Search This Blog

18.5.12

மூன்றாம் ஆண்டு ஈழத் தீவில்


முள்ளிவாய்க்கால் படுகொலை என்னும் கறுப்பு அத்தியாயபுரத்தின் வயது மூன்றாண்டுகள் (18.5.2009).

இந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளை அசைப் போட்டுப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். இது ஏதோ ஒரு தீவில் நடைபெற்ற மோசமான குரூரம் மட்டுமல்ல. உலக நாடுகள், மனிதத்தின் தன்மையை எடை போட்டுப் பார்க்க வேண்டிய நிலை! மக்கள் வாழ்க்கை வசதிகள் பெருகியுள்ளன. மனிதனின் அறிவு புத்தம் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து மனித வாழ்க்கையை வளப்படுத்தி இருக்கிறது என்பதில் இரண்டு கருத்துக்கு இடம் கிடையாது.

இன்னும் இன வெறுப்பு, மதவெறுப்பு, ஜாதிப் பகைமை என்கிற கொடுந்தீ மனிதனுக்குள் குடிகொண்டு தானே இருக்கிறது. அதன் அடையாளம்தானே ஈழத்தில் சிங்கள இனவாதம் நடத்தி முடித்துள்ள தமிழின அழிப்பு!

இது போதிக்கும் பாடம் என்ன? தனியினம், தனிமொழி, தனிப் பண்பாடு கொண்ட மக்கள் தங்களுக்கென்று தனி உரிமை உடைய நாட்டை அமைத்துக் கொள்ளுதல் என்பதுதான் சரியானது என்ற முடிவுக்கு வந்தே ஆக வேண்டும்.

ஈழத்தில் இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழ்த்தப் பட்டதற்குப் பிறகு அங்கே ஒன்றுபட்ட இலங்கையில் தான் தமிழர்களும், சிங்களவர்களும் வாழ வேண்டும் என்று எவராது சொல்ல முன் வருவார்கள் என்றால் அவர்கள் மன நல மருத்துவமனையில் பூட்டி வைத்துத் தீவிரமான மருத்துவப் பாதுகாப்பில் வைக்கப்பட வேண்டிய வர்களே!

அங்குள்ள தமிழர்கள் தனி நாட்டை விரும்பவில்லை; தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஏன் தனியீழம் என்று பேசுகிறார்கள் என்று இலங்கை சென்ற தூதுக் குழுவின் தலைவரான திருமதி சுஷ்மா ஸ்வராஜ் (பிஜேபி) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்ஸிஸ்டின்) மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே. ரெங்கராஜன் கூறுவதும் பாசிசத்துக்குத் துணைப் போகும் பயங்கரமாகும். இதில் எப்படி மார்க்சியமும் இந்துத்துவாவும் ஒன்றாகச் சிந்திக்கின்றன என்று தெரியவில்லை.

அய்.நா.வின் ஜெனிவா தீர்மானத்திற்குப் பிறகு இலங்கை அரசு அந்தத் தீர்மானத்தின்படி எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கின்றது, எத்தகைய விசாரணையை நடத்துகின்றது என்பதை அய்.நா. ஒழுங்குறக் கண்காணிக்கத் தவறிவிட்டால், ஜெனிவா தீர்மானம் என்பது வெறும் கண் துடைப்பு என்கிற பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும். அதன் மூலம் அய்.நா.வின் மரியாதை எள்ளி நகையாடப்படக் கூடிய நிலைதான் ஏற்படும்.

சிங்கள அரசு எப்படி நடந்து கொண்டாலும் தனியீழத்துக்கான அழுத்தம் உலக நாடுகள் மூலம் கொடுக்கப்பட்டாக வேண்டும். ஜெனிவா தீர்மானத்தின் பலன் மற்றவற்றில் எப்படியிருந்தாலும், உலக நாடுகள் மத்தியில் உண்மையை உணரச் செய்திருக்கிறது - இலங்கை அரசின் இனப் படுகொலை மீதான கோபத்தை உண்டாக்கி விட்டது.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, உலகெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல; மனித உரிமை ஆர்வலர்கள், நேர்மையான ஊடகங்கள் தனியீழத்துக்கான உந்துதலை ஏற்படுத்தியாக வேண்டும். இது ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல; உலக நாடுகளில் எந்த மூலையிலாவது சிங்களத் தனம் எனும் ஒரு வெறிக்குணம் தலை எடுக்காமல் அழிக்கப்படுவதற்குக் கூடப் பயன்படுமே! இந்த வகையில் பாசிசத்துக்குப் புதிய சொல் கிடைத் திருக்கிறது.

தனியீழம் ஒன்றை உருவாக்குவதன் மூலமாக இனவாத வெறிக் கொடுமைக்கு முடிவு கட்டலாமே!
ஈழத் தமிழர் பிரச்சினையில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் ஒரு குடையின்கீழ் ஒன்று சேர மனப் பக்குவம் இல்லாவிட்டால், அவரவர்கள் வழியில் தனியீழத்தை வலியுறுத்தலாம். தேவை யில்லாமல் அந்தப் பிரச்சினை என்பது தங்களுக்கே உரிய குத்தகை என்ற கோணல்தனம் காட்டாமல் செயல்படட்டும்!

திமுக தலைவர் தலைமையில் மீண்டும் தொடரப் பட்டுள்ள டெசோவில் சேர்ந்து பணியாற்ற விரும்பு வோர்க்கும் கதவு திறந்தே இருக்கிறது.

நமது இலக்கு தனியீழமே! இதில் திசை திருப்பும் சித்து வேலைகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் சிங்களவர்களுக்குத் துணை போகக் கூடியவர்களே!

முள்ளி வாய்க்கால் கொடுமைகள் நடந்து மூன்றாண்டு முடிவுற்ற இந்த நாளிலாவது இந்த உணர்வை அனைவரும் பெறட்டும்!

-------------------"விடுதலை” தலையங்கம் 18-5-2012

0 comments: