Search This Blog

18.7.15

சிறைபட்ட தோழர் ஈ.வெ.இராமசாமி- ஊன்றிப்படியுங்கள்!உண்மைகள் புரியும்!!

சிறைபட்ட தோழர் ஈ.வெ.இராமசாமி

ராமசாமி என்று சொன்னால் நான் குறிப்பிடும்  ஆளை நீங்கள் சட்டென்றுகண்டு பிடிக்க மாட்டீர்கள் தோழர் ராமசாமி என்று சொன்னாலும் அவர் உங்கள் கைக்கு அகப்படமாட்டார். தோழர் ராமசாமி கூற வேண்டும் இல்லையேல், ஈ.வெ.ராமசாமி என்று சொல்ல வேண்டும் அல்லது குடிஅரசு என்று குறிப்பிடவேண்டும்.

இப்படி தெளிவாகச் சொன்னால்தான் அவர் உங்கள் கவனக் கைக்குள் சிக்குவார். அல்லது வேறொருவகையில் குறிப்பிட்டாலும் குறிப்பிடலாம். அதுதான் தமிழ்நாடு முறை. தமிழ்நாடு என்றால் தமிழ் தேசத்தைக் குறிப்பிடுவதாக நினைத்து விடாதீர்கள். சென்னையில் நடைபெறும் தினசரி பத்திரிகையான தமிழ்நாடு வைத்தான் நான்இங்கு குறிப்பிடுகிறேன்.
அந்தப்பத்திரிகைக்கு ராமசாமி நாயக்கர் என்று அழைப்பதில் தான் பிரீதி அதிகம் தோழர் ஈ.வெ.ரா அந்த நாயக்கர் பட்டத்தையும், அதற்குரிய ஸனத்தையும் வாபஸ் செய்து வெகு நாளாயிற்று என்பது தமிழ்நாடுக்குத் தெரியாதென்பதல்ல. குடிஅரசாலும் அதைத் தழுவிய குட்டிப்பத்திரிகைகளாலும்,
அதன் கோஷ்டியாராலும் தோழர் ஈ.வெ.ரா.உச்சரிக்கப்படுங் காலத்தில் ரத்து செய்யப்பட்ட நாயக்கர் பட்டத்தைச் சேர்க்காமல் வெறும் ராமசாமி என்று மொட்டையாக உச்சரித்து வருவதைத் தெரிந்தும், அறிந்தும் அதன் காரணத்தை உணர்ந்தும் இப்படி பிடிவாதமாக அந்த வாலையும் சேர்த்து எழுதி வருவதிலிருந்து தமிழ்நாடுக்கு ஜாதிப்பட்டத்தின் மேலுள்ள காதலை நன்கு அறியலாம். இவ்வகையில் தமிழ்நாடும் சுதேசமித்திரனும் ஒரு தனிரகம்.

தோழர் ராமசாமி இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? கோயமுத்தூரில், உயரமான சுற்றாலைச் சுவர்களுடன் கூடிய நல்ல கெட்டிக்கட்டடத்தில் இரும்புக்கம்பிக் கதவுகள் போட்ட அறைக்குள் இருக்கிறார். அவர் சாப்பிடுகிற சாப்பாடு சர்க்கார் சாப்பாடு. இந்த மகத்துவம் யாருக்கு கிடைக்கும். ஆனால் அவர் முன்போல பிரசங்கம் பண்ண முடியாது. பேப்பருக்குத் தலையங்கம் எழுத இயலாது.
குறிப்பிட்ட நேரத்தில் சாப்பாடு. மற்ற நேரத்தில் வேலை, மாலை 5 அடித்ததும் அறைக்குள் அதற்கப்பால் அயர்ந்து தூங்க வேண்டியதுதான். ஆனால் மூட்டைப்பூச்சிகளின் இஞ்ஜக்ஷன் சிகிச்சையும், கொசுக்களின் ரீங்காரகானமும் மட்டும் உண்டு. தோழர் ராமசாமி ஜெயிலுக்குள்ளிருப்பது இது நாலாவது தடவை. இவர் தான் மட்டிலும் ஜெயிலுக்குள் போகவில்லை தன்னோடு உடன் பிறந்த தங்கை தோழியர் கண்ணம்மாளையும் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்.
அண்ணனுக்கு ஆறு மாதம் தங்கைக்கு மூன்று மாதம் இதோடு போகாமல் தலைக்கு முன்னூறு ரூபாய் அபராதம் இது செலுத்தப்படாவிடில் இன்னும் ஒவ்வொரு மாதம் அதிகமான ஜெயில் வாழ்வு. இத்தனை உபத்திரவம் எதனால் தெரியுமா? சென்ற 29.10.33இல் குடிஅரசு பத்திரிக்கையில் இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?
என்று எழுதப்பட்டிருந்த தலையங்கந்தான். குடி அரசுக்கும், மேற்படி அண்ணன் தங்கைக்கும் உள்ள சம்மந்ததத் தைதான் நீங்கள் அறிவீர்களே. குடிஅரசு தான் பத்திரிகாசிரியர் அண்ணன் ஈ.வெ.ரா. அதன் பதிப்பாசிரியர் தங்கை கண்ணம்மாள் இதனால் இந்த இரண்டு பேருக்குமே தண்டனையும் அபராதமும்.
தோழர் நாயக்கர் (தமிழ்நாடுவின் அனுமதியை எதிர்பார்த்து நாய்க்கர் வார்த்தையை உபயோகிக்கிறேன்) தோழியர் கண்ணம்மாள் இருவரும் ஜெயிலுக்குப் போனது பற்றி நான் இங்கு வாழ்த்துக் கூறவில்லை. அவர்கள் பொதுவேலையில் இறங்கியது முதல், நாளது வரை செய்த சேவைகளை செய்த தியாகங்களை டைரி எழுதி கண், காது, மூக்கு வைத்து சித்திரம் வரையவும் முற்படவில்லை. ஜில்லா மாஜிஸ்திரேட் செய்த தீர்ப்பை சரி என்றோ, தப்பு என்றோ அப்பீல் ஜட்ஜ்மெண்டு கூறவும் முன்வரவில்லை.
தோழர் ராமசாமி இந்தத் தீர்ப்பை எப்படி ஏற்றுகொண்டார் என்பதை எடுத்துக்காட்டவே இந்தப்பாடுபடுகிறேன். ஆனால் என் உள்ளத்தில் உதயமாகும் எண்ணங் களை படம் பிடித்துக் காட்ட எனக்கு சக்தி இல்லை. அந்த சக்தி இருந்தால் இந்த குடி அரசு வழக்கையும், அதில் ஏற்பட்ட தீர்ப்பையும் ஈ.வெ.ரா.எப்படி ரசித்தார் என்பதை இந்தப்பேனா நர்த்தனத்தில் சித்திரம் தீட்டிவிடு வேன், சிலையாகக் கூட சிற்பம் சித்தரித்துவிடுவேன், அந்த எளவு சக்திதான் எனக்கு ஏற்பட வில்லை. ]
வசனநடை சித்திரத்தில் இல்லாமல் போனாலும் கவிநடைச் சித்திரத்தில் ஒருவர் படம் தீட்டிக்கொண்டிருக் கிறார். அந்த ஓவிய நிபுணர் - சிற்ப சாஸ்திரி - யார் தெரியுமா? அவர் தான் பாரதிதாசன். அவர் தீட்டிவரும் சித்திரம் முடிவடைந்தததும் அதை நகர தூதன் வாசகர்களும் கண்டு களிக்கலாம்.
தோழர் ராமசாமி ஒரு பொல்லாத கிழவர், மகா பிடிவாதக்காரர். எதில் தலையிட்டாலும் பிறர் பின்தொடர முடியாத ஒரே ஓட்டந்தான், பொது சேவையில் தான் இப்படி என்று நினைக்கீறீர்களா? அல்ல. அவர் செய்த மிளகாய் வியாபாரத்திலும் அதே ஒட்டந்தான். மதுவிலக்குப் போராட்டத்தில் முதல் மெடல் பெற்றவர் இந்த தாத்தாதான். ஒத்துழையாமைக் காலத்திலும் அவரால் நடத்தப்பட்ட ஈரோடு டீம் தான் ஜெயித்து தீண்டாமையைத் தொலைக்க வைக்கத்தில் நடந்த பந்தயத்திலும் ஈ.வெ.ராவுக்குத்தான் கெலிப்பு.
இன்னுஞ்செல்ல வேண்டுமா? ஒரு பானை சோத்துக்கு இரண் டொரு பருக்கைமட்டும் பதம்பார்த்தால்போதும். சுயமரியாதை இயக்கம் அதன் தத்துவம் இப்போது எப்படி ஓடிக்கொண்டி ருக்கிறதென்பதை நீங்கள்தான் பார்க்கிறீர்களே. சீர்திருத்தத் தொண்டனுக்கு ஓய்வு நேரமோ இளைப்பாறும் மண்டபமோ கிடையாது என்று ஒரு பெரியார் சொல்லியிருக்கிறார்.
அதை நிதர்சனமாகக் காணவேண்டுமானால் தமிழ் நாட்டில் தோழர் ஈ.வெ.ரா.சரித்திரத்தில் தான் காணமுடியும். இரண்டொரு பேனாக்காரர்கள் தான் இந்த இடத்தில் என்னை மிரட்ட சிறைவாசம் ஓர் இளைப்பாறும் மண்டபம் என்று என்ணி என்னை ஜெயிக்கப் பார்க்கிறீர்களா?
சீர்திருத்தக்காரன் ஜெயிலுக்குள் இளைப்பாறு வதேது? உள்ளே இருக்குங்காலத்தில் அவன் மனம் என்ன பாடுபடுந்தெரியுமா? உண்மையான சீர்திருத்தக்காரனுக்கு அப்போதுதான் நிஜமான ஆவேசம் ஏற்படும், சிறைவாசத்தில் தான் அவன் செய்யப்போகிற யுத்தத்திற்குப் படையை எப்படி அணிவகுத்து நிறுத்துவதென்பதற்குப் பிளான் போடுவான்.
தோழர் ராமசாமிக்கு இந்தத் தீர்ப்பு கிடைத்தது பற்றி வெகு சந்தோஷம். ஆனால் தண்டனையைப் பற்றி மட்டும் அவருக்குக் கொஞ்சம் வருத்தம். யாருக்குத்தானிருக்காது? சும்மா, காட்டில், மரத்துக்கு மரம் பறந்து கிள்க்குக் கிளை தாவி நினைத்த நேரங்களில் பாடித்திரிந்த பறவையைப் பிடித்துக் கூட்டுகுள்போட்டு அடைப்பதுபோல அறைக்குள்ளிட்டு அடைத்தால் எந்த மனிதன் தான் வருத்தப்படமாட்டான்?
தோழர் ராமசாமிக்கு அந்த முறையில் வருத்தம் அல்லவே அல்ல. பொசுக்கென்று ஆறுமாதம் கிடைத்தது. அதிகமாகக் கிடைக்குமென்று நம்பியிருந்தார். அந்த நம்பிக்கையை இரண்டொருவரிடமும் சொல்லி வந்தார். ஆனால் அது ஏமாற்றத்தில் முடிந்தது.
கைது செய்யப்பட்டது, தோழர் ராமசாமிக்கு ரெட்டை சந்தோஷம். இந்த சாக்கில் உள்ளே போய்விட்டு வந்தால் ஊக்கம் ரொம்ப ஏற்படுமென்பது அவரது ஆசை. இந்த ஆசையை அனுபவிப்பதற்காகவே அவர் எதிர்வழக்காடவில்லை என்று நினைக்கிறேன். எத்தனையோ பேர்கள் எடுத்துச் சொல்லியும் எவ்வளவோ தொண்டர்கள் கெஞ்சிக் கேட்டுங்கூட இந்தத் தாடிக்கார கிழவன் ஒரே பிடிவாதமாய் சாதித்துவிட்டாரம்.
அப்பப்பா! இருந்தாலும் இந்தப் பழுத்த வயதில் இவ்வளவு பிடிவாதங் கூடாது. எதிர்வழக்காடுவதில் தான் இவ்வளவு முரட்டுத்தனமென்றால் வாக்கு மூலமாவது வகையோடு கொஞ்சம் சீனஸ்வரத்தில் கொடுத்திருக்கக்கூடாதா? குடிஅரசுத் தலையங்கம் ஒரு படியைத் தாண்டியிருந்ததென்றால் இவரது வாக்குமூலம் ஒன்பத்திரெண்டு படியையும் தாண்டிவிட்டது.
கடைசியாகப் பப்ளிக் பிராசிகியூட்டர் தனது ஆர்குமெண்டைப் பேசும்போது பார்க்கவேண்டுமே. இவரது குறும்புத்தனத்தை அவர் பேசும்போது பத்திரிகை வாசகங்களைப் படித்துக்காட்டி இந்த இடத்தில் ராஜத்துவேஷம் இருக்கிறது.
இந்த இடத்தில் பொதுவுடமைப் பிரச்சாரம் இருக்கிறது என்று எடுத்துக்காட்டும் போது தோழர் ராமசாமி ஸ்பிரிங் பொம்மையைப்போல தலையை அசைத்து அசைத்து ஆட்டிக்கொண்டு, அதற்குத் துணையாக ஆள்காட்டி விரலையும் பலகையில் அடித்துக்கொண்டு பப்ளிக் பிராசிகியூட்டர் சொல்லுவதெல்லாம் வாஸ்தவம் எனச்சொல்லுவது போல தலையாட்டி வந்தார். தீர்ப்புக் கூறியதும் அவரது முகப்பொலிவுப் படம் பிடிக்கக்கூடியதாக விருந்தது.

இவரை கோயமுத்தூர் ஜெயிலில் போட்டதால் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. அதுதான் ராஜகோபாலாச்சாரி - ராமசாமி சந்திப்பு. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரிக்கும் ஈ.வெ.ராமசாமிக்கும் அக்காலத்திலிருந்த நேசபான்மையை தமிழ்நாடு நன்றாக அறியும்.
இரண்டுபேரும் இணைபிரியாதிருந்த காலமும் ஒன்றிருந்தது. அண்ணன்தம்பிகள் கூட அவ்வளவு மரியாதையோடும், வாஞ்சை யோடும், வாதசல்யத்தோடும் இருந்திருக்கமாட்டார்கள். வைதீக ஒத்துழையாதாராகக் கூட இருந்த இவ்விருவரும் பேசிய பேச்சுக்கள் வால்யூம் கணக்கில் சேரும் புட்டாலும் புடமுடியாது என்று சொல்லக்கூடிய விதமாக தோழர்கள் ராமசாமியும், ராஜகோபாலாச் சாரியாரும் இருந்ததுபோல் 1925க்கு மேல் இருவரும் அரசியல் சத்துருக்களாய் மாறினர்.
குருகுலப்போராட்ட காலத்தில் தோழர் ஆச்சாரியார் நடந்து கொண்ட தோரணையிலிருந்து ஆச்சாரியார் சமத்துவக் கற்பில் ராமசாமி சந்தேகங் கொள்ள ஆரம்பித்தார். அதற்கு பிறகுதான் பிராமணர்களென்றால் தோழர் ராமசாமிக்குப் பச்சநாவியாகிவிட்டது. அந்த சனியன் பிடித்த குருகுலக் கிளர்ச்சிதான் இணைபிரியாதிருந்த அவ்விருவரையும் வெட்டிவிட்ட தென்று சொல்ல வேண்டும்.
சுயமரியாதை இயக்கங்கண்ட பின் இவ்விருவரும் சந்தித்ததே கிடையாதென்று சொல்லாம். எங்கேனும் தப்பித்தவறி முகத்தோடு முகம் மோதிக்கொண்டிருந்தாலும் இருவரும் பேசியிருக்கக்கூடிய சந்தர்ப்பமே வாய்த்திருக்காது.
தோழர் ராமசாமியை ஜெயிலுக்குள் கண்டதும் தோழர் ராஜகோபாலாச்சாரிக்கு தூக்கி வாரிப்போட்டது போலிருக்கும். ராஜதுவேஷத்தின் காரணமாக தோழர் ராமசாமி சிறைக்கு வந்தாரென்றும் கேள்விப்பட்டதும் அதைவிடப் பெரும் வியப்பாக இருந்திருக்கலாம். தோழர் ராமசாமி கோவை சிறைக்குள் நுழையும்போது தோழர் ஆச்சாரியார் உள்ளே இருக்கிறார்.
ஈ.வெ.ரா. இம்மாதிரி சிறைக்கு வர சந்தர்ப்ப மேற்படாது என்ற நினைப்பு ஆச்சாரியாருக்கு உண்டு. அதனாலேயே அவர் அவ்வாறு ஆச்சரியமடைந்திருக்கலாமென்று நான் கூறினேன். இந்த இரண்டு பேருக்குள்ளும் இருந்த பழைய அன்பு அவ்விருவரையும் கோவை ஜெயிலுக்குள் கூட்டி வைத்துவிட்டது பழைய சினேகிதர்கள் புதிய முறையில் கூடிக்குலாவும்போது என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது.
அவர்கள் நெஞ்சம் எப்படி நெகிழ்ந்தது என்பதையும் நான் அறியேன். அதை நீங்கள் அறிய ஆசைப்படுகின்றீர்களா? ஆம் என்றால் அவர்களைச் சந்தித்து நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
                             --------------------------------------------------------------------------(நகரதூதன்-1934)

0 comments: