கள் திருத்தணியில் நேற்று (28.8.2011) நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்: 1

நாகப்பட்டினம் திராவிடர் கழக மாணவர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்களுக்கு வரவேற்பு

முன்மொழிவோர்: அ. அர்ஜுன், காஞ்சி மாவட்ட மாணவரணி தலைவர்

(அ) கடந்த ஆகஸ்டு 13 ஆம் தேதி நாகப்பட்டினம் திராவிடர் கழக மாணவர் எழுச்சி மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களை இம்மாநாடு வரவேற்றுச் செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 2

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்னும் தமிழக அரசின் சட்டத்திற்குக் கண்டனம்!

முன்மொழிவோர்: அருண்குமார், காஞ்சி மாவட்ட மாணவரணி செயலாளர்

தமிழ் அறிஞர்கள் மற்றும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களால் வற்புறுத்தப்பட்ட, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்கிற வகையில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2008 ஆம் ஆண்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து, சித்திரை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று புதியதாக சட்டம் இயற்றிய அ.இ.அ.தி.மு.க. அரசின் தமிழின விரோத முடிவுக்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

பிரபவ தொடங்கி, அட்சய என்பதில் முடிவு பெறும் 60 ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூட தமிழில் இல்லாத நிலையில், அவற்றைத் தமிழ் ஆண்டுகள் என்று ஏற்றுக் கொள்வதும், நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்தவைதான் இந்த தமிழ் ஆண்டுகள் என்று கூறுவதும் அறிவுக்குப் பொருத்தமற்ற ஆபாசமானதும் - தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் அடையாளமுமாகவே இருப்பவை என்றும் இம்மாநாடு திட்டவட்டமாக தெரிவிக்கிறது.

நீண்ட வரலாறு படைத்த, தொன்மை மிகுந்த தமிழர் மீதும், தமிழின் மீதும் தொடுக்கப்பட்ட இந்த ஆரியப் பண்பாட்டுப் போரில், உண்மை நிலையை நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்து, தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்றும், வரும் செப்டம்பர் 11 அன்று மாலை திருச்சிராப் பள்ளியில் கூட இருக்கும் திராவிடர் கழக பொதுக் குழுவில் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிப்பது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 3

(அ) அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு

முன்மொழிவோர்: சி. பிரேமா B.Tech., IT
கலைக் கல்லூரிகளில் (Arts College) இளங்கலைப் பட்டம் தொடங்கி, தொழிற் கல்லூரிகள்வரை நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அவர்கள் தெரிவித்திருப்பதற்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் கிராமப்புற மக்களை மிகக் கடுமையாகப் பாதிப்புக்கு ஆளாக்கும் இந்த வெகுமக்கள் விரோத - சமூக நீதி விரோதத் திட்டத்தை, முயற்சியை உடனே கைவிடவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இதில் ஒத்தக் கருத்துடைய அமைப்பு களை ஒருங்கிணைத்து, அகில இந்திய அளவில் போராடி முறியடிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

(3) (ஆ) கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தல்

முன்மொழிவோர்: ந, குணாளன், திருவள்ளூர் மாவட்ட மாணவரணி தலைவர்

கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் தான் மத்திய அரசு இது போன்ற முடிவுகளை அகில இந்திய அளவில் எடுப்பதற்குக் காரணமாக, உதவியாக இருப்பதால், கல்வியை மாநிலப் பட்டிய லில் மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதை வற்புறுத்தும் வகையில், வரும் செப்டம்பர் 25 அன்று சென்னையில், திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்த இருக்கும் மாநாட்டுக்குக் கல்வியாளர் களை அழைத்துச் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 4

தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாராட்டு

முன்மொழிவோர்: தமிழ்மணி, திருத்தணி நகர செயலாளர்

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் மானமிகு டி.ஆர்.பாலு அவர்கள் மக்களவை யில் கொண்டு வந்த முன்மொழிவை ஆதரித்து, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில். தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இரு அவைகளிலும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்ததற்கும், கருத்துக்களை வலிமையாக எடுத்துச் சொன்னதற்கும் இம்மாநாடு மனந்திறந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள் கிறது.

தமிழகத்தின் அடிப்படையான உரிமைகள், வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவைகளுக்காக இதே முறையில கட்சிகளைக் கடந்து ஒருமித்த முறையில் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அதன் காரணமாக தமிழ் நாட்டுக்குப் பேருதவி செய்ய முடியும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 5

ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை

முன்மொழிவோர்: து. சுரேசு,
அரக்கோணம் மாவட்ட இளைஞரணி தலைவர்

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி உறுப்பினர் களும், ஈழத் தமிழர்கள் கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டது, வாழும் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து தொல்லைகளுக்கு ஆளாவது குறித்தும், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்தும் எழுப்பிய பிரச்சினைகளுக்கும், கேள்விகளுக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அளித்த பதில் திருப்தியற்றதாக உள்ளது என்று தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்பதிலிருந்து, மத்திய அரசு ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னையில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது என்பது வெளிப்படை யாகவே தெரிகிறது.

மத்திய அரசு இதில் நியாயமான முடிவை எடுத்துச் செயல்படும் வரையில், அனைத்துக் கட்சி தமிழக உறுப்பினர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்றும், இதில் ஒத்தக் கருத்துள்ள மற்ற பிற மாநில உறுப்பினர்களையும் இணைத்துக் கொள் வதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 6

தூக்குத் தண்டனையை ரத்து செய்க!

முன்மொழிவோர்: கி. எழில்,
திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர்

தூக்குத் தண்டனை என்பது மனித உரிமைக்கும், மனிதநேயத்துக்கும் எதி ரானது என்பதால், இந்தச் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத் துகிறது.

குறிப்பாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் பேரறிவாளன், சின்ன சாந்தன், முருகன் ஆகியோர்க்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்தும், ஏற்கெ னவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறையில் இருந்த காரணத்தால், அதனையே கூட தண்டனையாகக் கணக்கில் கொண்டு அம் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டால், தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட சட்ட ரீதியாக அதிக வாய்ப்பு இருப்பதால், முதல் அமைச்சர் மனித நேயத்துடன் இந்தப் பிரச்சினையை அணுகி, உரிய முயற்சிகளை எடுக்குமாறும் இம்மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது

------------------------- "விடுதலை” 29-8-2011

நீதிக்கட்சி என்ன செய்தது?


சென்னை மாகாணத் தில் சர்க்கார் உத்தியோகங்களுக்காக ஏற்படுத்தியிருக் கும் வகுப்பு வாரி பிரதிநிதித் துவம் என்பது சர்க்கார் உத்தரவாக மாத்திரம் இல்லாமல், சர்க்கார் சட்டத்திலேயே ஒரு விதியாகக் குறிக்கப்பட வேண்டுமென்று, இந்த மாநாடு தீர்மானிக்கிறது. தற்போதுள்ள வகுப்பு வாரி பிரதிநிதித்துவ எண் ணிக்கை திராவிடர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்கும் மிகவும் குறைவாக இருப் பதால் ஜனசங்கியைக்கு ஏற்றபடி அவ்விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென் றும் அவ்விகிதப்படி உத்தி யோகங்கள் அடையும் வரை அதிகமாகப் பிரதிநிதித்துவம் அடைந்திருக்கும் கூட்டத்தாருடைய நியமனம் நிறுத்தி வைக்கப்படவேண்டுமென்றும் சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது. இந்த முறை அகில இந்திய சர்க்கார் உத்தியோகங்களிலும் கையாளப்பட வேண்டுமென்று தெரிவித்துக் கொள்வதுடன் வரப் போகும் சீர்திருத்த சட்டத் திலேயே இவை குறிக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக் கிறது.

- இதே நாளில் (1940) திருவாரூரில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக் கட்சி) 15 ஆவது மாகாண மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் மேலே காணப்படுபவை.

71 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு தொலை நோக்கோடு இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளன என்பது கவனிக்கத் தக்கதாகும்.

இட ஒதுக்கீடு வெறும் ஆணையாக இல்லாமல் சட்ட மாக ஆக்கப்பட வேண்டும் என்ற கருத்து1994 ஆம் ஆண்டில் (டிசம்பர் 31) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களால் தொகுத்து அளிக்கப் பட்ட 31(சி) மூலம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற் றப்பட்டது. (தமிழ்நாடு சட்டம் 45/1994) 76ஆவது சட்டத் திருத்தத்தின் கீழ் நாடாளு மன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. அதே போல மத்திய அரசுத் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பது திருவாரூர் மாநாடு நடந்து முடிந்த 50 ஆண்டுகளுக்குப்பின் திராவிடர் கழகத்தின் அரிய முயற்சியால், கழகத் தலைவரின் திட்டமிட்ட அறி வார்ந்த செயல்முறைகளால், நல்வாய்ப்பாக இந்தியத் துணைக் கண்டத்துக்கு வாராது வந்த மாமணியாய், வான் மழையாய் வந்து சேர்ந்த பிரதமர் வி.பி.சிங் அவர்களின் சமூக நீதி உணர்வால் (1990 ஆகஸ்ட் 7) நாடாளுமன்றத்தில் அறி விக்கப்பட்டது.

மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்கிற பரிந் துரையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி, இந்த சாதனை நிகழ்த்தப் பட்டது என்பது கல்லின் மேல் எழுத்தாகும்.

நீதிக்கட்சி என்ன செய்தது? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கரிக்கோடு கிழிக்கும் வீடணர்கள் இந்த வரலாற்றை யெல்லாம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கழகப் பிரச்சாரகர்களும், மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அழுத்த மாக இவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

---------------- மயிலாடன் அவர்கள் 25-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமை தாங்கி!


தமிழ்ப் பகைவர் செய்த பிழை திருத்தி சித்திரை முதல் நாளே தமிழர் தம் புத்தாண்டு என தீர்ப்பெழுதிய தீர்க்க தரிசியே! இரண்டாம் சுதந்திரத்தை இம்மண் ணுக்குப் பெற்றுத் தந்த வாழும் ஜான்சி ராணியே! வல்லமைகளின் குவியலே!... இத்தியாதி இத்தியாதி முழுப் பக்க விளம்பரம் ஒன்று இவ்வார குமுதம் ரிப்போர்ட் டரில் வெளியாகியுள்ளது.

விளம்பரம் கொடுத்திருப்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினரும்கூட, எதற்காக அவர் பெயரைச் சொல்லி விளம்பரப்படுத்த வேண்டும்?


பிரபவ தொடங்கி அட்சயவில் முடியும் சமஸ்கிருத பெயர்களை உடைய சித்திரைப் பிறப்பு தமிழருக்கு உரியதாம்.

இந்த சமஸ்கிருத ஆண்டு பிறப்பைப்பற்றி தை பிறந்தால் வழி பிறக்கும் என்றமுறையில் உண்மையான தமிழ்ப் பேரறிஞர்கள் கூடி முடிவெடுத்த தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற தி.மு.க. அரசின் சட்டத் திருத்தம் தமிழ்ப் பகைவரால் கொண்டு வரப்பட்ட தாம்!

பார்ப்பனத் தலைமையை ஏற்றதால் நம் தமிழர்கள் புத்தி எவ்வளவு கேவலத்தில் தள்ளாடுகிறது பார்த்தீர்களா?

அதுவும் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டுள்ளவர்கள் திராவிட அடையாளத்தை கட்சியின் பெயரில் பொறித்துக் கொண்ட வர்கள் எவ்வளவு பெரிய திரிபுவாத நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள்!

ஆரிய மாயை நூலில் - (நூல் என்றால் பூணூல் அல்ல புத்தகம்) அறிஞர் அண்ணா மிக அழகாகவே படம் பிடித் துக் காட்டினாரே -

போதை ஏறியவன், கல் தடுக்கியோ, காற்று அடிப்பதாலோ கீழே வீழ்வான். ஆரியரும், திராவிட இனத்திடையே கருத்திலே போதை மூண்டிடச் செய்து விட்டுப் பிறகு கீழே உருட்டினர். திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமை தாங்கி ஆனான். சோர்ந்தான், சுருண்டான்.

இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே என்றார் அண்ணா.
இன்று நடப்பதை தொலைநோக்கோடு அண்ணா படம்பிடித்து விட்டாரோ!

அந்த அண்ணாவின் பெயரைத் தாங்கிய கட்சியே அண்ணாவின் எண்ணத்துக்கு மாறாக ஆரியக் கருத்துப் போதை ஏறி, பகைவரை பாசமுள்ள நண்பர் என்றும், நண்பரை நயவஞ்சகப் பகைவர் என்றும் கூறும் நிலை ஏற்பட்டு விட்டதே.

அய்யகோ வெட்கக் கேடு!

------------------- மயிலாடன் அவர்கள் 28-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28.8.11

தேவ ப்ரச்னம் என்றால் என்னவாம்?

கேள்வி: தேவ ப்ரச்னம் என்னும் ஜோதிட சடங்கு நடத்தி, பத்ம நாபஸ்வாமி கோவிலில் மறைந்து கிடக்கும் விலை மதிப்பற்ற பொக்கிஷங்களைக் கண்டறி வதுபோல, ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தையும் இதன் மூலம் கண்டறிய முடியாதா?

பதில்: முதலில் ஒரு விஷயம். நல்ல வேளையாக ப்ரச்னம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். பிரசன்னம் என்று பல பத்திரிகைகள் எழுதிக் குழப்புகின்றன. ப்ரச்னம் என்றால், கேள்வி தெய்வத்திடம் கேள்வி கேட்டு, நிலை மையைப் புரிந்து கொள்ள முயல்வது, தேவ ப்ரச்னம்.

உங்கள் கேள்விக்கு வருகிறேன். மறைந்து கிடக்கிற பொருள் எங்கே இருக்கிறது - என்பது அல்ல அங்கு நடந்த ப்ரச்னம். அந்த நகைகளை எடுப்பதால், தீமை விளை யுமா, என்ன ஆகும், என்ன விளைவு என்பதைப் பார்க்கத்தான் அங்கு ப்ரச்னம் பார்க்கப்பட்டது.

ஆகையால், ஸ்விஸ் வங்கியில் எவ்வளவு பணம் பதுக்கப்பட்டிருக்கிறது என்பதை அங்கு கேட்க முடியாது. பதுக்கப்பட்ட பணத்தை அரசு எடுத்தால் என்ன நடக்கும் - என்று துக்ளக் ப்ரச்னம் பாருங்கள். நல்லதுதான் நடக்கும் என்று பதில் கிடைக்கும்.
-----------(துக்ளக் 31.8.2011)

தெய்வத்திடம் கேள்வி கேட்கலாம் என்று சொல்கிறார் திருவாளர் சோ. தெய்வ வாக்குதான் இறுதி வாக்கு என்று இனிமேல் சொல்ல முடியாது.

கடவுள் என்றாலும் கடவுள் அவதாரம் என்றாலும் கேள்வி கேள் என்றார் பகுத்தறிவுப் பகலவன் பெரியார்.

இப்பொழுது அந்த இடத்துக்குத் தானே வந்திருக்கிறார் திருவாளர் சோ.

திருவனந்தபுரம் பத்மநாபன் கோயில் அறையைத் திறப்பதால் தீமை விளையும் என்று சொல்லத் தெரிந்த கடவுளுக்கு, அந்த அறையில் என்ன இருக்கிறது என்று சொல்லத் தெரியாதா?

அப்படி சொல்லத் தெரியாதவருக்குப் பெயர் சர்வ சக்தி கடவுளா என்ற கேள்வி எழாதா?

மறைந்து கிடக்கிற பொருள் எங்கே இருக்கிறது என்று கடவுளுக்குச் சொல்லத் தெரியும் என்று ஒப்புக் கொண்டால் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தையும் ப்ரச்னம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா என்ற கேள்விக்குள் சிக்கித் தவிக்க வேண்டிவரும்.

அதிலிருந்து, தான் தப்பிப்பதற்காக அந்த சக்தி கடவுளுக்கு இல்லை என்று ஒரு முழு கரணம் அடிக்கும் சோவின் லாஜிக்கோ லாஜிக்!

உருவமற்ற கடவுள் என்று சொல்லிக் கொண்டு அதற்கு உருவம் அமைத்து, கோயில் கட்டி, ஆறு வேளை சோறு போட்டு, கல் யாணம் பண்ணி வைத்து, புருசனும் பெண்டாட்டியுமா கிய கடவுளுக்குப் பள்ளி அறை வேறு ஏற்பாடு செய்து, அதற்குப் பிறகு பிள்ளை குட்டிகள் பெற வைத்து, அந்தப் பிள்ளைக் குட்டிகளுக்கும் தனித் தனிப் புராணங்களை எழுதி... அப்பப்பா என் னென்ன கேலி கூத்து!

இந்த உலகமே அவன் படைத்தது, எல்லாமே அவன் சொத்து என்று ஆனபிறகு கடவுளுக்கென்று நகைகள் ஏன்?

அந்த நகைகளால் அந்தக் கடவுளுக்கு யாது பயன்? அரசனும், அர்ச்சகனும், டிரஸ்டிகளும் சுரண்டிக் கொழுக்கத்தானே?

அரச வம்சத்தவனோ, அர்ச்சகனோ, டிரஸ்டியோ திருட்டுத் தனமாக எடுத்துச் சென்ற போது பத்மநாபன் தடுத்ததாகக் கதைகூட இல்லையே!

இந்தக் கடவுளைக் காப்பாற்ற இந்தப் பூதேவர்களான பார்ப்பனர்கள் படும்பாடு அப்பப்பா... சொல்லுந் தரமன்று.

ஆம், அந்தக் கடவுள் என்று கல்லுக்குள் தான் பார்ப்பன உயர் ஜாதி ஆதிக்கத் தன்மை என்ற உயிர் இருக்கிறது என் பதை மறக்க வேண்டாம் - அதனால்தான் இவ்வளவு வக்காலத்து!

---------------------"விடுதலை” 28-8-2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -8

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (8) மூக்கறுபடும் ஆச்சாரியார்!


1919ஆம் ஆண்டில் ஈ.வெ.ரா. காங்கிரஸில் சேர்ந்தார். 1923-ஆம் ஆண்டு வரையில் காங்கிரஸ் மகாசபையின் கொள்கைகளான கதர்த் திட்டம், மது ஒழிப்பு, ஹரிஜன ஆலயப் பிரவேசம், அனைவருக்கும் சம உரிமைகள் முதலியவற்றை ஆதரித்து ஈ.வெ.ரா. தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

அன்றைய காங்கிரஸ் மகாசபையில் ஈ.வெ.ரா. சேர்ந்த மிகவும் குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்ற மிக உயர்ந்த பதவி அவருக்கு அளிக்கப் பெற்றது. காங்கிரஸில் ஓர் உயர்ந்த அந்தஸ்தும் அவருக்குக் கிடைத்தது.

ஈ.வெ.ரா.வுக்கு அந்தப் பெருமைகள் கிடைக்குமாறு செய்தவர் ராஜாஜியே! இந்த உண்மையைப் பல வருடங் களுக்குப் பின்னர் ஈ.வெ.ரா.வே பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

என்னை ராஜாஜி அவர்கள்தான் முதலில் கோயம்புத்தூர் ஜில்லா காங்கிரஸ் செக்ரட்டரி ஆக்கினார். பிறகு, அவர்தான் என்னைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஆக்கினார். என்னிடம் முழு நம்பிக்கை வைத்து, என்னையே அவர், நமது தலைவர் நாயக்கர் என்று அழைத்ததோடு, பார்ப்பனரில் வெகு பேரை என்னைத் தலைவர் என்று அழைக்கும்படி செய்தார் என்று ஈ.வெ.ரா. விடுதலை நாளிதழின் தலையங்கத்தில் (26.12.1972) எழுதியிருந்தார். அந்தத் தலையங்கம், ராஜாஜி அவர்கள் மறைந்தபோது ஈ.வெ.ரா. எழுதியது ஆகும் என்கிறது துக்ளக்

ராஜாஜி மறைந்தபோது தன் ஆப்த நண்பர் குறித்து எழுதிய வாசகங்கள் இவை! கொள்கைக் கோட்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும் மனிதத்தன்மை என்னும் பண்பில் தந்தை பெரியார் சிகரத்தில் இருக்கிறார் என்பதுதான் உண்மை.

தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தபோது ஈரோடு மாநகரில் மங்கா ஒளி விளக்காகத் திகழ்ந்து கொண்டிருந்தவர். அந்த அளவுக்கு ஆச்சாரியார் சேலத்தில் விளங்கினார் என்றுகூட சொல்ல முடியாது - 29 பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு தான் காங்கிரசில் சேர்ந்தார் என்பது நினைவில் இருக்கட் டும். நகராட்சித் தலைவராக இருந்து அருந்தொண்டு ஆற்றியமைக்காக ராவ்பகதூர் பட்டம் அளிக்கப்பட இருந்த நிலையிலும், அதற்கெல்லாம் மசியாமல் பதவிகளை விட்டு வெளியேறி நாட்டுத் தொண்டுக்குத் தன்னை அர்ப்பணித்தவர் ஈரோட்டு வேந்தர்.

அதுபற்றி நவசக்தியில் திரு.வி.க. எழுதியது கவனிக்கத்தக்கது.

ஸ்ரீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டில் அயர்ந்தவர் உண்டாட் டில் திளைத்தவர் வெயில் படாது வாழ்ந்தவர். ஈரோட்டு வேந்தரென விளங்கியவர். ஸ்ரீமான் நாயக்கர் தமது செல்வம் முதலிய மாயைகளை மறந்து, வறியார்போல் எளிய உடை தரித்து, எளிய உணவு உண்டு, இரவு பகல் ஓயாது தேசத் தொண்டிற்கே தமது வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளதை எவரே அறியார்? என்று 24.5.1924இல் ஈ.வெ.ரா. சிறைபட்டபோது நவசக்தி யில் எழுதினார் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் (நூல்: தமிழர் தலைவர் - சாமி.சிதம்பரனார்)

இந்த நிலை ராஜாஜிக்கு உண்டா? ஆகஸ்ட் போராட்டத்தில் அண்டர் கிரவுண்டாகி, அதன்பின் கொல்லைப்புறம் வழியாக காங்கிரசில் புகுந்து, காந்தியாரின் சம்பந்தியாகி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆகியவரா யிற்றே! பெரியாரோ தன்னைத் தேடி வந்த பதவிகளையும் சமூகப் புரட்சிக்காக உதைத்துத் தள்ளியவராயிற்றே! ஒப்பிட முடியுமா பெரியாருடன்? ராஜாஜிபற்றி பெரியார் எழுதியது இருக்கட்டும்!

பெரியார்பற்றி ராஜாஜியின் கணிப்பு என்ன?

முக்கியமான தமிழக தேச பக்தர்கள்மீது வழக்குத் தொடரப் பெற்று வந்த காலம் 1924 ஜூன், அவ்வாறு வழக்குத் தொடரப் பெற்றவர்களில் பெரியார் ஈ.வெ. இராமசாமி ஒருவர். பம்பாய்க்குச் சென்றிருந்த ராஜாஜி, பெரியார் ஈ.வெ. இராமசாமிமீது தொடர்ந்த வழக்கு விசாரணை அக்டோபர் 18ஆம் தேதியன்று வருகிறது என்பதற்காக, அவசரமாகத் திரும்பி வந்தார். தேவதாஸ்காந்தி மேலும் ஒரு நாள் தங்கியிருந்து விட்டுப் போகுமாறு சொன்னதைக்கூட அவர் ஏற்கவில்லை. சென்னைக்கு நான் 18ஆம் தேதி போயாக வேண்டும். அன்று தான் இராமசாமி நாயக்கரின் வழக்கு இறுதி விசாரணை. அவர்மீது அரசத் துரோகக் குற்றம் சாட்டப் பெற்றிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு நீண்ட காலச் சிறைத் தண்டனை கிடைக்கலாம். எங்களுடைய காங்கிரஸ் நடவடிக்கைகளுக்குத் தீவிரம் நிறைந்த தலைவராக (HEad And Active Master) அவர் இருந்து வருகிறார் என்று ராஜாஜி ரயிலிலிருந்து 16.10.1924ஆம் தேதி காந்திஜிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். (நூல்: தமிழ் நாட்டில் காந்தி - நூற்றாண்டு வெளியீடு - ஆசிரியர் அ. இராமசாமி பக்கம் 391 - 392).

இதன் மூலம் தந்தை பெரியார் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவராக காங்கிரசின் உயிரும், தலையுமாயிருந்து ஒளிவீசினார் என்பது விளங்க வில்லையா? ராஜாஜி அவர்களே தந்தை பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தார் என்பது தானே உண்மை!

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் (4.8.1965) தந்தை பெரியார் உரையாற்றி விடுதலையில் (15.8.1965) வெளிவந்த ஒரு தகவல் இதோ:

தோழர்களே, பார்ப்பனர்கள் தனியாக வீதியில் நடக்க அஞ்சிய காலத்தில், காங்கிரஸ் கூட்டம் வீதியில் போட்டுப் பேச முடியாத காலத்தில் அந்நிலைமையை மாற்றி, காங்கிரசுக்கு வீதியில் கூட்டம் போட்டுப் பேசவும், பார்ப்பான் வீதியில் நடக்கவும், ஆதிக்கத்தில் இருந்த ஜஸ்டிஸ் கட்சி, வீதியில் கூட்டம் போட முடியாத நிலையையும் ஏற்படுத்திக் கொடுத்தவன் நான் தானே?

அதற்கு முன்பு பார்ப்பனர்கள் கூட்டம் போடுவதென்றால் ஜஸ்டிஸ் கட்சி செல்வாக்குக்குப் பயந்து கொண்டு ரானடே ஹால், அந்த ஹால், இந்த ஹால் என்றுதான் போடுவார்கள். பார்ப்பான் ஆற்றுப் பாலத்தில் நடந்து செல்லும்போது அதிர்ச்சி தரும் சங்கதிகள் கேட்டு எட்டித் தண்ணீரில் குதித்த காலமும் உண்டு. வீட்டுக் கதவுகளை டப் டப் என்று தாளிட்டுக் கொண்டு வீட்டில் அஞ்சி வாழ்ந்த காலமும் உண்டு.

அந்தக் காலத்தில் தான் நான் தெரிந்தோ தெரியாமலோ முட்டாள் தனமாக காங்கிரசில் சேர்ந்தேன். இப்போது எப்படி முழு நேரமும் ஊர் ஊராகச் சுற்றிப் பிரச்சாரம் செய்கின் றேனே, அது போலவே செய்தேன்.

நான் தமிழ்நாடு காங்கிரஸ் செகரெட்டரியாக, தலைவனாக மட்டும் இல்லாமல், காங்கிரசில் முக்கிய மானவனாகவும் இருந்தேன்.

ஆச்சாரியார், சத்தியமூர்த்தி, ராஜன் போன்ற பார்ப்பனத் தலைவர்கள் எல்லாம் நம் தலைவர் நாயக்கர் என்று கூப்பிடும்படியான நிலையில்தான் இருந்தேன்.

எனக்கு ஒரு சமயம் ஈரோட்டில் உடம்பு சவுக்கியம் இல்லை. ஆச்சாரியார், ராஜன், சந்தானம் அய்யங்கார் ஆகியோர் எல்லாம் வந்துவிட்டார்கள்.

இவர்கள் எனது அருகிலேயே இரவு பூராவும் கண் விழித்து இருந்து, ஒரு நர்சைவிட அதிக அக்கறையாகப் பணிவிடை செய்தார்கள்.
அன்று ராஜாஜி ஒரு முக்கிய வேலையாக வெளியூர் போக வேண்டி இருந்தது. அவருக்கு என்னை விட்டு விட்டுப் போக மனம் இல்லை. சந்தானம் அவர்களை அழைத்து சந்தானம், நாயக்கர் உயிர் சாதாரண உயிர் அல்ல, Don’t think Naicker’s life is ordinary life ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். நானும் வந்துவிடுகின்றேன் என்று கூறிவிட்டுப் போனார். உண்மையாகவே காங்கிரசுக்கு உழைத்தேன். என்று பேசியுள்ளார்.

காங்கிரசில் தந்தை பெரியார் இருந்தவரை அவரே முதல் நிலையில் இருந்திருக்கிறார் - ராஜாஜியின் இந்தக் கருத்துக்குப் பதில் என்ன?

தமிழ்நாட்டில் காந்தி எனும் - காந்தி நூற்றாண்டு நினைவாக வெளியிடப்பட்ட அதே நூல் (பக்கம் 392) பகரும் சான்று என்ன?

காந்தியார்மீது நான் காங்கிரசில் இருந்தபோது எனக்கு விசுவாசம் இருந்தது. 1921ஆக இருக்குமென்று நினைக்கிறேன். ஈரோட்டிற்கு காந்தியார் வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கும் வந்தார். அப்போது தான் நான் அவரை முதன்முதலில் சந்தித்த தாகும்.

காந்தியார் எனக்கு இரண்டு முறை கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஒரு முறை என்னுடைய தொண்டைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். மற்றொரு முறை அவர் எனக்குக் கடிதம் எழுதியது என்னுடைய கையில் வலி ஏற்பட்டு நான் துன்பப்பட்ட சமய மாகும். நீங்கள் இராட்டையை அதிக நேரம் சுழற்றியதால் இந்த வலி ஏற்பட்டிருக்கலாம் என்று தோன் றுகிறது. ஆகையால் வலி குறையும் வரை சிறிது காலத்திற்கு இராட் டையைச் சுழற்றுவதை நிறுத்தி வையுங்கள் என்று அவர் எழுதி யிருந்தார்.

சட்டமறுப்புப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு காலம். ஆயிரக்கணக்கில் ஆண் களும் பெண்களும் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறைக்குச் சென்று விட்டார்கள். அந்தச்சமயம் இந்திய அரசுடன் சமாதானப் பேச்சு நடத்தி அரசியலில் அமைதியான நிலையை ஏற்படுத்தக் கருதி சர். சங்கரன் நாயர் ஒரு சமாதான மாநாடு கூட்டினார். சமாதானப் பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு போராட்டத்தைக் காங்கிரஸ் கைவிட வேண்டுமென்று அவர் ஒரு நிபந்தனை கூறினார்.

அதை காந்தியார் ஏற்கவில்லை. இந்தப் போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை; ஈரோட்டில் ஈ.வெ. இராமசாமியின் தங்கை, மனைவி, ஆகியோர் கையில் இருக்கிறது என்று அந்த மாநாட் டிலேயே கூறினார் என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளதே!. காந்தியார், மோதி லால் நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயண் அலி சகோதரர்கள் என்று அத்தனைத் தலைவர்களும் ஈரோட்டில் தந்தை பெரியார் இல்லத்துக்குச் சென்று ஆலோசனை செய்யாத தலைவர்களே இல்லையே! தந்தை பெரியார் தான் பார்ப்பன எதிர்ப்பாளர் என்று குற்றப் பத்திரிகை படிக்கிறார்கள் - திரு.வி.க. அப்படிப் பட்டவரா?

அவர் என்ன சொல்கிறார்? தமிழ் நாட்டில் சத்தியாக்கிரகப் போருக்கு உரிய களனாக வேதாரண்யம் குறிக்கப் பட்டது. இராஜகோபாலாச்சாரியார் தண்டுகளுடன் திருச்சியினின்றும் புறப்பட்டார்.

சிதம்பரத்தினின்றும் ஒரு தண்டை நடாத்திச் செல்லத் தண்டபாணி பிள்ளை உள்ளிட்ட சிலர் முயன்றனர். அதற்கு என் தலைமை விரும்பப் பட்டது. அவ்விருப்பத்தைக் குலைக்க என் மனம் எழவில்லை. அதே சமயத்தில் இராஜகோபாலாச்சாரியார் பிடிபட்ட தும் தொடர்ந்தபோருக்கு யான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று கேள்வியுற்றேன். இராஜகோபாலாச்சாரி யார் கடிதமும் எழுதவில்லை. வேறு வழியாகத் தெரியப்படுத்தவுமில்லை. எனது நியமனம் வெறும் வதந்தி என்று கருதினேன். எதற்குஞ் சித்தமாயிருக்கலா மென்று எண்ணினேன்.

திருச்சியினின்றும் புறப்பட்ட படையையன்றி வேறுபடைகள் யாண்டும் திரளலாகாதென்றும், அவை வேதாரண்யம் நோக்கலாகாதென்றும் ஓர் அறிக்கை இராஜகோபாலாச் சாரியாரிடமிருந்து வெளிவந்தது. ஆச்சாரியாருக்குப் பின்னர் கே. சந்தானம் நியமிக்கப்பட்ட செய்தியும் எட்டியது. சிதம்பர முயற்சி சிதறியது. எழுந்த என் உள்ளமும் விழுந்தது. நிகழ்ந்தன இவ்வளவே.

பத்திரிகை உலகம் திருவிளையாடல் புரியத் தொடங்கியது. சில பத்திரிகை கள். கலியாணசுந்தர முதலியார் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சித்தமாயிருந்தார்; ஏமாற் றப்பட்டார். ஒரு பிராமணரல்லாதார் தலைமைபூண்டு படையைத் திரட்டிச் செல்லப் பிராமணர் கண் பார்க்குமோ என்று எழுதின. வேறு சில பத்திரிகைகள், முதலியார் வேதாரண்யம் புறப்பட்டு விட்டார் என்று திரித்தன. மற்றுஞ் சில பத்திரிகைகள் உண்மையை வெளியிட்டன. பத்திரிகைச் செய்திகள் நாட்டைக் குழப்பின. போர் முடியுந் தறுவாயில் எனக்கு அழைப்புகள் வந்தன. அவைகள் என் மனத்தைக் கவரவில்லை

(திரு.வி.க. எழுதி வைத்த வாழ்க்கைக் குறிப்பு - மி பக்கம் 318 -319)

மிதவாதியான திரு.வி.கவே மனம் புழுங்கும் அளவில் ஆச்சாரியாரே பார்ப்பனர் உணர்வோடு நடந்து கொண்டு இருக்கிறாரே! எவ்வளவுப் போர்வையைப் போட்டு மூடினாலும் பார்ப்பனர்களின் பூணூல் குணம் முண்டியடித்துக் கொண்டுதானே மேலே எழுந்து நிற்கிறது.

சென்னைக்கு வந்த காந்தியாரை 1.2.1946 அன்றுதான் முதன் முதலாக ம.பொ.சி. காந்தியாரைச் சந்திக்கிறார். திருவாளர் சி. ராஜகோபாலாச்சாரியார் ம.பொ.சி.யை அழைத்துச் சென்று காந்தியாரிடம் அறிமுகம் செய்து வைக்கின்றார்.
எப்படி சொல்லி அறிமுகம் செய்து வைக்கின்றார் என்பதுதான் இதில் முக்கியமானது.

எதற்கெடுத்தாலும் ம.பொ.சி.யைத் துணைக்கழைக்கும் துக்ளக்குக்கும் கே.சி. லட்சுமி நாராயணருக்கும் ஒரு சேதி... அந்த ம.பொ.சி.யைக் காந்தியாரிடம் அக்ரகாரத் தலைவர் ராஜாஜி எப்படி அறிமுகப்படுத்தினார் தெரியுமா?

கள் இறக்குவோர் சமூகத்தைச் சேர்ந்தவர் இவர் என்று அறிமுகம் செய்து வைக்கின்றார்

(ஆதாரம்: தமிழ்நாட்டில் காந்தி - பக்கம் 918)

எதிலும் ஜாதி பார்க்கும் குணம் ஆச்சாரியாரைச் சார்ந்தது.

வழக்கை வாபஸ் வாங்கிய சி.ஆர். ஆச்சாரியார்

1938ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த ஆச்சாரியார் அவர்கள் செய்த நெஞ்சத்துணிவான அக்கிரமங்களில் ஒன்று மட்டப்பாறைக் கலவர வழக்கை திரும்பப் பெற்றதாகும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லட்சாதிபதி ஆரியர் ஒருவர் மதுரை வட்டத்திலுள்ள மட்டப் பாறை கிராமத்தில் ஏழைக்குடி மக்களை அடித்தும் பல குடிசைகளுக் குத் தீ வைத்தும் அட்டகாசம் புரிந்தார். கட்சி பலமும் பண பலமும், ஆட்சி ஆதரவும் காலித்தனமும் ஒன்று சேர்ந்து விட்டால் போலீசும், நீதியும் நெருங்க முடியுமா? இந்த லங்காதகன வேலையை அப்படியே அழுத்தி விடுவதற்கான முயற்சி நடைபெற்றது. ஆனால் அப்போது இப்பகுதியில் போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த ஆர்.வி. ராஜன் என்ற நேர்மையாளர் (கீவளூரில் ஓய்வு) ஆட்சிக்கும் பணத் துக்கும் அஞ்சாமல் தீ வைத்த ஆரியர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கி விட்டார். அப்பொழுது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த வெள்ளையரும் இல்வாழ்க்கைத் தொடர்ந்து நடக்கு மாறு உத்திர விட்டார். ஆனால் போலீஸ் மந்திரியான முதலமைச்சர் ஆச்சாரியார் அவர்கள் தம் இனத்தார் ஒருவர்மீது வழக்குத் தொடர சம்மதிப்பாரா? சர்க்கார் இவ்வழக்கை வாபஸ் செய்து விட்டனர் என்று உத்தரவு பிறப்பித்துவிட்டார்.
(- விடுதலை 31.10.1955 தலையங்கம்)

தன் இனத்தவரைக் காப்பாற்ற அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடியவர்தான் ஆச்சாரியார் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

பிரதமர் நேரு மறைந்தபோது அகில உலகமும் நேருஜிக்குச் செலுத்த வேண் டிய புகழ் மாலைகள் யாவும் அவரது தனிப்பட்ட குண விசேஷங்களுக்குத் தானேயன்றி, அவரது கொள்கைக்கு அல்ல என்பதை அவர் (புதிய பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி) முக்கிய மாக உணர வேண்டியது. என்றார் ராஜாஜி.

மேலும், அதே வழியில்தான் நாங்களும் செல்வோம் என்று புதிய மந்திரி சபையினர் முடிவு செய்தால் அதுவே விவேகமாகாது. நேருஜிக்கு செய்யும் மரியாதையும் ஆகாது. நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது தான் நேருஜியின் ஒரே ஆசை. அதற்காக அவர் குறிப்பிட்ட மார்க்கத்தைப் பின்பற்றினார். அவற்றில் கண்ட குற்றங் களை அகற்றி, நல்ல மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்துத் தேச சுபீட்சத்தை - பெற்றுத் தர முடியுமானால் அதுவே நேரு அவர்களின் ஆன்ம சாந்திக்குரிய சிரார்த்தமாகும். என்றார்.

மறைந்த ஒரு தலைவரைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதுபோல ஆரம்பித்து, அவர் கொள்கையை மட்டம் தட்டிப் பேசுவது எந்தத் தரத்தைச் சேர்ந்தது? நேரு கொள்கைக்கு விரோதமாக அவரது ஆன்மா சாந்திக்குச் சிரார்த்தம் என்று பேசுவதெல்லாம் ராஜாஜி பெரிய மனிதர் என்ற போர்வையில் செய்யும் குசும்புதானே!

பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியோ நேரு கட்டிய அஸ்திவாரத்தின்மீது நமது கட்டடத்தைக் கட்டுவோம் என்று கூறிவிட்டார் என்பது வேறு சங்கதி.

அந்த லால்பகதூர் சாஸ்திரியைப் பற்றியும் என்ன கூறினார் ராஜாஜி?

ஸ்ரீலால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பெயருக்குப் பின்னால் வரும் சாஸ்திரி என்ற பட்டப் பெயர் அவருடைய சாதியைக் குறிக்கும் சொல்லாகவோ குடும்பப் பெயராகவோ சாதாரணமாகக் குறிப்பிடப்படவில்லை என்பதையும், காசி வித்யாபீடத்தில் அவர் சாஸ்திரங்களைப் படித்துத் தேர்வு பெற்றதாக அவரால் பெறப்பட்ட படிப்புப் பட்டமே! என்பதையும் முதலில் மக்கள் அறியச் செய்ய வேண் டியது அவசியமாகிறது.

அவர் சாதாரண லால்பகதூரே ஆவார். பி.ஏ., எம்.ஏ., போன்ற படிப்புப் பட்டங்களைப் பெற்றவர் போன்றே இவர் வித்யாபீட சாஸ்திரி ஆவார். திரு. சாஸ்திரி என்று குறிப்பிடுவதும் திரு பி.ஏ., திரு எம்.ஏ. என்று குறிப்பிடுவது போன்றதாகவே ஆகும்.

மற்றும் லால்பகதூர் என்பதில் உள்ள பகதூர் என்பதும் ஒரு பட்டமோ அல்லது தகுதி காட்டும் கவுரவமோ அல்ல. அது அவரது சொந்த பெயரே ஆகும் என்று சி.ஆர். என்ற கையொப் பம் இட்டு எழுதினார் என்றால் (சுயராஜ்யா 1.2.1964).

இதன் பொருள் என்ன? சாஸ்திரி பூணூல் போட்ட நம்பளவாள் அல்ல; ஏமாந்து விடாதீர்கள் என்று பார்ப் பனர்களுக்கு அடையாளம் காட்டும் அசல் அக்ரகார குணம்தானே!

ஆச்சாரியார் அப்பட்டமான பார்ப்பன ஜாதி வெறியர் - என்பதற்கு இன்னுமொரு ஆதாரப்பூர்வமான தகவல் உண்டு - சுயவிமர்சனம்கூட.!

Infact, in one occasion Rajaji Proudly said that he valued his Brahmin hood more than his chief Minister ship (CARAVAN -- APRIL (1) 1978 Gandhiji’s carusade against Casteism)

முதலமைச்சர் என்ற பதவியைவிட பிராமணன் என்ற தகுதியையே நான் அதிகமாக மதிக்கிறேன் என்று ராஜாஜி கூறினார். என்றால், அவர் என்ன பெரிய மனிதர் பண்பாளர் - பொது நலத் தலைவர்?

ராஜாஜியின் இந்த ஜாதி உணர்வை நேரிடையாக அறிந்தவர் என்ற முறையில்தான் சென்னை உயர்நீதிமன் றத்தில் தந்தை பெரியார் மீது போடப் பட்ட நீதிமன்ற அவதூறு வழக்கில், கீழ்க்கண்ட கருத்துகளையும், தகவல் களையும் தந்தை பெரியார் பதிவு செய்தார்.


பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சி யாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான். எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா? என்று கனம் ஜட்ஜுகள் சிந்தித்து நான் சொல்லுவதைத் தவறு என்று கருதலாம். நம் நாட்டில் இன்றைய தினம் உள்ள பார்ப்பனர்களில் ஆச் சாரிய புருஷர்களாய் இருக்கிறவர் களைத் தள்ளிவிட்டு, எல்லோரையும் ஒன்றுபோல் பாவித்து பொதுஜன நன்மைக்காகப் பாடுபடுகிற பார்ப்பனர் கள் என்று எண்ணியிருக்கின்ற தன் மையில், உயர்ந்த சீர்திருத்தக்காரர் - நாட்டின் விடுதலைக்காக பெரிய தியாகங்களைச் செய்தவர்கள் என்ற தன்மையில், இதுவரையில் எந்த இந்தியனும் வகித்திராத உயர்ந்த பதவி வகித்தவர்கள் என்கிற தன்மையில், முதல் வரிசையில் முதல்வராக இருக்கும் மாஜி கவர்னர் ஜெனரல் உயர்திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சொல்லுகிறார்கள்: நான் வேத, சாஸ்திர, புராண, இதிகாச, உபநிஷத் தர்மங்களில் முழு நம்பிக்கை உடை யவன்; ஜாதிப் பிரிவில் அதாவது, வர் ணாஸ்சிரம தர்மத்தில் மிக்க நம்பிக் கையும் கவலையும் உடையவன்; அவைகளைப் பரப்பவும். நிலை நிறுத்த வுமே நான் பாடுபடுகிறேன்; இனியும் அதற்காகவே பாடுபடுவேன் என்று சொல்லுகிறார்: எழுதுகிறார்: அதற்கு வேண்டி காரியங்களையும் செய்கிறார் என்றால், இனி யாரை மனதில் வைத்துக் கொண்டு எல்லா பார்ப்பனர்களும் இப்படித்தான் இருப்பார்களா? என்று நினைப்பது? வாயில் _ நாக்கில் _ குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது. பிறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைத் தின்னாது. அதுபோல வாக்கும் நம் பார்ப்பனர்கள் தன்மை என்பது உயர்நீதிமன்ற வரலாற்றில் இதற்கு முன் யாரும் பதிவு செய்திராத அரிய கருத்துரையை ஆதாரப் பூர்வமாகப் பதிவு செய்து விட்டாரே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
(நூல்: நீதி கெட்டது யாரால்?)

ராஜாஜிபற்றி நேரு

ஆச்சாரியாருக்கும் (C.R.) உலகத் திற்கும் இன்று சம்பந்தம் இல்லை. அவர் ஒரு கண்டெம்டு மெஷின் _ வேலைக்கு லாயக்கற்றவர். அவர் பேச்சு செயல்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் பழுதாகி வெளியில் போடப்பட்ட இயந்திரமே! என்று ஜவகர்லால் நேரு (20.6.1964) சரியாக எடை போட்டுத் தூக்கி எறிந்து விட்டாரே!

அக்கிரகார உணர்ச்சியுடன் அக்கிரமமாக எழுதுகோல் பிடிக்கும் லட்சுமி நாராயண அய்யர்கள் இதைப்பற்றியெல்லாம் என்ன கூற முடியும்?

பெரியாருக்கு எதிராக ஏதேதோ சந்தர்ப்பத்தில் எழுதுகோல் பிடித்தவர் களையெல்லாம் தேடி அழைத்து வந்து பந்தியில் உட்கார வைப்பவர்கள் - நேரு வையே அழைத்து வந்து ஆச்சாரியாரை அம்பலப்படுத்தி விட்டோமே _ என்ன பதில்?

ஆச்சாரியார்பற்றி அண்ணல் அம்பேத்கர்

தாழ்த்தப்பட்டோருக்காக நீதிக் கட்சியும், திராவிட இயக்கமும் தந்தை பெரியாரும் ஆற்றிய அருந்தொண்டு களை பட்டியலிட்டுக் காட்டியிருந் தோம். அக்கிரகாரத்தின் ஆனந்த பைரவி ராகமாகிய ஆச்சாரியார்பற்றி அண்ணல் அம்பேத்கர் படம் பிடித்துக் காட்டியது மிகவும் முக்கியமானது.

நான் அந்தக் காலத்தில் எக்சிகி யூட்டிவ் கவுன்சில் மெம்பராக இருந்த போது வெள்ளைக்கார வைசிராயுடன் பேசி, விளக்கி, தாழ்த்தப்பட்ட இனத் திலிருந்த திறமைமிக்க மாணவர்களைப் பொறுக்கி எடுத்து, மேல் நாட்டுக்கு அனுப்பி, கல்வி பெற வசதியளிக்கும் திட்டத்தை சர்க்கார் செய்ய வேண்டும் என்பதை அவர் ஒப்புக் கொள்ளும்படிச் செய்தேன்.

அதன்படி அப்பொழுது ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாயை ஒதுக்கினார்கள். இது தொடர்ந்து நடந்து வந்தது. நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகியவுடன் என் நண்பர் ராஜகோபாலாச்சாரியார் இதை ஒழித்துக் கட்டிவிட்டார் (Report of Backward Calsses Commission Vol III பக்கம் 75 பாரா 2) என்று ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சி மிக்க தலைவர் அண்ணல் அம்பேத்கரும் ஆச்சாரியாரின் பூணூல் புத்தியை அதிகாரப்பூர்வமாக அம்பலப் படுத்தி விட்டாரே! என்ன பதில்?

மூக்கறுபட்டார் ராஜாஜி

அண்ணா மறைந்த நிலையில் சென்னை கடற்கரையில் இரங்கல் கூட்டம் 8.2.1969 அன்று நடைபெற்றது. தந்தை பெரியார், பிரதமர் இந்திரா காந்தி, ராஜாஜி, கலைஞர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டனர். ஓர் இரங்கல் கூட்டத்தில் எதைப் பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் பேசி, பெரியாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாரே!

ராஜாஜி என்ன பேசினார்?

அண்ணா அவர்கள் சிறுவயதில், கடவுள் - மத நம்பிக்கையற்றவராக இருந்தார். வயதானதும் கடவுள், மத நம்பிக்கை உடையவராகி விட்டார் என்று குறிப்பிட்டார். (ஆச்சாரியார் இப்படிப் பேசியதை - திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் அப்படியே எழுதி தந்தை பெரியாரிடம் கொடுத்தார்)

ஆச்சாரியாருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தந்தை பெரியார் அந்தக் கூட்டத்திலேயே பேசினார்.

அண்ணா அவர்கள் ஓர் பகுத்தறிவுவாதி. கடவுள், மதம், சாஸ்திரம் சம் பிரதாயங்களில் நம்பிக்கையில்லாதவர். அவர் பதவிக்கு வந்த போதும் கடவுளை நம்பாதவர் அவர். அதனை அவர் காரியத்தில் காட்டினார். எனக்குச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன். இந்த மந்திரி சபையையே எனக்குக் காணிக்கையாக வைத்திருப்பதாக முதல் அமைச்சர் அண்ணா சொன்னார்.

அரசாங்க அலுவலகங்களில் இருந்த கடவுள் படங்களை அகற்ற அண்ணா உத்தரவு போட்டார். இதன் மூலம் தனக்கு மூடநம்பிக்கை இல்லை என்பதைக் காட்டிக் கொண்டார். சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக் கினார். அதிலே கடவுள் மதம் புகக் கூடாது என்பதற்கு வழி செய்ததுதான் முக்கியமாகும். அவர் சிறந்த பகுத்தறிவு வாதி, அவ்வளவு பெரிய மேதைக்கு 30 லட்சம் பேர் பின் தொடர்ந்தார்கள் என்றால் (இறுதி ஊர்வலத்தில்) இந்தநாட்டு மக்களை அவர் அவ்வளவு தூரத்திற்குப் பயன்படுத்தி விட்டார் என்று அர்த்தம் (விடுதலை 13.2.1969 பக்கம் 3)

என்று அருமையாக அண்ணாவைப் படம் பிடித்துக் காட்டி, லட்சோப லட்ச மக்கள் மத்தியில் ஆச்சாரியாரின் மூக்கை அறுத்தாரே அய்யா! பெரிய மனிதன் - ஆச்சாரியார் இப்படி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டு விட்டாரே என்று தலையில் அடித்துக் கொண்டனர் பொது மக்கள்.

நீதிக்கட்சியும், பெரியாரும் தேசத் துரோகம் செய்துவிட்டதாகப் பொங்கி வழிகிறார்களே! (அது உண்மையல்ல என்பதுவெளிப்படை)
இதே ஆச்சாரியாருக்கு பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் வாழ்த்து அனுப்ப வில்லையா? அப்பொழுது ஆச்சாரியாரின் கொடும்பாவி நாடு தழுவிய அளவில் எரிக்கப்படவில்லையா?

சீன ஆக்ரமிப்பின்போது இந்தியத் தரப்பில் எத்தனைப் பேர் செத்தார்கள் என்று கேட்கப் போய் கடும் கண்டனப் புயலுக்கு ஆளாகவில்லையா - ஆச் சாரியார்?

அரசியலில் முதிர்ச்சி கண்டவர் என்றும் ஆள்வதில் அசகாயசூரர் என்றும் அக்ரகாரம் மடியில் தூக்கி வைத்துத் தாலாட்டிக் கொஞ்சுகிறதே - ஒரு யுத்தக் காலத்தில் எதைப் பேச வேண்டும் _ எதைக் கேட்க வேண்டும் என்கிற அடிப்படை ஞானமின்றி நடந்து கொண்டதற்கு என்ன பதில்?

1971 சனவரி 23இல் சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில், ராமன் படம் செருப்பால் அடிக்கப்பட்டது என்று கூறி, பெரிய அளவில் பிரச்சாரம் செய்தனரே! அந்தத் தேர்தலில் இதனை சாக்காகக் கொண்டு (அத்தேர்தலில் தி.மு.க. _ காங்கிரஸ் கூட்டு; ராஜாஜி - காமராசர் கூட்டு) பார்ப்பன ஊடகங்களின் உச்சக் கட்டப் பிரச்சாரமும் செய்து திமுகவைத் தோற்கடிக்க நிர்வாணமாக நின்றனரே!

1967 தேர்தலில் 138 இடங்களைப் பெற்ற தி.மு.க., ராமன் செருப்படிப் பிரச்சாரத் தேர்தலில் (1971இல்) 183 இடங்களைக் கம்பீரமாகப் பெற்று வெற்றி உலா வந்ததே - நினைவில் இருக்கிறதா? ஆச்சாரியாரின் புலம்பல்!

தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது, மதம் சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்பவரின் ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரி சபை.

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும் என்று பாடி வைத்ததை நினைவு கொண்டு தர்மம் நிச்சயமாக வெல்லத் தான் போகிறது என்று உறுதி பெறுவோம். நம்முடைய பண்டைய பாவங் களுக்காக இன்று கூலி தருகிறோம் என்ற உணர்வுடன் இறைவனை உளம் நெகிழ்ந்து பிரார்த்தித்து அவரவர் கடமையைச் செய்து வந்தால் இறைவன் நிச்சயம் செவிசாய்ப்பான். தமிழகத்தின் பொல்லாத சாபத் தீட்டு நீங்கி இங்கு தெய்வீகம் மீண்டும் பொலியும். இனி தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதியிழந்து விட்டது இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறி விட வேண்டும் என்று சில மகாபுருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர் புனிதத் தமிழ் மண்ணுக்கு இந்த இழுக்கும் அழுக்கும் நீங்கும் வண்ணம் நாம் அனைவரும் உறுதியான பக்தி செலுத்தி இறைவன் உள்ளத்தை உருக்கி அவனருள் பெற்று, இந்த நாட்டைத் தர்ம பூமியாக்க வேண்டும்.

ஸ்ரீராம நவமி வருகிறது. சத்திய, தர்மமூர்த்தியாக வந்த பரமனே ஸ்ரீராமன், அந்த ராமனை முன் வைத்தே - அந்த ராமனை உள்ளத்தில் உறைவித்தே _ காந்தியடிகள் சுதந்திரம் பெற்றுத் தந்தார். ராமராஜ்யமாக சுயராஜ்ய இந்தியா திகழ வேண்டும் என்பதே மகாத்மாவின் கனவாக இருந்தது. அந்தக் கனவு பகற்கனவாகி விடக் கூடாது நூற்றுக்கு நூறு மெய்யாக வேண்டும். அந்த அளவுக்கு நாம் உண்மை ஆஸ்திகர்களாவதற்குத் தர்மமூர்த்தியான ராமனைச் சரண்புக வேண்டும். இந்த ராமநவமியன்று இந்த திவ்ய விரதத்தைத் தொடங்குவோம். (கல்கி 4.4.1971)

உடம்பெல்லாம் மூளை என்று உலகுக்கெல்லாம் பார்ப்பனர்களும் அவர்தம் ஊடகங்களும் பறைசாற்றும் குல்லூகப்பட்டர் ஆச்சாரியார் - தந்தை பெரியார் முன் சரணடைந்தார் - தோல்வியை ஒப்புக் கொண்டார் என்பதைப் பார்ப்பனர்கள் மரியாதையாக ஒப்புக் கொள்வார்களா?

---------------- சந்திப்போம்! ---" விடுதலை” ஞாயிறுமலர் 27-8-2011 இல் தி.க. பொதுச் செயலாளர் மானமிகு, கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை