Search This Blog

20.9.14

அய்க்கோர்ட்டுக்கு வந்த கடவுளர் சண்டை! பக்தியின் லட்சணம் பாரீர்!


கடலூர் தேவநாதசாமி கோவில் கதவுகளை மூட தடை கோரி வழக்கு
சென்னை, செப்.19- கடலூர் மாவட்டம், திருவந்திபுரத்தில், மணவாள மாமுனிகள் உற்சவர் ஊர்வலத்தின் போது, தேவநாதசாமி கோவில் கதவை மூடுவதற்கு, தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்க, இந்து சமய அறநிலையத்துறைக்கு, உத்தரவிடப் பட்டுள்ளது.



சர்வதேச வைஷ்ணவ தர்ம சம்ரக் ஷண சொசைட்டியின் தலைவர், சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர், தாக்கல் செய்த மனு:

கடலூர் அருகே, திருவந்திபுரத்தில், தேவநாத சாமி கோவில் உள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார், இந்த கோவில் பற்றி, 10 பாசுரங்களை பாடியுள்ளார்.


மாட வீதியில், மணவாள மாமுனிகள் சன்னிதி உள்ளது. ஒவ்வொரு மாதமும், மூல நட்சத்திரத் தின்போது, மணவாள மாமுனிகள் சன்னிதியில் இருந்து, உற்சவரை, ஊர்வலமாக எடுத்துச் செல்வர். தேவநாதசாமி கோவிலைச் சுற்றி, ஊர்வலம் வரும். கடந்த ஆண்டு, அக்டோபரில், விழா நடந்தபோது, நான் கலந்து கொண்டேன். அப்போது மணவாள மாமுனிகள் உற்சவர் ஊர்வலம், தேவநாதசாமி கோவில் அருகில் வரும்போது, வடகலை பிரிவைச் சேர்ந்தவர்கள், கோவில் கதவுகளை மூடி விட்டனர். இதற்கு, நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.


கோவிலின் கதவுகள் அருகில் நின்றிருந்த வர்கள், என்னை தாக்க முற்பட்டனர். ஆகம விதிகள், கோவில் கதவுகளை மூட அனுமதிக்க வில்லை. கதவுகளை மூடுவது தவறான நடை முறையாகும்.


இதுகுறித்து, கடலூர் கலெக்டருக்கு மனு அனுப்பினேன். விசாரணை நடத்த, தேவநாதசாமி கோவில் நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. ஓராண்டு கடந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.


அடுத்த மாதம், மணவாள மாமுனிகளுக்கு திருவிழா துவங்குகிறது. உற்சவர் ஊர்வலமாக வரும் போது தேவநாதசாமி கோவில் கதவுகளை மூடக் கூடாது என, உத்தரவிட வேண்டும். என் புகாரின்மீது, விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி வைத்தியநாதன் முன் விசார ணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு, நோட்டீஸ் அனுப்ப நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

- மேலே கண்ட செய்தி பார்ப்பன  நாளேடு ஒன்றில் இன்று 11ஆம் பக்கத்தில் வெளி வந்துள்ள செய்தி!


ஹிந்துக்களை ஒன்று சேர்த்து, நாட்டையே ஹிந்து நாடாக ஆக்குவதும் மட்டுமல்லாமல், பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளின் பகுதிகளை யும் கூட இணைத்து அகண்ட ஹிந்துஸ்தானம் காண, குஜராத் பாடத் திட்டங்களின் இந்திய தேசப்படமேகூட அப்படி வெளியிட்டு, பள்ளி களில் போதிக்கப்படுகிறதாம்.


ஹிந்து முன்னணி, ஹிந்து ஒற்றுமை ஓங்குக என்ற ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் கர்ஜனை - இவைகளுடன் மேற்காட்டிய செய்தியையும் ஒப்பிட்டுப் பாருங்கள் நண்பர்களே!


ஹிந்துமதம் என்ற அந்நியன் வைத்த பெயரை ஏற்றுக் கொண்டு ஷாகா நடத்தும்  பரிவார்களே, சேனாக்காரர்களே, அதற்குமுன் இந்த மதத்திற்கு என்ன பெயர், வேத மதம், ஆரிய மதம், வைதீக சனாதன மதம், பார்ப்பன மதம் - இப்படித்தானே அழைக்கப்பட்டது இம்மதம்? இல்லையா? இந்த அர்த்தமுள்ள(?) ஹிந்து மதத்தின் வேடிக்கை விசித்திரம் இந்த 21ஆம் நூற்றாண்டில் - 2014இல் கூட எப்படிப்பட்ட ஒற்றுமையைக் கட்டி மக்களை இறுக இணைக்கிறது பார்த்தீர்களா?


நாலாயிரம் ஜாதிகளுக்கு மேல் - பிரிவுகளுக்கு மேல் பிரிவு - பிளவுகள் ஒருபுறம் இருக்கட்டும். ஹிந்து மத்திலேயே சைவ (சிவ), வைஷ்ணவப் பிரிவுகள், அதுபோதாது என்று வைஷ்ணவத் துள்ளேயே,  வடகலை, தென் கலை அடிதடி, யானைக்கு எந்த நாமம் - வடகலை நாமமா? தென்கலை நாமமா? சீ மார்க்கா, ஹி மார்க்கா? என்ற 150 ஆண்டுகால வழக்குச் சண்டை மோதல்கள்!


ஒரு கடவுள் வந்தால் மறு கடவுள் - பெருமாள் பார்த்து விடக் கூடாதாம்; கதவு சாத்தி தம் வெறுப்பை - எதிர்ப்பை உமிழ்கின்ற ஒற்றுமையின் உச்ச கட்ட யோக்கியதையைப் பார்த்தால் எப்படித்தான் சிரிப்பதோ? சர்வ சக்தியுள்ள இந்த கடவுளர் - சண்டைகள் மோதல்களைத் தீர்க்க அய்க்கோர்ட் நீதிபதி (மனிதன்) அல்லவா தேவைப்படுகிறார்!


தீண்டாமையைவிட பாராமையை கடவுள்களே அனுசரிக்கிறார்கள்.
என்னே வேடிக்கை! எத்தனைக் கேலிக் கூத்து!!


பெரியார் சொன்னாரே


கடவுளை மற, மனிதனை நினை என்று ; அது எத்தகைய நடைமுறை உண்மையாகி விட்டது பார்த்தீர்களா?


கடலூருக்குப் பக்கத்தில் உள்ள வடலூரில் வாழ்ந்த வள்ளலார் கேட்டார் எல்லாம் பிள்ளை விளையாட்டு என்று அந்த பிள்ளை விளை யாட்டின் சண்டைகளில் இப்படியும் ஒரு ரகமோ?


பக்தி வந்தால் புத்தி போய்விடும்.
புத்தி வந்தால் பக்தி போய் விடும்.


என்றுதான் புத்தி வருமோ? தெரிய வில்லையே!

------------- "ஊசி மிளகாய்" --"விடுதலை”19-09-2014

1 comments:

Feroz said...

நல்ல பதிவு ஓவியா..