Search This Blog

16.4.15

இந்தியக் கலாச்சாரத்தை எதிர்க்கலாமா? வீரமணி காரணமாகலாமா?




மாலை முரசு என்ற ஒரு ஏடு இந்தியக் கலாச்சாரத்தை எதிர்க்கலாமா? என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளது (15.4.2015 பக்.4)


முதலில் ஒரு கேள்வி: இந்தியக் கலாச்சாரம் என்ற ஒன்று இருக்கிறதா?
இந்தியா என்பது ஒரு நாடல்ல - அது ஒரு துணைக் கண்டம். இதில் பல மாநிலங்கள், பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் இருக்கின்றன என்ற அடிப்படை அறிவும், சிந்தனையும் இருந்தால் இப்படி ஒரு தலையங்கத்தை எழுதும் எண்ணமே வந்திருக்காது.


தாலி என்பது இந்தியாவில் அனைத்து மக்களாலும் பின்பற்றப்படுகிறதா?
ஏன் தமிழ்நாட்டிலேயேகூட எல்லா மாவட்டங்களிலும் தாலி கட்டித்தான் திருமணம் செய் கிறார்களா?


இந்தியாவில் உள்ள இந்துமதம் என்று சொல்லப்படு கின்ற வட்டத்துக்குள் வருகின்றவர்கள் அனைவரிடத்திலும் தாலி கட்டும் கலாச்சாரம் உண்டா?
இந்து மத வேதங்களில் (சுருதி ஆதாரம்)  மனு ஸ்மிருதி தாலியைப் பற்றிச் சொல்லி இருக்கிறதா?


அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களால் எழுதப்பட்ட சடங்குகளின் கதை! இந்து மதம் எங்கே போகிறது? 2ஆம் பாகம் பக்கம் 41இல் என்ன எழுதுகிறார்?


திருமணம் என்றாலே நம் எல்லோரின் நினைவிற்கு வருவது.. அல்ல... அல்ல... வர வைக்கப்பட்டிருக்கிறது.


மாங்கல்யம் தந்து நாநேந
மமத ஜீவந ஹேதுநா
கண்ட் பத்நாமி ஸுபகே
ஸஞ்ஜீவ ஸநத.. ஸதம.
டி.வி. சினிமா, ரேடியோ, கீடியோ என எல்லாவற்றிலும் கல்யாணம் என்றாலே..?


இந்த சுலோகம்தான் ஒலிக்கிறது. இதை வைத்து தாலி கட்றான் என அடையாளப்படுத்து கிறார்கள். இந்த சுலோகத்துக்கு வயது என்ன - என்று பார்த் தால் வேத காலத்திலோ இந்தத் தாலி என்ற சடங்கே இல்லை.


மாங்கல்யதாரணம் அதாவது தாலி கட்டுவதற்கென்று வேதத்தில் மந்த்ரமே இல்லை. அது குறிப்பிடப்படவே யில்லை என்று அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச் சாரியாரே எழுதி இருக்கிறாரே, சாஸ்திரத்தையே கரைத்துக் குடித்தவர் என்று அவர்கள் போற்றும் அவரே ஆதார பூர்வ மாக அடித்துச் சொல்லி இருக்கிறாரே, இதற்கு என்ன பதில்?


தமிழ்நாட்டுக்குத் தான் வருவோம். தமிழர் திருமணத் தில் தாலி என்பதுபற்றி சங்க இலக்கியத்தில் உண்டா?


பெரும் புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார், தமிழர் திருமணத்தில் தாலி என்ற ஆய்வு நூலில் விரிவாக எழுதியுள்ளாரே - தாலி என்ற ஒன்று இல்லை என்று அழுத்தம் திருத்தமாக எழுதியுள்ளாரே - இதுபற்றி எல்லாம் மாலை முரசு குழாமுக்குத் தெரியுமா?


சங்க இலக்கியங்களில் தமிழர் திருமணம்பற்றி அகநானூற்றில் இரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. 86ஆம் பாடல் 136ஆம் பாடல் ஆகியவையே அவை - அவற்றில் தாலிபற்றி அறவே சொல்லப்படவேயில்லையே.


ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை நாயகர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் என்ன சொல்லுகிறார்?


மலையாளிகளின் திருமணப் பழக்கத்தில் ஒரு பெண் பூப்படைவதற்குமுன் அவர் கழுத்தில் தாலியைக் கட்டுவதுதான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது. அதற்குப் பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள்.


தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவதற் காகத்தான் தாலி கட்டும் திருமணம் என்னும் சடங்கு நடத்தப்படுகிறது. சத்திரியர்கள் அதற்கு மேலாகப் பூதேவர்கள் என்று சொல்லப்பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ் ஜாதிப் பெண்களை முதலில் அனுப விப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றம் என்கிறாரே புரட்சி யாளர் அம்பேத்கர் (டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டாதவர்களுக் குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்கம் 205-206).


கற்றறிந்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு மேலே ஆய்வு செய்து இந்தியக் கலாச்சாரத்தைப்பற்றி எழுதுகிறதா மாலை முரசு?


தாலியிலும் ஜாதி பின்னிப் பிணைந்து இருக்கிறதே! பாப்பார தாலி, பறத்தாலி, பொட்டுத் தாலி, நாம தாலி என் றெல்லாம் ஜாதி வாரியாக தாலியிலும் பிரிக்கப்பட்டுள்ளதே! இதன்மூலம் தாலி, பெண்ணடிமைச் சின்னம் மட்டுமல்ல - ஜாதியை வெளிப்படுத்தும் குறியீடாகவும் உள்ளதே - இதற்கு என்ன பதில்?


இவற்றை எல்லாம் ஒரு பக்கத்தில் வைத்தாலும் கால வெள்ளத்தால் எத்தனையோ சமாச்சாரங்கள், கலாச் சாரங்கள் அடித்துக் கொண்டு செல்லப்படவில்லையா?

பெண்கள் மார்பகத்தை மூடக் கூடாது என்ற நிலை இன்றும் தொடர்கிறதா?

கிறித்தவன், வெள்ளைக்காரன் ஆட்சிதானே அதனை சட்டம் போட்டுத் தடுத்தது?


கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்ல; தென் மாவட்டங்களில் உழைப்பாளர் சமுதாயமான நாடார்கள் கூட நுழைய முடியாத நிலை இருந்ததே.

திருச்செந்தூர் முருகனைப் பார்ப்பதற்கு சுவருக்குள் ஓர் ஓட்டை போட்டு வைத்தனர், அதன் வழியாகத்தான் முருகனைத் தரிசிக்க வேண்டும் என்ற நிலை மாற்றப்படவில்லையா?


மாற்றம்தான் மாறாதது என்பது அறிவார்ந்த கருத் தல்லவா?


திருமணம் ஆனவர் என்பதற்கு ஒரு பெண்ணுக் கான அடை யாளம் தாலி என்று ஏதே புத்திசாலித்தனமாக பேசுகிறார்களே - அவர்களைப் பார்த்து தந்தை பெரியார் எழுப்பும் கேள்வி என்ன? அப்படி என்றால் ஓர் ஆண் திருமணம் ஆனவர் என்பதற்கு என்ன அடையாளம்? என்று கேட்டாரே - அதற்கு மாலை முரசு குழுமிடத் திடமிருந்து பதில் உண்டா?


ஆண் என்றால் எஜமானன் என்ற ஆதிக்க உணர்விலிருந்து விடுபட்டு பேனா பிடித்தால்தான் இதன் அருமை புரியும். இவற்றை எல்லாம் அறிவார்ந்த முறையில் சிந்திக்காமல் இந்தியக் கலாச்சாரத்தை எதிர்க்கலாமா - சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்கு வீரமணி காரணமாக லாமா என்று கேள்வி கேட்கிறதே மாலை முரசு.


திராவிடர் கழகம், தன்  கொள்கையின் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஆகுமா?


அந்த நிகழ்ச்சியை எதிர்ப்பதாகக் கூறி வெடிகுண்டு களைத் தூக்கி வந்தவர்கள்பற்றி ஒரு வரி எழுத மன மில்லாத மாலை முரசு சட்ட ஒழுங்குப் பிரச்சினைக்கு வீரமணி காரணம் என்று எழுதுவது மாலைமுரசு யார் பக்கம் நிற்கிறது என்பதை வெளிப்படுத்த போது மானதாகும்.


சி.பா. ஆதித்தனார் உணர்வு - அதன் வழி வந்தவர்களால் எப்படி திசை மாற்றப்பட்டுள்ளது - கொச்சைப்படுத் தப்பட்டுள்ளது என்பதை எண்ணும்போது வேதனையாகத் தான் இருக்கிறது.


-----------------------------”விடுதலை” தலையங்கம்  16-04-2014


Read more: http://www.viduthalai.in/component/content/article/71-headline/99801-2015-04-16-11-05-31.html#ixzz3XWNe9700

0 comments: