Search This Blog

20.9.15

பிள்ளையாரைப் போட்டு உடைத்தவரைப் பற்றி பிள்ளையார் சதுர்த்தி நாளில் பக்தர்களும், பார்ப்பனர்களும் இந்துத்துவாவாதிகளும் சிந்திக்கும் நிலை!

பிள்ளையாரைப் போட்டு உடைத்தவரை பிள்ளையார் சதுர்த்தியில் சிந்திக்க வேண்டிய நிலை பக்தர்களுக்கு! தமிழர் தலைவர் ஆசிரியர் எடுத்துக்காட்டு

சென்னை, ஆக. 20- பிள்ளையாரைப் போட்டு உடைத்தவரைப் பற்றி பிள்ளையார் சதுர்த்தி நாளில் பக்தர்களும், பார்ப்பனர்களும் இந்துத்துவாவாதிகளும் சிந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.  தந்தை பெரியார் அவர்களின் 137 ஆவது பிறந்த நாள் விழா 17.9.2015 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.


அவரது உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், சிறப்போடும் அறிவாசான் தலைவர் தந்தை பெரியாருடைய 137 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடந்திருக்கிறது என்பதற்கு அடையாளமே இந்த மேடைதான்.
அய்யா அவர்கள் எவ்வளவோ காலம் அவர்கள் பொது வாழ்க்கையில், பொதுத் தொண்டிலே இருந்திருக்கிறார்கள் என்று சொன்னாலும், பொதுவாக, ஆண்களைவிட, பெண்கள் எப்பொழுதுமே கூர்மையாக எதையும் கவனித்து, புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றலுடையவர்கள்.

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு அந்தப் பெருமை உண்டு மதமும், ஜாதியும், அடிமைத்தனமும்தான் அவர்களு டைய ஆற்றலைத் தடுத்து தடுத்து. அழுத்தி அழுத்தி வைத்து முன்னேற விடாமல் தங்களுடைய சுயநலம் காரணமாக, போலிக் கவுரவம் காரணமாக, ஆண்களுடைய ஆணவத்தின் காரணமாக நடந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் 1938 ஆம் ஆண்டிலேயே அய்யா அவர் களை சரியாக அடையாளம் கண்டு, மகளிர் மாநாட்டிலே அவர்கள் கொடுத்த பெரியார் என்ற பட்டம் இருக்கிறதே, அதுதான் உலகளாவிய அளவில், அய்.நா. சபை  வரையில், அதனுடைய யுனெஸ்கோ வரையிலே செல்லக்கூடிய ஆற்றல் உண்டென்றால், அதற்கு முன்னாலே அடை யாளம் கண்ட பெருமை தமிழ்நாட்டுப் பெண்களுக்கு உண்டு என்று சொல்லக்கூடிய பெருமையைப் படைத்தது பெண்குலம்.
பிறவி பேதத்தை ஒழிப்பதற்காக சுயமரியாதை இயக் கத்தை அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கி, அந்தப் பிறவி பேதத்தை ஒழிக்கின்ற பணியை அவர்கள் சிறப்பாகச் செய்தார்கள் என்கிற நிலையில், அந்த நான்கு வரிகளை எடுத்துக்கொண்டு மிக அற்புதமான ஒரு ஆய் வரங்கமாக இது வெறும் கருத்தரங்கமல்ல. இதில் பேசிய ஒவ்வொருவரும், கவிஞர் சல்மா அவர்களானாலும், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் ஆனாலும், பேராசிரி யர் சுந்தரவல்லி அவர்களானாலும், வழக்குரைஞர் அருள் மொழி அவர்களானாலும் மிக அற்புதமாக உரையாற்றி னார்கள். இவர்களின் உரைகள் தனியாக வெளியீடுகளாக வரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அவ்வளவு அற்புதமான உரைகளாகும்.
மதம் எப்படி வெற்றி பெற்றது? பெண்களை வைத்துத் தான் வெற்றி பெற்றது. மகளிர் மத்தியில்தான் மூடநம்பிக் கைகளைக் கொண்டு போய் மிகத் தெளிவாக உள்ளே நுழைத்து விட்டார்கள். எந்த வழியிலே உள்ளே போனார்களோ, அதே வழியிலேயே திரும்ப வரவேண்டும்; அதற்குப் பெயர்தான் விடுதலை என்று தந்தை பெரியார் சொன்னார்.

ஒரு சிறைச்சாலைக்குப் போகின்றவன், எந்த வழியிலே, எந்தக் கதவு வழியாகச் சிறைச்சாலைக்குள் சென்றானோ, அதே வழியிலே வெளியே திரும்பி வரவேண்டும். எந்த மக்களை நம்பி மூடநம்பிக்கைகளை உண்டாக்கினார் களோ, அவர்களுடைய கருத்துகள்தான் என்று சொல்லக் கூடிய அந்த வாய்ப்பு 137 ஆவது பிறந்த நாள் விழாவில் நிகழ்ந்திருக்கிறது.
பெரியார் சிலை மட்டுமா இங்கு மிகப்பெரிய அளவிற்கு உயர்ந்திருக்கிறது? பெரியார் உலக அளவில் பரவியிருக் கிறார். அதற்கு அடையாளம் அமெரிக்காவில் 12 ஆம் தேதி பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றிருக்கிறது; அங்குள்ள பல்வேறு துறையினர், சீக்கியர்கள் கொண்டாடு கிறார்கள். சிங்கப்பூரில் நடைபெறுகிறது; மலேசியாவில் நடைபெறுகிறது; வடநாட்டில் நடைபெறுகிறது. தொடர்ந்து நடைபெறுகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால், பெரியார் விழாவை நாம் ஏதோ பிள்ளையார் விழாவாகக் கொண்டாடுவதில்லை.
பிள்ளையாரை உடைத்தவரைப்பற்றியும் சிந்திக்கவேண்டிய அவசியம் வந்திருக்கிறதா? இல்லையா?
இந்த ஆண்டு திட்டமிட்டோ அல்லது வேறு வகையா கவோ கொண்டு வந்து, பிள்ளையார் சதுர்த்தியையும் சேர்த்து இணைத்து வைத்திருக்கிறார்கள்; இன்றைக்கு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம்கூட இங்கே பேசினார்கள். இதனால் ஒரு சிறப்பு என்னவென்றால், இன்றைக்கு பிள்ளையார் விழா நடத்துகிறவர்கள் எல்லாம், பிள்ளையாரை உடைத்தவ ரைப்பற்றியும் சிந்திக்கவேண்டிய அவசியம் வந்திருக்கி றதா? இல்லையா? அதனை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பெரியார் மேளாவை உத்தரப்பிரதேசத்தில் கான்ஷிராம் அவர்கள் மிகச் சிறப்பாக நடத்தினார். அந்த விழாவிற்கு இந்தியா முழுமையும் இருந்து வந்திருந்தார்கள். இதனை இன எதிரிகளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. உடனே அதனை திசை திருப்புவதற்காக, பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று சொன்னார்கள். பால் குடிக்கிற பிள்ளையார் நம் நாட்டில் மட்டும்தான் உண்டு. அந்தப் பிள் ளையார் பால் குடிக்கிறார் என்கிற செய்தியை நாடு முழுவதும் பரப்பிவிட்டார்கள். ஒரு லிட்டர் பால் 300 ரூபாய் அளவிற்கு விற்கும் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.
பிள்ளையார் பால் குடித்தால் - திராவிடர் கழகம் சார்பாக ஒரு லட்சம் ரூபாயைத் தருவதற்குத் தயாராக இருக்கிறோம்
நாங்கள் அதனை சாதாரணமாக விட்டுவிடவில்லை. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.அய்.சி. கட்டடத்திற்கு முன்பு, ஒரு பெரிய தமுக்கை என் கழுத்தில் மாட்டிக் கொண்டு, தமுக்கடித்து, பிள்ளையார் சிலை பால் குடித்தால், திராவிடர் கழகம் சார்பாக ஒரு லட்சம் ரூபாயைத் தருவதற்குத் தயாராக இருக்கிறோம் என்று சொன்னோம். ஆனால், இதுவரையில் அதற்கு யாரும் முன்வரவில்லை.
அறிவியல் பூர்வமான கருத்துகளை மறுத்து, மூட நம்பிக்கைகள் என்றைக்கும் நிற்காது. ஆனால், காலங் காலமாக கேள்வி கேட்காதே, கேள்வி கேட்காதே, கேள்வி கேட்காதே என்று சொல்லித்தானே வந்திருக்கிறார்கள். பெண்களை கற்பு, கற்பு என்று சொல்லி அடக்கி வைத்திருக் கிறார்களோ, அதேபோன்று, அறிவைப்பற்றி சிந்திக்காதே, நம்பு, நம்பு, நம்பு என்று சொன்னார்கள். நம்பு என்று சொல்வதற்கும், கற்பு என்று சொல்வதற்கும் மிகவும் வேறுபாடு எதுவும் இல்லை.
சல்மா அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது, தன்னை ஒரு எத்திஸ்ட் என்று அவருடைய இணையத்தில் போட்டார் என்பதைப்பற்றி நினைக்கவே முடியாத அளவில் அவர் எவ்வளவு தொல்லையை அனுபவித்திருப் பார்கள். மற்றவர்களால் அல்ல, அவர்கள் சார்ந் தவர்களின் மத்தியில் அவர்கள் எவ்வளவு தொல்லைகளை, சங்கடங் களை அனுபவித்திருக்கிறார் என்பதைபற்றி மனங்குமுறி இங்கே சொன்னார்களே!
அதேபோல், கவிதா முரளிதரன் அவர்கள் பத்திரிகைத் துறையில், நம்மவர்களால் மிகப்பெரிய அளவிற்கு ஆற்றல் வாய்ந்தவர்களாக வர முடியும் என்பதற்கு அடையாளம் மட்டுமல்ல, அவர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு, எடுத்துக்காட்டாகத் திகழக்கூடியவர்.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்?
எவ்வளவு பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறது அய்யா அவர்களால். ஒரு துளி ரத்தம் சிந்தாமல் இவை நடைபெற்று இருக்கின்றன, தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில். இதுதான் அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சி!
பிறவி இழிவு, பிறவி பேதம் என்பதை ஒழிக்கவேண்டும் என்பதற்காகத்தான் சுயமரியாதை இயக்கத்தை அய்யா அவர்கள் உருவாக்கினார்கள்.
அதற்கு என்ன காரணம்? சுயசிந்தனையாளரான தலை வர் தந்தை பெரியார் அவர்கள், அவருடைய சிந்தனை, தான் ஒரு ஆராய்ச்சியாளன் அல்லது புகழ் பெறவேண்டும் என்பதற்காக வந்த சிந்தனையல்ல! அவருடைய சிந்தனை முழுக்க முழுக்க சமுதாயத்தினுடைய அநீதிகளைப் பார்த்து, பார்த்து வெகுண்டெழுந்தவர். சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் இருந்த அந்த சிந்தனைகள் ஓடிக் கொண்டேயிருந்தன. அவர் போதி மரத்திற்கு அடியிலும் போகவில்லை; பெரிய பெரிய நூலகங்களுக்கும் அவர் போகவில்லை. மாறாக, மக்களைப் பார்த்தார்; மக்கள் சமுதாயத்தில் நடந்த அநீதிகளைப் பார்த்தார். சமூக அநீதிகள், பாலியல் அநீதிகளைப் பார்த்த நேரத்தில் எல்லாம் அவர்கள் குமுறினார். நான் ஒரு அழிவுக்காரன் என்று துணிந்து சொன்னவர் தந்தை பெரியார்
தன்னை ஒரு சீர்திருத்தவாதி என்று பெரியார் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சீர்திருத்தம் என்றால், அங் கொன்றும், இங்கொன்றுமாக சரி செய்வதுதான். ஆனால், முழுக் கட்டடத்தையும் இடி என்று சொன்ன புல்டோசர் தந்தை பெரியார் அவர்கள்.
புதரை அழித்தால்தான் பூங்காக்களை உருவாக்க முடியும். அந்த வகையில், நான் ஒரு அழிவுக்காரன் என்று துணிந்து சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்.
மகளிருக்குத் துணிச்சலை உண்டாக்கினார். திருமணத் திற்குத் தலைமை தாங்கும்பொழுது அய்யா அவர்கள் மணமக்களுக்கு அறிவுரை சொல்லும்பொழுது, அன்பாக இருக்கவேண்டும்; ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருக்கவேண்டும். வாடி, போடி என்றெல்லாம் சொல்வது அநாகரிகமான வார்த்தைகள் சொல்லக்கூடாது. வாடி என்று சொன்னால், என்ன அர்த்தம்? எஜமானத்துவம், அடிமை என்றுதான் அர்த்தம். மணமகன் வாடி என்று சொன்னால், மணமகள் வாடா என்று சொல்லவேண்டும் என்று சொன்னார். அப்படி மணமகள் சொன்னால், உடனே மணமகன் என்ன சொல்வான், என்னம்மா எல்லோர் முன்னிலையிலும் இப்படி சொல்லிவிட்டாயே! உன் மேல் உள்ள அளவு கடந்த ஆசையினால்தானே உன்னை வாடி என்று சொன்னேன் என்று. நீயும் அதற்குப் பதில் சொல், ஆசை உங்களுக்கு மட்டும்தான் இருக்குமா? ஆசை எனக்கும் வராதா? என்று சொல் என்று பெரியார் அவர்கள் நகைச்சுவையாக சொல்வார்.
ஒரு பல சரக்குக் கடைக்குச் செல்கிறோம்; அங்குள்ள எல்லா பொருள்களையும் வாங்குகிறோமா? நமக்கு என்ன தேவையோ அதை மட்டும்தானே வாங்குகிறோம். தந்தை பெரியார் அவர்கள் ஒரு சூப்பர் மார்க்கெட். சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்து அவரவர்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொண்டு போகிறார்கள்.
வடலூர் வள்ளலாருக்கும், தந்தை பெரியாருக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால்,
வள்ளலார் என்ன சொன்னார்? கடை விரித்தேன் கொள்வாரில்லை; கட்டிவிட்டோம் என்றார்.
ஆனால், தந்தை பெரியார் அவர்கள், கடை விரித்தேன்; நீங்கள் கொள்ளும்வரை விடமாட்டேன் என்றார்.
உறுதி, உறுதி உறுதி
ஒன்றே சமூகம் என்றெண்ணாருக்கே
இறுதி, இறுதி இறுதி என்று பாடினாரே புரட்சிக்கவிஞர்.
அந்த உறுதி வரவேண்டும்.
ஆண் - பெண் பிறவி பேதம் என்ன? உருவத்தினால் பேதம் இருக்கிறது அவ்வளவுதானே!

அய்யா அவர்கள், ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தன ஒழிப்பு இவை இரண்டையும் எடுத்துக்கொண்டால், பிறவி பேதம் என்பதில், பெரியார் சிந்தித்த அளவிற்கு, பெண்ண டிமைத்தன ஒழிப்பில் உலகத்தில் உள்ளவர்கள் யாரும் சிந்திக்கவில்லை.
ஒரே ஒரு உதாரணம் நெருக்கத்தில் சொல்லவேண்டு மானால், பெட்ரண்ட் ரசல் அவர்கள் அதற்குப் பக்கமாக வந்தார்.
பெட்ரண்ட் ரசல் அவர்கள், மேரெஜ் அன்ட் மாரல்ஸ் என்கிற புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகத்தைத் தடை செய்து, அவரை கைது செய்தார்கள்.

அந்தப் புத்தகத்தில் இருக்கின்ற பகுதியும், பெண் ஏன் அடிமையானாள்? என்கிற புத்தகத்தில் உள்ள கருத்தையும் எடுத்து,
தந்தை பெரியார் பிறந்த நாள் மலரில் போட்டு, அய்யா அவர்களிடம் காட்டினோம்.
உடனே அய்யா அவர்கள், அப்படியா? ஓ! அவரும் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது என்றார்.
திருக்குறளில் சொல்லியிருக்கிறது என்பதற்காக நான் மேற்கொள் காட்டுவது இல்லை
திருக்குறளைப்பற்றி சொல்லும்பொழுது அய்யா அவர்கள் சொல்வார், திருக்குறளில் சொல்லியிருக்கிறது என்பதற்காக நான் மேற்கொள் காட்டுவது இல்லை. என்னுடைய கருத்துக்குத் திருக்குறளும் உடன்பாடாக இருக்கிறதே, அதனால் திருக்குறளைப் படியுங்கள்! என்பார். இப்படி சிந்தித்த தலைவர் வேறு யாரும் கிடையாது.
கற்பு என்ன பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்குக் கிடையாதா?
சிக்கல் என்கிற ஊரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் அய்யா அவர்கள் பெண்ணடிமைத்தனம் என்று வரும்பொழுது ஒரு கருத்தை சொன்னார்,  திருக்குறள் முனுசாமியை அருகில் வைத்துக்கொண்டு கேட்கிறார்;
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யென பெய்யும் மழை

இதனைச் சொல்லிவிட்டு, ஏங்க, பெண்ணிற் பெருந்தக்க யாவுள எல்லாம் சொல்லிவிட்டான். அதற்கென்ன ஒரு பிராக்கெட் போட்டு, கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் என்று சொன்னானே, கற்பு என்ன பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்குக் கிடையாதா?
அந்த வள்ளுவனே, ஆண்களுக்கு ஏதாவது சொன்ன மாதிரி தெரியவில்லை என்று சொல்லிவிட்டு, எங்கள் பக்கமாக திரும்பினார்.
நான் ஏன் இதனை சொல்கிறேன் என்றால், திருக்குற ளுக்கு அத்தாரிட்டியே அய்யாதான்; அவர் சொல்லட்டும், நான் திருத்திக் கொள்கிறேன் என்று திருக்குறள் முனு சாமியைப் பார்த்து சொன்னார்.
அப்படி பேசிக்கொண்டே செல்வார் என்று நினைத்தார் திருக்குறள் முனுசாமி அவர்கள், உடனே அய்யா அவர்கள், தன்னுடைய உரையை நிறுத்தி, என்னங்க! என்றார்.

பதில் சொல்லுங்க என்கிறார் அய்யா.
திருக்குறள் முனுசாமி அவர்கள் தயங்கி எழுந்து, பிறன் மனை நோக்கா பேராண்மை என்று எழுதியிருக்கிறார் வள்ளுவர் என்றார்.
உடனே பட்டென்று அய்யா அவர்கள் சொன்னார், சரிங்க! எனக்கும் தெரியும், நானும் படித்திருக்கிறேன். அது தெப்ட் என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்.
இன்னொருவன் மனைவியை நீ பார்க்காதே என்று சொல்லியிருக்கிறார். அது திருட்டுத்தனம். விதவைக்கு என்ன சொல்லியிருக்கிறார்? கல்யாணம் ஆகாத பெண்ணுக்குச் சொல்லியிருக்கிறாரா? என்று கேட்டார்.
எனக்கு சொந்த புத்தி தேவையில்லை; பெரியார் தந்த புத்தி தேவை
அய்யா பெரியார் சொன்னதைச் சொன்னாலே போதும்; பெரியாரைப் பரப்பவேண்டும்; அது இருந்தாலே போதும். நான் அடிக்கடி சொல்வது, எனக்கு சொந்த புத்தி தேவையில்லை; பெரியார் தந்த புத்தியே போதும் தேவை என்று.
பல பேர் கேட்டார்கள், நீ பகுத்தறிவுவாதியாயிற்றே, நீ இப்படி சொல்லலாமா என்று.
பகுத்தறிவுவாதியாக இருப்பதினால்தான், நான் சொல்கிறேன் என்று சொன்னேன்.
அதற்கு என்ன காரணம்? விளக்கம் சொல்லுங்கள் என்று செய்தியாளர்கள்கூட கேட்டார்கள்.
சொந்தப் புத்திக்கு சுயநலம் உண்டு; சொந்தப் புத்திக்கு ஆசாபாசம் உண்டு; சொந்தப் புத்திக்குப் பயம் உண்டு.
பெரியார் தந்த புத்திக்கு சுயநலம் கிடையாது; ஆசாபாசம் கிடையாது; பயம் கிடையாது. அதுதான் பெரியார் தந்த புத்தியாகும்.
அய்யா அவர்கள் படிக்காதவர் என்கிற பெயரே தவிர, அவர் நிறைய படித்தவர். எந்த அளவிற்கு அவர் சொல் கிறார் என்றால், கம்பராமாயணத்தைப்பற்றி சொல்லும் பொழுது, கடவுள் இல்லை என்ற கருத்தை கம்பனே ஒப்புக்கொண்டுள்ளான். அதற்கு உதாரணம், சீதையினு டைய இடையைப்பற்றி அவன் வருணிக்கும் நேரத்தில், இருக்கோ, இல்லையோ என்று சந்தேகப்படுவார்களே அந்தக் கடவுள்மாதிரி என்கிற பாட்டு இருக்கிறது என்று சொல்வார்.
பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் தமிழ்ச் சொற்கள் அல்ல!
அய்யா அவர்கள் கற்பு என்பதைப்பற்றி சொல்லும் பொழுது, மிகத் தீவிரமாகச் சொல்லியிருக்கிறார். இரண்டு பேருக்கும் கற்பை வை! எதனால் அதுபோன்று சொன்னார், சமுதாயத்தில் ஒழுக்கக்கேடு வரவேண்டும் என்றா சொன்னார்; இல்லையே!  பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்தி லிருந்தும், மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற் களாகும். இச்சொற்கள் தமிழ்ச் சொற்களும் அல்ல.
நம்முடைய நாட்டில் பெண்கள் என்று சொல்லும் பொழுது, ஆண்களுக்குக் கற்பு இருந்தால், பெண்கள் கற்பு தானாகவே நிலைக்கும் என்றார்.
பெண்களை பதிவிரதை என்கிறார்கள்; ஆண்களை யாருக்காவது பதிவிரதன் என்ற வார்த்தை இருக்கிறதா? கற்புக்கரசி என்கிறார்கள்; கற்புக்கரசன் என்று யாரையாவது சொல்கிறார்களா?
பெண்கள் என்ன கண்ணாடிப் பாத்திரமா? உடனே உடைத்து விடுவதற்கு? ஆண்கள் என்ன வெள்ளிப் பாத்திரமா? என்றார்.
தண்ணீருக்குத் தீட்டு உண்டு என்றார்கள் பார்ப்பனர்கள்; நெய்க்குத் தீட்டு உண்டா? பண நோட்டுக்குத் தீட்டு உண்டா? தண்ணித் தெளித்துத் தான் எடுக்கிறானா?

மிகப்பெரிய புயலை உருவாக்கிய
சேலம் தீர்மானம்
கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கெடுதியான மதங்கள் சட்டங்கள் மறையவேண்டும். கற்புக்காக மனதுள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும், அன்பும் இல்லாதவனுடன் இருக்கவேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.
சேலத்தில் தீர்மானம் போட்டார்; அந்தத் தீர்மானம் மிகப்பெரிய புயலை உருவாக்கிற்று. இந்த மேடையிலே விளக்கம் சொன்னாரே, இதே இடத்தில், பழைய இடத்தில்.
ஒருவன் மனைவி இன்னொருவனை விரும்பினால், சட்டப்படி அது குற்றமாக்கப்படக்கூடாது.
பிறகு எங்களைக் கூப்பிட்டு கேட்டார். இப்படி தீர்மானம் போட்டிருக்கோமே என்று.
அய்யா, ஏற்கெனவே இண்டியன் பீனல் கோடில் அப்படித்தான் இருக்கிறது என்றோம்.
அப்படியே தலைகீழாக மாற்றி, எதிரிகள் அதனை தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
பார்த்தீர்களா, பெரியார் அவர்கள் என்ன சொல்லியிருக் கிறார் என்று, ஒழுக்கம் இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்று திரிபுவாதம் செய்து பத்திரிகைகளிலும் எழுதினார்கள். இந்து பத்திரிகையில் அதனைப் போட்டார்கள். இந்து பத்திரிகையின்மீது ஒரு வழக்கை நான் போட்டேன். அப்பொழுது தலைமை நீதிபதி வீராசாமியின் முன்பு அந்த வழக்கு வந்தது.
இந்து பத்திரிகையின்மீது வழக்குப் போட்டோம்
அப்பொழுது அய்யா அவர்கள் கேட்டார், நம் வழக்கிற்காக வாதாடுவதற்கு யார் வருவார்கள். இந்து பத்திரிகையின்மீது வழக்குப் போட்டிருக்கிறாயே என்று.
நான் உடனே, யாரும் வேண்டாம் அய்யா, நீங்கள் அனு மதி கொடுத்தால், நானே அந்த வழக்கில் வாதாடுகிறேன் என்றேன். அந்த வழக்கில் நானே வாதாடினேன். அந்தத் தீர்மானத்தில் உள்ள வார்த்தையை ஆங்கிலத் தில் எப்படி போட்டார்கள் என்றால், ஒருவர் அபகரித்துச் சென்றால் என்று திருத்திப் போட்டு விட்டார்கள். விரும்பினால் என்கிற வார்த்தையை போடவில்லை.
Once wife is coverted by 
என்று போட்டார்கள். நான் சொன்னேன், தீர்மானத்தில் அந்த வார்த்தை இல்லை Desire  என்றுதான் உள்ளது.

ஒரு எஜமானனிடம் இருந்து ஒரு வேலைக்காரன் விரும்பி விலகிப் போகலாம்.
ஒருவருக்கொருவர் நட்பாக இருக்கிறார்கள்; வேண்டாம் என்றால், பிரிந்து போகலாம்.
ஆனால், திருமணம் ஆகிவிட்டது என்பதால், பிரிந்து போக முடியாது என்கிறார்களே!
எம்மதமும் எமக்கு சம்மதம் கிடையாது!
இந்து மதத்தைப்பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று சிலர் கேட்பார்கள். எந்த மதம் இருந்தாலும் நமக்கு உடன்பாடு கிடையாது. சிலர் பேர் சொல்வார்கள், எம் மதமும் சம்மதம் என்பார்கள். எம்மதமும் எமக்கு சம்மதம் கிடையாது. மனிதனுக்கு மதம் பிடிக்கக் கூடாது.

மதக் கருத்தை உள் வைத்துக்கொண்டு அந்த வாதத்தை எடுத்து வைத்தார்கள்.
Hindu Marriage is a sacrable என்றுதான் எங்களுக்கு சட்டக் கல்லூரியில் சொல்லிக் கொடுத்தார்கள். இன்றைக்குத்தானே உடைத்திருக்கிறார்கள்.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று சொல்வார்கள். அதனையெல்லாம் உடைத்து இந்த இயக்கம் செய்திருப்பது சாதாரணமானதா? வேண்டு மென்றே மறைக்கப் பார்க்கிறார்கள்.
சிலர் கேட்கிறார்கள், பெரியார் பிள்ளையாரை உடைத்தாரே, இன்றைக்கு நிறைய பிள்ளையார் கோவில் வந்து இருக்கிறதே என்று.
மருத்துவரைப் பார்த்து கேள்வி கேட்பதா? நீங்கள் மருந்து கொடுத்தீர்கள்; அவர்கள் எல்லாம் குணமாகி விட்டார்களே, ஆனால், நிறைய பேர் நோயாளிகள் ஆகி விட்டார்களே! நாங்கள் எல்லாம் அந்த நோயைத்தானே பரப்பிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால்,அதற்கு நீ தான் வெட்கப்படவேண்டுமே தவிர, டாக்டர் வெட்கப்படுவதற்கு ஒன்றுமே இல்லையே!
புதிது புதிதாக நோய் இப்பொழுது வந்துகொண்டிருக் கிறது, அதற்காக மருத்துவமனையை மூடிவிட முடியுமா?
இந்து பத்திரிகை திருத்தம் போட்டு மன்னிப்பும் கேட்டது!

அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தவுடன், நீதிபதி முன் நான் வாதாடினேன்.
நாங்கள் நிறைவேற்றிய தீர்மானப்படி பார்த்தால், விரும்பினால் என்பது பெண்ணுடைய பாகம்; ஆனால், அபகரித்தால் என்று சொன்னால், அது ஆணுடைய பங்கு என்றேன். எங்கள் கருத்துக்கு நேர் எதிரானது என்றேன்.
ஓ! இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது என்றார் நீதிபதி.
அதற்குப் பிறகு, இந்துப் பத்திரிகையாளரை வர வழைத்து, திருத்தம் போடுங்கள் என்று சொன்னார்.
இந்துப் பத்திரிகையில், திருத்தம் போட்டு மன்னிப்பும் கேட்டார்கள்.
அய்யாவிற்கு ஆச்சரியம்! ஏம்பா, இது இவ்வளவு பெரியதாக ஆகியிருக்கிறதே என்றார்.
ஆமாங்க அய்யா, எல்லோரும் வேடிக்கைப் பார்த் தார்கள்; நாம் வழக்குப் போடவில்லை என்றால், அவ்வளவு பேருக்கும் நம்முடைய தீர்மானம் தெரிந்திருக்க வாய்ப் பில்லை. நீதிபதிக்கும் தெரிந்துவிட்டது என்றேன்.
அந்தத் தீர்மானத்தைப்பற்றி வெளியில் தவறாகப் பிரச்சாரம் செய்தார்கள். அப்பொழுது தி.மு.க.வை தேர்தலில் வீழ்த்தவேண்டும் என்பதற்காக.
அப்பொழுது அய்யா கூட்டத்தைக் கூட்டி, அதற்கு விளக்கம் சொன்னார்.
இந்தத் தீர்மானத்தைப் படிக்கும்பொழுது, ஏன் நிறைய பேர் ஆத்திரப்படுகிறார்கள்; அல்லது புரியாமல் சங்கடப் படுகிறார்கள் என்றால், அவனவன் மனைவியை நினைத்துக் கொண்டு படிக்கிறான்.
ஒருவன் மனைவியை இன்னொருவன் விரும்பினால் என்று படிக்கும்பொழுது இவன் மனைவியை நினைத்துக் கொள்கிறான் என்றார்.
ஆண்களால் பெண்களுக்கு விடுதலை வர முடியாது என்று சொல்லியிருக்கிறாரே, பெரியாரும் ஆண்தானே?
ஒருமுறை பெண்ணுரிமையைப்பற்றி வானொலியில் உரையாற்றச் செல்லும்பொழுது, லீலா என்கிற அம்மையார் என்னிடம்
ஒரு கேள்வி கேட்டார்.
ஏங்க, அய்யா ஆண்களால் பெண்களுக்கு விடுதலை வர முடியாது என்று சொல்லியிருக்கிறாரே, பெரியாரும் ஆண்தானே; அவர் எப்படி இவ்வாறு சொல்ல முடிந்தது என்றார்.
நான் சொன்னேன், நல்ல கேள்விதான்; நியாயமான கேள்விதான். விளக்கம் சொல்லப்பட வேண்டிய கேள்விதான்.
உரிமைகள் என்று வரும் நேரத்தில், சமுதாயக் கொடுமைகள் என்கிற வருகின்ற நேரத்தில், பெரியார் தன்னை ஒரு ஆணாக நினைக்கவில்லை; தன்னை ஒரு மனிதனாக நினைத்திருக்கிறார். மனிதநேயத்தோடு பார்த்திருக்கிறாரே தவிர, தான் ஒரு ஆண், தான் ஒரு முதலாளி என்பதை மறந்துவிட்டுத்தான் சிந்தித்திருக்கிறார்.
எனவே, தலைசிறந்த ஒப்பற்ற சுயசிந்தனையாளரான தந்தை பெரியார் அவர்கள் எல்லாம் சொல்லிவிட்டு,
பெரியாருடைய வெற்றிக்குக் காரணம்
பிறர் என்ன சொல்வார்கள் என்று கவலை கொள்ளா தீர்கள்; எங்கே பெண் கெட்டுப் போய்விடுவாளோ என்று அஞ்சாதீர்கள்; குழந்தைகளின் உற்பத்தி பீடமாய் உள்ள பெண்கள் சீர்திருந்தினால் ஒழிய, அவர்களிடமிருந்து உற்பத்தியாகும் குழந்தைகளும் திருந்திய குழந்தைகளாக இருக்க முடியாது என்பதை மனதில் கொள்ளுங்கள் என்று மிக அழகாகச் சொன்னார்.
முதலில் சுயமரியாதைத் திருமணம்; அதற்கடுத்து புரோகிதர் இல்லாத திருமணம்; மீதி எல்லா சடங்கையும் வைத்திருக்கிறார்களே என்று சிலர் கேட்டார்கள்.
பரவாயில்லை; முதலில் இது ஒழியட்டும் என்றார். அதுதான் பெரியாருடைய வெற்றிக்குக் காரணம்.
சட்டிப் பானை எல்லாம் வைத்துக் கொண்டு திருமணம் நடத்துகிறார்களே என்று கேட்டார்கள்.
இந்தப் பானையைத் தூக்கிக் கொண்டு போனால், உடையாமல் அப்படியே இருக்குமா? என்று அவர்களை வைத்துக்கொண்டே கேட்பார்.
அதற்கடுத்து தாலி கட்டவேண்டும் என்பார்கள்.
அப்படியா, கட்டிக் கொள் என்பார் பெரியார்.
நாவலர் தங்கையின் திருமணத்தில்....
நாவலர் அவர்களுடைய சொந்தத் தங்கை திருமணம்; அந்தத் திருமணம் பெரியார் தலைமையில் நடைபெற்றது. தாலியைக் கட்டிக் கொள்ளமாட்டேன் என்கிறார் மணப் பெண்; நாவலரும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். ஆனால், மணமகனுடைய குடும்பத்தினர் தாலியைக் கட்டவேண்டும் என்கிறார்கள். இவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால், பெரியார் அவர்கள் பரவாயில்லை கட்டிக் கொள் என்றார்.
எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. உடனே பெரியார் சொல்கிறார், என்னை திருமணத்திற்குத் தலைமை தாங்குவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா! அதுவே பெரிய வெற்றி அல்லவா! பார்ப்பானை கூப்பிடுவதற்குப் பதிலாக என்னை அழைத்திருக்கிறார்கள் அல்லவா! நான் இந்தத் திருமணத்தை நடத்துவதே வெற்றிதானே! கொஞ்சம் கொஞ்சமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்வதற்குப் பார்க்கவேண்டும்! ஒரேயடியாக உள்ளே செல்லவேண்டுமானால், எப்படி சீர்திருத்தம் வரும்? அதுதான் அறிவுப்புரட்சி என்றார்.
நீ தாலி வேண்டாம் என்று சொல்கிறாயே, கட்டி முடித்தவுடன் தூக்கி எறிந்து கொள்ளலாம் என்றார். அந்த நேரத்தில் இப்பொழுது அவனை திருப்தி செய் என்றார். அதுதான் பெரியாருடைய அணுகுமுறை.
தந்தை பெரியாரின் சுயமரியாதை மருந்து மிகவும் அற்புதமானது

ஒரு நோயாளியைக் காப்பாற்றவேண்டும் என்பதுதான் மருத்துவரின் அக்கறையாக இருக்கவேண்டும். மருத்துவரு டைய திறமையைக் காட்டவேண்டும் என்பது முக்கியமல்ல. நோயாளியைக் காப்பதுதான் நல்ல மருத்துவ முறையாகும்.
அந்த வகையில், தந்தை பெரியாருடைய மருந்தான சுயமரியாதை மருந்து மிகவும் அற்புதமானது. டாக்டர் மிகவும் கெட்டிக்காரர், அதிலொன்றும் சந்தேகமேயில்லை. அதற்காக முழு மருந்தையும் நோயாளிக்குக் கொடுத்துவிட முடியுமா? நல்ல மருத்துவர் நோயாளியின் நாடியைப் பிடித்துப் பார்ப்பார்; பல்சு மிகவும் மோசமாக இருக்கிறது; இதற்கு கால் மாத்திரைத்தான் கொடுக்கவேண்டும்; இப்பொழுது அரை மாத்திரைதான் கொடுக்கவேண்டும்; இப்பொழுது முக்கால் மாத்திரைதான் கொடுக்கவேண்டும்; இப்பொழுது நன்றாக ஆகிவிட்டான் முழு மாத்திரையைக் கொடுக்கவேண்டும் என்று வரிசையாக வந்து, சுயமரி யாதைத் திருமணம், பெண்ணுரிமை என்று எல்லாவற் றையும் சொல்லிக்கொண்டு வந்து, கடைசியாக திருமணம் என்பதே கிரிமினல் குற்றமாக்கப்படவேண்டும் என்று சொன்னார். அதுதான் பெரியாருடைய அணுகுமுறை யாகும். அதனைத் தெரிந்துகொண்டு சிலர் புரியாத மாதிரி இருப்பார்கள். தூங்குகிறவர்களை எழுப்பலாம்; தூங்குகிற மாதிரி பாசாங்கு செய்பவர்களைப்பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்.
எப்படி அவருடைய சிலை உயர்ந்திருக்கிறதோ, அதுபோல, அவர்களுடைய சீலமும் உயர்ந்திருக்கிறது
ஆகவேதான், பெரியார் என்கிற மாமனிதர் மானிடத்தின் மிகப்பெரிய சொத்து. அவர் ஒரு தனி சமுதாயத்துக்கு அல்ல; தனி நாட்டிற்கு அல்ல; மானிடத்தின் மிகப்பெரிய சொத்து. மானிட நேயர். அப்படிப்பட்ட தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாள் விழா, முந்தைய ஆண்டுகளில் நடைபெற்றதைவிட, எப்படி அவருடைய சிலை உயர்ந்திருக்கிறதோ, அதுபோல, அவர்களுடைய சீலமும் உயர்ந்திருக்கிறது என்பதற்கு அடையாளம், அருமைத் தோழியர்கள் ஒவ்வொரும் இங்கே ஆற்றிய உரை. அவர்களுக்கெல்லாம் நன்றி! நன்றி!! நன்றி!!
மகளிர் மாறினால், சமுதாயமே மாறும் அடிக்கடி இந்தப் பணியைச் செய்யுங்கள்! எங்கள் பாரத்தைக் குறையுங்கள்! வருத்தப்பட்டு பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறோம் நாங்கள். அந்தப் பாரத்தை யாரோ வந்து குறைக்கமாட்டார்கள்; உங்களைப் போன்ற அருமைத் தோழியர்கள், தாய்மார்கள் முன்வாருங்கள்! நீங்கள் பேசினால் மக்கள் கேட்பார்கள்; மகளிர் கேட்பார்கள். மகளிர் மாறினால், சமுதாயமே மாறும்; சமுதாயம் மாறினால், ஒரு அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சி ஏற்படும்.
வணக்கம்! நன்றி!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
                    ---------------------”விடுதலை” 20-09-2015

0 comments: