Search This Blog

24.5.15

வள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதிதாசன் படத்தை வைக்க வேண்டும்-பெரியார்

புலவர்களுக்குத் துணிச்சல் இல்லை

இன்றைய உலகம் மாறுதல் உலகம். அதுவும் புரட்சிகரமான மாறுதல் காலம். அந்தப் புரட்சிகரமான மாறுதலுக்கு ஏற்ற தகுதியுடைய மக்களாக நாம் இல்லை. காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம். மற்ற உலக மக்களெல்லாம் விஞ்ஞானத்தில் அதிசய, அற்புதங்களையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்கள். நம் நாட்டில் எத்தனை பெரிய அறிஞர்கள், வித்வான்கள், புலவர்கள், டாக்டர் பட்டம் பெற்றவர்கள் யார் வந்தாலும், பழைய குப்பைகளைத் தலை மேல் போட்டுக் கொண்டு, அதைப் பற்றி விளக்கி நம் மக்களை மேலும் மூட நம்பிக்கைக்காரர்களாக்கப் பாடுபடுகிறார்களே ஒழிய, மக்களின் அறிவை வளர்க்க வேண்டுமென்று பாடுபடுவதே கிடையாது.

இன்றைய தினம் இருந்து வருகிற முறைகள், இலக்கியங்கள், புலவர்கள், மகாத்மாக்கள், மகான்கள் எல்லாம் பழைமையைத் தான் கிளறுகிறார்களே தவிர, புதுக் கருத்துக்களை - புதுமையான கருத்துகளை மக்களுக்குத் தேவையானவற்றை எடுத்துச் சொல்வதே கிடையாது. இதை நான் சொல்வது வேண்டுமென்றோ விரோதமென்றோ கருதக் கூடாது. அவர்கள் மனதில் பட்டதை அவர்களுக்குச் சரியென்று பட்டத்தைத்தான் எடுத்துச் சொல்வார்கள். அதனைச் சிந்தித்து உண்மையென்று பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் சொல்வது அத்தனையும் உண்மை, எழுதி நெருப்பில் போட்டால் வேகாது என்று சொல்லவில்லை. நானும் பொய் சொல்லலாம்; நீங்கள், நான் சொல்வதை மற்றவர்கள் சொன்னதைப் போல் உடனே ஏற்றுக் கொள்ளாமல், உங்களை அறிவைக் கொண்டு சிந்தித்து யார் சொன்னது சரியென்று படுகின்றதோ, அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.

நம் நாட்டிலே மனித வாழ்க்கைக்கு - நம் மக்களுக்கு ஏற்றதாக ஒரு இலக்கியம் கூடக் கிடையாது. இருக்கிறது என்று யாராவது எடுத்துக் காட்டினால் பணிவோடு ஏற்றுக் கொள்கின்றேன். நான் ஆணவமாகப் பேசுவதாகக் கருதக் கூடாது. எனக்குள்ள கவலையால் சொல்கிறேன். பழைய வீட்டை இடித்துப் புதிய வீட்டைக் கட்ட வேண்டுமென்று கருதுகின்றவன், பழைய வீட்டில் இடித்த சாமான்களைக் கொண்டு புதிய வீடு கட்ட வேண்டுமென்று முயற்சித்தால் புதிய வீட்டிற்கு இந்தச் சாமான்கள் பொருந்துவதாக இருக்காது. இந்தச் சாமான்களுக்கு ஏற்ற மாதிரி வீட்டை அமைக்க வேண்டியதாக இருக்கும். புதுமைக்குப் பழைமை எவ்வகையாலும் பொருந்தாது. பழையதை எல்லாம் தூக்கிக் குப்பையிலே எறிந்து விட்டு எல்லாவற்றையும் புதியதாக்க வேண்டியிருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கிற காலம், சரித்திரம் எல்லாம் பெண், ஆணுக்கு அடிமை என்பது ஏற்பட்ட பின் தான். அதன் பின் தான் மனித தர்ம இலக்கியம் ஏற்பட்டது.

நம் அறிஞர்களும், புலவர்களும் நமக்கு மனித தர்மத்திற்குக் குறளைத் தான் எடுத்துக் காட்டுவார்கள். அந்த வள்ளுவன் கூட இருக்கிற மற்றவனை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்பது தானேயொழிய, அவன் தான் எல்லாவற்றிற்கும் என்பது பொருந்தாதது. நேற்று ஒரு பள்ளியில் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்துப் பேசும் போது, வள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதிதாசன் படத்தை வைக்க வேண்டுமென்று சொன்னேன். பாரதிதாசனைப் போல சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்ல நம் புலவர்கள் முன்வர வேண்டும். புலவர்களை வணக்கத்தோடு கேட்டுக் கொள்கிறேன்.

ஆண்களுக்கு எந்தப் புலவனும் ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லவில்லை. அத்தனை நீதி சொன்னவனும், ஒழுக்கம் பற்றிச் சொன்னவனும் பெண்களுக்குத் தான் சொல்லி இருக்கிறான். இன்றைக்கு நாம் நினைப்பதை அவன் எப்படி நினைக்க முடியும். இன்றைய உலகம் வேறு; நேற்றிருந்த உலகம் வேறு.

பழைய வைத்தியன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், இப்போது இங்கிலீஷ் வைத்தியத்தில் பெயிலாகப் போனவனால் செய்யக் கூடியதைக் கூட அவனால் செய்ய முடியாது. பழைய வைத்தியன் முறையே மணி - மந்திரம் - அவ்டதம் என்பது. இப்போது அதெல்லாம் பயன்படுவது கிடையாது. அதுபோல இன்றைய வாழ்வுக்குப் பழைய சங்கதியைப் படிக்கவே கூடாது. எந்த நெருக்கடியான கட்டமாக இருந்தாலும் நமக்கு எதிரேயுள்ள - நம் அறிவிற்கு, சிந்தனைக்கு, நடப்பிற்கு ஏற்றதைக் கொண்டு தான் செயல்பட வேண்டுமே தவிர, முன்னோர்கள் நடந்து கொண்டார்கள், பழைய புராணம், இதிகாசம் இப்படிச் சொல்கிறது என்று பின்னோக்கியுள்ளதைப் பார்க்கக் கூடாது.

ஓர் ஆணும், பெண்ணும் கூடி வாழ வேண்டுமென்றால், அவர்களாக ஒத்த அன்போடு, நட்போடு கூடி வாழட்டும். புருஷன் - பெண்டாட்டி எஜமான் அடிமைத் தன்மை தேவை இல்லை என்கிறேன். ஒரு மனிதனுடைய வாழ்விற்காக, திருப்திக்காக எதற்காக இன்னொரு ஜீவன் அடிமையாகவே இருக்க வேண்டும். அதற்கு என்ன அவசியம் என்று கேட்கிறேன். மனித ஜீவன்கள் இரண்டுக்கும் ஒரேவிதமான அந்தஸ்து தான் உண்டு. அப்படியிருக்க ஒன்றுக்கு மட்டும் எஜமான் தன்மையையும் மற்றதற்கு அடிமைத் தன்மையையும் ஏன் ஏற்படுத்த வேண்டும்? பெரிய கோடீஸ்வரன் மகளுக்குப் புருஷனானாலும் கவலைப்பட வேண்டியவள் பெண்தான். புருஷனுக்கு அடிமையாக அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டும். எதிர்த்துப் பேசக் கூடாது. அவனுக்கு வேண்டியவை அத்தனையையும் இவள் தான் செய்ய வேண்டும்.

மனிதன் பகுத்தறிவுவாதி, சிந்தனையுள்ளவன். அவனே இப்படி நடந்து கொள்கின்றான். பகுத்தறிவற்ற ஜீவன்கள் கூட ஒன்றை அடிமையாகக் கருதுவது கிடையாது.

வள்ளுவன் அப்படிச் சொன்னான்; தொல்காப்பியன் இப்படிச் சொன்னான் என்றால், அதெல்லாம் அவன் வாழ்ந்த காலத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமே தவிர, இப்போதைக்கு அவை பயன்படக் கூடியதல்ல. இந்த வாழ்க்கைக்கு எவனும் வேலி போட முடியாது. நாளைக்கு எப்படி அமையும் என்று சொல்ல முடியாது. நாளுக்கு நாள், நேரத்திற்கு நேரம் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மனிதன் மாறிக் கொள்ளத்தான் வேண்டும்.

நம் புலவர்களுக்குத் தைரியம் இல்லை. இலக்கணம் - இலக்கியத்தின் மேலேயே அவர்கள் கண் இருப்பதால் அவர்கள் எண்ணம் பழைமையிலேயே போகிறது. பகுத்தறிவே அவர்களுக்கு ஏற்படுவது கிடையாது. பகுத்தறிவு ஏற்படும்படியான இலக்கியங்கள் - நூல்கள் எதுவும் தமிழில் கிடையாது. இருப்பதெல்லாம் மனிதனின் அறியாமை - முட்டாள்தனம் - மூடநம்பிக்கை இவற்றை வளர்ப்பவை தான். பார்ப்பான் வருகிற வரை நமக்குச் சரித்திரமே கிடையாது. இருந்ததை யெல்லாம் பார்ப்பான் கொளுத்தி விட்டான். ஒன்றிரண்டு மிஞ்சியதையும் மாற்றி விட்டான்.

இந்தப் பெண்டாட்டி போனால், இன்னொன்றைத் தேடிக் கொள்ளலாம் என்று ஆண் கருதுவது போல பெண்களும் கருத வேண்டும். காதல் என்பது ஓட்டலில் போய்ச் சோறு தின்பது போல. நம்மவன் காதலைப் பெரிதுபடுத்தி விட்டான். என்ன காதல் வெங்காயம். அவன் பெரிய பக்தன், அவன் மேல் சாமி இருக்கிறது. அவன் சொன்னால் பலிக்கும் என்று சொன்னால், கேட்கிறவனுக்கு நடுக்கம் தோன்றுவது போல் இருக்கும். அதுபோலத் தான் காதலும். அன்பு என்பது ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளும் வரை தான். ஒருவர் மாறினால், மற்றவரும் மாற்றிக் கொள்ள வேண்டியது தான். இதில் ஒருவர் மட்டும் மாறாமல், அப்படியே இருக்க வேண்டும். இன்னொருவர் தங்கள் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்பது அயோக்கியத்தனமாகும். சம உரிமையோடு நண்பர்கள் போலிருக்க வேண்டும்.

புலவனென்றால் புதிய கருத்துகளைச் சொல்ல வேண்டும். பழைய குப்பைக் கூளங்களையே கிளறிக் கொண்டிருப்பது, அதற்கு விளக்கம் - உரை - பொருள் என்றெல்லாம் துருவிக் கொண்டிருப்பது பழைமையானது. இன்றைக்கு என்ன நடக்கிறது, நாளைக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றிச் சிந்தித்து அதை எடுத்துக் கூறுவதுதான் உண்மை. புலமைக்கும் புலவனுக்கும் இலட்சணமாகும். நாய் எலும்பைக் கடிக்குமாம். அந்த எலும்பில் சதையே இருக்காதாம். அந்த எலும்பு நாயின் எயிறில் பட்டு இரத்தம் வருமாம். அந்த இரத்தம் எலும்பிலிருந்து வருவதாகக் கருதி மேலும் கடித்து எயிறை எல்லாம் கிழித்துக் கொள்ளுமாம். அதுபோன்றுதான் நம் புலவர்கள் பழைய குப்பைகளைக் கிளறி அதன் மூலம் கிடைக்கும் பதவி எலும்பைக் கடிக்க ஆசைப்படுகின்றார்களே தவிர, உண்மை நிலையை எடுத்துச் சொல்லி சமுதாய மக்களை முன்னேற்றுவோம் - அறிவுடையவர்களாக்குவோம் என்று எவரும் பாடுபடுவது கிடையாது.

திருமண சம்பந்தமாகக் கூட்டம் நடந்தால் முதலில் நம் தோழர்கள், அறிஞர் அண்ணாதுரைக்கு வணக்கம் என்று சொல்லித்தான் ஆரம்பிக்க வேண்டும். ஏன் என்றால், 40-வருட காலம் இம்முறையில் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றும், இது சட்டப்படிச் செல்லுபடி அற்ற திருமணமாக இருந்தது. அதனை அண்ணா அவர்கள் ஆட்சி சட்டப்படிச் செல்லக் கூடியதாக்கி விட்டது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதற்காகவே முதலில் அண்ணாவிற்கு வணக்கம் தெரிவித்து ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னேன். அடுத்து, கல்வி சம்பந்தமாக ஏதாவது ஆரம்பித்தால் காமராசருக்கு வணக்கம் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும். அறிவுள்ளவன் கட்டாயம் இதைச் செய்வான்.

தமிழனின் பழைய இலக்கியம், சிறந்த இலக்கியம் என்று தமிழ்ப் புலவர்கள் எடுத்துக் கூறும் தொல்காப்பியம் தமிழன் நூலல்ல. வருணாசிரமத் தர்மத்தை பாதுகாக்க ஏற்பாடு செய்து, நமக்குச் சுவையான சிலவற்றையும் சேர்த்து நமக்குள் மடமையையும் - முட்டாள்தனத்தையும் - அறிவற்ற தன்மையையும் வளர்க்க மேல்ஜாதிக்காரனால் புகுத்தப்பட்டதேயாகும்.

அதைத் தான் தமிழ்ப்புலவர்கள் மிக உயர்ந்ததாகப் போற்றுகின்றனர், புகழ்கின்றனர். அதில் இந்த அய்யர் வகுத்த கரணங்கள் மூவோர் மேலோர்க்கும் தான். அது நாளடைவில் கீழோர்க்காயிற்று என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழனுக்கு இந்நிகழ்ச்சிக்கு முறையே இல்லை என்பதோடு, இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெற்றது என்பதற்கு ஆதாரமில்லை. தமிழனுக்கு நிகழ்ச்சியானது இருந்திருக்குமானால், தமிழில் அதற்காக ஒரு சொல் இருக்கும். தமிழ் மொழியில் இந்நிகழ்ச்சியினைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொல்லே இல்லை என்பதிலிருந்து, இது தமிழனுக்கில்லாத மற்றவனால் புகுத்தப்பட்டது என்பதை உணரலாம். யாராவது புலவர்கள் தமிழர்களுக்கு இந்நிகழ்ச்சி இருந்தது, அதற்கு இதுதான் முறையென்பதை ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினால் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

இம்முறையில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் மூட நம்பிக்கையான காரியங்களைக் கைவிட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் கோயிலுக்குப் போகக் கூடாது. பண்டிகைகள், உற்சவங்கள் முதலான முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. வரவிற்கு மேல் செலவிடக் கூடாது. எக்காரணத்தை முன்னிட்டும் பிறரிடம் போய் உதவி கேட்கக் கூடாது. நம் சமுதாயத்திற்கும் தங்களாலான உதவிகளைச் செய்ய வேண்டும். குழந்தை பெறுவதில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாமல் இருந்தால் நல்லது. வேண்டுமானால் ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆடம்பரமான வாழ்வு வாழக் கூடாது. சாதாரண எளிய வாழ்வு வாழ வேண்டும்.

------------------------- 03.07.1968 அன்று நடைபெற்ற பரமசிவம் - பானுமதி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை" -06.08.1968

0 comments: