Search This Blog

2.10.13

இந்துமதமும் காந்தியாரும் பெரியாரும்

(இன்றைய அரசியல் சமூகச்சூழலில்  காந்தியார் பிறந்தநாளை முன்னிட்டு அவசியம் கருதி இவ்வுரையாடல் பதிவு செய்யப்படுகிறது. தோழர்கள் ஊன்றிப் படித்து உண்மையை அறியவும்.----- தமிழ் ஓவியா)

பெரியார்: இந்து மதம் ஒழிந்தாக வேண்டும்.

காந்தியார்: ஏன்?

பெரியார்: இந்துமதம் என்பதாக ஒரு மதம் இல்லை.

காந்தியார்: இருக்கிறதே!

பெரியார்: இருக்கிறதாகப் பார்ப்பனர் கற்பித்து, அதை மக்கள் மனத்தில் அப்படி நினைக்கும்படி செய்திருக்கிறார்கள்.

காந்தியார்: எல்லா மதங்களும் அப்படித்தாமே?

பெரியார்: அப்படி அல்ல; மற்ற மதங்களுக்குச் சரித்திர சம்பந்தமான ஆதாரங்களும், மதக்காரர்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளக்கூடிய கொள்கைகளும் உண்டு.

காந்தியார்: இந்துமதத்துக்கு அப்படி ஒன்றும் இல்லையா?

பெரியார்: என்ன இருக்கிறது? ஒருவன் பிராமணன், ஒருவன் சூத்திரன், ஒருவன் பஞ்சமன் என்கிற இந்தப் பேத, பிரிவுத் தன்மையல்லாமல் வேறு என்ன பொதுக் கொள்கைகள், பொது ஆதாரங்கள் இருக்கின்றன? அதுவும், பிராமணன் உயர்ந்தவன்; சூத்திரன், பஞ்சமன் தாழ்ந்தவன் என்கிற தன்மை நடப்புத் தவிர வேறு என்ன இருக்கிறது?

காந்தியார்: சரி, அந்தக் கொள்கையாவது இருக்கிறதே!

பெரியார்: இருந்தால் நமக்கு இலாபமென்ன? அதனால் பார்ப்பனர் பெரியசாதி; நீங்களும் நாங்களும் சின்னசாதி என்பதாக அல்லவா இருந்து வருகிறது?

காந்தியார்: நீங்கள் சொல்வது தவறு. வருண தர்மத்தில் சின்ன சாதி, பெரிய சாதி என்பது இல்லை.

பெரியார்: இது தாங்கள் வாயால் சொல்லலாம்; காரியத்தில் நடவாது.

காந்தியார்: காரியத்தில் நடத்தலாம்.

பெரியார்: இந்துமதம் உள்ளவரை ஒருவராலும் நடத்த முடியாது.

காந்தியார்: இந்துமதத்தின் மூலம்தான் செய்யலாம்.

பெரியார்: அப்படியானால் பிராமணன், சூத்திரன் என்பதாக உள்ள மத ஆதாரங்கள் என்ன ஆவது?

காந்தியார்: நீங்கள்தான், இந்து மதத்துக்கு ஆதாரங்கள் இல்லை என்கிறீர்களே!

பெரியார்: நான் மதமும் இல்லை; குறிப்பிட்ட ஆதாரங்கள் இல்லை என்றேன். மதத்தை ஒப்புக் கொண்டால், ஆதாரத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டாமா?

காந்தியார்: மதத்தை ஒப்புக் கொண்டு, ஆதாரங்களை நாம் ஏற்படுத்தலாமே?

பெரியார்: அதுதான் முடியாது. மதத்தை ஒப்புக் கொண்டால் அப்புறம் நாம் ஒன்றும் மாற்ற முடியாது.

காந்தியார்: நீங்கள் சொல்லுவது மற்ற மதங்களுக்குச் சரி; இது இந்துமதத்துக்கு அது பொருந்தாது. மதத்தை ஒப்புக்கொண்டு, மதத்தின் பேரால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; உங்களை ஆட்சேபிக்க எவனாலும் முடியாது.

பெரியார்: அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? அப்படி என்றால் யார் சம்மதிப்பார்கள், அதற்கு என்ன ஆதாரம் என்று சொல்ல வேண்டாமா?

காந்தியார்: நீங்கள் சொல்வது எல்லாம் சரி. அதாவது, இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. உண்மைதான் நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதற்குக் குறிப்பிட்ட கொள்கை இல்லை என்பதையும் நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆதலால்தான், நாம் ஒரு இந்து மத°தன் என்பதை ஒப்புக் கொண்டு, நம் இஷ்டம் போல் அதற்குக் கொள்கை ஏற்படுத்திக் கொள்ளலாம். இன்று இந்த நாட்டில், ஏன் - உலகத்திலேயே சொல்லுகிறேன் - மக்களை நாம் கருதுகிறபடி நல்வழிக்குக் கொண்டுவர வேண்டுமானால், இந்துமதம் ஒன்றினால்தான் முடியும்; மற்ற மதங்களால் முடியாது. ஏனென்றால், மற்ற மதங்களுக்குச் சரித்திர ஆதாரம், கொள்கை ஆதாரம் உண்டு. அவற்றில் கை வைத்தால் கையை வெட்டி விடுவார்கள். கிறித்துநாதர் என்ன சொன்னாரோ, அவர் சொன்னதாகச் சொல்லும் பைபிள் என்ன சொல்லுகிறதோ, அந்தப்படிதான் கிறித்தவர்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும்.

முகமது நபி அவர்கள் என்ன சொன்னாரோ, குரான் என்ன சொல்லுகிறதோ அப்படித்தான் முஸ்லிம்கள் என்பவர்கள் நடந்தாக வேண்டும். மாறுபட்டு ஏதாவது ஒரு திருத்தம் சொன்னால், அது மத விரோதமாகிவிடும். சொல்லுகிறவர் மதத்திற்கு வெளியில் வந்து தான் சொல்ல வேண்டும். உள்ளே இருந்து சொன்னால், அது மத விரோதமாகி விடும். இதுதான் உண்மையான மதம் என்பவைகளின் தன்மை. ஆனால், இந்து மதம் என்பது இல்லாத மதம் ஆனதால் அந்த மதத்தின் பேரால் யாரும் மகான்களாக ஆகி எதையும் சொல்லலாம். அப்படியே இந்து மதத்தில் ஏற்பட்ட பல பெரியோர்கள், மகான்கள் பலவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், நாமும் அந்த மதத்தை வைத்துக் கொண்டே அனேக சீர்திருத்தங்களை இந்தக் கால மனித வர்க்கத் தேவைக்கு ஏற்றபடி செய்யலாம்.

பெரியார்: மன்னிக்க வேண்டும் - அதுதான் முடியாது.

காந்தியார்: ஏன்?

பெரியார்: இந்து மதத்தில் உள்ள சுயநலக் கும்பல் அதற்குச் சற்றும் இடம் கொடுக்காது.

காந்தியார்: ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? `இந்து மதத்தில் தீண்டாமை இல்லை' என்று சொல்லுவதை இந்து மதத்தினர் யாவரும் ஒப்புக் கொள்ள வில்லையா?

பெரியார்: ஒப்புக் கொள்வது என்பது ஒன்று, ஒப்புக் கொண்டபடி நடப்பது என்பது வேறு. ஆகையால், இது காரியத்தில் நடக்காது.

காந்தியார்: நான் காரியத்தில் செய்கிறேன். இந்த 4,5 வருஷங்களில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லையா?

பெரியார்: உணருகிறேன். அடிப்படையில் மாறவில்லை. தங்களுக்கு உள்ள செல்வாக்கைக் கண்டும், தாங்கள் அவர்களுக்கு வேண்டியிருக்கிறது என்ற சுயநலத்துக்கு ஆகவும் ஒப்புக் கொண்டதாக நடிக்கிறார்கள். அதைத் தாங்கள் நம்புகிறீர்கள்.

காந்தியார்: (சிரித்துக் கொண்டே) யார் அப்படி நடக்கிறார்கள்?

பெரியார்: பார்ப்பனர்கள் யாவரும் தான்.

காந்தியார்: எல்லாப் பார்ப்பனருமா?

பெரியார்: ஆம். ஏன்? தங்கள்கூட இருக்கும் பார்ப்பனர்கள் எல்லோரும் தான்.

காந்தியார்: அப்படியானால் உங்களுக்கு ஒரு பார்ப்பனரிடம்கூட நம்பிக்கை இல்லையா?

பெரியார்: நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது.

காந்தியார்: இராஜகோபாலாச்சாரியாரிடம்கூட உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

பெரியார்: அவர் நல்லவர்; உண்மையானவர்; தியாகி; சுயநலமில்லாதவர். ஆனால், இவையெல்லாம் அவர்களது வகுப்பு நலனுக்கு, அவர் உண்மையான தொண்டர், நல்ல தியாகி, அத்தொண்டில் சுயநலமில்லாதவர். ஆனால், என் வகுப்பு நலத்தை அவரிடம் ஒப்படைத்துவிடச் சுலபத்தில் எனக்கு மனம் வராது.

காந்தியார்: இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால், உலகத்தில் ஒரு பிராமணன்கூட யோக்கியன் இல்லை என்பது உங்கள் கருத்தா?

பெரியார்: இருக்கலாமோ என்னமோ? எனக்குத் தென்படவில்லை.

காந்தியார்: அப்படிச் சொல்லாதீர். நான் ஒரு பிராமணனைப் பார்த்திருக்கிறேன். சந்தேகமற நான் இன்னும் அவரை நல்ல பிராமணன் என்றே கருதுகிறேன். அவர் யார் தெரியுமா? அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே.

பெரியார்: அப்பாடா! தங்கள் போன்ற மகாத்மாவினுடைய கண்ணுக்கே இப்பெரிய உலகில் ஒரே ஒரு பிராமணன் தென்பட்டு இருந்தால், எங்களைப் போன்ற சாதாரண பாவிகள் கண்களுக்கு எப்படி உண்மைப் பிராமணன் தென்பட்டி ருக்க முடியும்?

காந்தியார்: (சிரித்துக் கொண்டே) உலகம் எப்போதும் `இன்டெலிஜன்ஷியா' (படித்த கூட்டத்தார்) ஆதிக்கத்தில் இருக்கும். பிராமணர்கள் படித்தவர்கள். அவர்கள் எந்தக் காலத்திலும் ஆதிக்கமுள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். ஆதலால், அவர்களைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. மற்றவர்களும் அந்த நிலைக்கு வர வேண்டும்.

பெரியார்: மற்ற மதங்களில் அப்படி இல்லை. இந்து மதத்தில் மாத்திரம்தான், பார்ப்பனரே யாவரும் இண்டலிஜன்சியாவாக - படித்தவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் அனேகமாக 100-க்கு 90-க்கு மேற்பட்ட மக்கள் படிக்காதவர்களாக, ஏமாளிகளாக இருக்கிறார்கள். ஆகவே, ஒரு சமுதாயத்தில் ஒரு சாதி மாத்திரமே `இண்டலிஜன்ஷி யாவாக' - ஆதிக்கக்காரர்களாக இருக்க முடியும் என்றால், அந்த மதம், அந்த சாதி தவிர்த்த மற்ற சாதியாருக்குக் கேடானதல்லவா? ஆதலால்தான், நான் அந்த மதம் பொய் மதம் என்பதோடு, அந்த மதம் மற்றவர்களுக்குக் கேடானது. ஆதலால், ஒழிய வேண்டும் என்கிறேன்.

காந்தியார்: உங்கள் கருத்து என்ன? இந்து மதம் ஒழிய வேண்டும், பிராமணர்கள் ஒழிய வேண்டும் என்பதாக நான் கருதலாமா?

பெரியார்: இந்துமதம், அதாவது இல்லாத - பொய்யான - இந்துமதம் ஒழிந்தால் பிராமணன் இருக்க மாட்டான். இந்து மதம் இருப்பதால் பிராமணன் இருக்கிறான். நானும் தாங்களும் சூத்திரர்களாக இருக்கிறோம். எல்லாவித ஆதிக்கமும் பிராமணர்கள் கையில் இருக்கிறது.

காந்தியார்: அப்படி அல்ல. நான் இப்போது சொல்லுவதை பிராமணர்கள் கேட்கவில்லையா? இந்தச் சமயத்திலேயே நாம் யாவர்களும் சேர்ந்து, நீங்கள் கருதுகிற குறைபாடுகளை இந்து மதத்தின் பேராலேயே நீக்கி விடலாமல்லவா?

பெரியார்: தங்களால் அது முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. முடிந்தாலுங்கூடத் தங்களுக்குப் பிறகு மற்றொரு மகான் தோன்றி, முன்பு இருந்து வருவதை இப்போது தாங்கள் மாற்றுவது போல், இன்று தாங்கள் செய்வதை அந்த இன்னொரு மகான் மாற்றி விடுவார்.

காந்தியார்: எப்படி மாற்றக் கூடும்?

பெரியார்: தாங்கள்தான் இந்து மதத்தின் பேரால் எதையும் சொல்லி மக்களை நடக்கச் செய்யலாம் என்று சொன்னீர்களே! அதே போல் நாளைக்கு வரப்போகும் மகானும் இந்து மதத்தின் பேரால் எதையும் செய்யலாமல்லவா?

காந்தியார்: இனி வரும் காலத்தில் அந்தப்படி மாற்ற எவராலும் சுலபத்தில் முடியாது.

பெரியார்: நான் சொல்லுகிறேன். தாங்கள் மன்னிக்கவேண்டும். இந்து மதத்தை வைத்துக் கொண்டு இன்று தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது. பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்றுப் பலிதமாகிறது என்று கண்டால் உடனே எதிர்க்க ஆரம்பித்து
விடுவார்கள். இதுவரை ஒரு பெரியாராலும் இந்தத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்பதோடு, அப்படிப்பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டு வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

காந்தியார்: உங்கள் மனத்தில் பிராமணர் மீது ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டு விட்டது. அதுவே உங்களுக்கு முன்னணியில் நிற்கிறது. இது விஷயமாய் இவ்வளவு நேரம் நாமிருவரும் பேசியதில் இதுவரை நாம் எவ்வித ஒற்றுமை முடிவுக்கும் வரவில்லை என்பதாக நான் நினைக்கிறேன். ஆனாலும், இனியும் 2,3 தடவை சந்திப்போம். பிறகு நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்கலாம் - என்று சொல்லிக்கொண்டு படுக்கையில் இருந்தபடியே ஒரு கையால் ஒரு தலையை உருட்டித் தடவினார்.

--------------------1927-ல், பெங்களூரில் காந்தியார்-பெரியார் சந்திப்பு-நூல்: "இந்துமதமும் காந்தியாரும் பெரியாரும்", (1948) வள்ளுவர் பதிப்பகம், பவானி

8 comments:

தமிழ் ஓவியா said...


காந்தியார் பிறந்த நாள் சிந்தனைகள்!


- ஊசிமிளகாய்

அண்ணல் காந்தியடி கள் பிறந்த இந்நாளில் அவரது சிலைக்கு மாலை, அவரது சமாதி அருகில் மலர்வளையம், ரகுபதி ராகவ ராஜாராம் பஜனை பாடினால் மட்டும் போதுமா?
125 ஆண்டுகள் வாழ் வேன் என்று கூறி, வாழ விரும்பிய காந்தியாரை அப்படி வாழ விடாமல் சுட்டுக்கொன்றது ஏன்? எதற்காக? சுட்டவன் யார்? யாரிடம் பயிற்சி பெற்றவன்?
இந்நாளிலாவது உரக்கச் சிந்திக்கவேண்டாமா?

எந்தப் பார்ப்பன மதவெறிச் சக்திகள் சதி நடத்தி காந்தியார் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்தனவோ, அவைகளும் சேர்ந்தல்லவா காந்தி பஜனை செய்து மக்கள் கண்ணில் மண்ணைத் தூவுகின்றன!

காந்தி பிறந்த மண், இன்று காவி மண்ணாக ஆக்கப்பட்டுவிட்டது!

அதுபோதாது என்று இந்திய நாட்டையே காவி மயமாக்கி, இந்து நாடாக்கிட எல்லாவித சாம, பேத, தான, தண்ட முயற்சிகளையும் மேற்கொள்ளு கின்றன!

பெரியார் பிறந்த மண்ணையும், காவி மண் ணாக்கிட முயலுகின்றனர்!

இதில் மிகப்பெரிய வெட்கக்கேடு - காந்தி பெயரில் வசன வியாபாரி ஒருவர், அரசியல் தரகராக முதலில் ஒரு சாமி செய்த கூட்டும் முயற்சியை குதூ கலமாகச் செய்கிறாராம்!

திராவிடத்தில் பெரியார் - அண்ணா முத்திரைகளைப் பொறித்துக் கொண்டுள்ள, அரசியலில் பதவிப் பசி அதிகம் உள்ள அமைப்பு ஒன்று, மீண்டும் காவி அணியிடம் சரணடைந்து, பதவி லோக வழி தேடுவது, பெரியார் - அண்ணாவுக்குப் பெருமை சேர்ப்பதா?
அவர்கள் கட்டிக்காத்த சிறுபான்மையோர் பாதுகாப்பு - உரிமை எல்லாம் பலி பீடத்தில் நிறுத்துவதுதானா? பல கதவுகள் மூடிவிட்ட நிலையில், இந்தக் கதவாவது நமக்குத் திறந்துள்ளதே! கதவு மட்டுமா? கருவூலமும் சேர்ந்து அல்லவா திறந்துவிடப்பட்டுள்ளது என்ற தாகம்தான் மோடிக்கு சேடியாக்கிடுகிறது போலும்!

ஆசை வெட்கமறியாது; அதிலும் பதவி ஆசை, மானமும் அறியாது!

காங்கிரஸ்காரர்களைவிட கோட்சே கும்பல்தான் இன்று ஏதோ காந்தியின் பரம பக்தர்கள்போல காட்டிக்கொண்டு, ஓநாய் சைவமாகிவிட்டதுபோல் அறிவிப்புக் கொடுத்துக்கொண்டே காவி உலா நடத்திக் காட்டி, வாக்காளர்கள் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவிட முயலுகிறது!

மதவெறியை வளர்ப்பது காந்திக்குச் செய்யும் அஞ்சலியா? மதக் கலவரங்கள் பெருகுவதா?

வன்முறையால் திட்டமிட்டு சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் உரிமையை ஒழிப்பதா காந்திக்குச் செய்யும் பிரார்த் தனை?

கோவில்களை விபச்சார விடுதிகள் என்றவர் காந்தியார் - காஞ்சிபுரம் தேவநாதன்கள் வழக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே!

வேதம் ஓதும் உங்களுக்கு பார்ப்பனர்களுக்கு, ஸ்டெதஸ்கோப்பும் (டாக்டர் படிப்பு), டி ஸ்கொயரும் (பொறியியல் படிப்பு) எதற்கு என்று கேட்டு, சமூகநீதி தராசைச் சரியாகப் பிடித்ததினால்தானே பார்ப்பன, மதவெறியாளர்களால் காந்தியார் கொல்லப்பட்டார்!
எனவே, காந்தி பிறந்த நாளில், மதச்சார்பின்மை, சமூகநீதி, இவைகளையே முன்னெடுத்துச் செல்ல உறுதி எடுப்பதே - உண்மையாக அவருக்குக் காட்டும் மரியாதையாகும்.

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப்பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.

- (விடுதலை, 22.11.1964)

தமிழ் ஓவியா said...

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் கு.முத்துசாமி - மலர்விழி ஆகியோரின் செல்வன் மு.வினோத் குமார் என்பவருக்கும், ஓமலூர் வட்டம் நச்சுவாயனூர் சி.மாரி யப்பன் சிங்காரம் ஆகியோர் களது மகள் மா.அன்புச்செல்வி என்கிற மணமகளுக்கும் 29.9.2013 அன்று ஓமலூர் நடராஜன் திரு மண மண்டபத்தில் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடைபெற்றது.

மணவிழாவிற்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண் முகம் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் முன்னி லையில் மேட்டூர் மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியன் வர வேற்புரையுடன் துவங்கியது.

பெரியார் பெருந்தொண்டர் வி.ஆர்.வேங்கன், கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

தமிழர் தலைவர் மண மக் களுக்கு உறுதிமொழி கூறி மண விழாவை நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் தமது வாழ்த் துரையில் குறிப்பிட்டதாவது: இங்கே மா.அன்புச்செல்வி - மு.வினோத்குமார் ஆகியோர் களது திருமணம் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

பழனி.புள்ளையண்ணன், சுப்பிரமணி ஆகியோர் எடுத்துச் சொன்னதைப் போல இத்திரு மணத்தை நடத்தி வைப்பதிலே பெருமை கொள்கிறேன். மாரி யப்பன் அவர்களின் சம்பந்தியான முத்துசாமி - மலர்விழி ஆகி யோரை பாராட்ட கடமைப்பட் டிருக்கிறேன்.

இந்த மணவிழா விலே மாரியப்பன் கருப்புச் சட் டையுடன் இருக்கிறார் என்றால் அதற்கு சுப்பிரமணியன் போன்ற வர்கள்தான் காரணமாக இருக்க முடியும். மணவிழாவே மாநாடு போல இங்கே மக்கள் கூடி இருக் கிறார்கள். பெரியார் கொள்கை இங்கே வெற்றி பெற்றுள்ளது. என்றைக்கும் பெரியார் கொள்கை தோற்காது. நேற்று கூட விருத்தாசலத்தில் நடை பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள சென்றபோது அங்கே கூலிப்படையினரால் என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நான் சொல்கிறேன். இயற்கை மரணம் அடைவதைவிட கொள்கைக் காக போராட்டக்களத்தில் சாவது நல்லது. அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

இத்திருமணத்தில் தாலி உள்ளதா என சுப்பிரமணியிடம் கேட்டேன். அதற்கு தாலி இருந் தால் உங்களை அழைத்திருப் பேனா என்று பதில் சொன்னார். தாலி என்பது திருமணத்தில் இடையிலே புகுத்தப்பட்ட ஒன்று இங்கே கருப்புச் சட்டைக் காரர்களுக்கு ஜாதி என்பது கிடையாது.

இன்று பெரியார், காமராஜர் அண்ணா போன்றவர்களின் உழைப்பினால் நம் பிள்ளைகள் நன்றாக படித்துள்ளார்கள் மண மக்கள் இருவரும் பட்டப்படிப்பு படித்திருக்கிறார்கள். இது நமக்கு பெருமையாக உள்ளது.

எல்லாத் திருமணங்களையும், எங்களைப் போன்றவர்களை வைத்து நடத்த வேண்டியதில்லை. நம் குடும்பத்தில் உள்ள தமிழர் களை வைத்து பகுத்தறிவு, சுயமரி யாதை முறைப்படி நடத்திட வேண்டும். திருமண வாழ்க்கை முறை என்பது இத்தோடு முடிவ தில்லை. நாளைக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுங்கள்.

சுப்பிரமணி குடும்ப மண விழா என்பது அது எங்கள் குடும்ப திருமணம் போன்றது. இப்பகுதியிலே அவர்கள் பல ஆசிரியர்களை உருவாக்கி இருக் கிறார்கள். பெரியார் திருமண முறை என்பது வேகமான, ஆவேச மான திருமண முறை அல்ல அது படிப்படியாக அறிவை வளர்த்து செய்யக்கூடியது.

பணக்காரரைவிட கொள்கை காரர்களே சிறந்தவர்கள். அந்த கொள்கை சுப்பிரமணி போன்ற குடும்பத்தினரிடம் உள்ளது. அந்த வகையில் மணமக்களின் திரு மணத்தை நடத்தி வைக்கிறேன் வாழ்க மணமக்கள் என்று தமிழர் தலைவர் வாழ்த்துரை வழங் கினார்.

தமிழ் ஓவியா said...


நாத்திகன்


நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...


விருத்தாசலம் மாநாட்டுத் தீர்மானங்கள்


விருத்தாசலத்தில் கடந்த 28.9.2013 சனியன்று நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் மாணவர் கழக மாநாடு, பல வகைகளிலும் சிறப்பு நிலையைப் பெற்றது. குறிப்பாக அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் முத்தாய்ப்பானவைகளே.

முதல் தீர்மானம், பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்பதாகும். தமிழ் மொழியில் ஊடுருவிய ஆரியப் பார்ப்பனர்களின் சமஸ்கிருதம் தமிழைப் பல கூறுகளாக்கி மணிப்பிரவாள நடையையும் உருவாக்கியது.

தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், துளுவும் ஆரிய மொழியின் ஊடுருவலால் தனித்தனி மொழி எனும் தோற்றத்திற்கு ஆளாகி விட்டன.

தமிழ்நாட்டு மக்களின் பெயர்களும், ஊர்களும் சமஸ்கிருதமயமாயின. புளியந்தோப்பு, திண்டிவனம் ஆனதும், குடமூக்கு கும்பகோணம் ஆனதும், திருமரைக்காடு வேதாரண்யம் ஆனதும், திருமுது குன்றம், விருத்தாசலம் ஆனதும் ஆரிய சமஸ்கிருத ஊடுருவலின் அடையாளங்களாகும்.

விருத்தாசலத்தை, திருமுதுகுன்றம் என்று மீண்டும் மாற்ற வேண்டும் என்பதற்குத் திராவிடர் கழகம் உள்பட பல அமைப்புகளும், முயற்சிகளை மேற்கொண்டதுண்டு. ஆனாலும், வலுவாக இருக் கும் ஆரிய நிருவாகம் - ஆட்சி முறை - பெரும் இடையூறாக உள்ளது.

மயிலாடுதுறையை மீட்டதுபோல திருமுதுகுன்றத் தையும் மீட்க வேண்டும் - மாநாட்டின் முதல் தீர்மானம், இந்த வகையைச் சேர்ந்ததாகும்.

தந்தை பெரியார் தமது தலைமையிடமாகக் கொண்ட திருச்சிராப்பள்ளியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது இரண்டாவது தீர்மான மாகும்.

திமுக தலைவர், கலைஞரும் இதற்குத் தம் ஆதரவைத் தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான எழுச்சித் தமிழர் தொல். திருமா வளவன் அவர்களும், இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதுவதாகத் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட வில்லையா? அதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப் பையும் செய்தால் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

மூன்றாவது தீர்மானம் - தந்தை பெரியார் இறுதியாகக் களம் அமைந்த - அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றியதாகும்.

ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு என்பது பகுத் தறிவும், மனித உரிமை ஆர்வமும் கொண்டவர்களின் மகத்தான கோட்பாடாகும். இன்றைக்கு அது அதிகார பூர்வமாக நிலை கொண்டு இருப்பது கோயில் கருவ றைகளில்தான். பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் யாரும் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்ய முடியாது. காரணம் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் சூத்திரர்கள்; - சூத்திரர்கள் கோயில் கருவறைக்குள் சென்றால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்று ஆகமங்கள் சொல்லுவதாக உச்சநீதிமன் றத்தில் எடுத்துக் கூறி தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக் கான சட்டத்தை முடக்கி விட்டனர். இது 2013 ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்களின் ஜாதி ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துவதாகும்.

திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையை முன்னி றுத்தித் தன் பணிகளைத் தொடர இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு ஒட்டு மொத்தமாக, தமிழர்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், இதன் வெற்றியை சுவைக்க அனைவரின் ஒத்துழைப்பையும், திராவிடர் கழகம் கோருகிறது.

நான்காவது தீர்மானம், ஈழத் தமிழர் பிரச் சினையைப் பற்றியதாகும். தமிழர்களின் தொப்புள் கொடி உறவினராகிய ஈழ மக்கள் எல்லா உரிமை களையும் இழந்து நிற்கின்றனர். அவர்களின் அடிப்படை வாழ்வுரிமைக்காகத் தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றனர். (இதில் அரசியலைப் புகுத்தும் கேவலமும் குடி கொண்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை).

இந்திய அரசு போதிய ஒத்துழைப்பைக் கொடுக் குமேயானால் ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் கூடிய வாழ்வைப் பெறுவார்கள்.

கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு, தமிழக மீனவர்கள் அந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை இழந்து தவிக்கிறார்கள். இலங்கைக் கடற்படையால் தினமும் பெரும் துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டும் வருகின் றனர்.
கச்சத் தீவை மீட்க வேண்டும் - அதுவே நிரந்தரத் தீர்வு என்பதை விருத்தாசலம் மாநாடு தெளிவு படுத்தியுள்ளது - தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் இதிலும் வெற்றியை ஈட்ட முடியும் என்று திராவிடர் கழகம் உறுதியாக நம்புகிறது - தமிழர்கள் ஒன்று சேர்வார்களாக!

தமிழ் ஓவியா said...


தெலுங்கானாவிலும் பெரியார் விழா


வெளியூர் 27.9.2013 விடுதலை இதழ் கடைசி பக்கத்தில் தெலுங்கானா - ஆந்திரா நாத்திக சமாஜத்தினர் வெளி யிட்டுள்ள தெலுங்கு சுவரொட்டியைப் பார்த்து பூரித்துப்போனேன். 65 ஆண்டு கட்கும் மேலாக திராவிட இனப்பற்றுடன் செயல்படும் எனக்குத் தெலுங்கு படிக்கத் தெரியும் என்பதால் பிரஜா நாஸ்திக சமாஜம்
மதம் அன்டேனே மாண யாகம்
மூடநம் மகாளு விடுச்சி - முந்தடுகு வேயண்டி

என்ற வேண்டுகோள் மட்டுமல்ல, நமது திராவிடர் கழகக் கொடியையும், மய்யத்தில் அய்யா படத்துடன் பெரியார் என்றும் தெலுங்கில் எழுதியிருப்பதானது திராவிட இன உணர்வு ஆந்திர - கர் நாடக - கேரள மாநிலங்களிலும் ஓசைப் படாமல் வளர்ந்து வருவதை அடிக்கடி விடுதலை செய்தியாக அறிந்து மகிழ்ந் தேன். தமிழர் தலைவர் கி.வீரமணி அய்யா அவர்கள் திராவிடர் தலைவராக வளர்கிறார்.

- வேலை.பொற்கோவன், வேலம்பட்டி

தமிழ் ஓவியா said...

வினை விதைத்த விநாயகன்

விநாயகர் சதுர்த்தி விழா ஒற்றுமை யாக இருந்த கிராம மக்களை இரண் டாக்கியது. வேலூர் மாவட்டம், திருப்பத் தூர் வட்டம், பொம்மிகுப்பம், பழத்தோட்டம் கிராமத்திலும், கிராமத்திலுள்ள இளைஞர் ஒன்று சேர்ந்து தங்களின் பொருளாதார வசதிக்கேற்ற விநாயகர் சிலையை வைத் தார்கள். வழக்கம்போல மின்விளக்கு, ஒலி பெருக்கி வைக்க, மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பைப் எடுத்துக் கொண் டார்கள். மின்சார வாரிய ஊழி யருக்கு சொல்ல வேண்டியவர் முன் கூட்டியே சொல்ல வில்லை. மின் ஊழியர் வந்து பார்த்து விட்டு ரூ. 2000/- அபராதம் விதிப்பேன் என்று மிரட்டினார். கையூட்டு கொடுத் ததும் அமைதியாகப் போனார். ஏன் முன் கூட்டியே தகவல் சொல்ல வில்லை என்ற தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில் நவீன், திருப்பதி, சிலம்பரசன், சந்துரு ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இரத்தகாயம் ஏற்பட்டது. சாமியப்பாரு எல்லாம் இந்த விநாயகனால் வந்த தொல்லை தானே, என்று கூறி சந்துரு விநாயகனின் கை கால்களை மயில் வாகனத்தை உடைத் தெறிந்தார்.

பின்னர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்கள். பின்னர் ஊர் பஞ்சாயத்து கூடியது அவரவர் அடித்த தற்கேற்ப ரூ. 8000/- வரைக்கும் அபராதம் விதித்தார்கள். ஒற்றுமையாக இருந்த கிராமமக்கள் விநாயகனால் இரண்டாகப் பிளவுப்பட்டார்கள்.

- இளங்குமரன், திருப்பத்தூர்

தமிழ் ஓவியா said...



இதுதான் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியா? பூனைக்குட்டி வெளியில் வந்தது!


விருத்தாசலத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது காலிகள் திட்டமிட்டுத் தாக்கியது கண்டு உலகத் தமிழர்கள் பதறுகிறார்கள்! தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கண்டன அறிக் கைகளை வெளியிட்டுள்ளார்கள்.

தமிழர் தலைவரை நேரில் சந்தித்தும் கவலை தெரிவித்த வண்ணம் உள் ளனர். தக்க பாதுகாப்பு ஏற்பாட்டுடன் பயணம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். உங்கள் உயிர் எங்களுக்கு உரியது. தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும், ஏன், உலகம் முழுவதும் உள்ள மனித நேயர்களுக்கும், பகுத்தறிவாளர் களுக்கும், சமத்துவவாதிகளுக்கும் உரியது என்று கண்ணீர்மல்க தங் களின் உணர்வுகளை வெளிப்படுத் திக் கொண்டுள்ளனர்.

ஏடுகள் விருத்தாசலத்தில் நடந்த தாக்குதல் குறித்து படத்துடன் வெளியிட்டுள்ளன. முறைப்படி காவல் துறைக்கும் புகார் கொடுக்கப்பட் டுள்ளது.

இவ்வளவு நடந்திருந்தும், எதுவுமே நடக்காததுபோல காவல்துறையும், அதற்குச் சைகை காட்டும் அரசும் பழிப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

தாக்குதல் தொடுத்தவர்கள் யார் என்பது மிக வெளிப்படையாக தெரிந் திருந்தும், ஏடுகள் படம் பிடித்துக் காட் டிய பிறகும், காவல்துறை தூங்குவது ஏன்? நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தாக்குதல் தொடுக்கப்பட்ட இடத் தில் பத்திரிகையாளர்கள் வந்தது எப்படி? தொலைக்காட்சி ஒளிப்பதி வாளர்கள் தயாராகக் காத்துக் கொண்டிருந்தது எப்படி?

ஆக, வன்முறை திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவ்வளவும் நடந்ததற்குப் பிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை - விழித்துக் கொள்ள வில்லை என்றால், இந்தத் தாக்குதல் காவல்துறைக்குத் தெரிந்துதான் நடந்திருக்கிறது என்ற முடிவுக்குத் தானே வரவேண்டியுள்ளது.

வேறு ஒரு கட்சியின் தலைவருக்கு இதுபோல தாக்குதல் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? மாநாட்டில் கூடியிருந்த உணர்ச்சிமிகுந்த மக்கள் வெள்ளத்தின்முன் தலைவர் வீரமணி அவர்கள் கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்தால், என்ன நடந்திருக் கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

பொறுமையுடனும், சகிப்புத் தன் மையுடனும் பொதுவாழ்வில் கடைபிடிக் கப்பட வேண்டிய, வன்முறைக்கு அப்பாற்பட்ட நன்முறையும், ஒரு தலை வரால், அமைப்பால் கடைப்பிடிக்கப் பட்டால், அவர்களுக்குக் கோழைகள் என்று அ.இ.அ.தி.மு.க. அரசு முத்திரை குத்துகிறதா?

தமிழ்நாட்டில் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் என்பவை அன்றாடம் நடைபெறும் வழமையான செயல்களாக ஆகிவிட்டனவே - நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கு தல்கள் நடந்திருக்கின்றனவே!

தலைவர்கள் தாக்கப்படுதலும், அந்தப் பட்டியலில் இடம் பெற்று விட்டதோ இந்த ஆட்சியில்!

1.10.2013 நாளிட்ட ஆளும் கட்சி யின் அதிகாரப்பூர்வமான நாளேட்டில், (பக்கம் 4) நெத்தியடி எனும் தலைப் பின்கீழ் ஜனநாயகத்திலும் - கருத் துச் சுதந்திரத்திலும் நம்பிக்கை உள் ளோர் அனைவரும் கண்டிக்கனும்...! என்று தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்ட அறிக்கையைக் கிண்டல் செய்து எழுதியுள்ளது.

விருத்தாசலத்திற்குப் போன கி.வீரமணி மீது நாலு பேருதாக்குதல் நடத்த எத்தனித்ததற்காக இப்படி எம்பிக் குதிக்கிறீர்களே! என்று வித்தாரமாக எழுதுகிறது ஆளும் கட்சி ஏடு. நாலு பேர் தாக்குதல் நடத் தினார்கள் என்பதை அ.இ.அ.தி.மு.க. ஏடு ஒப்புக் கொண்டுள்ளதே அந்த நாலு பேர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே கேள்வி.

எதிலும் அரசியல்தானா? ஒரு தலைவர் தாக்கப்பட்டதற்கு அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கண்டனம் தெரிவிக்கிறார் என்றால், அதன் அடிப்படையில் விசா ரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்தால், அதற்குப் பெயர்தான் மக்கள் நல அரசாகும் (Welfare State).

அதற்கு மாறாக வன்முறையை ஏவியவர்களுக்காக ஆளும் கட்சியின் நாளேடு வக்காலத்து வாங்கி எழுது கிறது என்றால், இதற்குப் பெயர் என்ன?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எங்குப் பயணம் செய்தாலும், தாக்குதலை மேற்கொள் ளுங்கள் - அ.இ.அ.தி.மு.க. அரசு அதனைக் கண்டுகொள்ளாது என்று ஆளும் கட்சி ஏடு சமிக்ஞை செய்வ தாகத்தானே பொருள்?

காவல்துறை இதுவரை நட வடிக்கை எடுக்காததற்கான பின் னணி இப்பொழுது வெட்ட வெளிச் சமாகிவிட்டது! - பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே!

தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி என்பதை உணர்ந்து அவர வர்களும் தங்களுக்குத் தாங்களே பாதுகாப்புக்கு உரியதைச் செய்து கொண்டாக வேண்டும் என்று சொல் லாமல் சொல்லிவிட்டது ஆளும் கட்சி ஏடு.

அ.தி.மு.க. ஆட்சி பற்றி தமிழ் நாட்டு மக்கள் நிலைமையைத் தெரிந்து கொள்வார்களாக! தமிழ் நாட்டுத் தலைவர்களும் இது குறித்து உரத்த முறையில் சிந்திப்பார்களாக!

- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

3.10.2013
சென்னை