Search This Blog

20.8.15

பார்ப்பன நாயகமும் பணக்கார நாயகமும்-பெரியார்

பார்ப்பன நாயகமே!

திராவிடர் கழகம் பகுத்தறிவுக் கொள்கைகளைக் கொண்டது. பகுத்தறிவுக்கு முதன்மையான மதிப்புக் கொடுத்து, எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துவதாகும்.

இப்படிப்பட்ட முறையில் வேறு எந்தக் கட்சிக்காரர்களும் சொல்வது கிடையாது. இந்நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தபோதிலும் அவை அத்தனையும் மக்களிடம் நயமாகப் பேசியும் மக்களின் மனம் கோணாமல் எப்படி எப்படி தந்திரமாகப் பேசவேண்டுமோ அப்படிப்பட்ட பொய்யும் புரட்டும் கொண்ட முறைகளிலும் பேசுவதுமாக இருக்கின்றன.

இப்படிப்பட்ட சுயநலவாதிகள்தான் இதுவரை தோன்றி, உண்மையான அத்தனையையும் மறைத்துப் பேசி, சாஸ்திரம், புராணம் சம்பந்தப்பட்ட புரட்டுகளை வெளியிடாமல் மக்களைப் பழைமையிலேயே ஆழ்த்தி பகுத்தறிவு அற்றவர்களாகச் செய்து விட்டனர். இதன் காரணமாகவே நம் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காட்டுமிராண்டிகளாகவும், இழிஜாதிகளாகவும், பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகவும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்... இப்படிப்பட்ட இழிநிலை  நீங்கவேண்டும் என்பதற்கே திராவிடர் கழகம் பாடுபடுகிறது.

எத்தனையோ சித்தர்களும், மகான்களும், மகாத்மாக்களும் தோன்றி இருந்த போதிலும் அவர்கள் அத்தனை பேரும் ஜாதியைப் பற்றிய கவலை கொள்ளவில்லை. அவர்கள் எல்லாம் பார்ப்பனர்களின் அடிமைகளாகவும் மேலும் தாங்களும் கீழ்ஜாதிகளாகவும் தான் இருந்திருக்கிறார்கள்.

நாயன்மார்களில் எத்தனையோ ஜாதியர்கள் இருந்திருந்த போதிலும் அவர்களில் ஒருவர் கூட, தான் ஏன் பறையன், சக்கிலியன், குயவன் என்று சிந்தித்ததே இல்லை. சமீபத்தில் தோன்றிய மகான் என்றும், மகான் என்றும் மகாத்மா என்றும் போற்றிப் புகழப்படும் காந்தியார் கூட ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறியதில்லை.

இன்றைக்குள்ள ஜனநாயக ஆட்சித் தலைவர்கள் என்பவர்கள் கூட ஜாதியைப் பற்றி கவலை கொண்டவர்கள் இல்லை. இன்னமும் சொல்லுவோமானால் ஜனநாயக ஆட்சியே ஜாதியை நிலை நாட்ட உண்டாக்கப்பட்டதுதான் என்று சமுதாய சம்பந்தப்பட்டவற்றைக் குறிப்பிட்டார்கள்.

மேலும் பேசுகையில், ஜனநாயக ஆட்சியின் ஊழல்கள் பற்றிப் பேசுகையில் இன்றைக்கு நமக்குள்ள ஆட்சி உண்மையில் ஜனநாயகம் கொண்ட ஆட்சி இல்லை. பார்ப்பன நாயகமும் பணக்கார நாயகமும் கொண்ட ஆட்சிக்கு ஜனநாயக ஆட்சி என்று மெருகிட்ட மாற்றுப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறி மேலும் தேர்தல் முறைகளில் நடைபெறும் ஊழல்களைப்பற்றியும் விளக்கினார்கள்.

இறுதியில், வால்மீகி இராமாயண ஆராய்ச்சியுரை ஆற்றுகையில், வால்மீகி இராமாயணம் பொய்யும் புரட்டும் கொண்ட பார்ப்பனக் கட்டுக்கதை. பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமற்றது. ஏரியில் தீப்பற்றிக் கொண்டது என்று ஒருவன் கூற, அதைக் கேட்ட முடடாள் ஒருவன் கிணற்றுத் தண்ணீரை எடுத்து அணையுங்கள் என்று சொன்னால், அதைப் போன்று பொருத்தமற்ற முறையில் முட்டாள்தனமாகப் புளுகப்பட்டது தான் வால்மீகி இராமாயணம் என்பதாக குறிப்பிட்டார்கள்.

------------------------- 13.02.1956-இல் பட்டுக்கோட்டை - வடசேரி பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 18.02.1956)

0 comments: