Search This Blog

27.7.15

மாட்டுக் கறிக்குத் தடை என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தின் இன்னொரு வடிவம்

எதை உண்பது என்பது தனி மனித உரிமையே!



ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கான ஊதுகுழலாக இருந்து வரக் கூடிய ஆர்கனைசர் இதழ்  உத்தர காண்ட் மாநிலத்தில் ரூர்கியில் உள்ள அய்.அய்.டி. நிறுவனத்தில் உள்ள உணவுச் சாலையில் (கேண்டீனில்)  இந்து மதத்துக்கு எதிரான நிலை இருந்துவருவதாகவும்  குறிப்பிட்டிருந்தது. இது ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சிக்கலாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தது.


ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பொறுப்பில் உள்ள தலைவர்கள் பலரும் இறைச்சி உணவை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, இறைச்சி உணவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இரட்டை நிலைப்பாட்டில் தான் இருந்துவருகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த ஆய்வாளரும், எழுத்தாளருமாகிய திலீப் தியோதார் கூறுகையில், மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவ ராக (சர்சங்சாலக்)  பொறுப்பேற்ற 2009ஆம் ஆண்டு வரையிலும்கூட இறைச்சி உணவை விரும்பிச் சாப் பிட்டு வந்தவரே! பாலாசாகிப் தியோரா கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக பொறுப் பேற்கும் வரையிலும் கோழி மற்றும் ஆட்டிறைச்சி உணவுகளை வெளிப்படையாகவே சாப்பிட்டு வந்தவரே! ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரச்சாரக்கு களாக இருப்பவர்களில் பெரும்பான்மையோர் இறைச்சி உணவுப் பிரியர்களாகவே இருந்துவந்துள்ளனர். இதில் இந்துமதத்துக்கு எதிரான நிலை என்று ஏதும் கிடையாது என்றார்.   42 நூல்களை எழுதியவர் இவர்.

சந்தீப் சிங் எழுதியதற்கு ஆர்எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்தவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித் துள்ளனர் என்பதையும் ஆர்கனைசர் ஆசிரியர் பிரஃபுல்ல கேட்கார் ஏற்றுக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து விரிவாக எழுதி வருபவரான திலீப் தியோதார் கூறுகையில் இறைச்சி உணவை எப்போதுமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்தது கிடையாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பலரும் இறைச்சி உணவை விரும்பி சாப்பிட்டுவருகிறார்கள். மீன், கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி விரும்பி சாப்பிடும் அவர்கள் மாட்டிறைச்சியை மட்டும் ஏற்றுக் கொள்வதில்லை.

ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திலேயே இறைச்சி உணவை சாப்பிடத் தடையேதும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள பிரச்சாரக் பலரும் இறைச்சி உணவை உண்பவர்கள்தான்.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவரான எம்.ஜி.வைத்யா கூறுகையில், பிரச்சாரக்குகள் இறைச்சி உணவை எடுத்துக்கொள்வதில் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. இறைச்சி உணவை உண்பவர்களும் இந்தியர்களே என்று கூறினார்.
(தகவல்: எகனாமிக் டைம்ஸ், 22.7.2015)


மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் வெகு மக்களின் உரிமைகளில் பார்ப்பனீய ஈட்டியை நீட்டி மிரட்டிக் கொண்டு தானிருக்கிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அசைவ உணவு வாடையே கூடாது என்பதில் கவனமாகவே உறுதியாகவே இருக்கிறார்கள். ஒருவர் உண்ணும் உணவு என்பது அவரது தனிப்பட்ட உரிமையாகும். உணவு என்பது அனேகமாக பழக்க வழக்கத்தைச் சார்ந்ததே! அதில் தலையிட எந்த அதிகார மய்யத் துக்கும் உரிமை கிடையாது. அரசோ, நீதிமன்றங் களோகூட மூக்கை நுழைக்க முடியாது.

இந்திய மக்கள் தொகையில் 19 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்கச் செல்லுகின்றனராம். உணவுப் பிரச்சினையில்கூட தன்னிறைவை எட்டுவது பற்றி அக்கறை கொள்ளாத தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசுக்கு (பிஜேபி தலைமையிலானது) ஒரு தனி மனிதன் எதை உண்ண வேண்டும், எதை உண்ணக் கூடாது என்று கூற எந்தவித உரிமையும் கிடையாது.

ஏழை மக்களுக்கு மாட்டுக்கறிதான் குறைந்த விலையில் கிடைக்கும் அதிக சத்துள்ள உணவாகும் - உழைப்பாளி மக்களுக்கு அது அவசியம் தேவை.

உழைப்புக்கும் உஞ்சி விருத்திப் பார்ப்பனர்களுக் கும் என்ன உறவு? உழைப்பை முன்னிறுத்தும் விவசாயத்தைப் பாவத் தொழில் என்று கூறுபவர்கள் பார்ப்பனர்கள் ஆயிற்றே -  இந்துத்துவாவின் மனுதர்மக் கூற்றாயிற்றே!

அப்படிப் பார்க்கப் போனால் மனு தர்மத்தில் பசு மாமிசத்தை எப்படி எப்படியெல்லாம் உண்டு சுவைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதே! இவர்கள் கொண்டு வரவிரும்பும் ராம ராஜ்ஜியத்தின் கதாநாயகன் இராமனே இறைச்சி உண்டவனாயிற்றே, மது குடித் தவன் ஆயிற்றே) ஏனிந்த இரட்டை வேடம்?

மாட்டுக் கறிக்குத் தடை என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தின் இன்னொரு வடிவம் என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை. அருமைத் திராவிடரே பார்ப் பனர் அல்லாதாரே விழித்தெழுவீர்!
                                ----------------------”விடுதலை” தலையங்கம் 27-07-2015

0 comments: