Search This Blog

26.8.14

இதுதான் வால்மீகி இராமாயணம் -23

அயோத்தியா காண்டம்

ஆறாம் அத்தியாயம் தொடர்ச்சி
இராமனைக் குடிகளுக்கும், முக்கியமாகக் கைகேயிக்கும் வேண்டியவனாக நடந்து கொள்ளுமாறு அவன் தூண்டியிருக்கிறானென்பது அவன் பேச்சி னாலேயே தெரிகிறது. இராமன் மிகவும் தந்திரசாலி யாதலின், அவ்வாறே நடந்து வந்திருக்கிறான். அதனாலேயே கைகேயியும் அவனை நல்லவனென மயங்கியிருந்திருக்கிறாள். தசரதன் மிகவும் தீயவனா தலால், தன் தீய எண்ணத்திற்கேற்பப் பரதனையும் இகழ்கிறான். உண்மையாக அரசாட்சிக்கு உரியவனாகிய பரதனை வஞ்சித்து; நாட்டை விட்டு ஓட்டிப் பாட்டன் நாடடையுமாறு விடுத்ததோடு நில்லாமல், அவனுக்கு உரிய அரசாட்சியையும் இராமனுக்குக் கொடுக்கத் துணிந்து நின்ற தசரதனினும் கொடியவருளரோ? இவ்வஞ்சகனுடைய சூழ்ச்சியை ஒருவாறு கண்டு கொண்டு, பரதனே உண்மையில் ஆட்சிக்குரிய வனெனத் தெரியாம லிருந்தாலும் அவனுக்கு முடி சூட்டவும், அக்கிரமமாக முடிசூட முனைந்து உலகை ஏமாற்றி நல்லவனைப்போல் பாசாங்கு செய்து நிற்கும் இராமனை நாட்டைவிட்டுக் காட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று தற்காப்பின் பொருட்டு முனைந்து நிற்கும் கைகேயி எவ்வாறு கொடியவளாவாள்? அய்யோ! புலவர்கள் நல்லவர்களைக் கெட்டவர் களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் உலகுக்குக் காட்டி மயங்கச் செய்கிறார்களே! என்னே பரிதாபம்! மேன்மைத் தமிழ் மக்களே! பெரியோர்களே! உண்மையாராய்ச்சியாளரே! இவ்வுண்மைகளை யெல்லாம் நன்கு சிந்தித்துப் பார்த்து உங்கள் நண்பர் களுக்கும் உண்மையை எடுத்துக்காட்டி நல்வழிப்படுத்த முன் வாருங்கள்; முன் வாருங்கள்.


இனித் தசரதனுடைய வஞ்சகச் சூழ்ச்சிகளுக்கு உடந்தையாயிருந்த சுமந்திரனுடைய செயலைப் பாருங்கள். அவன் அரசனை நெருங்கி அவனுடைய உண்மை நிலையை ஆராயாமலே பேசுகிறான். இது எவ்வளவு அற்பப்புத்தி? பின் தன் பேச்சால் அரசன் வருந்துகிறானென்று தெரிந்தும், அவ்வருத்தத்துக்குக் காரணத்தை அறிய முயலாமல் அவனைவிட்டுப் போய்விட முயல்கிறான். இதனாலெல்லாம் இவன் ஏதோ தன் மனத்தில் களங்கத்தோடு நடக்கிறானென்பது ஊகித்தறியவிருக்கிறது. இவனுக்கு அரசனுடைய சூழ்ச்சி, கேட்டை அடையக்கூடுமென அச்சமும், அய்யமும் இருக்கின்றன. அதனாலேயே கைகேயி இராமனை அழைத்துவரச் சொன்னவுடன் போனவன், பின் ஏதோ சந்தேகப்பட்டு நொண்டிக்குதிரைக்குச் சருக்கியது சாக்கெனத் திரும்பவும் வந்து தசரதனை அடைந்து, முடிசூட்டுக்கு எல்லாம் தயாராயிருக்கிறபடியால் மேல் உத்தரவு என்ன வென்று கேட்கிறான். இதனாலேயே இவன் தசரதனுடைய சூழ்ச்சியிலீடுபட்டு எவ்வாற்றாலும் இராமனுக்கு முடிசூட்ட முயல்கிறானென்பதும், கைகேயியினுடைய பேச்சில் அய்யங்கொண்டே திரும்பி வந்தானென்பதும் தெளிவாகும். கைகேயியி னுடைய மையலிற் சிக்குண்டு கிடந்த தசரதன், அவள் பேச்சுக்கிசைந்து இராமனை அழைத்து வருமாறு தானே கட்டளையிடுகிறான். அதன் பின்னர்ச் சுமந்திரன் நேராக இராமனை நாடிப்போகிறான். இவ்வரலாற்றைக் கம்பர் எவ்வாறு புரட்டுகிறாரென ஆராய்வோம்.

இராமன் பதினான்கு ஆண்டுகள் காடேகவேண்டு மென்று வரங்கேட்டதாக வால்மீகி கூறக் கம்பரோ,

ஏய வரங்களிரண்டி னொன்றினாலென்
சேயரசாள்வது சீதை கேள்வனொன்றால்
போய் வனமாள்வதெனப்பு கன்று நின்றாள்

என்றே கூறுகிறார். கூனி கூற்றாக இராமன் பதினான்காண்டு காடேகவரம் கேளெனவும், பின் கைகேயி கூற்றாக இராமனிடம் பதினான்காண்டு காடேகிவர என அரசன் கூறினானெனவும், கம்பர் கூறுகிறாரேயன்றி தசரதனிடம் இவ்விரு வரத்தைக் கைகேயி நேரிற்கேட்டதாகக் கம்பர் கூறவேயில்லை. முக்கியமான இடமாகிய இதில் கம்பர் பிழைப்பட்டார். இராமன் உயிருள்ளளவும் காட்டில் வாழவேண்டுமென்று கேட்டதாகவல்லவா தசரதன் நினைத்துக் கொண்டான்? இவ்விதமாக மயங்க வைத்தார்கள்.
தசரதனுக்கும் கைகேயிக்கும் நடந்த வாக்கு வாதத்தைக் கூறும்போது வால்மீகி மிகவும் இயற்கையான முறையிற் கூறியிருக்கிறார். கம்பரோ உலக இயற்கைக்கு மாறுபடக் கூறுகிறார். முதன்முதலாக உனக்குப்புத்தி மயங்கியதா? அன்றித் தீயோர் செய்த சூழ்ச்சியா? உள்ளதைக்கூறு என்று தசரதன் கேட்பதாகக் கம்பர் கூறுகிறார். இது தசரதனைச் சூதுவாது அறியாதவனாக உலகுக்குக் காட்ட அவர் செய்யும் முயற்சியே. வால்மீகியோ வஞ்சத் தசரதன் இச் சந்தர்ப்பத்தில் எவ்வாறு பேசுவானோ அவ்வாறே பேசுவதாக எழுதுகிறார். பலமுறை கைகேயியின் காலைத்தொட்டு வணங்குவதாகத் தசரதன் கூறியதாகவும், ஒரு முறை அவள் காலில் விழுந்ததாகவும் ஆனால் அவள் காலைத்தொட முடியவில்லை என்றும் வால்மீகி எழுதுகிறார். கம்பரோ, தசரதன் அவள் கால்மேல் விழுந்தான் என்று கூறுகிறார். பெண்களையெல்லாம் சுடவேண்டும் என்று கூறிய தசரதன், ஒருத்தி கெட்ட வளாயிருக்கப் பெண்களையெல்லாம் நிந்தித்தேனே எனத் தன்னைக் கண்டித்துக் கொள்கிறானென வால்மீகி கூறுகிறார். கம்பரோ, பெண்களே ஏழுலகத்திலுமில்லை யென்னும்படி கூரிய வாளால் கொன்று குவிப்பேன் என்று தசரதன், பொங்கிக் கூறுவதாகப் பாடுவதோட மைகிறார். இதனால் உண்மையில் மிகவும் கேவலமா னவனான தசரதனைத் தம்மையறியாமலே தமது நோக்கத்துக்கு மாறாக மேலும் கெட்டவனாக அவர் காட்டுகிறார்.


இராமனுக்கு முடிசூட்டவும், அவனைக் காட்டுக்கனுப் பாமலிருக்கவும் ஆக இவ்விரண்டுக்கும் சேர்த்தே தசரதன் கடைசிவரை மன்றாடுவதாக வால்மீகி கூறுகிறார். கம்பரோ, முதலில் அவன் இரண்டுக்கும் சேர்த்துப் போராடியதாகவும், பின் பலியாதென எண்ணிப் பரதனுக்கு முடிசூட்ட இசைந்து பின் இராமன் காடேகாமைக்குமட்டும் மன்றாடுவதாகவும் எழுதுகிறார். அப்பாட்டு வருமாறு:-


நின்மகன் ஆள்வான் நீ இனிதாள்வாய் நிலமெல்லாம்
உன்வயமாமே ஆளுதிதந்தேன் உரைகுன்றேன்
என் மகன் என்கண் என்னுயிர் எல்லா உயிர்கட்கும்
நன்மகன் இந்த நாடிறவாமை நயஎன்றான்

கைகேயியும் தந்த வரத்தைத் தவிர்கென்றல் நல்லறமாமோ என்று இராமன் காடேகுவதை விட்டுக்கொடேனென்று கூறுவதாகக் கம்பர் கூறுகிறார். பின்னரும கம்பர் கூற்றுப்படி தசரதன் இராமனைப் பிரியமுடியாமலே வருந்துகிறான். கைகேயியும் இராமனைக் காட்டுக்கனுப்ப வில்லையென்றால் இறப்பேன் என்றாள். உடனே இராமனைக் காட்டுக்கனுப்பத் தசரதன் இசைகிறான். ஈய்ந்தேன் ஈய்ந்தேன் இவ்வரம் என்சேய் வனமாள என்பது கம்பர் கூற்று. இவ்வாறாக ஒவ்வொரு வரத்தையும் தனித்தனியே கொடுத்ததாகக் கம்பர் கூறுகிறார். இது வால்மீகி கூற்றுக்கு முற்றிலும் மாறுபட்டது.


பின் விடியுமட்டும் கைகேயி தூங்கியதாகக் கம்பர் கூறுகிறார். இது இயற்கைக்கு முற்றும் பொருந்தாது. வால்மீகியோ, அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே விடிந்துவிட்டதென்று கூறுகிறார். கைகேயி தான் மற்றைய பெண்களைவிட அதிக இன்பந்தந்ததாகக் கூறுவதையும், தசரதன் கடைசிவரை அவளைப் பலவாறு ஏமாற்றித் தன் வசப்படுத்த முயன்று கெஞ்சியதையும் கம்பர் கூறவில்லை. விடியும்போது தசரதனை எழுப்ப வந்தவர்களைத் தசரதன் தடுத்ததையும் கம்பர் கூறவில்லை.


பின்னர்ச் சுமந்திரன் வந்ததையும், சந்தேகித்துத் திரும்ப வந்ததையும் இன்னும் அவனுடைய செயல் களையும் கூறாது கம்பர் மறைத்தார். இவருக்குச் சுமந்திரன் முதலியோரை மிகவும் நல்லவர்களாகக் காட்டி, அவர்களுடைய தீய செயல்களை மறைக்க வேண்டுமென்பதே முக்கிய நோக்கமாக இருந்திருக் கிறது. ஆதலின் சுமந்திரனுடைய கள்ளச் செயல்களை யெல்லாம் மறைத்துப் பின்வரும் பாடல்களைப் பாடுகிறார்.


விண்டொட நிவந்தகோயில்
வேந்தர்தம் வேந்தன்றன்னைக்
கண்டிலன் வினவக்கேட்டான்
கைகயள் கோயில் நண்ணி
தொண்டைவாய் மடந்தைமாரிற்
சொல்லமற் றவருஞ்சொல்லப்
பெண்டிரிற் கூற்றமன்னாள்
பிள்ளையைக் கொணர்கவென்றாள்


இப்பாடலின் கருத்து: சுமந்திரன் தசரதனை அவனுடைய அரண்மனையிலே தேடிக் காணாமல் கைகேயி அந்தப்புரமடைந்து பணிப்பெண்கள் மூலமாகச் சொல்லி விட, கைகேயி இராமனை அழைத்துவர அவனை ஏவினாள் என்பது; இதனால் சுமந்திரன் தடையொன்றுமின்றி போகக் கைகேயி யரண்மனையில் தசரதனையடைந்து பேசியதும், தசரதன் கூறியதும் சுமந்திரன் திரும்பி வந்தபோது தசரதன் அவனைக் கண்டித்து இராமனை அழைத்துவரக் கட்டளையிட்டதுமாகிய வால்மீகி கூறும் உண்மை வரலாறுகளையெல்லாம் கம்பர் மறைத்து விட்டார். உண்மையை மறைக்கும் கம்பரின் இவ்விழி செயலென்னே! இதனால் கம்பர் தமது காலத்திருந்த வைணவரிடம் புகழ் பெறவே இவ்வாறு பல முக்கிய மான உண்மை வரலாறுகளையெல்லாம் மறைத்தாரென நாம் முன்னரே கூறியது மேலும் மேலும் வலுப்பெறு கின்றது. இவ்வுண்மைகளையெல்லாம் அறிஞர்கள் உணர்வார்களாக! 

திருமாலிடத்திலே உண்மையான பக்தியுடையவர்கள் இக்கதையின் உண்மையையறிந்து, இத்தகைய இழி குணமுள்ள ஆரிய மன்னனாகிய இராமனைத் தங்கள் தெய்மாகிய திருமாலின் தோற்றமெனக் கூறி உலகை ஏமாற்றி செயல்களை நன்கு தெரிந்து இன்னும் இம்மயக்கத்திலழுந்தியிராமல் உண்மையை நாடி உணர்வார்களாக!

                                        -----------------------------”விடுதலை” 27-08-2014

0 comments: