Search This Blog

31.5.12

ஆதாம் ஏவாள் கதை - பெரியார்



உலகம் எப்படிப் பிறந்தது? உயிர் எப்படி த் தோன்றியது? என்ற கேள்விகள் பகுத்தறிவு வாதத்துக்கு எப்படி அடிப்படையான வையோ அதே போன்று மதம் மூடநம்பிக்கைக்கும் அடிப்படையானது. ஒவ்வொரு மதமும் தனக்கென்று கற்பித்துக்கொண்ட வினோதக் கற்பனைக் கதைகள் உலக மதங்கள் அனைத்திலும் உண்டு என்றாலும் கிறிஸ்தவ மதத்தின் கதையே உலகின் பெரும் பகுதியில் உள்ள பக்தர்களால் தீவிரமாக நம்பப்படுகிறது.

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தான் என்று தொடங்கி ஆறுநாட்களில் உலகத்தைப் பூரணமாக சிருஷ்டி செய்து முடித்தான் ஆண்டவன் என்று பைபிளின் ஆதியாகமம் கூறுகிறது. அந்த சிருஷ்டியின் கடைசிப்படிக்கட்டில் உள்ள ஆதாம், அவன் விலாஎலும்பிலிருந்து ஏவாள் சிருஷ்டி!

உண்மையில் இக்கதையின் பிறப்பிடம் கிறிஸ்தவ மதத்தின் பிறப்பிடமான அய்ரோப்பாக்கண்டம் கூட அல்ல; கடவுள் களி மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கியதாகக் கதை கூறும் பழக்கம் சிறியசிறிய மாறுதல்களுடன் உலகின் பல பாகங்களில் பூர்வகுடியினரிடம் நிலவியது. குழந்தைத் தனமான இக்கற்பனை பற்றி சர் ஜே. ஜி. பிரேசர் என்பவர் எழுதிய நூல் ஒன்றில் () ஏராளமான தகவல்களைத் தருகிறார்.

பாலினேசியா; தெற்கு ஆசியா, வடக்கு அமெரிக்கா பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம் ஆகிய நாடுகளில் இந்தக்கதை நிலவியது. பாலினேசியர்களில் தகித்தியர்களும் மவோரியர்களும் கூறிய கதைகளில் கடவுள் முதல் மனிதனை மண்ணினால் உருவாக்கியதாகவும், அவன் உறங்கியபோது அவனது எலும்பு ஒன்றை உருவி முதல் பெண்ணைச் சிருஷ்டி செய்ததாகவும் காணப்படுகிறது. இதை அப்படியே ஈயடிச்சான் காப்பி செய்துவிட்டது பைபிள்.

பைபிளை எழுதியவர்கள் செய்த ஒரே ஒரு வேலை இவர்கள் இருவருக்கும் பெயர் கொடுத்ததுதான். ஆணின் பெயர் ஆதாம்; பெண்ணின் பெயர் ஏவாள். முதலில் பைபிள் எழுதப்பட்ட எபிரேயமொழியில் ஆதாம் என்றால் மனிதன் என்றுதான் பொருள். அதையே -அந்தப் பொதுப்-பெயர்ச் சொல்லையே, முதல் மனிதனின் பெயராகப் பின்னர் ஆக்கிக்கொண்டார்கள். இச்சொல் பொதுப்பெயர்ச் சொல்லா அல்லது ஒரு மனிதனின் பெயரா என்று திடமாக உணரமுடியாமல் கிரேக்க மொழியில் பைபிளை மொழி பெயர்த்தவர்கள் திண்டாடியிருக்கிறார்கள்

இதேபோல், ஏவாள் என்பதும் குழப்பமான சொல். ஏவாள் என்றால் எபிரேய மொழியில் ஜீவன் என்றும், பாம்பு என்றும் பொருள்படும் ஒரு சொல். ஏதேன் தோட்டத்தில் பாம்பு உருவில் சாத்தான் வந்ததாகக் கதை பண்ணிய கோளாறு ஒருபுறம்; ஜீவவிருட்சத்தின் நன்மை தீமை அறியக் கூடிய கனியை உண்டதாகக் கற்பனை செய்தது மற்றொருபுறம்; ஆக, ஏவாள் என்ற குழப்பமான பொதுச்சொல் முதல் பெண்ணின் பெயரைக் குறிப்பதாயிற்று.

பகுத்தறிவுக் கண் கொண்டு பார்க்கும்போது எல்லாம் விஞ்ஞானத்துக்குப் பொருத்தமில்லாத அஞ்ஞானக் குப்பைகள்; கற்பனையால் கடவுளை மக்களின் மனதில் நிலைநாட்ட முயன்றவர்களின் சரடுகள் என்று தெளிவாகும்.

ஆண்டவன் மீது ஆணை

சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பதவி ஏற்கும்போது தெய்வ சாட்சியாக என்று ஆண்டவன் மீது ஆணை-யிட்டுப் பிரமாணம் எடுப்பதுதான் பழைய பழக்கம்.

பகுத்தறிவாளர் கட்சியான திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இப் பழக்கம் கொஞ்சம் கொஞ்ச-மாக தமிழகத்தில் ஒழிந்து வருகிறது. கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், உறுப்பினர்களும் இப்பழக்கத்தைக் கடைப்-பிடிப்பதில்லை.

இவர்கள் எல்லாம் மனசாட்சியின் படி என்று கூறி பதவிப்பிரமாணம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. இவ்வாறு சட்ட சம்மதம் எப்படிக் கிடைத்தது?

மதநம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்கள் பாராளுமன்றத்திலும், நீதி மன்றங்களிலும் பதவிப்பிரமாணம் எடுக்க புது வழி ஒன்றைக் காணவேண்டும் என்று இயக்கம் ஒன்றை இங்கிலாந்தில் நடத்தினார் சார்லஸ் பிராட்லா. இதன் விளைவாக 1888 ஆம் ஆண்டு காமன்ஸ் சபையில் மசோதா ஒன்று நிறைவேற்றப்-பட்டது. இந்த மசோதாவை 1009 ஆம் ஆண்டு பிரமாணச் சட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

சட்டமியற்றியதும் பிரச்னை தீர்ந்ததா? இல்லை. இதிலே ஒரு வேடிக்கையும் உண்டு. பல நீதிமன்றங்களில் பிரமாணம் எடுக்கும்-போது கடவுளைக் கைவிடத் தயாராக இருந்-தவர்களைக் கூட அவ்விதம் செய்ய விடுவ-தில்லை, புதுச்சட்ட விதிமுறை அடங்கிய புத்தகம் காணவில்லை என்று மேலதிகாரிகள் பொய் சொல்லிக் கடவுளையே திணித்து விடுவார்கள்.

இப்படிப்பட்டவர்களை வழிக்குக்கொண்டு-வர பகுத்தறிவு வாதிகள் ஒரு புதிய தந்திரத்தைக் கடைப்பிடித்தனர். இவர்களே தங்களுடன் ஒரு சட்டவிதிப் புத்தகத்தைக் கையோடு கொண்டு வந்துவிடுவார்கள். பழமையான மேலதிகாரிகள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறுவார்கள்.

சீப்பை மறைத்துவைத்துக்கொண்டால் கல்யாணமே நின்று போகும் என்று கனவு காணும் பழக்கம் இன்று இங்குள்ள பழமை-யாளர்களிடம் மட்டும் தான் இருக்கிறதென்-பதில்லை; அது உலகின் மிகப் பழங்காலத்திலேயே பிற்போக்கு வாதிகளின் கை வந்த கலை-போலும்!

இதையும் மீறி எந்த மேலதிகாரியாவது நீதிமன்றத்தில் பிரமாணம் எடுப்பது பற்றி சர்ச்சைகளைக் கிளப்பினால் அது நீதிமன்றத்தையே அவமதித்த குற்றமாகும் என்று மிரட்டிய பிறகு தான் பழமையாளர்கள் பணிந்தார்கள்

அன்று இங்கிலாந்தில் ஏற்பட்ட இந்தச் சீர்திருத்தம் அப்படியே இந்தியாவிலும் பின்னர் ஏற்கப்பட்டது.

------------------தந்தை பெரியார்- "உண்மை” ஜனவரி 01-15_2010 இதழிலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது (மறுபிரசுரம்)


5 comments:

தமிழ் ஓவியா said...

வேலூர் தீர்மானம்

வேலூரில் 29.5.2012 அன்று நடைபெற்ற புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டில் 14 முத்து ஒளிரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

1996 ஆம் ஆண்டு முதல் இந்திய நாடாளு மன்றத்தில் நிலுவையில் இருக்கும் சட்ட முன்வடிவு - பெண்களுக்குச் சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் 33 விழுக்காடு பற்றியது. மாநிலங்களவையில் மூன்றில் இரு பங்கு ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டம் மக்களவை யில் முடக்கப்பட்டுவிட்டது.

பொதுவாக இந்த சட்டத்தின்மீது கட்சிகளைக் கடந்த ஆண் ஆதிக்க உணர்வு தலைதூக்கி நிற்கிறது. பெரும்பாலான ஆண்கள் என்ன நினைக்கிறார்கள்? பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்கள் அளிக்கப்பட்டால் தங்களின் இடம் பறிமுதல் ஆகிவிடுமோ என்ற சொந்த அச்சம்தான் இதன் பின்னணியில் குடிகொண்டிருக்கிறது.

இதில் உள் ஒதுக்கீட்டுக்கு வகை செய்யப்பட வேண்டும் என்பது திராவிடர் கழகத்தின் தெளிவான தனித்த நிலைப்பாடாகும்.

பாலியல் நீதியோடு சமூகநீதியும் தேவைப்படு கிறது. உள் ஒதுக்கீட்டுக்கு வழி செய்யப்படா விட்டால் பெரும்பாலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற போர்வையில் உயர்ஜாதிக் கூட்டம் கபளீகரம் செய்துவிடும்.

தமிழ்நாட்டை மய்யமாக வைத்து இந்தப் பிரச்சினையை அணுகக்கூடாது. தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தக் கருத்துகள் 75 ஆண்டு களுக்குமுன் தூவப்பட்டு விட்டன. பெண்களுக் கான ஒதுக்கீடு குறித்து பல பத்தாண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் பேசி இருக்கிறார். மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் உள்ளன.

பொதுக்கூட்டங்களிலும், திருமண நிகழ்ச்சி களிலும் பெண்ணுரிமைக்கான சிந்தனை வித்துக் கள் ஊன்றப்பட்டுள்ளன. எனவே, இங்கு தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் கூட உயர்ஜாதிக்காரப் பெண்களை வேட்பாளர்களாக முன்னிறுத்த முன்வரமாட்டார்கள்.

ஆனால், மற்ற மற்ற மாநிலங்களில் நிலைமையே வேறு; மூன்றில் ஒரு பாகம் பெண்கள் தேர்வு செய்யப்படும் நிலையில் உயர்ஜாதியிலிருந்து மிகப்பெரிய எண்ணிக்கையில் பெண்கள் நாடாளுமன்றத்திலோ, சட்டப்பேரவைகளிலோ இடம்பெறுவார்களேயானால், அரும்பாடுபட்டு பெற்று இருக்கும் சமூகநீதிக்கே ஆபத்தானதாக மாறக்கூடிய ஆபத்து அதில் பதுங்கி இருக்கிறது.

மேலும், அடித்தட்டுப் பெண்கள் பிரச்சினைகள் குறித்து உயர்ஜாதி வட்டாரத்தின் பெண்கள் குரல் கொடுப்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கவும் முடியாது.

இவற்றையெல்லாம் மனதிற்கொண்டே இந்தப் பிரச்சினை அணுகப்படவேண்டும். இப்பொழுது பொதுவாகச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள லாம் - உள் ஒதுக்கீடு குறித்து பிறகு சட்டம் செய்துகொள்ளலாம் என்பதெல்லாம் வெறும் ஏமாற்றும் பேச்சேயாகும்.

ஒரு சட்டத்தைச் செய்யும்போதே ஒழுங்காகச் செய்துவிடவேண்டாமா? இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வில் வழி செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்த போதே பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சேர்த்து சட்டம் செய்யப்படவேண்டும் என்ற குரலை எழுப்பிய போது, அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்; இப்பொழுது முதலில் இது நடக்கட்டும் என்று சொல்லப்பட்டதே - எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன? சட்டம் இயற்றப்பட்டதா?

இனிமேலும் பெண்கள் மசோதாவை காலந் தாழ்த்துவது பெண்களைப் பலகீனமாக எடை போடும் ஏளனமாகும். எனவே, வீதிகளில் பெண்கள் இறங்கிப் போராடும் ஒரு நிலையை வேலூர்த் தீர்மானம் வலியுறுத்துகிறது.

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் - என்பது ஒரு வகையான முழக்கம். இப்பொழுது நம் முழக்கம் இந்தியப் பெண்களே ஒன்று சேர்வீர்! களம் அமைப்போம் - காரிய வெற்றியைப் பெறுவோம்.

வேலூர் மாநாட்டின் அடிநாதம் இதுதான்!31-5-2012

தமிழ் ஓவியா said...

- தொகுப்பு: மின்சாரம்

கலை நிகழ்ச்சிகள் - பேசா நாடகம் - நூல்கள் வெளியீடு - தீர்மானங்கள்

மாநாட்டு நிறைவுப் பேருரை தமிழர் தலைவர் - மக்கள் கடலில் மிதந்தது கோட்டை மைதானம்


வேலூர் மே 31- வேலூர் புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டின் மாலை நிகழ்ச்சிகள், பேரணி, கலை நிகழ்ச்சிகள், நூல் வெளியீடு, தீர்மானங்கள் - உரை வீச்சுகள் என்று பல்வேறு சிறப்புகளுடன் வரலாற்றுப் பெருமையோடு நிறைவுற்றது.

பல்வேறு அம்சங்களுடன், மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளுடன், பல்லாயிரக் கணக்கான பொது மக்களைச் சந்தித்து வந்த - புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டுப் பேரணி மாலை 6 மணி அளவில் வேலூர் கோட்டை மைதானத்தை வந்தடைந்தது.

ஜெயமணி குமாரின் மந்திரமா? தந்திரமா?

பேரணி உள்ளே நுழையும்போதே- பொது மக்கள் மைதானத்தில் வெள்ளம் போல் திரண்டிருந்தனர். திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசையும், அதனைத் தொடர்ந்து தோழியர் ஜெயமணி குமார் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியும் கலை கட்டியிருந்தது.

பெண் ஒருவர் இந்தக் கலையில் கை தேர்ந்து மக்களிடம் விளக்கிய காட்சியை மிகுந்த ஆர்வத்துடன் பொது மக்கள் பார்த்து ரசித்தனர்.

ஒவ்வொரு காட்சியையும் செய்து காட்டி, மந்திரமல்ல - தந்திரமே என்று அவர் நிரூபித்தபோது மக்கள் இவ்வளவு எளிதாக ஏமாந்து போய்விட்டோமே என்று திகைத்தனர். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவர் செய்து காட்டியபோது பொதுமக்கள் பகுதியிலிருந்து பலத்த கர ஒலி வெடித்துக் கிளம்பியது.

மக்கள் கடல் ரசித்த கலை நிகழ்ச்சிகள்

திறந்த வெளி மாநாட்டில் மாணவிகள் நடத்திக் காட்டிய கலை நிகழ்ச்சிகள் மிக மிக நேர்த்தியானவை. வைத்த விழி வாங்காமல் ருசித்து, இரசித்து மகிழ்ந்தனர் என்றால் அது மிகையல்ல.

புரட்சிக் கவிஞர் பாடலுக்கும், எழுச்சிக் கவிஞர் காசியானந்தன் பாடலுக்கும் மாணவியர் நாட்டியம் ஆடி மகிழ்வித்தனர். அத்தனையும் இனவுணர்வு - பெண்கள் புத்துலகப் பகுத்தறிவுப் பாடல்கள்!

மோகனப்பிரியா, அறிவுச்சுடர், சு.ஓவியா, மதிவதனி, அ.அறிவுமதி, த.ஓவியா ஆகிய மாணவிகள் மிகமிகச் சிறப்பாக நடனமாடி மகிழ்வித்தனர். (பலத்த கரஒலி!)
குடியாத்தம் கல்லூரி மாணவி சரண்யா பத்து வகையான உடற்பயிற்சிகளை (யோகா) செய்து காட்டி மயிர்க் கூச்செறியச் செய்தார். அவருக்கு மண்டலத் தலைவர் பா.அருணாச்சலம் ரூ.500 அளித்து ஊக்குவித்தார்!

பேசா நாடகம்

பெண்கள் சமையல்காரி, வரதட்சணை கொண்டு வரவேண்டியவள், பிள்ளை பெறும் எந்திரம் என்கிற அடிமை நிலையைச் சித்தரிக்கும் பேசா நாடகம் ஒன்று - புதுமையானதாகவும் போற்றத் தகுந்ததாக அமைந் திருந்தது.

மோகனப்பிரியா, தமிழ்நேசன், கமலேஷ், சங்கநிதி, இனியன், இசை ஆகிய மாணவச் செல்வங்கள் பங்கு கொண்டு பாங்காக நடித்துக் காட்டினர். பேசாமல், அனைத்து உணர்வுகளையும் சைகைகளின் மூலமும், உடல் உறுப்புகளின் அசைவுகள் மூலமும் அந்த மாணவச் செல்வங்கள் நடத்தியது கண்டு பாராட்டாதார் யாருமில்லை.

பயிற்றுநர் திருச்சி கல்லூரி மாணவர் ரெங்கராசன் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். அவருக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டினார் தமிழர் தலைவர்.

மகளிர் சமூகக் காப்பு அணி

மகளிர் சமூகக் காப்பணியின் இயக்குநர் வெ. அழகுமணி அதில் பங்கேற்ற மாணவிகள் வி.பிரியதர்சினி, சு.புனிதவல்லி, டி.தேவி., க.சொர்ணதீபா, ச.இரேவதி, கோ.மங்கை, கோ.பார்கவி, இ.மணிமொழி, இ.தேன்மொழி, சு.பொன்மணி, ச.செந்தமிழ் யாழினி ச.செந்தமிழ் இன்மொழி, சு.பொன்மணி, ப.சரண்யா, மு.முகிலாசிறீ, சு.இராதிகா, க.வெண்ணிலா, சி.குழலினி, சி.யாழினி, சு.மணிமொழி, ம.புவனேசுவரி, சர்மிளா, கோகிலா, இரம்யா ஆகியோருக்குக் கழகத் தலைவர் சான்றிதழ்கள் அளித்துப் பாராட்டினார்.

தீர்மானங்கள் 14 தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு விடிவு காணும் வகையில் பதினான்கு நறுக்குத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. (காண்க: விடுதலை 30-5-2012 பக்கம் 4)

திராவிடர் கழக மகளிரணி மாநில அமைப்பாளர் கலைச்செல்வி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநாட்டுக்கு மாநில மகளிர் பாசறைத் தலைவர் டெய்சி. மணியம்மை தலைமை வகித்தார்.

தமிழ் ஓவியா said...

லதாராணி - துபாய்

துபாய் - பாவலர் லதாராணி மாநாட்டின் தொடக்க உரையை ஆற்றினார். அவர் தம் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

தலைவர்களில் பலவகை உண்டு. பெரும்பாலோர் தோற்றமளிக்கும் தலைவர்கள்தான் நம் நாட்டில் உண்டு. ஆனால் தந்தை பெரியார் அவர்களோ எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் தலைவர் ஆவார்.

பெண்ணுரிமையில் தந்தை பெரியார் சிந்தித்த அளவுக்கு யாரும் சிந்தித்தது கிடையாது. நம் பெண்களுக்காக தந்தை பெரியார் எவ்வளவோ அவமானங்களைச் சந்தித்து இருக்கிறார்.

உண்மையான ஒரு தலைவரின் மரணம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அப்படித்தான் தந்தை பெரியார் நம் சமூகத்தில் உள்ளார்.

தந்தை பெரியார் அவர்களால் நாம் கல்வி உரிமை பெற்றோம்; உத்தியோக வாய்ப்புகளைப் பெற்றோம். ஆனால் இன்னும் மூடநம்பிக்கைகளிலிருந்து நம் பெண்கள் விடுதலை பெற்றனரா? இன்னும் நித்தியானந்தாக்கள் தோன்றிக் கொண்டுள்ளனரே, இன்னும் ஜெயேந்திரர்கள் ஜெகத்குரு என்று சொல்லப்படுகிறார்களே.



தமிழர் தலைவருடன் பேசா நாடகத்தில் பங்கேற்ற பிஞ்சுகள்

நகைக் கடைக்காரன் அட்சய திருதியை என்கிறான் - நம் பெண்கள் ஏமாறுகிறார்களே! புடவைக் கடைக்காரன் தங்களிடம் தேங்கிக் கிடக்கும் புடவைகளின் நிறத்திற்கேற்ப சகோதரிக்குப் பச்சை நிறப் புடவை வாங்கிக் கொடுக்கச் சொல்லுகிறான். அண்ணிக்கு ஆகாது, சிகப்புப் புடவையை வாங்கிக் கொடுக்கச் சொல்லு கிறானே. இந்த வியாபாரிகள் தங்கள் தொழிலுக்கு பக்தியைத் தந்திரமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்களே.

இராணுவ இரகசியத்தை வெளிநாட்டுக்குக் காட்டிக் கொடுப்பவன் மட்டும் தேசத் துரோகியல்ல - ஒரு நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடை போடுபவனும் தேசத் துரோகியே! என்று அருமையான கருத்துக்களை எடுத்து வைத்தார் தமிழ் ஆர்வலர் துபாயைச் சேர்ந்த பாவலர் லதாராணி.

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, க.திருமகள், மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி ஆகியோரின் உரையைத் தொடர்ந்து கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி உரையாற்றினார்.

(மாலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விழாக் குழுவின் சார்பில் பயனாடைகளை அணிவித்து உரையாற்றினார்.)

பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி தம் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

தமிழ் ஓவியா said...

பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு வகை உயர்ந்த மரியாதைக்குரியவர்களாக இப்போது மதிக்கப் படுகின்றனர். முன்பொரு காலத்தில் இந்த நிலை இருந்ததா? கறுப்புப் புடவை அணிந்து கூட்டங்களுக்கோ, மாநாடுகளுக்கோ சென்றால் என்ன சொல்லுவார்கள்? போவுது பார் பொம்பளை! கறுப்புச் சேலை கட்டிக்கிட்டு குடும்பத்துப் பெண்கள் செய்யக் கூடிய காரியமா இது? இந்தக் குடும்பம் உருப்படுமா? என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டு சாபமிட்ட காலம் இருந்ததுண்டு.

இப்படி அவமானப்படுத்தப்பட்ட நம் இயக்கத்தவர் களின் அஸ்திவாரத்தின் மீது நின்றுதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்; மரியாதையையும் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

நளனுக்குத் துணை போன மனைவியும், ராமன் கட்டளைக்குக் கட்டுப்பட்டுக் காட்டுக்குப் போன சீதையும் பெண்களுக்கு வழிகாட்ட முடியுமா?

இது ஏதோ திராவிடர் கழகப் பெண்கள் பிரச்சினை மட்டுமல்ல. அனைத்துப் பெண்களும் சிந்திப்பதற்கான கருத்துக்கள்தான். பெண்கள் மாநாட்டை திராவிடர் கழகம் கூட்டுவது ஒட்டு மொத்த பெண்களின் விடுதலைக்காகத்தான் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி.

ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம்

கழகப் பொதுக் குழு உறுப்பினர் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்கள் தம் உரையில் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

எனக்கு இந்த ஊர் மாமனார் - மாமியார் வீடு. டார்பிடோ ஜனார்த்தனம் அவர்களைத் திருமணம் செய்து கொண்டதால் மட்டுமல்ல - இது மாமியார் வீடு. திருமணமாகி சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்த வேலூர் சிறை என்ற மாமியார் வீட்டுக்குதான் என் துணைவரோடு வந்தேன் என்று அவர் சொன்னது அனைவரும் இரசிக்கும்படி இருந்தது.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் ஒவ்வொன்றும் அருமையானவை. நமது மாநாட்டின் இன்றைய தீர்மானங்கள் - நாளைய நம் நாட்டுச் சட்டங்கள் ஆகும்.

எங்களுக்குப் பின்னர் அடுத்த தலைமுறையினர் தயாராகிவிட்டனர் என்பதை இம்மாநாட்டில் நேரில் கண்டு மிகப் பெரிய அளவில் மனநிறைவுடன் உள்ளோம் - மகிழ்கிறோம்.

இன்றைக்குச் சிலர் கிளம்பியிருக்கின்றனர். திராவிடத்தால் நாம் வீழ்ந்தோம் என்று சொல்லிக் கொண்டு. அப்படிச் சொல்பவர்களை விட பயித்தியக் காரர்கள் வேறு யாரும் கிடையாது. அப்படிச் சொல்லு பவர்களை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.

தன்மான உணர்வும், பகுத்தறிவு உணர்வும் நமக்கு யார் கொடுத்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா என்ற வினாவுடன் தன் உரையை நிறைவு செய்தார் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம். மாநாட்டு நிறைவுரையை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நிகழ்த்தினார்.

திறந்த வெளி மாநாட்டுக்கு வடசென்னை மகளிரணி அமைப்பாளர் கு.தங்கமணி, பொதுக்குழு உறுப்பினர் திண்டிவனம் தா. விசயலக்குமி, பொதுக் குழு உறுப்பினர் சொர்ணா ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இரவு 10 மணிக்கு வரலாற்றுச் சிறப்புகளுடன் புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாடு நிறைவுற்றது.



வேலூர் மாநாட்டில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவர்கள்

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் புத்துலக பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டில் விருது அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டோர் :

திராவிடர் இயக்கச் சான்றோர்கள்

தமிழ் ஓவியா said...

சத்துவாச்சாரி : சாமிசம்மாரன், ச.கி.செல்வ நாதன், இரா.கணேசன்;

வேலூர் : தாமோதரன், பால்காரர் முனிரத்தினம், பெரியார் இல்லம் முனிசாமி, செய்யாறு: பா.அருணாச்சலம்.

திராவிடர் இயக்க வீராங்கனைகள்

சென்னை : ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், சத்துவாச் சாரி : கனகம்மாள் கணேசன்,

நாகம்மாள், குடியாத்தம்: கமலம்மாள், வேலூர் : கலைமணி பழனியப்பன், வடசேரி: மீராஜெகதீசன்.

கீழ்க்கண்ட பெருமக்களுக்கு விருதுகள் நேரில் அளிக்கப்படும்

திராவிடர் இயக்கச் சாதனையாளர்கள்

வேலூர் : வேந்தர் ஜி.விசுவநாதன், புலவர் ருக்மணி பன்னீர்செல்வம்

மனிதநேய மாண்பாளர்கள் வேலூர் : சிவகுமார் (வள்ளல் கிருஷ்ணசாமி முதலியார் மேனிலைப்பள்ளி), திருப்பத்தூர் - கணேஷ்மல், திருவண்ணாமலை : மருத்துவர் சாய் பிரசன்னா.

நூல் - குறுந்தகடுகள் வெளியீடு

95 ஆண்டுகளுக்கு முன் திராவிட இயக்க சமூகப் புரட்சி என்னும் நூல் அன்னை மணியம் மையாரின் சிந்தனை முத்துக்கள், பெரியார் பிஞ்சு பழகு முகாம் தஞ்சை ஆகிய குறுந்தகடுகளும் திறந்த வெளி மாநாட்டு மேடையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் வெளியிடப்பட்டன.

வேலூர் மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் பா.அருணாச்சலம், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் முஹம்மது சகி, தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் முதலியோர் ரூ. 500 கொடுத்துப் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தா.திருப்பதி, வடசேரி வழக்குரைஞர் ஜெ.துரை, குயில்மொழி முதலியோர் வரிசையாகச் சென்று தமிழர் தலைவரிடம் மேடையில் பெற்றுக் கொண்டனர்.





வேலூர் மாநாட்டில் நடந்த குருதி கொடை முகாம்



ஆண்களை விட பெண்கள் போட்டி போட்டு ரத்த தானம் செய்தனர். உங்கள் உடல் ரத்த தானம் செய்ய எடை குறைவாக இருக்கிறது என்று சொன்னாலும் கூட நான் கண்டிப்பாய் கொடுப்பேன் என்று சில தோழர்கள் பிடிவாதம் பிடித்தனர். பின்பு அவர்களுக்கு விளக்கி சொன்ன பின்னர் அமைதி யாய் ஏற்றனர்.

மருத்துவ குழுவிலே வந்த மருத்துவர் பசுபதி தஞ்சை மருத்துவ கல்லூரியில் பணியாற்றிய போது தஞ்சை மற்றும் ஒரத்தநாடு தோழர்கள் ஏற்பாடுகள் செய்த இத்தகைய குருதி கொடைமுகாம் பற்றிய நினைவுகளை தோழர்களுடன் பகிர்ந்து கொண்டார். குருதி கொடை கொடுத்த தோழர்களுக்கு சான்றிதழ்கள் மாநாட்டு அரங்க மேடையிலேயே வழங்கப்பட்டது.31-+5-2012